என்னுடைய தாத்தா, பாட்டிக்கு அதிக பணமில்லாதிருந்தபோதிலும், ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் பண்டிகை எனக்கும் என்னுடைய சகோதர சகோதரிகளுக்கும் விசேஷமாக இருக்கும்படி பார்த்துக்கொள்வார்கள். அங்கு எப்பொழுதும் உணவும், குதூகலமும், அன்பும் நிறைந்திருக்கும். கிறிஸ்துவே இந்த கொண்டாட்டங்களை வாய்க்கச் செய்தார் என்பதை எங்கள் சிறு வயது முதல் கற்று வந்துள்ளோம். இதே பாரம்பரியத்தை எங்கள் குழந்தைகளுக்கும் நாங்கள் விட்டுச்செல்ல விரும்புகிறோம். கடந்த டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸை முன்னிட்டு குடும்பமாக ஒன்று கூடியபொழுது, இந்த அற்புதமான பாரம்பரிய வழக்கம் தாத்தா, பாட்டியினிடமிருந்து துவங்கியது என்பதை உணர்ந்தோம். அவர்களால் எங்களுக்கு உலகப் பிரகாரமான சொத்து ஏதும் விட்டுச்செல்ல முடியவில்லை. ஆனால் மிக கவனமாக அன்பு, கனம், விசுவாசம் என்னும் விதைகளை எங்களுக்குள் விதைத்ததால், இன்று அவர்களுடைய பிள்ளைகளின் பிள்ளைகளாகிய நாங்கள், அவர்களுடைய மாதிரியைப் பின்பற்றுகிறோம்.

வேதாகமத்தில், திமோத்தேயுவுக்கு உண்மையான விசுவாசத்தை கற்றுத்தந்த அவனுடைய பாட்டி, லோவிசாளைக் குறித்தும், தாயாகிய ஐனிக்கேயாளைக் குறித்தும் காணலாம் (2 தீமோ. 1:5). அவர்களுடைய தாக்கம் அநேகருக்கு அவன் நற்செய்தியை பகிர்ந்து கொள்ளும்படி அவனை ஆயத்தப்படுத்தியது.

தேவனிடம் நெருங்கிய ஐக்கியத்தில் இருப்பதின் மூலம், நம்மால் தொடப்படுகிறவர்களுக்கு, ஒரு ஆவிக்குரிய செல்வத்தை சுதந்திரமாக அளிக்கும்படி ஆயத்தம்பண்ணலாம். நடைமுறை வாழ்க்கையில், நம்முடைய கவனத்தை சிதறவிடாமல் அவர்களை கவனிப்பதின் மூலம், அல்லது அவர்கள் செய்ய நினைக்கிற மற்றும் செய்கிற காரியங்களில் நாம் ஆர்வம் காட்டுவதின் மூலம், மற்றும் நம்முடைய வாழ்வை அவர்களுடன் பகிர்ந்து கொள்வதின் மூலமும், தேவனுடைய அன்பை வெளிப்படுத்தலாம். நம்முடைய கொண்டாட்டங்களில் கூட அவர்கள் பங்கு பெறும்படி அவர்களை அழைக்கலாம்! தேவனுடைய அன்பை நடைமுறை வாழ்வில் பிரதிபலிக்கும் பொழுது, நீடித்து தொடரக் கூடிய ஓர் பாரம்பரியத்தை நாம் மற்றவர்களுக்கு விட்டுச்செல்வோம்.