எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கட்டுரைகள்லிண்டா வாஷிங்டன்

பாலகர் வாயினால்

பத்து வயது நிரம்பிய வயோலா ஒரு மரக் கொப்பை மைக்ரோபோன் போல பாவித்து, ஒரு போதகரைப் போன்று பிரசங்கம் செய்து கொண்டிருந்ததை கவனித்த மிச்சேல், கிராம ஊழியத்தின் போது வயோலாவிற்கு பிரசங்கம் செய்ய ஒரு வாய்ப்பளிக்கத் தீர்மானித்தாள். வயோலாவும் அதற்குச் சம்மதித்தாள். மிச்சேல், தெற்கு சூடானில் ஊழியம் செய்யும் ஒரு மிஷனரி. 'அந்தக் கூட்டம் அதிக மகிழ்ச்சியினால் நிரப்பப்பட்டது... கைவிடப்பட்ட ஒரு சிறு பெண் அந்தக் கூட்டத்தினருக்கு முன்பாக ராஜாதி ராஜாவின் மகளாக அதிகாரத்தோடு நிற்கின்றாள். தேவனுடைய இராஜ்யத்தின் உண்மையை வல்லமையாக, அவர்களோடு பகிர்ந்து கொள்கின்றாள். பாதி கூட்டத்தினர் இயேசுவை தங்களுடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள முன் வந்தனர்" என்று மிச்சேல் தன்னுடைய 'அன்பிற்கு ஒரு முகமுண்டு" என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளாள். அந்தக் கூட்டத்தினர். அன்று ஒரு குழந்தையின் வாயினால் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும் என எதிர்பார்க்கவில்லை. இந்த நிகழ்வு என்னுடைய மனதில் சங்கீதம் 8ல் காணப்படுகின்ற 'குழந்தைகள், பாலகர் வாயினால்" என்ற சொற்றொடரை நினைவிற்குக் கொண்டு வந்தது. தாவீது 'உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள், பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்" என எழுதுகின்றார் (8:2). இதனையே இயேசு மத்தேயு 21:16ல் குறிப்பிடுகின்றார். தேவாலயத்தில் ஆர்ப்பரிக்கின்ற பிள்ளைகளை பிரதான ஆசாரியரும், வேதபாரகரும் கண்டு கோபமடைந்தபோது இயேசு இந்த வசனத்தை அவர்களுக்குச் சுட்டிக் காட்டுகின்றார். அந்த தலைவர்களுக்கு குழந்தைகள் இடறுதலாகக் காணப்பட்டனர். ஆனால், இயேசு அவர்களுக்கு வேத வாக்கியத்தைச் சுட்டிக் காண்பித்து, தேவன் குழந்தைகளின் துதியைப் பெரிதாகக் கருதுவதாகக் கூறுகின்றார். அந்தத் தலைவர்கள் செய்வதற்கு மறுத்த ஒன்றை குழந்தைகள் நிறைவேற்றினர். தாங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த மேசியாவை குழந்தைகள் மகிமைப்படுத்தினர்.

வயோலாவும் தேவாலயத்தில் இருந்த குழந்தைகளும் காண்பித்தது போல, தேவன் ஒரு சிறு குழந்தையைக் கூட தனக்கு மகிமையுண்டாக பயன்படுத்த முடியும். குழந்தைகளின் உள்ளத்திலிருந்து மனமார்ந்த துதி வெள்ளம் போல வந்தது.

மனநிலையை சரிசெய்பவர்

நான் வாரந்தோறும் செல்கின்றபடி, இரயில் நிலையத்தில் காத்திருந்தபோது, வாடிக்கையாளர்கள் இரயிலில் ஏறுவதற்கு வரிசையில் நின்றது போல, எதிர்மறையான எண்ணங்கள் என்னுடைய மனதில் நிரம்பி நின்றன. கடன் மீதான கவலை, என்னிடம் பிறர் கூறிய அன்பற்ற வார்த்தைகள், எங்கள் குடும்ப நபர் ஒருவருக்கு இழைக்கப்பட்ட அநீதத்தில் உதவ முடியாத நிலை என பல எண்ணங்கள் எனக்குள் ஓடிக் கொண்டிருக்கும் போது, இரயிலும் வந்தது. நான் பயங்கரமான மனநிலையில் இருந்தேன்.

இரயிலில் ஏறி உட்கார்ந்ததும் மற்றொரு சிந்தனை என் உள்ளத்தில் வந்தது. என்னுடைய புலம்பலையெல்லாம் ஒரு காகிதத்தில் எழுதி தேவனிடம் கொடுக்கும்படி தோன்றியது. என்னுடைய குற்றச்சாட்டுகளையெல்லாம் என்னுடைய குறிப்பேட்டில் கொட்டியபின்னர், நான் என்னுடைய தொலைபேசியை எடுத்து நான் சேமித்து வைத்துள்ள துதிபாடல்களைக் கவனித்தேன். அவற்றை நான் முடிக்கும்முன்பே என்னுடைய மனநிலை முற்றிலும் மாறியது.

சங்கீதம் 94 ஐ எழுதியவர் நியமித்துள்ள வகையின்படியே நானும் ஏறக்குறைய பின்பற்றி வருகின்றேன். சங்கீதக்காரனும் முதலில் தன்னுடைய குறைகளைக் கொட்டித் தீர்க்கின்றார். “பூமியின் நியாயாதிபதியே, நீர் எழுந்து பெருமைக்காரருக்குப் பதிலளியும்... துன்மார்க்கருக்கு விரோதமாய் என் பட்சத்தில் எழும்புகிறவன் யார்? அக்கிரமக்காரருக்கு விரோதமாய் என் பட்சத்தில் நிற்பவன் யார்? (சங். 94:2,16). அவன் தேவனிடம், விதவைகளுக்கும், அனாதைகளுக்கும் இழைக்கப்படும் அநீதத்தைப் பற்றி பேசும்போது எதையும் மறைவாக வைக்கவில்லை. தன்னுடைய புலம்பலையெல்லாம் தேவனிடம் கொடுத்துவிட்ட பின்பு, அந்த சங்கீதம் தேவனைப் போற்றும்படி மாறுகிறது. “கர்த்தரோ எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாயிருக்கிறார்" (வச. 22) என தேவனைப் போற்றுகின்றார்.

நாமும் நம்முடைய புலம்பலையெல்லாம் தன்னிடம் கொண்டுவரும்படி தேவன் அழைக்கின்றார். அவரே நம்முடைய பயம், கவலை, உதவியற்ற நிலை யாவையும் துதியாக மாற்றுபவர்.

ரம்பமும் ஒரு ஜெபமும்

என்னுடைய அத்தை க்லேடிஸ் துணிச்சல் மிக்க பெண். அவர் துணிச்சலை நான் மதித்தாலும், சில சமயங்களில் அது எனக்கு கவலையைத்தரும். என் கவலைக்குக் காரணம், “நேற்று நான் ஒரு வாதுமை மரத்தை வெட்டினேன்”  என்று அவர் அனுப்பிய மின்னஞ்சல்.

ரம்பத்தைக் கையாளும் என் உறவினருக்கு 76 வயது! அவர்  வாகனம் நிறுத்தும் இடத்திற்குப் பின்புறம் அந்த மரம் வளர்ந்திருந்தது. காங்க்ரீட் தரையில் அந்த மரத்தின் வேர்கள் வெடிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற நிலையில் அவர் அதை வெட்டத் தீர்மானித்தார். ஆனால் “இதுபோன்ற வேலைகளைச் செய்யும்முன் நான் ஜெபிப்பேன்” என்று அவர் எங்களிடம் கூறினார்.

இஸ்ரவேலரின் சிறையிருப்பின்போது, பெர்சிய ராஜாவுக்கு பானபாத்திரக்காரனாக நெகேமியா பணி செய்கையில், எருசலேமுக்குத் திரும்பிய ஜனங்களைப்பற்றி அவர் கேள்விப்பட்டார். சில பணிகள் செய்யப்பட வேண்டியிருந்தது. “எருசலேமின் அலங்கம் இடிபட்டதும், அதின் வாசல்கள் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கிறது” (நெகேமியா 1:3). அலங்கங்கள் இடிபட்டதால், எதிரிகள் எளிதில் தாக்கக்கூடிய நிலை இருந்தது. நெகேமியா தன் ஜனங்கள்மீது கரிசனை கொண்டவராக இருந்தார். அந்தப் பணிகளில் தன்னை ஈடுபடுத்த விரும்பினார். ஆனால் ஒரு புதிய அரசர் எருசலேமின் கட்டிடப் பணிகளை நிறுத்தும்படி கடிதம் எழுதியதால் (எஸ்றா 4), நெகேமியா முதலில் ஜெபித்தார். நெகேமியா தன் ஜனங்களுக்காக ஜெபம் செய்தார் (நெகேமியா 1: 5-10). பின்னர் ராஜாவிடம் விடுப்புக்காக அனுமதி கேட்கும் முன் கடவுளின் உதவியை நாடி ஜெபம் செய்தார் (வச. 11).

ஜெபம்தான் உங்கள் பதிற்செயலா? வாழ்வில் எந்த ஒரு காரியத்தையும், சோதனையையும் எதிர்கொள்ள ஜெபமே சிறந்தது.

அதிகபட்ச திருப்தி

வேதாகமப் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் நாங்கள் சிற்றுண்டி வினியோகித்தபோது, ஒரு சிறுவன் தனது சிற்றுண்டியை அவசரமாக விழுங்கினான். பின், தன் மேஜையில் அமர்ந்து சாப்பிட்ட சிறுவர்கள் மீதம் வைத்திருந்ததையும் சாப்பிட்டான். ஒரு கவரில் நான் பாப்கார்ன் கொடுத்த பிறகும் அவன் திருப்தி அடையவில்லை. அந்த நிகழ்ச்சியின் தலைவர்களாக, அந்தச் சிறுவன் ஏன் அவ்வளவு பசியாக இருக்கிறான் என்று சிறிது கவலைப்பட்டோம்.

 

நமது உணர்ச்சிகளைப் பொறுத்தவரை, நாமும் அந்தச் சிறுவனைப் போலவே இருக்கிறோம் என்று தோன்றியது. நமது ஏக்கங்களை திருப்திப்படுத்த என்ன வழி என்று யோசிக்கிறோம். ஆனால் எது நம்மை முழுவதுமாக திருப்திப்படுத்துகிறது என்பதை நாம் கண்டு பிடிப்பதேயில்லை.

 

“நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்” (ஏசாயா 55:1) என்று ஏசாயா தீர்க்கதரிசி நம்மை அழைக்கிறார். ஆனால் “நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்தி செய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்?” (வச. 2) என்றும் கேட்கிறார். சரீரப் பிரகாரமான பசியைப் பற்றி மட்டும் அவர் இங்கே குறிப்பிடவில்லை. தம் பிரசன்னம் கூட இருக்கும் என்று தேவன் கொடுத்த வாக்குறுதி மூலமாக, அவர் நம் ஆத்தும, உணர்வுப் பசிகளை தீர்க்கமுடியும். மூன்றாம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “நித்திய உடன்படிக்கை” கர்த்தர்  தாவீதுக்கு 2 சாமுவேல் 7:8-16ல் கொடுத்த வாக்குறுதியை நினைவுபடுத்துகிறது. தாவீதின் பரம்பரையிலே, மக்களை கர்த்தரோடு இணைப்பதற்காக ஒரு இரட்சகர் தோன்றுவார். பின்னர் யோவான் 6:35, 7:37 ஆகிய வசனங்களில் ஏசாயா கொடுத்த அதே அழைப்பை இயேசுவும் கொடுக்கிறார். இதன்மூலம் ஏசாயாவும், மற்ற தீர்க்கதரிசிகளும் முன்னறிவித்த இரட்சகர் தானே என்று வெளிப்படுத்துகிறார்.

 

பசியாய் இருக்கிறீர்களா? அவரது சமூகத்தில் வந்து நிறைவாய்ப் பெற்றுக்கொள்ளும்படி தேவன் உங்களை அழைக்கிறார்.

குறைவுள்ள நியாயத்தீர்ப்பு

என்னுடைய கைப்பேசியைப் பார்த்துக்கொண்டேயிருக்கும் போதே, தெருவில் நடந்து செல்கின்ற எவரையும் சரியாகக்கணித்து விடுவேன். எப்படி இவர்கள் தங்களை மோதவருகின்ற வாகனத்தைக் குறித்துத் தெரியாமலிருக்க முடியும்? நான் என்னையே கேட்டுக் கொள்வேன். அவர்கள் தங்கள் பாதுகாப்பைக் குறித்து கவனம் கொள்வதில்லையா? ஒருநாள், ஓர் நடைப்பாதையின் நுழைவாயிலைக் கடக்கும் போது நான் ஒரு குறுஞ் செய்தியில் ஆழ்ந்திருந்தேன். அப்பொழுது எனது இடப்புறமாக வந்த ஒரு வாகனத்தைக் கவனிக்கத் தவறிவிட்டேன். ஆனால், அந்த ஓட்டுநர் என்னைக் கவனித்து, சரியான நேரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டார். அவருக்கு என் நன்றி. நான் என்னை நியாயப்படுத்தி, பிறரை குற்றப்படுத்தி பேசியது எனக்கே வந்துவிட்டது. நான் பிறரை நியாயந்தீர்த்தேன். அதே தவறை நான் செய்து அதே தீர்ப்புக்குள்ளானேன்.

என்னுடைய இந்த மாய்மாலமான எண்ணத்தைக் குறித்துத்தான் இயேசுவும் மலைப்பிரசங்கத்தில், “மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகை பார்ப்பாய்” (மத். 7:5) என்றார். என் கண்ணில் ஒரு பெரிய கட்டை போன்ற ஒரு குருட்டு பகுதியிருக்கின்றது. அதன் வழியே நான் பிறரை என்னுடைய குறைவான நியாயத்தீர்ப்பின் மூலம் குற்றப்படுத்துகிறேன்.

“நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்” (7:2) எனவும் இயேசு கூறுகின்றார். நான் ஒரு காரின் முன்புறம் நடந்து சென்ற போது, விரைவாக நிறுத்திய அந்த ஓட்டுனரின் முகத்திலிருந்த வெறுப்படைந்த பார்வையை நினைத்துப் பார்த்தேன். தங்கள் அலைபேசியில் மூழ்சியிருக்கும் பிறர் மீது நான் செலுத்தும் வெறுப்படைந்த பார்வையை அது நினைவுபடுத்தியது.

நாம் ஒருவருமே நேர்மையானவர்களல்ல. ஆனால், நாம் சில வேளைகளில் அதை மறந்து, பிறரைத் தீர்ப்பிட அவசரப்படுகின்றோம். நம் அனைவருக்கும் தேவனுடைய கிருபை வேண்டும்.

என் தந்தையின் ஆலோசனை

ஒரு பத்திரிக்கை ஆசிரியர் வேலையிலிருந்து நான் நிறுத்தப்பட்ட பின்பு, தேவனை நோக்கி ஒரு புதிய வேலை கிடைக்க உதவுமாறு ஜெபித்தேன். வாரங்கள் சென்றன. ஒன்றும் கிடைக்கவில்லை. நான் வலைதளங்களில் தேடுவதிலும், விண்ணப்பப்படிவங்களை நிரப்புவதிலும் சலிப்படைந்து, “எனக்கொரு வேலைமிக முக்கியமானது என்பது உமக்குத் தெரியாதா?” என தேவனைக் கேட்டேன். என் ஜெபங்களுக்கு பதில் கிடைக்கவில்லை என்பதால் தேவனுக்கு நேராக நீட்டப்பட்ட என்கரங்களை மடக்கி கொண்டேன்.

நான் என்னுடைய தந்தையோடு பேசிக்கொள்ளும் போதெல்லாம், அவர் அடிக்கடி தேவனுடைய வாக்குத்தத்தங்களின் மீது நம்பிக்கையோடிருக்கச் சொல்வார். என்னுடைய வேலையைக் குறித்து அவர், “தேவன் என்ன சொல்கின்றாரோ அதன் மீது நம்பிக்கையோடிருக்கும்படி நான் உன்னிடம் எதிர்பார்க்கின்றேன்” என்றார்.

என்னுடைய தந்தையின் ஆலோசனை எனக்கு நீதிமொழிகள் 3ஆம் அதிகாரத்தை நினைவுபடுத்தியது. அது ஒரு தந்தை தன் அன்பு மகனுக்கு கொடுக்கும் ஞானமுள்ள ஆலோசனைகள். இந்தப் பகுதி என்னுடைய சூழ்நிலைக்கு மிகவும் பொருத்தமாயிருக்கின்றது. “உன் சுய புத்தியின் மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைக் செவ்வைப்படுத்துவார்” (நீதி. 3:5-6) உன்பாதைகளைச் செவ்வைப்படுத்துவார் என்பது தேவன் நாம் வளரும்படி நம்மை அவருடைய சித்தத்திற்கு நேராக வழிநடத்துவார் என்பதும், அவருடைய முழுமையான இலக்கு எதுவெனின் நான் அவரைப் போல மாற வேண்டும் என்பதுவுமே.

அப்படியானால் அவர் தேர்ந்தெடுக்கும் பாதைகள் வெகு இலகுவானவை என்பதல்ல. ஆனால், அவருடைய வழிநடத்துதலும், அவருடைய நேரமும் எனக்கு முற்றிலும் நன்மையாகவே இருக்கும் என நான் அவரையே நம்பியிருக்கத் தேர்ந்துகொண்டேன்.

நீயும், தேவன் உனக்கு பதிலளிக்க வேண்டுமென காத்திருக்கின்றாயா? தேவனையே நம்பி அவர் உன்னை வழி நடத்துவார் என்ற உறுதியோடு அவரோடு நெருங்கி செல்ல தேர்ந்து கொள்.

ஒரு புதிய சமுதாயம்

என்னுடைய சிநேகிதி கேரியின் ஐந்து வயது மகள் மைஜா. ஒரு புதிய முறையில் விளையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். அவளுக்கு வெவ்வேறு விதமான பொம்மைகளை ஒன்றாக வைத்து, ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்கி விளையாடுவது மிகவும் விருப்பமான ஒன்று. அவளுடைய கற்பனை உலகத்தில் எல்லாம் ஒன்றுக்கொன்று சொந்தமானவை. அவர்களே அவளுடைய ஜனங்கள். அவர்கள் யாவரும் வெவ்வேறு வடிவம், நிறம் உருவத்திலிருந்தாலும் ஒன்றாயிருக்கும்போது தான் மகிழ்ச்சியாயிருப்பர் என நம்பினாள்.

அவளுடைய படைப்பாற்றல், தேவன் சபையில் விரும்பும் ஒன்றினை நினைவுபடுத்துகின்றது. பெந்தெகொஸ்தே என்ற நாளில் ‘‘வானத்தின் கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்து வந்த தேவ பக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம் பண்ணினார்கள்” (அப். 2:5) என லூக்கா சொல்கின்றார். இந்த ஜனங்கள் வெவ்வேறு கலாச்சாரம், பாஷைக்காரராயிருந்த போதிலும், பரிசுத்த ஆவியானவர் வந்து அவர்களை ஒரு புதிய சமுதாயமாக்கினார். அன்றிலிருந்து சபை அவர்களை ஒரே சரீரமாக, இயேசுவின் சாவு மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் இணைக்கின்றது.

இயேசு இவ்வுலகில் இருந்தபோது ஒன்றாக இணைந்த ஒரு கூட்ட மனிதர்களே, அவருடைய சீடர்களே, இந்தச் சமுதாயத்தின் தலைவர்கள். இயேசு அவர்களை இணைக்காதிருந்தால், அவர்கள் ஒன்றாக இணைந்திருக்கவே முடியாது. இப்பொழுது இன்னும் அதிகமானோர், கிட்டத்தட்ட மூவாயிரம் பேர் (2:41) கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக இணைந்தனர். ஒரு காலத்தில் பிரிந்திருந்த இந்த குழுவினர் இப்பொழுது பரிசுத்த ஆவியானவரால் இணைக்கப்பட்டனர். அவர்கள் ‘‘சகலத்தையும் பொதுவாய் வைத்து அனுபவித்தார்கள்” (வச. 44). அவர்கள் தங்களுக்குரிய யாவற்றையும் பிறரோடு
பகிர்ந்துகொள்ளத் தயாராயிருந்தனர்.

பரிசுத்த ஆவியானவர் மக்கள் பிரிவுகளுக்கிடையே பாலமாக அமைந்து அவர்களை இணைக்கின்றார். நாம் எப்பொழுதும் மற்றவர்களோட இணைந்து எளிதாக அவர்களைப் புரிந்து கொள்வதில்லை. ஆனால் கிறிஸ்துவின் விசுவாசிகளாக நாம் இணைந்து கொள்கின்றோம்.

ஒருவர் பாடுபட்டால், எல்லோரும் பாடுபடுவார்கள்

உடன்பணியாளர் ஒருவர் தன் சரீரத்தில் பயங்கர வலியினால் கஷ்டப்படுகிறார் என்ற செய்தியை கேள்விப்பட்டதும், அலுவலகத்தில் உள்ள அனைவரும் கலங்கினர். மருத்துவமனைக்கு சென்று ஒருநாள் ஓய்வெடுத்து வேலைக்கு திரும்பினதும், அவர் தன் வலிக்கான காரணம், சீறுநீரகக் கல் என்றார். அந்த கல்லை ஞாபகார்த்தமாய் மருத்துவரிடம் பெற்றவர் என்னிடமும் காட்டினார். அதைக் கண்ட நான் அவருக்காக பரிதபித்தேன், அநேக ஆண்டுகளுக்கு முன் பித்தப்பை கல்லினால் நான் பட்ட கஷ்டம் என் நினைவுக்கு வந்தது. உண்மையிலேயே கொடுமையான வலி அது.

இவ்வளவு சிறிய ஒரு பொருள் சரீரமுழுவதிலும் ஒரு மோசமான வேதனையை கொடுக்கமுடியும் என்பதை நினைக்கும்போது ஆச்சரியமாய் இருக்கிறதல்லவா? ஆனாலும், ஒருவிதத்தில் 1 கொரிந்தியர் 12:26-ல் அப்போஸ்தலனாகிய பவுல் இதனையே குறிப்பிடுகிறார்: “ஆதலால் ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்...”. பன்னிரெண்டாம் அதிகாரம் முழுவதும் பவுல் சரீரத்தை உருவகப்படுத்தி உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களின் நிலையை விளக்குகிறார். “தேவனே சரீரத்தின் அவயவங்களை ஒன்றோடு ஒன்று இணைத்து அமைத்துள்ளார்” என்று சொல்லுகையில் அவர் கிறிஸ்துவின் சரீரத்தை குறிப்பிடுகிறார் – அனைத்து கிறிஸ்தவர்கள். நம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான வரங்களும் பொறுப்புகளும் உண்டு. ஆனாலும், நாமெல்லாரும் ஒரே சரீரத்தைச் சேர்ந்த அவயங்களாக காணப்படுவதால், ஒருவர் பாடுபடும்போது, எல்லோரும் பாடுபடுகிறோம். நம்முடைய கிறிஸ்தவ சகோதரன் அல்லது சகோதரி உபத்திரவம், துக்கம் மற்றும் போராட்டங்களை சந்திக்கும்போது, நாமும் அந்த வேதனையை அனுபவிப்பதால் நாமும் பாடுபடுகிறோம்.

என் சகபணியாளரின் வலி தன் சரீரம் சுகமடைவதற்கு தேவையான உதவியை பெற அவரைத் துரத்திற்று. கிறிஸ்துவின் சரீரத்திலும், ஒருவருடைய வலி நம்முடைய மனதை உருக்கி பாதிக்கப்பட்டவருக்கு எதையாவது செய்யவேண்டும் என்கின்ற மனதுருக்கத்தை நமக்குள் மூட்டிவிடுகிறது. நாம் ஜெபிக்கலாம், உற்சாகமூட்டக்கூடிய வசனத்தை சொல்லலாம் அல்லது குணப்படுத்தும் வழிமுறையில் உதவக்கூடிய எதையாகிலும் செய்யலாம். அப்படித்தான் சரீரத்தின் அவயவங்கள் ஒன்றோடொன்று இணைந்து செயல்படும்.

கன்மலைக்கு என்னை வழி நடத்தும்

ஓர் ஈரப்பதமூட்டியை வாங்குவதற்கு கடைக்குச் சென்ற போது, ஒரு மூதாட்டி நடைபகுதியில் முன்னும் பின்னுமாக நடந்து கொண்டிருந்ததைக் கவனித்தேன். ஒரு வேளை அவளும் ஈரப்பதமூட்டியைத்தான் வாங்க வந்திருப்பாளோ என வியந்தேன். எனவே நான் நகர்ந்து அவள் அருகே வருவதற்கு இடங்கொடுத்தேன். சற்று நேரத்தில், நாங்கள் எங்கள் பகுதியில் பரவி வருகின்ற வைரஸ் காய்ச்சலைப் பற்றி பேசிக் கொண்டோம். அது அவளுக்குத் தொடர்ந்து இருமலையும், தலைவலியையும் தந்து கொண்டிருப்பதாகக் கூறினாள்.

சில நிமிடங்கள் கழித்து அவள் ஒரு கசப்பான செய்திக்குள் சென்றாள். அந்த வைரஸின் தோற்றம் பற்றிய கொள்கைகளை விளக்க ஆரம்பித்தாள். நான் என்ன செய்வதென்று தெரியாமல் கவனித்தேன். சீக்கிரத்தில் அவள் அந்த கடையை விட்டு கோபத்துடனும், விரக்தியுடனும் வெளியேறினாள். அவளுடைய விரக்தியை வெளிக்காட்டியும், அவளுடைய அந்த வேதனையை எடுத்துப் போட என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

தாவீது இஸ்ரவேலின் இரண்டாவது அரசன். அவன் தன்னுடைய விரக்தியையும் கோபத்தையும் தேவனிடம் தெரிவிக்கும்படி சங்கீதங்களை எழுதினான். ஆனால் தேவன் அவனுடைய வேதனையை கவனிப்பதோடு மட்டுமல்ல, அவனுடைய வலியையும் போக்க அவரால் ஏதாவது செய்ய முடியும் என்பது தாவீதுக்குத் தெரியும். சங்கீதம் 61ல் அவர் எழுதுகிறார். என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்திரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன். எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்” (வச. 2). தேவனே அவனுடைய அடைக்கலம் (வ.3) தாவீது ஓடி வந்தடையத்தக்க கன்மலை, தேவன்.

நாம் வேதனையில் இருக்கும்போது, அல்லது வேதனையில் இருக்கும் ஒருவரைச் சந்திக்கும் போது, தாவீதுடைய அனுபவம் நாம் பின்பற்றக் கூடிய ஒரு வழியைக் காட்டுகிறது. நாம் ‘‘உயரமான கன்மலையை” நோக்குவோம். அல்லது யாரையாகிலும் அக்கன்மலையிடம் வழி நடத்துவோம். நான் தேவனைப் பற்றி அந்த மூதாட்டியிடம் சொல்லியிருக்க வேண்டுமென நினைத்தேன். தேவன் நம் வேதனை அத்தனையும் எடுத்து விடுபவரல்ல. மாறாக, நாம் அவர் தரும் சமாதானத்தில் அமர்ந்திருந்து, நம் கூப்பிடுதலை அவர் கேட்கிறார் என்ற உறுதியைப் பெற்றுக் கொள்வோம்.