பழங்காலத்தில் ஒரு பட்டணத்தின் சுற்றுச் சுவர் உடைக்கப்பட்டதாகக் காணப்படின், அது தோற்றுபோன மக்களையும், ஆபத்திற்கும் வெட்கத்திற்குமுள்ளாக்கப்பட்ட ஜனங்களையும் கொண்டுள்ளதாகக் கருதப்படும். எனவேதான் யூத ஜனங்கள் எருசலேமின் அலங்கத்தை மீண்டும் கட்டுகின்றார்கள். எப்படி? ஒருவரோடொருவர் இணைந்து கட்டுகின்றார்கள். இது நெகேமியா 3 ஆம் அதிகாரத்தில் விளக்கப்பட்டுள்ளது.

இந்த 3ஆம் அதிகாரத்தை வாசிக்கும் போது முதலில் அது நமக்குச் சற்று ஆர்வமில்லாத பகுதியாகத் தோன்றும். யார், எந்த பகுதியை எடுத்துக் கட்டினான் எனத் தெரிவிக்கின்றது. ஆனால், சற்று ஆழந்து பார்ப்போமாகில், மக்கள் எவ்வாறு இணைந்து வேலை செய்தனர் என்பதைக் தெரிந்து கொள்வோம். ஆசாரியர்களும் பிரபுக்களோடு இணைந்து வேலை செய்கின்றனர். அருகிலுள்ள பட்டணங்களில் வாழ்பவர்களும் வந்து உதவுகின்றனர். மற்றவர்கள் தங்கள் வீடுகளுக்கு எதிரேயிருக்கிற பகுதியைப் பழுது பார்கின்றனர். சல்லூமின் குமாரத்திகளும் பிறரோடு இணைந்து வேலை செய்தனர் (3:11) தெக்கோவா ஊரார் இரண்டு பகுதிகளை பழுது பார்க்கின்றனர் (வச. 5,27).

இந்த பகுதியிலிருந்து இரண்டு காரியங்களை நாம் தெரிந்து கொள்ளலாம். ஓன்று அவர்களெல்லாரும் ஒரு பொதுவான நோக்கத்திற்காக இணைந்து வேலை செய்கிறார்கள். இரண்டாவதாக எவ்வளவு வேலை செய்தனர், மற்றவர்களைக் காட்டிலும் குறைவாகத்தான் வேலை செய்தனர் என்பதான பாகுபாடின்றி, அவர்கள் அனைவரும் இந்த வேலையில் பங்கு பெற்றதற்காகப் பாராட்டப்படுகின்றனர். செய்த வேலையின் அளவல்ல; பங்கெடுத்தலே போற்றத்தக்கது.

இன்றைய நாட்களில் நாம் பாதிக்கப்பட்ட குடும்பங்களையும், உடைந்துபோன சமுதாயத்தையும் பார்க்கின்றோம். வாழ்வு மாற்றத்தைக் கொடுப்பதன் மூலம் தேவனுடைய இராஜ்ஜியத்தைக் கட்டும்படியாக இயேசு கிறிஸ்து உலகத்தில் வந்தார். நாம் நம்முடைய அண்டை வீட்டாரின் வாழ்வை மாற்றும்படி, அவர்களுக்கு இயேசு தரும் புதிய வாழ்வையும், நம்பிக்கையையும் காட்டுவோம். நாம் அனைவரும் ஏதாவது ஒன்றைச் செய்யும்படி இடம் இருக்கிறது. எனவே நாம் ஒருவரோடொருவர் இணைந்து பெரிதோ, சிறிதோ நம்முடைய வேலையைச் செய்து, ஓர் அன்பான சமுதாயத்தை உருவாக்கும்படி, ஒவ்வொருவரும் இயேசுவைக் கண்டுகொள்ள உதவுவோம்.