உயிருக்கு ஆபத்தான நெருக்கடி நிலைமையை தெரியப்படுத்துவதற்கு சர்வதேச அபயக்குரல் சமிக்ஞையான ‘மேடே’ என்னும் வார்த்தையை திரும்பத்திரும்ப “மேடே-மேடே-மேடே” என மூன்று முறை உரைப்பார்கள். லண்டனின் கிராய்டன் (Croydon) விமான நிலையத்தின் தகவல் தொடர்பு உயர் அதிகாரியான பிரெட்ரிக் ஸ்டான்லி மாக்ஃபர்ட் (Frederick Stanley Mockford) 1923ஆம் ஆண்டு இவ்வார்த்தையை உருவாக்கினார். இன்று மூடப்பட்டுள்ள அவ்வளாகத்தில் ஒரு காலத்தில் பாரிசிலுள்ள, லே போர்ஜே (Le Bourget) விமான நிலையத்திலிருந்து விமானங்கள் வருவதும், போவதுமாய் இருக்கும். “எனக்கு உதவி செய்யுங்கள்” அல்லது “காப்பாற்றுங்கள்” என்னும் அர்த்தம் கொண்ட பிரெஞ்சு மொழியின் ‘மைடேஸ்’ என்னும் வார்த்தையிலிருந்து ‘மேடே’ என்னும் சொல்லை மாக்ஃபர்ட் உருவாக்கியதாக தேசிய கடல்சார் அருங்காட்சியம் கூறுகிறது.

தப்பித்துக்கொள்ள வழி தெரியமால், உயிருக்கு ஆபத்தான பல சூழ்நிலைகளை தன் வாழ்நாள் முழுவதும் தாவீது ராஜா எதிர்கொண்டான். இருப்பினும், இருண்ட நேரங்களிலும் தாவீது கர்த்தர் மீது தன் நம்பிக்கையை வைத்திருந்தான் என்பதை சங்கீதம் 86ஆம் அதிகாரத்தில் காணலாம். “கர்த்தாவே, என் ஜெபத்திற்குச் செவிகொடுத்து, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கவனியும். நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; நீர் என்னைக் கேட்டருளுவீர்” (வச. 6-7).

அதுமட்டுமின்றி, உடனடி ஆபத்தையும் கடந்து, கர்த்தர் அவனைத் தம் வழியிலே நடத்தும்படி வேண்டுகிறான். “கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும்” (வச. 11). அதாவது நெருக்கடி வேளை கடந்த பின்பும், தான் தேவனோடு நடக்கவே அவன் விரும்பினான்.

நம் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் மிகக் கடினமான சூழ்நிலைமைகள், தேவனோடு நாம் நெருங்கி உறவாட வழி வாசல்களை ஏற்படுத்தக்கூடும். நம்முடைய இக்கட்டான நிலைமைகளில் தேவனை நோக்கி கூப்பிடும் பொழுதும், அதோடு கூட ஒவ்வொரு நாளும் நம்மை வழிநடத்தும்படி வேண்டிக்கொள்ளும் பொழுதும் இவ் வழிவாசல்கள் உண்டாகும்.