வீட்டிற்கு கடிதங்கள்
இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்க இராணுவத்தில் புதிதாக சேர்ந்தோர், தங்கள் வீடுகளை விட்டு வெகு தொலைவில் பயிற்சி பெற்ற போது, தாங்கள் எதிர் நோக்கிய சவால்களை எப்படி வெற்றியாகச் சமாளித்தனர் என்பதை நகைச்சுவையோடு கடிதமாக எழுதச் செய்தனர். ஓர் இளைஞன் தன் வீட்டிற்கு எழுதிய கடிதத்தில் அங்கு தடுப்பு ஊசி போட்ட செயலை அற்புதமாக மிகைப்படுத்தி விளக்கியிருந்தான். இரண்டு மருத்துவ அதிகாரிகள் எங்களை ஈட்டி இணைக்கப்பட்ட கயிறுகளோடு வந்து, எங்களை விரட்டிப் பிடித்து, இழுத்துச் சென்றனர். எங்களை தரையோடு சேர்த்து அசையமுடியாதபடி செய்தனர், இரு புயங்களிலும் ஈட்டியைக் குத்தினர் என்றெழுதியிருந்தான்.
மற்றொரு இராணுவ வீரர் அந்த நகைச்சுவை தன்னை இவ்வளவு தூரம் தான் கொண்டுவர இயலும் என்று கண்டுகொண்டார். அப்பொழுது அவருக்கு ஒரு வேதாகமம் கொடுக்கப்பட்டது. “நான் அதனை மிகவும் நேசித்து ஒவ்வோர் இரவும் வாசித்தேன்” என்று எழுதுகின்றார். ‘‘நான் ஒரு வேதாகமத்திலிருந்து இவ்வளவு கற்றுக் கொள்ள முடியும் என்பதை அதுவரை உணராதிருந்தேன்” என்று எழுதியிருந்தார்.
வெகு நாட்களுக்கு முன்பு யூதர்கள், அநேக வருடங்கள் பாபிலோனில் அடிமைகளாக இருந்த பின் தங்கள் நாட்டிற்குத் திரும்புகின்றனர். அப்பொழுது அவர்களோடு பிரச்சனைகளும் வந்தன. அவர்கள் எருசலேமின் சுற்றுச் சுவரை கட்டியெழுப்பப் போராடிய போது, எதிரிகளிடமிருந்து எதிர்ப்பையும், பஞ்சத்தையும், அவர்களுடைய பாவத்தின் விளைவையும் எதிர் கொண்டனர். அவர்களுடைய துன்பங்களின் மத்தியில் அவர்கள் தேவனுடைய வார்த்தைக்கு நேராகத் திரும்பினர். அவர்கள் கற்றுக் கொண்டதைக் குறித்து ஆச்சரியப்பட்டனர். ஆசாரியர்கள் தேவனுடைய நியாயப்பிரமாண புத்தகத்தை வாசித்தபோது, ஜனங்கள் கண்ணீர் விட ஆரம்பித்தனர் (நெ. 8:9). அத்தோடு அவர்கள் ஆறுதலையும் பெற்றுக் கொண்டனர். அப்பொழுது அதிபதியான நெகேமியா, ஜனங்களிடம் விசாரப்பட வேண்டாம்; “கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்” (வச. 10) என்றார்.
நாம் தேவனிடமிருந்து வார்த்தைகளைப் பெறும்படி காத்திருந்து, கஷ்டப்பட தேவையில்லை. வேதாகமத்தில் அவருடைய குணாதிசயங்களையும், அவருடைய மன்னிப்பையும் அவருடைய ஆறுதலையும் குறித்துப் படிக்கின்றோம். நாம் வேதத்தை வாசிக்கும் போது தேவனுடைய ஆவியானவர் அந்தப் பக்கங்களில் நம்மோடு பேசுவதைப் பார்த்து வியந்து போவோம்.
மென்னோசை வார்த்தைகள்
ஒரு மனிதன் தன்னுடைய விமானத்தின் இருக்கையில் உட்கார்ந்திருக்கும் போது, அமைதியற்ற நிலையில் கால்களை ஆட்டிக் கொண்டேயிருந்தான். அவனுடைய கண்கள் விமானத்தின் ஜன்னலைப் பார்ப்பதும் திரும்புவதுமாக இருந்தன. பின்னர் அவன் தன் கண்களை மூடி, தன்னை அமைதிப்படுத்தும்படி பெருமூச்செடுத்தான். ஆனால், இவையொன்றும் அவனை அமைதிப்படுத்த முடியவில்லை. விமானம் மேலேறி பறந்தபோது, அவன் மெதுவாக முன்னும் பின்னுமாக அசைந்து கொண்டிருந்தான். அவனருகில் அமர்ந்திருந்த ஒரு மூதாட்டி, தன் கரத்தை அவன் புயத்தின் மீது வைத்து, அவனுடைய மன அழுத்தத்திலிருந்து அவனைத் திருப்பும்படியாக, மெதுவாக அவனோடு உரையாட ஆரம்பித்தாள். ‘‘உன்னுடைய பெயரென்ன?” ‘‘நீ எங்கேயிருந்து வருகிறாய்?” “நமக்கு எல்லாம் சரியாகிவிடுவோம்”, “நீ நன்றாக இருக்கின்றாய்” என்பன அவளுடைய மென்மையான வார்த்தைகள். அவனுடைய நடத்தையால் அவள் எரிச்சலடைந்திருக்கலாம் அல்லது அவனை அவள் உதாசினப்படுத்தியிருக்கலாம். ஆனால், அவள் அவனைத் தொட்டு அவனோடு சில வார்த்தைகளைப் பகிர்ந்து கொண்டாள். இது ஒரு சிறிய காரியம்தான். ஆனால் மூன்று மணி நேரம் கழித்து அவர்கள் இறங்கிய போது, எனக்கு உதவியதற்கு மிக்க நன்றி” என்று கூறினான்.
இத்தகைய இளகிய மனதுடைய செயல்களைப் பார்ப்பது அரிது. அநேகருக்கு இரக்கம் என்பது தானாக வருவதில்லை. நம்முடைய முதல் கவனம் எப்பொழுதும் நம்மைப் பற்றியேயிருக்கும். ஆனால் அப்போஸ்தலனாகிய பவுல் ‘‘ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயுமிருங்கள்” என்கிறார். (எபே. 4:32) இக்குணம் ஒவ்வொருவரையும் சார்ந்தது. இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் போது தாம் பெற்றுக் கொண்ட புது வாழ்வில் ஆவியானவர் மாற்றங்களைக் கொண்டு வருகிறார். ஆவியானவர் நம்முடைய எண்ணங்களையும் நடத்தையையும் புதிப்பிக்கும் போது நாம் இரக்க குணத்தைப் பெற்றுக் கொள்கிறோம் (வச. 23).
இரக்கத்தின் தேவன் நம் இருதயங்களில் கிரியை செய்து, நம்முடைய மென்மையான, ஊக்குவிக்கும் வார்த்தைகளால் பிறர் வாழ்வைத் தொடும்படி நம்மில் செயல்படுகிறார்.
அதிசயங்களின் மீது கவனம்
சிலர் இவ்வுலகை, அதில் நடக்கும் தவறுகளை மட்டும் பார்க்கும்படியான பார்வையுடையவர்கள். டிவிட் ஜோன்ஸ் என்பவர் உலக புவியியல் படம் எடுப்பவர். உலகில் உள்ள நல்லவற்றைப் படம் பிடித்துக் காட்டி மகிழக் கூடியவர், அதனையே தன் தொழிலாகக் கொண்டிருந்தார். அவர் காத்திருந்து கவனித்து ஓர் ஒளிக் கற்றையை அல்லது ஏற்கனவே இருக்கின்றவற்றில் திடீரெனத் தோன்றும் ஓர் அதிசயத்தையோ படம் எடுக்கின்றார். அவர் தன் புகைப்பட கருவியை சாதாரண மக்களின் முகத்தில் வெளிப்படும் அழகையும் இயற்கையின் அழகையும் கண்டு கொள்ள பயன்படுத்துகின்றார்.
யாரேனும் இவ்வுலகில் நடக்கும் அநியாயங்களைக் கவனிக்க வேண்டியவரென்றால் அது யோபுவே. தனக்கு மகிழ்ச்சி தந்தவற்றையெல்லாம் இழந்த பின், அவனுடைய நண்பர்கள் கூட அவனைக் குற்றப்படுத்தினர். அவன் தன் பாவங்களை மறைப்பதாலேயே கஷ்டப்படுவதாக அவர்களெல்லாருடைய குரலும் ஒன்று சேர்ந்து அவனைக் காயப்படுத்தினது. யோபு பரலோகத்தை நோக்கிக் கதறிய போதும், தேவனும் அமைதியாயிருந்தார்.
கடைசியாக பெருங்காற்றின் சுழற்சியின் நடுவே, இருண்ட புயலின் மத்தியில் தேவன் யோபுவிடம், அவனுடைய ஞானத்திற்கும் வல்லமைக்கும் அப்பாற்பட்ட இயற்கையின் அதிசயங்களைப் பார்க்கும்படி சொல்கின்றார் (யோபு 38:2-4).
இப்பொழுது தேவன் நம்மிடம் கேட்கிறார். இயற்கையாக நடைபெறும் ஒரு நாய் அல்லது பூனையின் வழியையோ, அல்லது அசைந்தாடும் இலை, புல்லின் ஓர் இலையின் அசைவையோ அறிய முடியுமா? ஓர் ஒளிக்கற்றை அல்லது ஒரு நிகழ்வின் திருப்பம் ஆகியவற்றை அறிய முடியுமா? நம்முடைய துன்பத்தின் மத்தியிலும் நம்மோடிருக்கும் நம்மைப் படைத்தவரின் மனதையும் இருதயத்தையும் அறிய முடியுமா?
குணப்படுத்தும்படி வெளிப்படுத்துதல்
நான் சிறுவனாக இருந்தபோது, என்னுடைய தந்தை, இதுவரை விவசாயம் பண்ணப்படாத வயல்களை உழுது கொண்டிருந்ததைக் கவனித்தேன். முதல் முறை உழும்போது அக்கருவியில் பெரிய கற்கள் பெயர்ந்து வரும் அவற்றை என் தந்தை சுமந்து, எடுத்துப் போடுவார். அவர் மீண்டும், மீண்டும் அந்த வயலை உழுது, மணலை நன்கு உடைத்து விடுவார். ஒவ்வொரு முறை உழும் போதும் அந்த கருவியில் சில கற்கள் வந்து சேரும். அவற்றை அவர் எடுத்துப் போடுவார். இவ்வாறு பலமுறை அந்த வயலை உழுவதைத் தொடர்ந்தார்.
கிருபையில் வளர்தலும் இத்தகைய உழுதலைப் போன்றதே. நாம் முதல் முறை விசுவாசியான போது, பெரிய பாவங்கள் நமக்கு வெளிப்படுத்தப்படும். நாம் அவற்றை அறிக்கையிட்டு அவருடைய மன்னிப்பைப் பெற்றுக் கொள்வோம். வருடங்கள் செல்லும் போது, தேவ வார்த்தைகள் நமக்குள் செயல்பட்டு ஆழமாகச் செல்லும்போது, பரிசுத்த ஆவியானவர் மற்ற பாவங்களையும் வெளிக் கொண்டு வருவார். ஆவிக்கு விரோதமான பாவங்கள் முன்பு அவை தவறென்றே தோன்றாதவை, சிறிய முக்கிய மற்றதாகத் தோன்றிய குற்றங்கள், யாவும் இப்பொழுது அருவருப்பாகவும், நாசகரமான செயல்களாகவும், அணுகுமுறைகளாகவும் தோன்றுகின்றன. பெருமை, சுயநலம், குறைகூறல், சிறுபிள்ளைத்தனம், பொறாமை, சிறிய காரியங்களைப் பெரிதுபடுத்துதல், கெட்ட எண்ணம், தன்னை முக்கியப்படுத்தல், தனக்கு யாவரும் உதவ வேண்டுமென எதிர்பார்த்தல் போன்ற சிறிய தவறுகளையும் தேவன் வெளிக் கொணர்வார்.
தேவன் ஒவ்வொரு பாவத்தையும் வெளிப்படுத்தி, அதை எடுத்துப் போடுவார். தேவன் குணப்படுத்துவதற்காக வெளிப்படுத்துகிறார். தீங்கு விளைவிக்கக் கூடிய, மறைந்திருக்கும் அணுகுமுறைகள் வெளியே வரும் போது, சங்கீதக்காரன் சொல்வது போல நாமும் ஜெபிக்கலாம், ‘‘கர்த்தாவே, என் அக்கிரமம் பெரிது; உம்முடைய நாமத்தினிமித்தம் அதை மன்னித்தருளும்” (சங். 25:11).
தாழ்மையோடு தெரியப்படுத்துதல், வேதனையுடையதாக இருந்தாலும் அது நம் ஆன்மாவிற்கு நல்லது. ‘‘அவர் பாவிகளுக்கு அவர்களின் வழியைத் தெரிவிக்கின்றார்” இதுவே அவருடைய செயலாகும். அவர் சாந்த குணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி சாந்த குணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார் (வச. 8-9).
“ஜெபமாகிய வரத்தைப் பயன்படுத்தல்”
‘‘ஜெபமாகிய வரம் எத்தகையது என்று உணராதிருந்தேன். என்னுடைய சகோதரன் சுகவீனமான போது நீங்களெல்லாரும் அவனுக்காக ஜெபித்தீர்கள். உங்களுடைய ஜெபங்கள் சொல்ல முடியாத அளவு ஆறுதலைத் தந்தது”.
புற்றுநோயால் அவதியுறும் தன்னுடைய சகோதரனுக்காக, எங்கள் ஆலயத்தின் நபர்கள் ஜெபித்ததற்காக லாரா நன்றி கூறியபோது, அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. மேலும், ‘‘உங்களுடைய ஜெபம் இந்த கடினமான சூழல்களில் அவனை
பெலப்படுத்தினதோடல்லாமல், எங்கள் குடும்பத்தினரனைவரையும் ஊக்கப்படுத்துவதாக இருந்தது” என்றும் கூறினாள்.
பிறரை நேசிக்க சிறந்த வழி அவர்களுக்காக ஜெபிப்பதே. இதற்கு முழு எடுத்துக்காட்டாக இயேசு செயல்பட்டார். புதிய ஏற்பாட்டில் இயேசு பிறருக்காக ஜெபிப்பதை நாம் பல சந்தர்ப்பங்களில் பார்க்கிறோம். மேலும், அவர் நமக்காகப் பிதாவிடம் தொடர்ந்து வருவதையும் பார்க்கின்றோம். ரோமர் 8:34ல் ‘‘அவரே தேவனுடைய வலது பாரிசத்திலும் இருக்கிறவர். நமக்காக வேண்டுதல் செய்கிறவரும் அவரே” என சொல்லப்பட்டுள்ளது. சிலுவையில் தன்னலமற்ற ஓர் அன்பை நமக்காக வெளிப்படுத்தின பின்பு உயிரோடெழுந்து, பரலோகத்திற்கு ஏறின இயேசு கிறிஸ்து இன்னமும், இந்த நேரத்திலும் தொடர்ந்து நமக்காக ஜெபம் பண்ணிக் கொண்டு நம்மீதுள்ள அக்கறையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இயேசுவைப் பின்பற்றி நாமும் நம்மைச் சுற்றியுள்ள மக்களை நேசித்து, தேவன் அவர்களுக்கு உதவும்படியாகவும், அவர்கள் வாழ்வில் செயல்படும்படியாகவும் அவர்களுக்காக ஜெபிக்க அழைக்கப்படுகின்றோம். அவர் அப்படியே செய்வார். நம்முடைய அன்பின் தேவன் நம்மை பெலப்படுத்தி, நாம் தாராளமாக நம்முடைய வரமாகிய ஜெபத்தை அவர்களுக்குக் கொடுக்கும்படி செய்வாராக.
அனைவரும் சேர்ந்து இழுப்போம்
ஒரு வருடத்தில் 50 லட்சத்திற்கும் மேலான மக்கள் பணத்தை செலவழித்து தடைகள் நிறைந்த பாதையில் பல மைல்கள் ஓடுகின்றனர். அவ்வழியில் செங்குத்தான சுவர்களின் மேலேறுகின்றனர், சகதிகளின் வழியே கடினப்பட்டு ஓடுகின்றனர். தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கும் ஒரு செங்குத்தான குழாயின் வழியே ஏறுகின்றனர். இவையெல்லாம் ஏன்? சிலர் இவற்றைத் தங்கள் சகிப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் சவால்களாகவும், அல்லது அவர்களின் அச்ச உணர்வை நிவிர்த்திக்கும் வழியெனவும் கருதுகின்றனர். வேறு சிலருடைய கவர்ச்சி, அவர்களுடய கூட்டு முயற்சி. அவர்களோடு சேர்ந்த போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் உதவவும், உறுதுணையாகவும் செயல்படுகின்றனர். ஒரு மனிதன் இதனை ‘‘நியாயந் தீர்க்கப்படாத மண்டலம்” என அழைக்கின்றார். ஏனெனில் இனம் தெரியாத நபர்கள் ஒருவருக்கொருவர் உதவி, தங்கள் ஓட்டத்தை முடிக்கச் செய்கின்றனர் (ஸ்டீபனி நோவிட்ஸ், த வாஷிங்டன் போஸ்ட்)
இயேசுவின் மீதுள்ள நம்பிக்கையை வாழ்வில் காட்டும்படி, வேதாகமம் நம்மை குழுவாக வேலை செய்யத் தூண்டுகிறது. ‘‘அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து, சபை கூடி வருதலைச் சிலர் விட்டுவிடுகிறது போல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்ல வேண்டும் (எபி. 10:24-25).
நம்முடைய விசுவாச ஓட்டத்தின் இலக்கு ‘‘முதலாவது முடிப்பது” அல்ல, நம் ஓட்டத்தின் போது பிறருக்கு ஊக்கங்களைக் கொடுத்து, ஒரு முன் மாதிரியாக அமைந்து, உதவிக்கரம் நீட்டி பிறரையும் இலக்கினை அடையச் செய்வதேயாகும்.
நாம் எதிர்பார்க்கும் அந்த நாள், நம் வாழ்வை இவ்வுலகில் முடிக்கும்போது வரும். அதுவரையிலும் ஒருவரையொருவர் ஊக்கப்படுத்தியும், உதவுவதற்கு தயாராகவும், அவர்களையும் நம்மோடு இழுத்துக்கொண்டே ஒவ்வொரு நாளும் ஓடுவோம்.
நான்கெழுத்து நம்பிக்கை
எனக்குள் இருக்கும் அவநம்பிக்கையின் காரணமாக, நான் என் வாழ்வின் சூழ்நிலைகள் எப்படி முடியும் என்பதைக் குறித்து எதிர்மறையான முடிவையே எடுப்பேன். என்னுடைய ஒரு வேலையில் நான் எடுக்கும் முயற்சி தோல்வியைச் சந்திக்கும் போது, நான் மிக எளிதில், நான் மேற்கொள்ளும் மற்றெந்த வேலையும் வெற்றி பெறாது என்ற முடிவுக்கு வந்து விடுவேன். நான் தோல்வியைக் கண்ட வேலைக்கும் மற்ற வேலைகளுக்கும் தொடர்பேயில்லாதிருந்தும், நான் என் முடிவுகளை மாற்றிக் கொள்ள முடியாமல் தடுமாறினேன். ஐயோ! நான் பரிதாபத்துக்குரிய ஒரு தாய். என்னால் எதையுமே சரியாகச் செய்ய முடியவில்லை. ஓர் இடத்தில் நான் சந்திக்கும் தோல்வி, தேவையில்லாமல் என்னுடைய மற்றெல்லா உணர்வுகளையும் பாதிக்கிறது.
எனக்கு எளிதாக ஆபகூக்கைப் புரிந்து கொள்ள முடிகிறது. தேவன் அவருக்குக் காட்டியவற்றில் அவருடைய எண்ணம் எவ்வாறிருந்திருக்கும் என்பதை என்னால் உணர முடிகிறது. தேவனுடைய பிள்ளைகளுக்கு வரும் துன்பங்களைப் பார்த்து அவர் எத்தனை விரக்தியடைந்திருப்பார். நீண்ட வருடங்களாக, அவர்கள் துன்பத்தை எதிர்நோக்க வேண்டியிருந்தது. காரியங்கள் மிக மோசமாக நடந்தது. மரங்களில் கனியில்லை, சாப்பிட மாமிசமில்லை, உயிர் வாழ ஒரு சுகமுமில்லை. எல்லாவற்றிலும் மோசமான விளைவுகளையே எதிர்நோக்கி அவநம்பிக்கையில் வாழும் எனக்குள், அவருடைய நான்கெழுத்து வார்த்தை ‘‘ஆனாலும்” என்னை விழிக்கச் செய்தது. ‘‘ஆனாலும் நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்” (ஆப. 3:17-18) ஆபகூக் தேவன் எத்தகையவர் என்பதைக் கண்டு கொண்டதால், எத்தனை கஷ்டங்களை எதிர்நோக்கினாலும் அவரால் மகிழ்ச்சியாயிருக்க முடிந்தது.
ஒரு வேளை நாம் நம்முடைய பிரச்சனைகளைப் பெரியதாகப் பார்க்கத் தூண்டப்படலாம். ஆனால் ஆபகூக் மிக அதிகமான கஷ்டங்களையே சந்தித்தார். அந்த நேரத்திலும் அவரால் தேவனை மகிமைப்படுத்த முடியும் போது, நம்மாலும் முடியும். நாம் நம்பிக்கையிழந்து துயரத்தின் ஆழத்திலிருந்தாலும் நம்மைத் தூக்கியெடுக்கவல்ல தேவனை நோக்கிப் பார்ப்போம்.
வெட்கமடையா விசுவாசம்
விளையாட்டு ரசிகர்கள் தங்கள் அணியின் புகழைப் பாட விரும்புவர். அவர்கள் லோகோக்களை அணிவதாலும், முகநூலில் தாங்கள் விரும்பும் அணியைக் குறித்து குறிப்புகளைப் பதிப்பதன் மூலம், அல்லது அந்த அணியைப் பற்றி நண்பர்களோடு பேசுவதன் மூலம் தங்களின் உண்மையான விசுவாசம் எவ்வளவிருக்கிறது என்பதைக் காட்டுகின்றனர். என்னுடைய சொந்த டெட்ராய்டு புலி தொப்பிகள், சட்டைகள், மற்றும் கவிதைகள் நானும் இத்தகையவற்றைச் செய்கின்ற ரசிகர் கூட்டத்தில் இருக்கின்றேன் என்பதைக் காட்டுகிறது.
விளையாட்டின் மீதுள்ள விசுவாசம், ஒன்றை நினைவுபடுத்துகிறது. நம்முடைய உண்மையான, மிகப் பெரிய விசுவாசம் தேவனுக்கே செலுத்தப்பட வேண்டியது. இத்தகைய வெட்கப்படாத விசுவாசத்தைக் குறித்து சங்கீதம் 34ல் தாவீது சொல்கின்றார். இப்புவியிலுள்ள எந்த ஒன்றையும் காட்டிலும் மிகப் பெரியதும், மிக முக்கியமானதுமான தேவன் ஒருவருக்கே நாம் உண்மையாயிருக்க வேண்டும்.
தாவீது சொல்கின்றார், “கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன்” (வச. 1). நாம் நம் வாழ்வில், உண்மையின் காரணராயும், ஒளியின் மூலமாயும், இரட்சிப்பின் காரணருமான தேவனைக் கருதாமல் இருந்த நாட்களை நினைக்கும் போது வியப்பாகவுள்ளது. தாவீது,
“அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்” (வச.1) என்கிறார். நாம் எத்தனை முறை இந்த உலகத்திற்குரியவர்களை நம் தேவனைக் காட்டிலும் அதிகமாகப் புகழ்ந்துள்ளோம். தாவீது சொல்கிறார், “கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மை பாராட்டும்” (வச.2). தேவன் நமக்குச் செய்ததை நினையாமல், நம்முடைய சிறிய வெற்றிகளைக் குறித்து நாம் எத்தனை முறை பெருமை பாராட்டியுள்ளோம்.
நம்முடைய அணியையும், நம்முடைய ஆர்வங்களையும், நம்முடைய சாதனைகளையும் குறித்து மகிழ்வதில் தவறில்லை. ஆனால், நம்முடைய மிக உயர்ந்த பாராட்டும் துதியும் தேவனுக்கேயுரியது. ‘‘என்னோடே கூட கர்த்தரைக் மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக” (வச. 3).
கன்மலைக்கு என்னை வழி நடத்தும்
ஓர் ஈரப்பதமூட்டியை வாங்குவதற்கு கடைக்குச் சென்ற போது, ஒரு மூதாட்டி நடைபகுதியில் முன்னும் பின்னுமாக நடந்து கொண்டிருந்ததைக் கவனித்தேன். ஒரு வேளை அவளும் ஈரப்பதமூட்டியைத்தான் வாங்க வந்திருப்பாளோ என வியந்தேன். எனவே நான் நகர்ந்து அவள் அருகே வருவதற்கு இடங்கொடுத்தேன். சற்று நேரத்தில், நாங்கள் எங்கள் பகுதியில் பரவி வருகின்ற வைரஸ் காய்ச்சலைப் பற்றி பேசிக் கொண்டோம். அது அவளுக்குத் தொடர்ந்து இருமலையும், தலைவலியையும் தந்து கொண்டிருப்பதாகக் கூறினாள்.
சில நிமிடங்கள் கழித்து அவள் ஒரு கசப்பான செய்திக்குள் சென்றாள். அந்த வைரஸின் தோற்றம் பற்றிய கொள்கைகளை விளக்க ஆரம்பித்தாள். நான் என்ன செய்வதென்று தெரியாமல் கவனித்தேன். சீக்கிரத்தில் அவள் அந்த கடையை விட்டு கோபத்துடனும், விரக்தியுடனும் வெளியேறினாள். அவளுடைய விரக்தியை வெளிக்காட்டியும், அவளுடைய அந்த வேதனையை எடுத்துப் போட என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
தாவீது இஸ்ரவேலின் இரண்டாவது அரசன். அவன் தன்னுடைய விரக்தியையும் கோபத்தையும் தேவனிடம் தெரிவிக்கும்படி சங்கீதங்களை எழுதினான். ஆனால் தேவன் அவனுடைய வேதனையை கவனிப்பதோடு மட்டுமல்ல, அவனுடைய வலியையும் போக்க அவரால் ஏதாவது செய்ய முடியும் என்பது தாவீதுக்குத் தெரியும். சங்கீதம் 61ல் அவர் எழுதுகிறார். என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்திரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன். எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்” (வச. 2). தேவனே அவனுடைய அடைக்கலம் (வ.3) தாவீது ஓடி வந்தடையத்தக்க கன்மலை, தேவன்.
நாம் வேதனையில் இருக்கும்போது, அல்லது வேதனையில் இருக்கும் ஒருவரைச் சந்திக்கும் போது, தாவீதுடைய அனுபவம் நாம் பின்பற்றக் கூடிய ஒரு வழியைக் காட்டுகிறது. நாம் ‘‘உயரமான கன்மலையை” நோக்குவோம். அல்லது யாரையாகிலும் அக்கன்மலையிடம் வழி நடத்துவோம். நான் தேவனைப் பற்றி அந்த மூதாட்டியிடம் சொல்லியிருக்க வேண்டுமென நினைத்தேன். தேவன் நம் வேதனை அத்தனையும் எடுத்து விடுபவரல்ல. மாறாக, நாம் அவர் தரும் சமாதானத்தில் அமர்ந்திருந்து, நம் கூப்பிடுதலை அவர் கேட்கிறார் என்ற உறுதியைப் பெற்றுக் கொள்வோம்.