மெக்ஸிகோவிலுள்ள எனது சொந்த ஊரில் சோளம் என்ற மக்காச் சோளம்தான் பிரதானமான உணவு. சோளத்தில் அநேக வகைகள் உண்டு. மஞ்சள், பழுப்பு, சிவப்பு, கருப்பு மற்றும் புள்ளியிட்டவை என பல வகைகளைக் காணலாம். ஆனால், பட்டணங்களில் வசிப்பவர்கள் புள்ளியிட்ட சோளத்தை உண்பதில்லை. உணவகத்தைப் பற்றிய ஆராய்ச்சியாளர் ஆமடோரமிரஸ் என்பவர் ஒரே நிறமுடைய தானியம் தான் தரமானது என நம்பப்படுகிறது எனத் தெரிவித்தார். ஆனாலும், புள்ளியிட்ட தானியம் சுவைமிக்கதாகவும், நல்ல ரொட்டி தயாரிக்க உகந்ததாகவும் உள்ளது.

கிறிஸ்துவின் சபையும் ஒரே நிறத்தையுடைய சோளத்தைப் போலல்லாமல், புள்ளிகளுள்ள சோளத்தைப் போன்றேயுள்ளது. பவுல் அப்போஸ்தலன் ஒரு சரீரத்தை கிறிஸ்துவின் சபையோடு ஒப்பிட்டு விளக்குகின்றார். எவ்வாறெனின், நாமனைவரும் ஒரே சபையும் ஒரே தேவனும் கொண்டவர்களாயிருந்தும், ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையான வரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பவுல் சொல்வது போல, “ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே. கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே. (1கொரி. 12:5-6). நாம் ஒருவருக்கொருவர் உதவுவதில் இருக்கின்ற வேறுபாடுகள், தேவனுடைய தயாளத்தையும், படைப்பின் ஆற்றலையும் காட்டுகின்றது.

நாம் நம்முடைய வேறுபாடுகளை ஏற்றுக் கொள்ளும்போது, நாம் நம்முடைய நம்பிக்கையிலும் நோக்கத்திலும் ஒற்றுமையை காத்துக்கொள்ள முயற்சிக்கின்றோம். நமக்குள்ளே வேறுபட்ட திறமைகளும் வேறுபட்ட சூழலும் உண்டு. நாம் வேறுவேறு மொழிகளைப் பேசுகின்றோம். வெவ்வேறு தேசங்களிலிருந்து வந்தவர்களாகவும் இருக்கின்றோம். ஆனால், நம் அனைவருக்கும் ஒரே அற்புதமான தேவன் உண்டு. அவரே படைப்பின் கர்த்தர், வெவ்வேறு வகைகளைப் படைத்து மகிழ்பவர்.