நானும் என்னுடைய கணவர் டானும் (Dan) எங்களுடைய வயதான பெற்றோர்களுக்கு பராமரிப்பு அளிக்க துவங்கிய அந்நாளிலே நாங்கள் இருவரும் கைகோர்த்து, ஒரு மலை உச்சியிலிருந்து கீழே விழுவதைப் போல உணர்ந்தோம். இந்த பராமரிப்பு செயல்முறையின் போது எங்களுடைய இருதயங்கள் சோதிக்கப்படுவதற்கும், வனையப்படுவதற்கும் நாங்கள் தேவனுக்கு அனுமதி கொடுக்க வேண்டிய ஒரு கடினமான செயலை எதிர்கொள்ளக்கூடும் என்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதுமட்டுமன்றி, இந்த விசேஷமான காலத்தில் புதிய வழிகளில் எங்களை அவரைப் போல மாற்றவும் தேவனுக்கு அனுமதி கொடுக்க வேண்டியதாயிற்று.

கட்டுப்பாடின்றி நான் பூமிக்கு நேராய் பாய்ந்து விழுந்து கொண்டிருப்பது போல உணர்ந்த நாட்களில், தேவன் என்னுடைய திட்டங்களையும், ஐயங்களையும், பயங்களையும், பெருமையையும், சுயநலத்தையும் காண்பித்தார். ஆனால் அவருடைய அன்பையும், மன்னிப்பையும் வழங்கவே என்னுடைய உடைந்து போன பகுதிகளை எனக்கு காண்பித்தார்.

“கிறிஸ்து இல்லை என்றல் நீ நம்பிக்கையற்று கலங்கி நிற்கும் ஒரு வெறுமையான பாத்திரமே. ஆனால் அவருக்குள் நீ முழுமை பெறுகிறாய் என்பதை நீ கண்டு உணரும் அந்நாளே, உன் வாழ்நாளின் மிகச்சிறந்த நாள்,” என்று என்னுடைய சபை போதகர் கூறியுள்ளார். நான் பராமரிப்பு அளித்ததின் மூலம் வாழ்வில் பெற்றுக்கொண்ட ஆசீர்வாதம் இதுவே. நான் எப்படி இருக்க வேண்டும் என்று தேவன் சிருஷ்டித்தாரோ, அதைக் கண்டவுடன் தேவனை நோக்கித் திரும்பி அவர் கரங்களுக்கு ஒடிச்சென்றேன். சங்கீதக்காரனோடு சேர்ந்து நானும், “தேவனே என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்,” எனக் கதறினேன் (சங். 139:23).

உங்களுக்காக நான் ஏறெடுக்கும் ஜெபம் இதுவே: நீங்கள் உங்கள் சூழ்நிலைகளின் மத்தியில் உங்களைக் காணும்பொழுது தேவனை நோக்கித் திரும்பி உங்களை மன்னிக்கிற, நேசிக்கிற, விரிந்த கரங்களுக்குள் ஓடிச் செல்வீர்களாக.