எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கட்டுரைகள்கெயிலா ஆச்சோவா

சமாதானத்தின் ரகசியம்

சகோதரி கிரேஸ் ஒரு விசேஷமான மங்கை. அவளைக் குறித்து நான் நினைக்கும்போதெல்லாம் ஒரு வார்த்தை என் மனதில் எழும்பும்: சமாதானம். அவளுடைய முகத்தில் காணப்படும் அமைதியான, ஆரவாரமற்ற தோற்றம். நான் அவளை அறிந்த இந்த ஆறு மாதத்தில் அது மாறவேயில்லை. பயங்கரமான ஒரு நோயின் காரணமாக அவளுடைய கணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் இவளுடைய முகநாடி வேறுபடவில்லை.

சகோதரி கிரேஸிடம் அவளுடைய சமாதானத்தின் ரகசியம் என்னவென்று விசாரித்தபோது, அவள் சொன்னாள், “அது ரகசியமல்ல, அது ஒருவர், இயேசு, எனக்குள் இருப்பதே என்றாள். இந்தப் புயலின் நடுவில் நான் உணர்ந்திடும் இந்த அமைதியை விவரிக்க வேறு வார்த்தை இல்லை”

நம்முடைய சமாதானத்தின் ரகசியம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடுகூட உள்ள உறவு. அவரே நம் சமாதானம். இயேசு நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாய் இருக்கும்போது, நாம் மேன்மேலும் அவரைப் போல் மாறும்போது, சமாதானம் உண்மையானதாகிறது. வியாதி, பொருளாதார நெருக்கடி அல்லது ஆபத்துகள் நம்மை சந்திக்கலாம், ஆனாலும் தேவன் தம்முடைய கரங்களிலே நம்மைத் தாங்குகிறார் (தானி. 5:23) என்பதை சமாதானம் உறுதிசெய்கிறது. ஆதலால், காரியங்கள் நன்மையாகவே முடியும் என்று நம்பிடலாம்.

எல்லா அறிவுக்கும் புத்திக்கும் எட்டாத இந்த சமாதானத்தை நாம் அனுபவித்திருக்கிறோமா? சகலமும் தேவனுடைய கட்டுப்பாட்டிலேதான் உள்ளது என்கின்ற உள்ளான நம்பிக்கை நமக்குண்டா? இன்றைக்கும் நான் ஒவ்வொருவருக்கும் சொல்லவிரும்பும் வாழ்த்து அப்போஸ்தலனாகிய பவுலின் வார்த்தைகளைப் பிரதிபலிக்கின்றது “சமாதானத்தின் கர்த்தர்தாமே உங்களுக்கு சமாதானத்தை தந்தருளுவாராக.” இந்த சமாதானத்தை நாம் “எல்லா வேளைகளிலும் எல்லா விதத்திலும்” உணர்ந்திடுவோமாக (2 தெச. 3:16).

இனிப்பும் கசப்பும்

சிலருக்கு கசப்பான சாக்லெட் பிடிக்கும், சிலருக்கு இனிப்பு என்றால் பிரியம். மத்திய அமெரிக்காவில் வாழ்ந்த மாயன் இன மக்கள் சாக்லெட்டுடன் காரமான மிளகை சேர்த்து அதனை ஒரு பானமாக அருந்துவர். “கசப்பு தண்ணீர்” என்று அழைத்த இவர்களுக்கு இது ஒரு விருப்ப பானம். அநேக ஆண்டுகளுக்கு பின் இது ஸ்பெயினில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்பெயின் நாட்டினர் இனிப்பு சாக்லெட் பிரியர்கள் என்பதால், பானத்தில் உள்ள இயற்கையான கசப்பை குறைக்க சக்கரை மற்றும் தேனை கூடுதலாக சேர்த்துக்கொள்வார்கள்.

ஆம். சாக்லெட்டை போன்றே நம்முடைய நாட்களும் கசப்பு அல்லது இனிப்பு மிக்கவைகளாய் இருக்கலாம். சகோதரர் லாரன்ஸ் என்கின்ற 17-ஆம் நூற்றாண்டு பிரஞ்சு துறவி ஒருவர் இப்படியாக எழுதினார், “ஆண்டவர் நம்மை எவ்வளவாய் அன்புகூருகிறார் என்பதை நாம் அறிந்திருந்தால் அவருடைய கைகளிலிருந்து வரும் இனிப்பையும் கசப்பையும் ஒரேவிதத்தில் எடுக்கப் பழகிக்கொள்வோம்.” இனிப்பையும் கசப்பையும் ஒரே விதத்தில் எடுப்பதா? இது கடினம்! சகோதரர் லாரன்ஸ் என்ன சொல்கிறார்? அதன் திறவுகோல் தேவனுடைய குணநலனுக்குள் மறைந்துள்ளது. சங்கீதக்காரன் ஆண்டவரைப் பற்றிக் கூறுகையில், “தேவரீர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாயிருக்கிறீர்” (சங். 119:68) என்று குறிப்பிடுகிறார்.

மாயன் மக்களும் கசப்பான சாக்லெட்டின் ஆரோக்கியம் மற்றும் மருத்துவ கூறுகளை அறிந்திருந்தனர். கசப்பான நாட்களுக்கு மதிப்பில்லாமல் போவதில்லை. நமது பலவீனங்களை நமக்கு வெளிப்படுத்தி, தேவனையே சார்ந்து வாழ நமக்கு உதவுகிறது. சங்கீதக்காரன் எழுதினார், “நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன் (வச. 71).” இன்றைக்கும், தேவன் நன்மை செய்கிறவராகவே உள்ளார் எனும் நிச்சயத்துடன், வாழ்க்கையை அதன் பல்வேறு சுவைகளுடன், அனுபவிக்க முனைந்திடுவோம். நாமும்கூட “கர்த்தாவே, உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாய் நடத்தினீர்.” என்று சொல்லிடுவோம் (வச. 65).

நோக்கிப் பார், அமைதியாயிரு

மெக்ஸிக்கன் பாடலாசிரியர் ரூபன் சோடேலோ எழுதிய ‘‘அவரை நோக்கிப் பார்” என்ற பாடல் சிலுவையிலிருந்த இயேசு கிறிஸ்துவைப் பற்றி விளக்கியுள்ளது. அவர் நம்மனைவரையும் இயேசுவை நோக்கிப் பார், அமைதியாயிரு என்கின்றார். ஏனெனில், இயேசு கிறிஸ்து சிலுவையில் செயல்படுத்திக் காட்டிய அன்பிற்கு முன்பாக சொல்வதற்கு ஒன்றுமேயில்லை. சுவிசேஷங்களில் விளக்கப்பட்டுள்ள காட்சிகளை, விசுவாசத்தோடு நாம் கற்பனை செய்து பார்க்க முடிகிறது. நாம் அந்த சிலுவையையும், அவருடைய இரத்தத்தையும், ஆணிகளையும், வேதனைகளையும் கற்பனை செய்து பார்க்க முடியும்.

இயேசு தன் கடைசி மூச்சை விட்ட போது இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடி வந்திருந்தவர்கள்... தங்கள் மார்பில் அடித்துக் கொண்டு திரும்பிப் போனார்கள்” (லூக்கா 23:47-48). மற்றவர்கள் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் (வச. 49) அவர்களெல்லாரும் பார்த்து அமைதியாயிருந்தார்கள். ஒரேயொரு மனிதன் பேசுகிறான். நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு ‘‘மெய்யாகவே இந்த மனுஷன் நீதிமானாயிருந்தான்” என்றான் (வச. 47).

பாடல்களும், கவிதைகளும் இந்த பெரிய அன்பை விளக்கி எழுதப்பட்டிருக்கின்றன. அநேக ஆண்டுகளுக்கு முன்பு எரேமியா, எருசலேமின் பேரழிவுக்குப் பின் அதன் வேதனைகளை விளக்கி எழுதினார். ‘‘வழியில் நடந்து போகிற சகல ஜனங்களே, இதைக் குறித்து உங்களுக்குக் கவலையில்லையா?” (புலம். 1:12) என ஜனங்களை நோக்கிப் பார்க்கச் சொல்கின்றார். எருசலேமிற்கு நடந்த கொடுமைகளைக் காட்டிலும் வேறே துக்கமில்லை எனக் கருதுகின்றார். எப்படியாயினும், இயேசு சகித்த துன்பத்தைக் காட்டிலும் வேறு துயரம் என்ன இருக்கிறது?

நாம் அனைவரும் சிலுவையின் அருகிலுள்ள பாதையின் வழியே கடந்து செல்கிறோம். அவருடைய அன்பை நோக்கிப் பார்க்கின்றோமா? வார்த்தைகளும், பாடல்களும் நம்முடைய நன்றியையும் தேவனுடைய அன்பையும் விவரிக்க போதாது. நாம் இயேசுவின் மரணத்தைக் குறித்து சிறிது நேரம் நினைத்துப் பார்த்து, நம் இருதயத்தின் ஆழத்தில் நம்முடைய ஆழ்ந்த அன்பினை அவருக்குக் கொடுப்போம்.

உண்மையாயிருக்க தைரியங்கொள்ளல்

ஹடாஷாவை நிரந்தரமாக பயம் ஒட்டிக் கொண்டது. பிரான்கைன் ரிவர் என்பவர் எழுதிய ‘’எ வாய்ஸ் இன் த வின்ட்’’ என்ற புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த கற்பனைக் கதையின் கதாப்பாத்திரம் தான் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹடாஷா என்ற யூத குல சிறுமி. ஒரு ரோம வீட்டில் அடிமையாக ஹடாஷா இருந்தபோது, அவள் கிறிஸ்து மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக தான் துன்புறுத்தப்படலாம் என பயந்து கொண்டிருந்தாள். கிறிஸ்தவர்கள் ரோமர்களால் வெறுக்கப்பட்டனர். அநேக கிறிஸ்தவர்கள் தூக்குத் தண்டனைக்குள்ளாயினர் அல்லது சிங்கங்களின் அரங்கில் தூக்கி வீசப்பட்டனர் என்பது அவளுக்குத் தெரியும். அவள் சோதிக்கப்படும்போது தன்னுடைய உண்மைக்காக நிற்கத் தகுந்த தைரியம் அவளுக்கிருக்குமா?

அவள் மிகவும் பயந்த காரியம் உண்மையில் நடந்த போது, அவளுடைய எஜமானியும், கிறிஸ்தவத்தை வெறுத்த ரோம அதிகாரிகளும் அவளுக்கு எதிராக வருகின்றனர். அவளுக்கு இரண்டே வாய்ப்புகள் உள்ளன. ஒன்று கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையை விட்டு விடல், மற்றொன்று சிங்கங்களின் அரங்கினுள் தள்ளப்படல். ஆனால் எப்பொழுது அவள் இயேசுவே கிறிஸ்து என அறிக்கை செய்தாளோ அப்பொழுதே அவளுடைய பயம் அவளை விட்டு ஒழிந்தது. அவள் சாவை எதிர்நோக்கிய போதும், தைரியமாக நின்றாள்.

சில வேளைகளில் நாம் சரியானவற்றைச் செய்வதற்காக நாம் துன்புறுத்தப்படலாம் என வேதாகமம் நமக்கு நினைப்பூட்டுகிறது. சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது, அல்லது உலகத்தாரைப் போல வாழாமல் தேவனைப் போல வாழும் போது நாம் துன்புறுத்தப்படலாம். ஆனால் பயப்படாதிருங்கள் (1 பேது. 3:14), கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம் பண்ணுங்கள் (வச. 15) என்று வேதாகமம் நமக்குச் சொல்லுகிறது. ஹடாஷாவின் முக்கிய யுத்தம் அவளுடைய இருதயத்தில் ஆரம்பித்தது. இறுதியாக அவள் இயேசுவைத் தேர்ந்து கொள்ள தன் மனதைத் திடப்படுத்திக் கொண்டபோது, தன் விசுவாசத்தில் உண்மையாயிருக்க அவளுக்கு தைரியம் கிடைத்து விட்டது.         

நாமும் தேவனை கனப்படுத்த முடிவெடுக்கும் போது அவர் நாம் தைரியமாக நிற்கவும் எதிர்ப்புகளின் மத்தியில் பயத்தை மேற்கொள்ளவும் உதவி செய்கிறார்.

உறைந்த பனியைப்போல வெண்மை

கடந்த டிசம்பர் மாதத்தில் நான் என் குடும்பத்தோடு மலைப் பகுதிக்குச் சென்றோம். நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுதும் வெப்பமண்டலப் பகுதியிலேயே வாழ்ந்ததால் முதல் முறையாக நாங்கள் உறைந்த பனியையும்  அதன் அற்புத அழகையும் காண முடிந்தது. வெள்ளை போர்வை போர்த்தியதைப் போல காட்சியளித்த வயல் வெளிகளைக் கண்ட எனது கணவர், “உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல வெண்மையாகும்” (ஏசா. 1:18) என்ற வசனத்தைக் குறிப்பிட்டார்.

சிவேரென்பதின் அர்த்தம் என்ன என்பதை எங்களுடைய மூன்று வயது மகள் கேட்டதோடு, “சிவப்பு நிறம் கெட்டதா? எனவும் கேட்டாள். பாவம் என்பது தேவன் வெறுக்கும் காரியம் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால், இந்த வசனம் வெறும் நிறத்தை மட்டும் குறிப்பிடவில்லை, இங்கு தீர்க்கதரிசி விளக்குவது என்னவெனின், ஆழ்ந்த சிவப்பு நிறச்சாயம் ஒரு சிறிய பூச்சியின் முட்டையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. ஆடைகள் இந்த ஆழ்ந்த சிவப்பு சாயத்தில் இருமுறை சாயமேற்றப்படுகின்றன. எனவே இந்த நிறம் நிரந்தரமாக ஒட்டிவிடுகிறது. மழையோ, அல்லது எப்படித் துவைப்பதாலேயும் அந்த நிறத்தை எடுக்க முடியாது. பாவமும் அப்படியே தான். மனித முயற்சியால் நம் பாவத்தை நீக்க முடியாது. அது இருதயத்தில் பதிந்து விடும்.

தேவனால் மட்டுமே இருதயத்தை பாவத்திலிருந்து சுத்திகரிக்க முடியும். இந்த மலையைப் பார்க்கும் போது, ஒரு வியத்தகு தூய வெண்மையைக் காண்கிறோம். ஆழ்ந்த சிவப்பில் சாயமிடப்பட்ட ஒரு துணியைத் தேய்ப்பதாலோ அல்லது எந்த நிற நீக்கியினாலோ இந்த தூய வெண்மையைக் கொண்டு வரவேமுடியாது. பேதுருவின் போதகத்தை நாம் பின்பற்றும் போது, ‘உங்கள் பாவங்கள் நிவிர்த்தி செய்யப்படும் பொருட்டு நீங்கள் மனந்திரும்பி குணப்படுங்கள்” (அப். 3:20) தேவன் நம்முடைய பாவங்களை மன்னித்து நமக்கு ஒரு புது வாழ்வைத் தருகிறார். இயேசு கிறிஸ்துவின் தியாகம் மட்டுமே நமக்கு ஒரு தூய உள்ளத்தைத் தர முடியும். இது எத்தனை பெரிய ஈவு.

கண்களில் நிலை நிற்பவை எது?

ஹம்மிங் பறவையின் பெயர் (HUMMING BIRD) இதன் இறக்கைகள் வேகமாக அடிப்பதால் ஏற்படும் ரீங்கார ஓசையினால் இதற்கு இந்தப் .பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. போர்த்துக்கீசிய மொழியில் “பூக்களை முத்தமிடும் பறவை” (FLOWER KISSER) என்றழைக்கப்படுகிறது. ஸ்பானிய மொழியில் “பறக்கும் ரத்தினம்” (FLYING JEWELS) எனப்படும். எனக்குப் பிடித்த பெயர்களில், மெக்சிகன் ஒன்று. சப்போடெக் மொழியில் பியுலூ என்பதே. இதன் அர்த்தம் “கண்களில் நிலைநிற்பது” என்பதாகும் அதாவது இந்த ஹம்மிங் பறவையை ஒரு முறை பார்த்துவிட்டால் மறக்கவே முடியாது!

ஜீ. கே. செஸ்டர்ட்டன் “உலகில் அதிசயங்கள் ஒழிந்துபோவதேயில்லை. ஆச்சரியப்படுபவர்கள் இல்லாததுதான் குறை;” என்றார். இந்த ஹம்மிங் பறவை அப்படியொரு அற்புதம். இந்த சின்னக் குருவியில் என்ன அற்புதம் இருக்கிறது? அவைகளின் சிறிய உருவம் கிட்டத்தட்ட ஒரு விரல் நீளம் (2-3) இருப்பதாலோ அல்லது ஒரு வினாடிக்கு 50 முதல் 200 தடவை இறக்கைகளை அடிப்பதாகவோ இருக்கலாம்.

104ம் சங்கீதத்தை எழுதியது யார் என்று திட்டமாகத் தெரியவில்லை. ஆனால் அவர் இயற்கையின் அழகினால் நிச்சயம் கவரப்பட்டிருந்தார். சிருஷ்டிப்பின் பல அதிசயங்களை, உதாரணமாக லீபனோனின் கேதுரு மரங்கள், காட்டுக் கழுதைகள் போன்றவற்றை வர்ணித்தபின், “கர்த்தர் தம்முடைய கிரியைகளிலே மகிழுவார்” (வச. 3) என்று பாடினார். அதன்பின் “நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிமையாயிருக்கும் என்று ஜெபித்தார் (வச. 340).

என்றும் கண்களில் நிலைத்து நிற்கும் அழகும் பூரணமும் கொண்ட அநேகக் காரியங்கள் இயற்கையிலுண்டு. நாம் அவற்றைத் தியானித்து கர்த்தரை எவ்வாறு பிரியப்படுத்தலாம்? நாம் அவற்றைக் கண்டு, ரசித்து, களிகூரும்பொழுது, கர்த்தருடைய கிரியைகளை நினைத்து, ஆச்சரியப்பட்டு, அவருக்கு நன்றி சொல்லலாம்.

இரண்டாம் தருணங்கள்

தான் எடுத்த சில தவறான தீர்மானங்களினால், கிட்டா, அயல் நாடொன்றில், ஆறு வருடங்களை சிறையில் கழிக்க நேரிட்டது. அவள் விடுதலையானபோது அவளுக்கு போவதற்கு ஓரிடமும் இல்லை. அவள் தன் வாழ்க்கை முடிந்ததென்று நினைத்தாள். அவள் குடும்பத்தினர் அவள் தன் சொந்த தேசத்திற்கு வருவதற்கு டிக்கெட் எடுக்கத் தேவையான பணத்தை சேகரித்து அனுப்பினர். அதுவரை ஒரு அன்புள்ள தம்பதியர் அவளுக்கு தங்க இடமும் உணவும் கொடுத்து உதவியதால் அவர்களின் அன்பினால் தொடப்பட்டாள். ஆகவே அவர்கள், அவளை நேசித்து அவள் வாழ்வதற்கு அவளுக்கு இரண்டாம் தருணம் கொடுக்க விரும்பும் ஆண்டவரைக்குறித்த நற்செய்தியை சொன்னபோது, கவனமாகக் கேட்டாள்.

கிட்டா வேதாகமத்திலுள்ள விதவை நாகோமியை எனக்கு நினைவுபடுத்தினாள். அந்நிய தேசத்தில் தன் கணவனையும் இரண்டு மகன்களையும் இழந்து, தன் வாழ்க்கை முடிந்ததென்று நினைத்தாள் (ரூத். 1). ஆனால், தேவன் நகோமியை மறக்கவில்லை… தன் மருமகள் ரூத்தின் அன்பினாலும், போவாஸ் எனும் தேவனுக்குப் பயந்த மனிதனின் தயவினாலும் நகோமி தேவனுடைய அன்பைக் கண்டு இரண்டாம் தருணமொன்றைப் பெற்றுக்கொண்டாள் (4:13-17).

அதே தேவன் இன்றும் நம்மேல் கரிசனையுள்ளவராகவே இருக்கிறார். மற்றவர்கள் நம்மேல் அன்புகாட்டும்பொழுதெல்லாம், நாம் தேவனுடைய பிரசன்னத்தை உணர்கிறோம். நமக்கு அதிகம் அறிமுகமில்லாதவர்கள் உதவும்போது தேவனுடைய கிருபையை அறிகிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக தேவன் நமக்கு ஒரு புது ஆரம்பத்ததைத்தர விரும்புகிறார். நாமும் நகோமியைப்போல் நமது அனுதின வாழ்க்கையில் தேவனுடைய கரத்தைக் கண்டு, அவருடைய அன்புக்கு முடிவே கிடையாது என்று அறிந்துகொள்ள வேண்டும்.

உன் தந்தையின் பெயரென்ன?

நான் மத்திய கிழக்கு நாடுகள் ஒன்றில் ஒரு செல்போன் வாங்க முற்பட்டபோது, பெயர், சொந்தநாடு, முகவரி என சில கேள்விகள் கேட்கப்பட்டது. என்னுடைய கிளார்க் என் வடிவத்தை நிரப்பிய போது அவர் என்னிடம் உன் தந்தையின் பெயர் என்ன? என்று கேட்டார். இக்கேள்வி என்னை  வியப்புக்குள்ளாக்கியது. இது அவ்வளவு முக்கியமானதா என நினைத்தேன். எங்கள் கலாச்சாரத்தில் தந்தையின் பெயரைத் தெரிந்து கொள்ளத் தேவையில்லை. ஆனால், இங்கு என்னுடைய அடையாளத்தைத் தெரிந்து கொள்ள தேவையாயிருக்கிறது. சில கலாச்சாரங்களில் முன்னோர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

இஸ்ரவேலர் முன்னோர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். அவர்கள் தங்கள் முற்பிதா ஆபிரகாமைக் குறித்து பெருமை கொள்கின்றனர். அவர்கள் ஆபிரகாமின் வம்சா வழியினர் தான் தேவனுடைய பிள்ளைகள் என்பதில் பெருமிதம் கொள்கின்றனர். மத வம்சாவழிக்கும் ஆன்மீக குடும்பத்திற்கும் தொடர்புண்டு என்பது அவர்களுடைய எண்ணம்.

பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னர் யூதர்கள் மத்தியில் இயேசு தோன்றிய போது, தேவன் இக்கருத்தினை மறுக்கிறார். அவர்கள் ஆபிரகாம் எங்கள் முற்பிதா எனக் கூறியும், பிதாவினால் அனுப்பப்பட்ட இயேசுவை நேசிக்காவிட்டால் அவர்கள் தேவனுடைய குடும்பத்தினர் ஆகமாட்டார்கள் எனக் குறிப்பிடுகிறார்.

இக்கருத்து இன்றைக்கும் பொருந்தும். நாம் எந்தக் குடும்பத்தில் பிறக்கிறோமென்பது நமது விருப்பத்தின்படியல்ல. ஆனால், எந்த ஆன்மீக குடும்பத்திற்குச் சொந்தமானவர்கள் என்பதை தெரிந்து கொள்ள முடியும். நாம் இயேசுவின் பேரில் நம்பிக்கையாயிருந்தால் தேவன் நமக்கு அவருடைய பிள்ளைகள் என்ற உரிமையைத் தருகிறார் (யோவா. 1:12).

உன்னுடைய ஆன்மீகத் தந்தை யார்? நீ இயேசுவைப் பின்பற்ற தீர்மானித்து விட்டாயா? இன்றே உன் நம்பிக்கைய இயேசுவின் மீது வை. அவர் தரும் பாவ மன்னிப்பை பெற்று அவர் குடும்பத்தின் அங்கத்தினராகிவிடு.

தேவனால் ஊக்குவிக்கப்பட்ட வாழ்வு!

சில மாதங்களுக்கு முன்பு, “ஊக்கமிக்க மனிதர்கள்” என்னும் சங்கத்திலிருந்து, அச்சங்கத்திலே நான் சேரும்படி, மின்னஞ்சல் மூலம் எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்பொழுது ‘ஊக்கமிக்க’ என்னும் வார்த்தையின் முழுமையான அர்த்தத்தை  நான் அறிந்துகொள்ள முனைந்தபொழுது, ‘ஒரு ஊக்கமிக்க மனிதன், வெற்றிபெறவேண்டும் என்ற முனைப்போடு, அதற்கான இலக்குகளை அடைய, விடாமுயற்சியோடு, கடினமாக உழைக்கக்கூடியவன்’ என்பதை நான் அறிந்தேன்.

ஊக்கமிக்க மனிதனாய் இருப்பது நலமானதா? அதை அறிந்துகொள்ள, “புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்,” என்னும் வசனத்தின் அடிப்படையில் சோதித்து அறியலாம் (1 கொரி. 1௦:31). ஏனென்றால், அநேகந்தரம், நம்முடைய சுயமகிமைக்கென்றே அநேக காரியங்களை நாம் செய்கிறோம்.

நோவாவின் காலத்தில் உண்டான பெருவெள்ளத்திற்கு பிறகு, “நமக்கு பேர் உண்டாகப்பண்ணுவோம்,” (ஆதி. 11:4) என கூறிக்கொண்டு, மனுஷர் தங்கள் மகிமைக்கென்று ஒரு வானளாவிய கோபுரத்தை கட்ட தீர்மானித்தார்கள். தாங்கள் பூமியெங்கும் சிதறிப் போகாமல் இருக்கவும், புகழ்ச்சியடையவும் விரும்பினார்கள். அவர்கள் தவறான ஊக்கத்தினால் செயல்பட்டார்கள். தேவனுடைய மகிமைக்கென்று அதை செய்யாமல், தங்களுடைய புகழ்ச்சிக்காகவே அதைச் செய்தார்கள்.

அதற்கு எதிர்மாறாக, சாலொமோன் ராஜா, உடன்படிக்கைப் பெட்டியையும் புதிதாக கட்டப்பட்ட தேவாலயத்தையும் பிரதிஷ்டை பண்ணும்பொழுது, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டினேன்”, என்று கூறினார் (1இரா:8:2௦). மேலும், “நாம் அவருடைய கற்பனைகளையும், அவருடைய கட்டளைகளையும்... கைக்கொள்ளுகிறதற்கு நம்முடைய இருதயத்தைத் தம்மிடத்தில் சாயப்பண்ணுவாரக”, என வேண்டுதல் செய்தார் (வச:58).

தேவனை மகிமைப்படுத்துவதும், அவருடைய வழிகளில் நடப்பதுமே நம்முடைய பெரிதான வாஞ்சையாய் இருந்தால், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையோடு, இயேசுவை நேசிக்கவும் சேவிக்கவும்வல்ல ஊக்கமுள்ள மக்களாக நாம் மாறிவிடுவோம். சாலொமோனின் ஜெபம், நம்முடைய ஜெபமாய் மாறுவதாக. “அவர் கட்டளைகளில் நடந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்ள, [நம்] இருதயம் நம்முடைய தேவனாகிய கர்த்தரோடு உத்தமமாய் இருக்கக்கடவது” (வச. 61).