சட்டவிரோத செயல்களில் தன் நிறுவனம் ஈடுபட்டதைக்குறித்து விவாதிக்கும்பொழுது, அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, “தவறுகள் ஏற்பட்டன” எனக் கூறினார், வருத்ததுடன் அவர் காணப்பட்டார். ஆனாலும் அவருக்கும், அத்தவறுகளுக்கும் தனிப்பட்ட விதத்தில் சம்பந்தம் ஏதுமில்லை என்பது போல அக்குற்றங்களை விட்டு ஒரு அடி தூரம் தள்ளியே நின்றார்.

சில “தவறுகள்” வெறும் தவறுகள்தான்: அதாவது தவறான திசையில் வாகனத்தை ஓட்டுவது, இரவு உணவை அடுப்பில் கருக வைப்பது, உங்கள் ‘செக்புக்கில்’ மீதம் காசோலைகள் இருக்கின்றனவா என கவனியாமல் போவது போன்றவை தவறுகள்தான். ஆனால் இதையும் தாண்டி, நன்கு தெரிந்தே செய்யப்படும் ‘தவறுகளை’ தேவன் ‘பாவம்’ எனக் கூறுகிறார். ஆதாமும், ஏவாளும் கீழ்ப்படியாமல் போனதைக் குறித்து தேவன் அவர்களிடம் விசாரித்தபொழுது, உடனடியாக அவரவர் குற்றத்தை இன்னொருவர் மேல் சுமத்த முயன்றனர் (ஆதி. 3:8-13). வனாந்திரத்திலே இருந்த இஸ்ரவேலர் தாங்கள் ஆராதிக்கும்படியாய் தங்கத்தினால் ஒரு கன்றுக் குட்டியை உருவாக்கியபொழுது, அதைக்குறித்து தான் எவ்விதத்திலும் பொறுப்பேற்க ஆரோன் மறுத்தான். “பொன்னுடைமை உடையவர்கள் எவர்களோ அவர்கள் அதைக் கழற்றித் தரக்கடவர்கள் என்றேன்; அவர்கள் அப்படியே செய்தார்கள்; அதை அக்கினியிலே போட்டேன், அதிலிருந்து இந்தக் கன்றுக்குட்டி வந்தது,” என்று மோசேயிடம் கூறினான் (யாத். 32:24).

“தவறுகள் ஏற்பட்டன,” என ஒருவேளை அவன் முணுமுணுத்திருக்கக் கூடும்.

சில சமயங்களில் நம்முடைய தவறுகளை நாம் ஒப்புக்கொள்வதைக்காட்டிலும் பிறர் மீது அதை சுமத்துவது நமக்கு சுலபமாகத் தோன்றுகிறது.

ஆனால் நாம் நம்முடைய பாவங்களுக்கு பொறுப்பேற்று, அப்பாவங்களை ஒப்புக்கொண்டு அறிக்கையிடும்பொழுது, தேவன், “பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1 யோ. 1:9). நம்முடைய தேவன் தம்முடைய பிள்ளைகளுக்கு மன்னிப்பையும், புதிய வாழ்வையும் அளிக்கிறார்.