விரல்களின் ஊடாக வழிந்து
உணவக பணம் செலுத்துமிடத்தில் அஜாக்கிரதையாக என் கையிலிருந்த குவளையை தவறவிட்ட பொழுது, அதில் இருந்த பானம் மேஜையில் சிந்தி, வழிந்தோடி கீழே கொட்ட ஆரம்பித்தது. தர்மசங்கடத்துடன் என்ன செய்வது என்று புரியாமல் என் இரண்டு கைகளையும் கூப்பி, அந்நீர்வீழ்ச்சியை பிடிக்க முயன்றேன். ஆனால் என் முயற்சி தோல்வியில் முடிந்தது. ஏனென்றால் என் கரங்களில் ஒரு தேக்கரண்டி அளவு பானத்தைத் தவிர மற்றவை என் கால்களைச் சுற்றி சிறுசிறு குட்டைகளாக கொட்டிக்கிடந்தன.
என் வாழ்க்கையும் கூட சில நாட்கள் இப்படித்தான் இருக்கும். பிரச்சனைகளைத் தீர்க்க திணறிக் கொண்டிருப்பேன், அனைத்தையும் மேற்பார்வை செய்யவும் சூழ்நிலைகளை என் கட்டுப்பாட்டில் வைக்கவும் தடுமாறிக் கொண்டிருப்பேன். நான் எவ்வளவு தான் முயன்றாலும் எல்லாவற்றையும் நேர்த்தியாக நிர்வகிக்க இயலாமல் என் கரங்கள் தளர்ந்து போகும். எப்படியோ ஏதாவதொன்று என் விரல்களின் ஊடாய் நழுவி தரையிலே என் காலருகே கொட்டி, என்னை திணறச் செய்துவிடும். என் கைகளை வளைத்து, என் விரல்களை நெருக்கமாக்கினாலும் என்னால் சமாளிக்க முடிவதில்லை.
ஆனாலும் இவை தேவனால் கூடும். அவர் இப்பூமியின் தண்ணீர்களை, அதாவது சமுத்திரங்கள், ஆறுகள் மற்றும் மழையையும் தன்னுடைய கைப்பிடியினால் அளக்கிறார் என்று ஏசாயா கூறுகிறார் (40:12). அது எப்படி சாத்தியம் என்றால், அவருடைய கரங்கள் அவ்வளவு பெரிதாக உள்ளது. அப்படியென்றால், ஒரு தேக்கரண்டி அளவு தண்ணீருக்கு மேலாக நம்முடைய கரங்களில் நாம் ஏந்தும்படி தேவன் நம்மை சிருஷ்டிக்காததால், அதற்கும் மேலாக எந்த முயற்சிக்கத் தேவையில்லை. சமாளிக்க முடியாமல் திணற நேரிட்டால், நாம் நம்முடைய கவலைகளையெல்லாம் அவருடைய வல்லமையான கரங்களில் ஒப்படைத்து விடுவோமாக.
நன்மையான சொத்து
என்னுடைய தாத்தா, பாட்டிக்கு அதிக பணமில்லாதிருந்தபோதிலும், ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் பண்டிகை எனக்கும் என்னுடைய சகோதர சகோதரிகளுக்கும் விசேஷமாக இருக்கும்படி பார்த்துக்கொள்வார்கள். அங்கு எப்பொழுதும் உணவும், குதூகலமும், அன்பும் நிறைந்திருக்கும். கிறிஸ்துவே இந்த கொண்டாட்டங்களை வாய்க்கச் செய்தார் என்பதை எங்கள் சிறு வயது முதல் கற்று வந்துள்ளோம். இதே பாரம்பரியத்தை எங்கள் குழந்தைகளுக்கும் நாங்கள் விட்டுச்செல்ல விரும்புகிறோம். கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸை முன்னிட்டு குடும்பமாக ஒன்று கூடியபொழுது, இந்த அற்புதமான பாரம்பரிய வழக்கம் தாத்தா, பாட்டியினிடமிருந்து துவங்கியது என்பதை உணர்ந்தோம். அவர்களால் எங்களுக்கு உலகப் பிரகாரமான சொத்து ஏதும் விட்டுச்செல்ல முடியவில்லை. ஆனால் மிக கவனமாக அன்பு, கனம், விசுவாசம் என்னும் விதைகளை எங்களுக்குள் விதைத்ததால், இன்று அவர்களுடைய பிள்ளைகளின் பிள்ளைகளாகிய நாங்கள், அவர்களுடைய மாதிரியைப் பின்பற்றுகிறோம்.
வேதாகமத்தில், திமோத்தேயுவுக்கு உண்மையான விசுவாசத்தை கற்றுத்தந்த அவனுடைய பாட்டி, லோவிசாளைக் குறித்தும், தாயாகிய ஐனிக்கேயாளைக் குறித்தும் காணலாம் (2 தீமோ. 1:5). அவர்களுடைய தாக்கம் அநேகருக்கு அவன் நற்செய்தியை பகிர்ந்து கொள்ளும்படி அவனை ஆயத்தப்படுத்தியது.
தேவனிடம் நெருங்கிய ஐக்கியத்தில் இருப்பதின் மூலம், நம்மால் தொடப்படுகிறவர்களுக்கு, ஒரு ஆவிக்குரிய செல்வத்தை சுதந்திரமாக அளிக்கும்படி ஆயத்தம்பண்ணலாம். நடைமுறை வாழ்க்கையில், நம்முடைய கவனத்தை சிதறவிடாமல் அவர்களை கவனிப்பதின் மூலம், அல்லது அவர்கள் செய்ய நினைக்கிற மற்றும் செய்கிற காரியங்களில் நாம் ஆர்வம் காட்டுவதின் மூலம் மற்றும் நம்முடைய வாழ்வை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதின் மூலமும் தேவனுடைய அன்பை வெளிப்படுத்தலாம். நம்முடைய கொண்டாட்டங்களில் கூட அவர்கள் பங்கு பெறும்படி அவர்களை அழைக்கலாம்! தேவனுடைய அன்பை நடைமுறை வாழ்வில் பிரதிபலிக்கும் பொழுது, நீடித்து தொடரக் கூடிய ஓர் பாரம்பரியத்தை நாம் மற்றவர்களுக்கு விட்டுச்செல்வோம்.
திறந்த கரங்கள்
நானும் என்னுடைய கணவர் டானும் (Dan) எங்களுடைய வயதான பெற்றோர்களுக்கு பராமரிப்பு அளிக்க துவங்கிய அந்நாளிலே நாங்கள் இருவரும் கைகோர்த்து, ஒரு மலை உச்சியிலிருந்து கீழே விழுவதைப் போல உணர்ந்தோம். இந்த பராமரிப்பு செயல்முறையின் போது எங்களுடைய இருதயங்கள் சோதிக்கப்படுவதற்கும், வனையப்படுவதற்கும் நாங்கள் தேவனுக்கு அனுமதி கொடுக்க வேண்டிய ஒரு கடினமான செயலை எதிர்கொள்ளக்கூடும் என்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதுமட்டுமன்றி, இந்த விசேஷமான காலத்தில் புதிய வழிகளில் எங்களை அவரைப் போல மாற்றவும் தேவனுக்கு அனுமதி கொடுக்க வேண்டியதாயிற்று.
கட்டுப்பாடின்றி நான் பூமிக்கு நேராய் பாய்ந்து விழுந்து கொண்டிருப்பது போல உணர்ந்த நாட்களில், தேவன் என்னுடைய திட்டங்களையும், ஐயங்களையும், பயங்களையும், பெருமையையும், சுயநலத்தையும் காண்பித்தார். ஆனால் அவருடைய அன்பையும், மன்னிப்பையும் வழங்கவே என்னுடைய உடைந்து போன பகுதிகளை எனக்கு காண்பித்தார்.
“கிறிஸ்து இல்லை என்றல் நீ நம்பிக்கையற்று கலங்கி நிற்கும் ஒரு வெறுமையான பாத்திரமே. ஆனால் அவருக்குள் நீ முழுமை பெறுகிறாய் என்பதை நீ கண்டு உணரும் அந்நாளே, உன் வாழ்நாளின் மிகச்சிறந்த நாள்,” என்று என்னுடைய சபை போதகர் கூறியுள்ளார். நான் பராமரிப்பு அளித்ததின் மூலம் வாழ்வில் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதம் இதுவே. நான் எப்படி இருக்க வேண்டும் என்று தேவன் சிருஷ்டித்தாரோ, அதைக் கண்டவுடன் தேவனை நோக்கித் திரும்பி அவர் கரங்களுக்கு ஒடிச்சென்றேன். சங்கீதக்காரனோடு சேர்ந்து நானும், “தேவனே என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்,” எனக் கதறினேன் (சங். 139:23).
உங்களுக்காக நான் ஏறெடுக்கும் ஜெபம் இதுவே: நீங்கள் உங்கள் சூழ்நிலைகளின் மத்தியில் உங்களைக் காணும்பொழுது தேவனை நோக்கித் திரும்பி உங்களை மன்னிக்கிற, நேசிக்கிற, விரிந்த கரங்களுக்குள் ஓடிச் செல்வீர்களாக.
எதிர்பாராத நேர்காணல்
ஓர் அதிகாலை நேரத்தில், லண்டன் மாநகரின் நெரிசலான பயணிகள் ரயிலில் பயணித்த ஒருவர், தன் வழியில் குறுக்கிட்ட ஒரு சக பயணியை நெருக்கித் தள்ளி அவமதித்து பேசினார். பொதுவாக தீர்க்கப்படாமலேயே போய்விடுகிற ஒரு துரதிஷ்டவசமான புத்திக்கெட்ட ஒரு தருணம் அது. ஆனால் அன்றைய தினம் 1201எதிர்0பாராதது நடந்தது. ஒரு வணிக மேலாளர் தன்னுடைய ஊடக நண்பர்களுக்கு விரைவுச்செய்தி ஒன்றை அனுப்பினார். “இன்று ஒரு வேலைக்கான நேர்காணலுக்கு யார் வந்தார் என்று தெரியுமா?” பின்பு அச்செய்திக்குரிய விளக்கம் இணையதளத்தில் வந்த பொழுது, உலகமெங்கிலுமுள்ள மக்கள் அதை படித்துவிட்டு முகம் சுளித்து புன்னகைத்தனர். நீங்கள் ஒரு வேலைக்கான நேர்காணலுக்கு சென்றபொழுது, அன்று காலை நீங்கள் அவமதித்து தள்ளிய அதே நபர் உங்களை தேர்வு செய்பவராக இருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். அதுதான் அன்று நடந்தது. அதைத்தான் அந்த வணிக மேலாளரும் பகிர்ந்து கொண்டார்.
சவுலும்கூட தான் எதிர்பார்க்காத ஒரு நபரை வழியிலே எதிர்கொண்டான். கிறிஸ்துவைப் பின்பற்றினவர்களுக்கு எதிராக சீற்றம் கொண்டு அவர்களை துன்புறுத்திக் கொண்டிருந்த சவுல் (அப். 9:1-2), பிரயாணம் செய்து கொண்டிருந்த பொழுது, வழியிலே கண்களைக் கூச செய்கிற மிகப் பிரகாசமான ஒளி பிரகாசித்து அவன் பயணத்தை தடைசெய்தது. அப்பொழுது, “சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்?”(வச. 4 ) என்கிற சத்தம் கேட்டது. உடனே சவுல், “ஆண்டவரே, நீர் யார்?” என்று கேட்டதற்கு, “நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே,” என்று கர்த்தர் பதிலுரைத்தார் (26:15).
பசியாயிருப்பவர்களையும், தாகமாயிருப்பவர்களையும், அந்நியர்களையும், சிறையிலிருப்பவர்களையும் நாம் நடத்தும் விதம் தேனோடு உள்ள நம்முடைய உறவை பிரதிபலிக்கும் என்று சில வருடங்களுக்கு முன்புதான் இயேசு கூறியிருந்தார் (மத். 25:35-36). நம்மை யாரேனும் அவமதிக்கும் பொழுது அல்லது நாம் பிறருக்கு உதவி செய்யும் பொழுது அல்லது நம்மை யாரேனும் காயப்படுத்தும் பொழுது, நம்மை நேசிக்கிற கர்த்தர் அவை எல்லாவற்றையும் தனக்கு செய்ததாகவே கருதுவார் என ஒருவரும் கற்பனை செய்து கூட பார்த்ததில்லை!
இது நான் அல்ல
சமீபத்தில் விடுமுறையின் பொழுது, என்னுடைய சவரக்கத்திக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்து விட்டு தாடி வளர்க்க ஆரம்பித்தேன். அம்மாற்றத்தை குறித்து என்னுடைய நண்பர்கள் மற்றும் சக ஊழியர்கள் அநேக கருத்துக்களை தெரிவித்தார்கள்; அதில் பாராட்டுகளே அதிகம். இருப்பினும் ஒரு நாள் கண்ணாடியில் தாடியுடன் கூடிய என் முகத்தை பார்த்துவிட்டு, “இது நான் அல்ல” என்ற முடிவுக்கு வந்தேன். ஆகவே சவரக்கத்தியை வெளியே எடுக்க வேண்டியதாயிற்று.
நாம் யார் என்றும், ஏன் நமக்கு சில காரியங்கள் நம்முடைய குணாதிசயத்திற்கு பொருந்துவதில்லை என்றும் சிந்திக்க ஆரம்பித்தேன். முதலாவதாக, தேவன் தாமே நம் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தந்துள்ளார். ஆகவே நாம் அனைவரும் ஒரே பொழுதுபோக்கை உடையவர்களாக இல்லாமல், ஒரே உணவு வகையை சாப்பிடாமல், ஒரே சபையில் தேவனை ஆராதிக்காமல் இருப்பதில் தவறேதுமில்லை. நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட விதத்தில் “பிரமிக்கத்தக்க அதிசயமாய்,” உண்டாக்கப்பட்டிருக்கிறோம் (சங். 139:14). நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவியாய் இருக்கும்பொருட்டு தனித்தன்மை வாய்நத ஈவுகளை தேவன் நம் அனைவருக்கும அளித்துள்ளார் என பேதுரு குறிப்பிடுகிறார் (1 பேது. 4:10-11).
இயேசுவின் சீஷர்கள் அவருடைய உலகத்திற்குள் பிரவேசிக்கும் முன்பு, அதின் வாசலில் நின்று அவரவர் குணாதிசயங்கள் ஏற்றனவாக உள்ளதா என எண்ணிப் பார்க்கவில்லை. ஏனெனில் இயேசு கைது செய்யப்பட்ட அந்த இரவு, உணர்ச்சி வசப்பட்ட பேதுரு போர்ச்சேவகரின் காதை வெட்டிவிட்டான். தோமாவோ கிறிஸ்து உயிர்த்தெழுந்துவிட்டார் என்பதை விசுவாசிக்க தனக்கு ஆதாரம் வேண்டுமென்று வலியுறுத்தினான். இவர்கள், தங்கள் உள்ளான மனிதனில் கொஞ்சம் வளர வேண்டும் என்பதற்காக, இயேசு இவர்களை நிராகரிக்கவில்லை. மாறாக தன்னுடைய பணிக்கு ஏற்றவாறு அவர்களை வனைந்து உருவாக்கினார்.
நாம் தேவனுக்கு எவ்வாறு செவ்வையாக சேவை செய்ய முடியும் என பகுத்தறிய முயலும் பொழுது, சில சமயங்களில், நம்முடைய தாலந்துகளையும், குணாதிசயங்களையும் எண்ணிப் பார்த்து, “இது நான் அல்ல” என்று கூறுவோமானால் நலமாயிருக்கும். ஏனெனில் சில சமயங்களில் நமக்கு சவுகரியமாக தோன்றுகிறதையெல்லாம் விட்டு வரும்படி தேவன் நம்மை அழைக்கலாம். அவ்வாறு அழைப்பது, நம்முடைய தனிப்பட்ட தாலந்துகளையும், குணநலன்களையும் மெருகேற்றி அவருடைய நன்மையான நோக்கங்களுக்கு பயன்படுத்துவதற்கே. நாம் இருக்கும் வண்ணமாகவே நம்மை பயன்படுத்தும்படி அவருக்கு அனுமதி கொடுக்கும் பொழுது, அவருடைய படைப்பாற்றலை நாம் கனப்படுத்துகிறோம்.
மேடே! (Mayday!)
உயிருக்கு ஆபத்தான நெருக்கடி நிலைமையை தெரியப்படுத்துவதற்கு சர்வதேச அபயக்குரல் சமிக்ஞையான ‘மேடே’ என்னும் வார்த்தையை திரும்பத்திரும்ப “மேடே-மேடே-மேடே” என மூன்று முறை உரைப்பார்கள். லண்டனின் கிராய்டன் (Croydon) விமான நிலையத்தின் தகவல் தொடர்பு உயர் அதிகாரியான பிரெட்ரிக் ஸ்டான்லி மாக்ஃபர்ட் (Frederick Stanley Mockford) 1923ஆம் ஆண்டு இவ்வார்த்தையை உருவாக்கினார். இன்று மூடப்பட்டுள்ள அவ்வளாகத்தில் ஒரு காலத்தில் பாரிசிலுள்ள, லே போர்ஜே (Le Bourget) விமான நிலையத்திலிருந்து விமானங்கள் வருவதும், போவதுமாய் இருக்கும். “எனக்கு உதவி செய்யுங்கள்” அல்லது “காப்பாற்றுங்கள்” என்னும் அர்த்தம் கொண்ட பிரெஞ்சு மொழியின் ‘மைடேஸ்’ என்னும் வார்த்தையிலிருந்து ‘மேடே’ என்னும் சொல்லை மாக்ஃபர்ட் உருவாக்கியதாக தேசிய கடல்சார் அருங்காட்சியம் கூறுகிறது.
தப்பித்துக்கொள்ள வழி தெரியமால், உயிருக்கு ஆபத்தான பல சூழ்நிலைகளை தன் வாழ்நாள் முழுவதும் தாவீது ராஜா எதிர்கொண்டான். இருப்பினும், இருண்ட நேரங்களிலும் தாவீது கர்த்தர் மீது தன் நம்பிக்கையை வைத்திருந்தான் என்பதை சங்கீதம் 86ஆம் அதிகாரத்தில் காணலாம். “கர்த்தாவே, என் ஜெபத்திற்குச் செவிகொடுத்து, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கவனியும். நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; நீர் என்னைக் கேட்டருளுவீர்” (வச. 6-7).
அதுமட்டுமின்றி, உடனடி ஆபத்தையும் கடந்து, கர்த்தர் அவனைத் தம் வழியிலே நடத்தும்படி வேண்டுகிறான். “கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்” (வச. 11). அதாவது நெருக்கடி வேளை கடந்த பின்பும், தான் தேவனோடு நடக்கவே அவன் விரும்பினான்.
நம் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் மிகக் கடினமான சூழ்நிலைமைகள், தேவனோடு நாம் நெருங்கி உறவாட வழி வாசல்களை ஏற்படுத்தக்கூடும். நம்முடைய இக்கட்டான நிலைமைகளில் தேவனை நோக்கி கூப்பிடும் பொழுதும், அதோடு கூட ஒவ்வொரு நாளும் நம்மை வழிநடத்தும்படி வேண்டிக்கொள்ளும் பொழுதும் இவ் வழிவாசல்கள் உண்டாகும்.
வீடு
ஸ்டீவன் (Steven) என்றழைக்கப்படும் ஒரு இளம் ஆப்பிரிக்க அகதிக்கு எந்த நாடும் சொந்தமில்லை. தான் மொசாம்பிக் (Mozambique) அல்லது ஜிம்பாப்வே (Zimbawe) நாட்டில் பிறந்திருக்கக்கூடும் எனக் கூறும் அளவிற்கு தான் பிறந்த தேசம் கூட அவனுக்குத் தெரியவில்லை. தன் தகப்பனைக் குறித்தும் அவனுக்கு ஒன்றும் தெரியவில்லை, தாயையோ இழந்துவிட்டான். உள்நாட்டுப் போரின் போது அவனுடைய தாய் அங்கிருந்து தப்பித்து தேசம் தேசமாய் தெருவோர வியாபாரம் செய்து, அலைந்து திரிந்துள்ளாள். எவ்வித அடையாள அட்டையுமின்றி, பிறந்த இடத்தைக் கூட அறியாமல் தவித்துக் கொண்டிருந்த ஸ்டீவன், ஒரு நாள் ஓர் பிரிட்டிஷ் காவல் நிலையத்திற்கு சென்று தன்னை கைது செய்யுமாறு வேண்டினான். ஒரு குடிமகனுக்குரிய உரிமைகளோ, நன்மைகளோ ஏதுமின்றி தெருவில்கூட வசிக்க வழியின்றி தவிப்பதைக் காட்டிலும் சிறையிலிருப்பதே மேல் என அவனுக்குத் தோன்றியது.
சொந்த தேசமின்றி வாழும் அவலநிலையை மனதில் வைத்துக்கொண்டுதான், பவுல் எபேசியருக்கு கடிதம் எழுதினான். ஏனெனில் அந்நியராக, புறம்பானவர்களாக வாழ்வதின் நிலையைக் குறித்து யூதரல்லாத அவனுடைய வாசகர்களுக்கு நன்கு தெரியும் (2:12). கிறிஸ்துவுக்குள் ஜீவனையும், நம்பிக்கையையும் பெற்ற பின்பு தான் (1:13) பரலோக ராஜியத்தை சேர்ந்தவர்களாக வாழ்வதின் அர்த்தத்தை கண்டறிந்தார்கள் (மத். 5:3). பிதாவை வெளிப்படுத்த வந்த இயேசுவின் மூலம் அவருடைய விசாரிப்பையும், அவருக்குள் தங்களுக்குண்டான அடையாளத்தையும் கற்றறிந்தார்கள் (மத். 6:31-33).
நம்முடைய நினைவிலிருந்து கடந்த கால ஞாபகங்கள் மறைந்து போகும் பொழுது, நம்பிக்கை என்பது புதிய விதிமுறை ஆகிறது; ஏனெனில் விரக்தியும், நம்பிக்கையின்மையும் பழைய வாழ்க்கைக்குரியது என்று பவுல் உணர்ந்தான்.
நாம் இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தைக் கொண்டு, தேவனுடைய குடும்பத்தின் அங்கதினராக சேர்த்துக்கொள்ளப்பட்டோம் என்றும், அதினால் சகலவித உரிமைகளையும், நன்மைகளையும் பெற்றவர்களாக அவருடைய பாதுகாப்பில் வாழக் கிருபைபெற்றுள்ளோம் என்பதை அறிந்துகொள்வோமாக.
தவறுகள் ஏற்பட்டன
சட்டவிரோத செயல்களில் தன் நிறுவனம் ஈடுபட்டதைக்குறித்து விவாதிக்கும்பொழுது, அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, “தவறுகள் ஏற்பட்டன” எனக் கூறினார், வருத்ததுடன் அவர் காணப்பட்டார். ஆனாலும் அவருக்கும், அத்தவறுகளுக்கும் தனிப்பட்ட விதத்தில் சம்பந்தம் ஏதுமில்லை என்பது போல அக்குற்றங்களை விட்டு ஒரு அடி தூரம் தள்ளியே நின்றார்.
சில “தவறுகள்” வெறும் தவறுகள்தான்: அதாவது தவறான திசையில் வாகனத்தை ஓட்டுவது, இரவு உணவை அடுப்பில் கருக வைப்பது, உங்கள் ‘செக்புக்கில்’ மீதம் காசோலைகள் இருக்கின்றனவா என கவனியாமல் போவது போன்றவை தவறுகள்தான். ஆனால் இதையும் தாண்டி, நன்கு தெரிந்தே செய்யப்படும் ‘தவறுகளை’ தேவன் ‘பாவம்’ எனக் கூறுகிறார். ஆதாமும், ஏவாளும் கீழ்ப்படியாமல் போனதைக் குறித்து தேவன் அவர்களிடம் விசாரித்தபொழுது, உடனடியாக அவரவர் குற்றத்தை இன்னொருவர் மேல் சுமத்த முயன்றனர் (ஆதி. 3:8-13). வனாந்திரத்திலே இருந்த இஸ்ரவேலர் தாங்கள் ஆராதிக்கும்படியாய் தங்கத்தினால் ஒரு கன்றுக் குட்டியை உருவாக்கியபொழுது, அதைக்குறித்து தான் எவ்விதத்திலும் பொறுப்பேற்க ஆரோன் மறுத்தான். “பொன்னுடைமை உடையவர்கள் எவர்களோ அவர்கள் அதைக் கழற்றித் தரக்கடவர்கள் என்றேன்; அவர்கள் அப்படியே செய்தார்கள்; அதை அக்கினியிலே போட்டேன், அதிலிருந்து இந்தக் கன்றுக்குட்டி வந்தது,” என்று மோசேயிடம் கூறினான் (யாத். 32:24).
“தவறுகள் ஏற்பட்டன,” என ஒருவேளை அவன் முணுமுணுத்திருக்கக் கூடும்.
சில சமயங்களில் நம்முடைய தவறுகளை நாம் ஒப்புக்கொள்வதைக்காட்டிலும் பிறர் மீது அதை சுமத்துவது நமக்கு சுலபமாகத் தோன்றுகிறது.
ஆனால் நாம் நம்முடைய பாவங்களுக்கு பொறுப்பேற்று, அப்பாவங்களை ஒப்புக்கொண்டு அறிக்கையிடும்பொழுது, தேவன், “பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1 யோ. 1:9). நம்முடைய தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு மன்னிப்பையும், புதிய வாழ்வையும் அளிக்கிறார்.
உருவப்படத்தை வரைதல்
இங்கிலாந்து தேசத்தின் லண்டன் மாநகரிலுள்ள தேசிய புகைப்படக்கூடத்தில் பல நாற்றாண்டுகளுக்குரிய உருவப்படங்கள் உள்ளன. வின்ஸ்டன் சர்ச்சிலின் (Winston Churchill) 166 உருவப்படங்களும், வில்லியம் ஷேக்ஸ்பியரின் (William Shakespeare) 94 உருவப்படங்களும், ஜார்ஜ் வாஷிங்டனின் (George Washington) 20 உருவப்படங்களும் உண்டு. இந்தப் பழைய உருவப் படங்களைப் பார்க்கும்பொழுது, ‘உண்மையாகவே இவர்களெல்லோரும் இப்படித்தான் இருந்தார்களா?’ என எண்ணத் தோன்றும்.
உதாரணத்திற்கு, ஸ்காட்லாந்து (Scotland) தேசபக்தர் வில்லியம் வாலஸின் (William Wallace கி. பி. 1270-1305) 8 உருவப்படங்கள் இங்கு உள்ளன. ஆனால் அவற்றின் நேர்த்தியை ஒப்பிட்டுப் பார்க்க அவரது வேறு புகைப்படங்கள் நம்மிடம் இல்லை. அப்படியிருக்க, அவ்வோவியர்கள் வாலஸ்சை துல்லியமாக வரைந்துள்ளார்களா இல்லையா என நமக்கு எப்படித் தெரியும்?
இயேசுவின் சாயலைப் பிரதிபலிக்கும் விஷயத்திலும் இதுதான் நடக்கிறது என்று கூறலாம். நம்மை அறியாமலேயே இயேசுவை விசுவாசிக்கிறவர்களாகிய நாம் இயேசுவை குறித்து ஒரு கருத்துப்பதிவை அல்லது இயேசுவை பற்றிய ஒரு உருவகத்தை பிறரிடம் ஏற்படுத்திவிடுகிறோம். இதை வர்ணங்களினால் அல்ல மாறாக நம்முடைய அணுகுமுறை, செய்கைகள் மற்றும் உறவுகளின் மூலமே தீட்டுகிறோம்.
ஆனால், இயேசுவின் இருதயத்தை அவ்வண்ணமே பிரதிபலிக்கும் ஓவியத்தைத் தீட்டுகிறோமா? இதுதான் அப்போஸ்தலனாகிய பவுலின் அக்கறையுள்ள கேள்வியும் கூட. “கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது” என அவர் எழுதியுள்ளார் (பிலி. 2:5). இயேசுவை மிகத் துல்லியமாக பிரதிபலிக்க விரும்பிய பவுல், அவரை பின்பற்றுகிறவர்களாகிய நாம் அனைவரும் இயேசுவின் தாழ்மையையும், தன்னலமற்ற தியாகத்தையும், இரக்கத்தையும் பிரதிபலிக்கும்படி அன்பாய் நம்மை தூண்டுகிறார்.
“ஒருவேளை தங்கள் வாழ்வில் சிலர் காணும் இயேசு நாமாக மாத்திரமே இருக்கக்கூடும்,” என ஒரு கூற்றுண்டு. “மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்” (வச. 3) என்கிற வசனத்தின்படி நடப்போமானால் இயேசுவின் இருதயத்தையும், மனதையும் இவ்வுலகிற்கு அவ்வண்ணமே பிரதிபலிப்போம்.