எர்னஸ்ட் ஷக்கில்டன் (1874-1922), 1914 ஆம் ஆண்டு, அண்டார்டிக்கா சமுத்திரத்தைக் கடக்கும் முயற்சியில், ஒரு குழுவினரை வழிநடத்தினார். இதற்காக ஆயத்தப்படுத்தின கப்பலுக்கு “எண்டியுரன்ஸ்” (சகிப்புத் தன்மையுடையது) என்று பெயரிட்டார். அந்தக் கப்பல், வெட்டெல் கடலில், கடுமையான பனியில் அகப்பட்டுக் கொண்டது. அவர்கள் தப்பிப் பிழைப்பதற்கு அதிக சகிப்புத்தன்மையோடு ஓட வேண்டியதாயிற்று. அவர்கள் உலகத்தோடு தொடர்பு கொள்ள எந்த வகையிலும் முடியாத நிலையில், ஷக்கில்டனும் அவருடைய குழுவினரும், உயிர் காக்கும் படகுகள் உதவியால் அருகிலுள்ள யானைத் தீவின் கரையை அடைந்தனர். அக்குழுவின் அநேகர் அத்தீவிலேயே தங்கிவிட, ஷக்கில்டனும் மேலும் ஐந்து பேரும், இரண்டு வாரங்கள் நடந்து, 800 மைல்களைக் கடந்து, தெற்கு ஜியார்ஜியாவை அடைந்தனர். அங்கு வந்த பின், தங்கள் குழுவிலுள்ள மற்றவர்களுக்கு உதவியைப் பெற்றளித்தனர். தோல்வியடைந்த அவர்களின் பிரயாணம், வெற்றியாக முடிந்து, சரித்திரத்தில் இடம் பிடித்தது. ஷக்கில்டன் குழுவினர் அனைவரும் தப்பிப் பிழைத்ததால், அவர்களின் தைரியத்தையும், சகிப்புத்தன்மையையும் நன்றியோடு நினைப்போம்.

அப்போஸ்தலனாகிய பவுல், சகித்தலை நன்கு அறிவார். இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்திற்காக, ஒரு விசாரணைக்கு ரோமாபுரிக்குச் சென்ற போது, அவர் சென்ற கப்பல் கொடிய புயலில் சிக்கிக் கொண்டது. தேவதூதன் மூலம் அந்தக் கப்பல் மூழ்கிப் போகும் என்பதை பவுல் அறிந்து கொண்டான். பவுல் அக்கப்பலில் பிரயாணம் செய்த அனைவரையும் ஊக்கப்படுத்தி, கரையை அடையச் செய்தார். அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வர் என்ற வாக்கிற்காக தேவனுக்கு நன்றி செலுத்தினார். அவர்களின் கப்பல் மட்டும் சேதமானது (அப். 27:23-24).

பேரழிவுகளை நாம் சந்திக்கும் போது, தேவனாகிய கர்த்தர் அனைத்தையும் உடனே சரியாக்கி விட வேண்டுமென நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் தேவன் நம்பிக்கையைக் கொடுத்து, நாம் சகித்து வளரும்படி செய்கிறார். பவுல் ரோமாபுரியாருக்கு எழுதும் போது, “உபத்திரவம் பொறுமையை………உண்டாக்குகிறது” (ரோம. 5:3) என்கிறார். எனவே, கடினமான நேரங்களில் தேவன் மீது நம்பிக்கையாயிருந்து, ஒருவரையொருவர் ஊக்கப்படுத்துவோம்.