வகை  |  odb

ஆவியில் பாடுங்கள்

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் நடைபெற்ற வெல்ஷ் எழுப்புதல் கூட்டங்களின் போது, தான் கண்டவற்றை வேத போதகரும் எழுத்தாளருமான பு. கேம்ப்பெல் மோர்கன் எழுதுகின்றார். தேவனைப் போற்றும் பாடல்களின் அலை ஓசையில் பரிசுத்த ஆவியானவரின் அசைவாடுதலும் தேவப் பிரசன்னமும் இருந்ததை நம்புகின்றார். அந்தக் கூட்டங்களில் இசையின் மூலம் அனைவரையும் ஒருமுகப்படுத்தி, சிலரைத் தானாக ஜெபிக்கவும், பாவ அறிக்கை பண்ணவும், தானாகப் பாடவும் ஊக்குவித்ததை மோர்கன் கண்டதாக எழுதுகின்றார். யாராகிலும் அங்கு தங்களுடைய உணர்வுகளால் உந்தப்பட்டு நீண்ட நேரம் ஜெபித்தாலோ அல்லது மற்றவர்களோடு இசைந்திராமல் பேசினாலோ மற்றொருவர் மெல்லிய குரலில் பாட ஆரம்பிக்கின்றார். மற்றவர்கள் அப்பாடலோடு இணைந்துகொள்கின்றனர். மற்றவர்கள் அப்பாடலின் பல்லவி வரும்போது உரத்த குரலில் பாட ஆரம்பிக்கின்றனர். மற்ற சப்தங்களெல்லாம் அதில் அமிழ்ந்து விடுகின்றது.

மோர்கன் விளக்குகின்ற, இத்தகைய பாடல் மூலம் துதித்தலை வேதாகமத்திலும் காண்கின்றோம். அங்கும் இசை முக்கிய பங்காற்றுகிறது. வெற்றியைக் கொண்டாட இசை பயன்பட்டது (யாத். 15:1-21). ஆலய பிரதிஷ்டையின் போது தேவனை ஆராதிக்கவும்

(2 நாளா. 5:12-14), இராணுவத்தின் யுத்த முறைகளில் ஒரு பகுதியாகவும் (20:21-23) இசை பயன்படுத்தப்பட்டது. வேதாகமத்தின் மையத்திலுள்ள புத்தகமான சங்கீதம் பாடல்களால் நிறைந்த புத்தகம் (சங். 1-150). புதிய ஏற்பாட்டில், பவுல் எபேசியருக்கு எழுதிய கடிதங்களிலும் பரிசுத்த ஆவியின் செயல்பாட்டை விளக்குகின்றார். 'ஆவியினால் நிறைந்து சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக் கொண்டு உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடி கீர்த்தனம்பண்ணுங்கள்" என்கின்றார் (எபே. 5:18-19).

போராட்டங்களிலும், ஆராதனையிலும், வாழ்வின் எல்லா நிலைகளிலும் நம் விசுவாசத்தின் பாடல்கள் ஒருமனத்தைக் கொண்டுவர உதவுகின்றன. பழைய புதிய வகை இசையின் மூலம் நாம் மேலும் மேலும் புதுப்பிக்கப்படுகின்றோம். வல்லமையாலும், அதிகாரத்தாலுமல்ல, ஆவியினாலும் தேவனைப் போற்றும் பாடல்களாலுமே இது நடக்கின்றது.

மேகங்களால் மறைக்கப்பட்டது

மிக அபூர்வமான நிலவின் காட்சி, நவம்பர் மாதம் 2016ல் தெரிந்தது. நிலா தன்னுடைய வட்டப் பாதையில் சுழன்று பூமிக்கு மிக அருகில் வந்ததால் அது மிகப் பெரியதாகவும் மிகப் பிரகாசமானதாகவும் தோன்றியது. கடந்த அறுபது ஆண்டுகளுக்குப்பின் காணக் கிடைத்த ஓர் அரிய காட்சி. ஆனால், நான் இக்காட்சியைக் கரிய மேகங்களால் சூழப்பட்டதால் வானத்தில் பார்க்க முடியவில்லை. ஆனால், வேறு இடங்களிலிருந்து இக்காட்சியைக் கண்ட என்னுடைய நண்பர்களின் புகைப்படங்கள் மூலம் கண்டு கொண்டேன். நான் வானத்தை உற்று நோக்கினேன். மேகங்களுக்குப் பின்னால் இந்த மிகப் பெரிய நிலா இருக்கின்றது என்பதை நான் நம்பவேண்டியதாயிற்று.

கொரிந்து பட்டணத்தின் சபைகளுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதும்போது அவர்கள் அனுபவிக்கின்ற துன்பத்தின் மத்தியில் காணப்படாத நித்தியத்தைக் குறித்த நம்பிக்கையை விடாதிருக்கக் கேட்கின்றார். மேலும் 'அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம், மிகவும் அதிகமான நித்திய கன மகிமையை உண்டாக்குகிறது" எனக் கூறுகின்றார் (2 கொரி. 4:17). எனவே அவர்கள் தங்கள் கண்களை, ''காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளையே நோக்கித்" திருப்புமாறும் ''காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்" (வச. 18) எனவும் கூறுகின்றார். கொரிந்து சபையினரின் விசுவாசம் வளர வேண்டுமென பவுல் வாஞ்சிக்கின்றார். அவர்கள் துயரத்தை அநுபவிப்பதால். தேவன் மீது நம்பிக்கையோடிருக்க விரும்புகின்றார். அவர்களால் தேவனைக் காண முடியாவிட்டாலும் தேவன் அவர்களை நாளுக்கு நாள் புதிதாக்குகின்றதை நம்பும்படி கேட்கின்றார் (வச. 16).

நான் அன்று அந்த மேகங்களினூடே பார்த்தபோது காணப்படாத ஒரு பெரிய நிலாவை எப்படி நம்பினேனோ, அப்படியே தேவன் காணப்படாதவராகவும் ஆனால் நித்தியமானவராகவும் இருக்கின்றார். தேவன் என்னை விட்டு மிக தூரத்தில் இருக்கின்றார் என்று நான் நினைக்கத் தோன்றும்போதெல்லாம் நான் என் கண்களை காணப்படாத நித்தியமானவைகளின் மீது வைத்துக் கொள்வேன்.

அநியாயத்தின் பாரத்தை சுமத்தல்

குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டு, 38 வருடங்களுக்குப் பின், 2018 ஜனவரி 30 ஆம் நாள் மால்கம் அலெக்சாண்டர் சிறைச்சாலையை விட்டு சுதந்திர மனிதனாக வெளியே நடந்தார். டி.என்.எ சாட்சிகள் அலெக்சாண்டரை குற்றவாளியல்லவென்று காண்பிக்க, தொடர்ந்து தான் குற்றமற்றவன் என்பதைத் தெரிவித்துக் கொண்டிருந்த அலெக்சாண்டரின் வாக்குகளின் மத்தியில் வெளியான அனைத்து நீதிமன்ற செயல்களும் அவருக்கு எதிராக அநீதியாக தீர்ப்பிட்டன. குற்றவாளியின் சார்பாக செயல்பட்ட திறமையற்ற அரசு வழக்கறிஞர்கள், ஜோடிக்கப்பட்ட சாட்சிகள், சந்தேகத்தைக் கொண்டுவரும் விசாரனை யுக்திகள் அனைத்தும் சேர்ந்து ஓர் அப்பாவி மனிதனை கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் சிறையிலடைத்தது. கடைசியாக விடுதலைப்பெற்று வெளிவந்த போது, அலெக்சாண்டர் அளவிடமுடியாத கருணையைக் காண்பித்தார். 'நீ கோபத்தோடிருக்கக்கூடாது. இன்னும் கோபத்தோடிருக்க போதிய காலமில்லை" என கூறிக்கொண்டார்.

அலெக்சாண்டரின் வார்த்தைகள் ஆழ்ந்த கருணையின் வார்த்தைகள். அநீதி அவருடைய முப்பதெட்டு ஆண்டு வாழ்க்கையை அழித்துவிட்டது. அவருடைய பாரம்பரியத்தை கொன்றுவிட்டது. அப்படியாயின் நாம் கோபத்தோடும், வெறியோடுமல்லவா இருக்கவேண்டும். அலெக்சாண்டர் தன்மீது திணிக்கப்பட்ட குற்றங்களை சுமந்து, உள்ளம் உடைக்கப்பட்டவராக அநேக ஆண்டுகளைக் கழிக்க நேரிட்ட போதிலும், அவர் தீமையினால் மேற்கொள்ளப்படவில்லை. தன்னுடைய முழு பெலத்தையும் பழிவாங்கும்படி செலவிடாமல், பேதுரு கூறிய நிலையை வெளிப்படுத்துகின்றார். 'தீமைக்கு தீமையையும் உதாசீனத்துக்கு உதாசீனத்தையும் சரிக்கட்டாமல்" என்பதை செயலில் காட்டினார் (1 பேது. 3:9).

வேதாகமம் இன்னும் ஒருபடி மேலேயே கூறுகின்றது. பழிவாங்கலுக்குப் பதிலாக ஆசீர்வதியுங்கள் (வச. 9) எனக் கூறுகின்றது. நமக்கு அநீதியாக தீங்கிழைத்தவர்களுக்கு மன்னிப்பையும், நல்வாழ்விற்கான நம்பிக்கையையும் கொடுக்கவேண்டும். அவர்களின் தீய செயல்களை காரணம் காட்டாமல், நம்முடைய குற்றங்களை இயேசு சிலுவையில் சுமந்ததாலேயே நாம் தேவ இரக்கத்தைப் பெற்றுள்ளோம். நாமும் அந்த இரக்கத்தைப் பிறருக்குக் காட்டுவோம். நமக்கு அநீதியிழைத்தவருக்கும் காட்டுவோம்.

என்னுடைய கரத்தால், உனக்காக செய்யப்பட்டது

என்னுடைய பாட்டியம்மா ஒரு மிகச்சிறந்த தையல்காரி. அவளுடைய சொந்த இடமான டெக்ஸாஸில் அநேக போட்டிகளில் வெற்றி பெற்றவர். அநேக முக்கிய கொண்டாட்டங்களின் போது தன்னுடைய கையால் தைக்கப்பட்ட உடைகளைப் பரிசாக வழங்குவது அவர்களது வழக்கம். என்னுடைய உயர்நிலைப் பள்ளி பட்டமளிப்பின் போது, சிவப்பு நிற, உயர்ரக கம்பளி நூலால் தைக்கப்பட்ட குளிர்கால ஆடையை எனக்குப் பரிசாகக் கொடுத்தார்கள். நீலம் கலந்த பச்சை நிற மெத்தையை என் திருமணத்திற்குப் பரிசாகக் கொடுத்தார்கள். ஒவ்வொரு கலை அம்சமிக்க பகுதியிலும் அவளுடைய பெயர் பொறிக்கப்பட்ட ஏதாவது ஒரு பொருள் இருப்பதைக் காண்பேன் 'உனக்காக, என் கரத்தால் செய்யப்பட்டது - முன்னா" என்று எழுதப்பட்டிருக்கும். தையலால் எழுதப்பட்ட வார்த்தைகள் ஒவ்வொன்றும் என் பாட்டியம்மா என்மீது வைத்திருக்கும் அன்பினைக் காட்டும். மேலும் அவள் என்னுடைய எதிர்காலத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டும் வல்லமையுள்ள வார்த்தைகளாக இருக்கும்.

எபேசு சபை மக்களுக்கு பவுல் எழுதும்போது, நாம் இவ்வுலகில் வாழும் நோக்கம் என்னவெனில், 'இயேசு கிறிஸ்துவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு நற்கிரியைகளைச் செய்கிறதற்கு தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்" என்கின்றார் (2:10). இங்கு செய்கை என்பது ஒரு கலைஞனின் கைவினை அல்லது மிகச்சிறந்த படைப்பு என குறிப்பிடப்படுகிறது. பவுல் இதனை விளக்கும்போது, தேவன் நம்மை அவருடைய கைவினையாகப் படைத்து, நாமும் நற்கிரியைகளைச் செய்து, இயேசுவோடு நமக்குள்ள மீட்கப்பட்ட உறவின் வெளிப்பாடாகத் திகழவேண்டும் என்கின்றார். இந்த உலகில் நாம் அவருடைய மகிமைக்கென உருவாக்கப்பட்டுள்ளோம். நம்முடைய சொந்த நற்கிரியைகளால் நம்மை இரட்சிக்க முடியாது. ஆனால், தேவனுடைய கரம், அவருடைய நோக்கத்திற்காக நம்மை உருவாக்கியுள்ளதால் நாமும் பிறரை தேவனுடைய பெரிய அன்பண்டை கொண்டுவர, அவர் நம்மை பயன்படுத்த முடியும்.

என்னுடைய முன்னா தையல் வேலையில் முனைந்து, அவர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பினையும் அதன் தீவிரத்தையும் எனக்குக் காட்டியபோது, நானும் இவ்வுலகில் எனக்குரிய நோக்கத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது. தேவனுடைய விரல்கள் என் நாட்களின் அழகினை சரிப்படுத்தி உருவாக்கினபோது தேவனுடைய கரம், அவருடைய அன்பையும், நோக்கத்தையும் என் இருதயத்தில் தைத்து வைத்தார். எனவே, நான் அவருடைய அன்பை அறிந்துகொள்ளவும் முடிகிறது. அவருடைய கைவினையை பிறருக்குக் காட்டவும் முடிகிறது.

புலம்பலிலிருந்து ஆராதனைக்கு

கிம், 2013ல் மார்பகப் புற்றுநோயோடு போராடத் தொடங்கினாள். அவளுடைய சிகிச்சை முடிந்து நான்கு நாட்கள் கழித்து மருத்துவர்கள், நுரையீரலிலும் வியாதியிருப்பதைக் கண்டறிந்தனர். இன்னும் மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளே அவளால் வாழமுடியும் எனவும் தெரிவித்தனர். முதல் ஆண்டு முழுவதும் அவள் வேதனைப்பட்டாள். தன்னுடைய உணர்வுகளை தேவனுக்குத் தெரியப்படுத்தி, ஜெபத்தில் அழுதாள். 2015ல் நான் கிம்மைச் சந்தித்தபோது அவள் தன் வாழ்வை தேவனுடைய கரத்தில் விட்டிருந்தாள். அவளிடமிருந்து மகிழ்ச்சியும், சமாதானமும் அனைவருக்கும் கொடுக்கப்பட்டது. கடினமான நாட்களை அவள் கடந்தபோதிலும், தேவன் அவளுடைய இருதயத்தை உடையச் செய்யும் வேதனைகளை அழகிய, நம்பிக்கையோடு கூடிய துதிகளைக் கொண்ட சாட்சியாக மாற்றியிருந்தார். அவள் மற்றவர்களுக்கு ஊக்கத்தைக் கொடுப்பவளாக மாறியிருந்தாள்.

நாம் பயங்கரமான சூழலிலிருந்தாலும் தேவன் நம்முடைய புலம்பலை ஆனந்த நடனமாக மாற்றக் கூடியவர். அவருடைய குணமாக்கல், நாம் எதிர்பார்க்கின்ற அல்லது நாம் நம்புகின்றபடி இல்லையெனினும் தேவனுடைய வழிகளின் மீது நாம் உறுதியாயிருக்கலாம் (சங். 30:1-3). நம்முடைய பாதையில் எவ்வளவு கண்ணீர் சிந்தப்பட்டிருந்தாலும் நாம் அவரைப் போற்றுவதற்கு எண்ணிலடங்காத நன்மைகளைப் பெற்றுள்ளோம் (வச. 4). அவர் நம்முடைய உறுதியான நம்பிக்கையைக் காத்துக் கொண்டபடியால் அவரில் மகிழ்ந்திருப்போம் (வச. 5-7). அவருடைய இரக்கத்திற்காக கதறுவோம் (வச. 8-10). என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம் பண்ணும்படியாக எங்களுடைய அழுகையை நீக்கி மகிழ்ச்சியினால் நிறையப் பண்ணினீர். நான் எத்தகைய சூழலிலிருந்தாலும் தேவனாகிய கர்த்தரே என் அழுகையை களிப்பாக மாற்ற வல்லவர் (வச. 11-12).

நம்முடைய இரக்கத்தின் தேவன் நம்முடைய துயரத்தில் ஆறுதல் தந்து, நம்மைச் சமாதானத்தால் மூடி, நம்மை இரக்கத்தால் நிறைத்து மற்றவர்களுக்கு இரக்கத்தைக் கொடுக்கும்படி நம்மை மாற்றுவார். நம்மீது அன்புள்ள நம்முடைய உண்மை தேவன் நம்முடைய புலம்பலை ஆனந்த களிப்பாகவும், உள்ளம் நிறைந்த நம்பிக்கையையும், துதியையும் கொண்ட மகிழ்ச்சியோடு கூடிய நடனமாகவும் மாற்றுகின்றவர்.

மம்மா என்று அறியப்பட்டவர்

அவளுடைய பெயரும் நீண்டது அவளுடைய வாழ்நாட்களும் நீண்டவை. மேட்லின் ஹரியட் வோர்ஜாக்ஸன் வில்லியம்ஸ் 101 ஆண்டுகள் வரை வாழ்ந்தாள். அவள் இரண்டு கணவன்களோடு வாழ்ந்தாள். இருவருமே போதகர்கள். மேட்லின் என்னுடைய பாட்டி. நாங்கள் அவர்களை மம்மா என்றே அழைப்போம். என் உடன் பிறந்தோரும், நானும் அவர்களுக்கு நன்கு அறிமுகமானவர்கள். அவர்களுடைய இரண்டாவது கணவன் அவரை விரட்டிவிடும்வரை நாங்கள் அவர்களுடைய வீட்டில் தான் வளர்ந்தோம். அதற்குப் பின்னரும் எங்கள் அருகில் சுமார் ஐம்பது மைல்களுக்கப்பால்தான் வாழ்ந்து வந்தார்கள். எங்களுடைய பாட்டி பாமாலைகளை நன்கு பாடுபவர், வேத வசனங்களைச் சொல்லுபவர், பியானோ வாசிப்பவர், தேவனுக்கு பயந்து நடக்கும் ஒரு பெண். நானும், என்

உடன்பிறந்தோரும் அவருடைய விசுவாசத்தால் கவரப்பட்டவர்கள்.

2 தீமோத்தேயு 1:3-7ல் காண்கின்ற படி தீமோத்தேயுவின் பாட்டியாகிய லோவிசாளும், அவனுடைய தாயாகிய ஐனிக்கேயாளும் தீமோத்தேயுவின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினர். அவர்களுடைய வாழ்வும் போதனைகளும், வேதாகமத்தையே அடிப்படையாகக் கொண்டிருந்தன (வச. 5, 2 தீமோ. 3:14-16). அவர்களுடைய விசுவாசம் தீமோத்தேயுவின் இருதயத்திலும் மலர்ந்தது. வேதாகமத்தின் அடிப்படையில் அவர் வளர்க்கப்பட்டார். அதுவே அவன் தேவனோடு உள்ள உறவில் வளர அடித்தளமாக அமைந்தது. அது அவனை தேவனுக்கு ஊழியம் செய்யும்படி உருவாக்கியது (1:6-7).

இன்றைக்கும், தீமோத்தேயுவின் காலத்திலும் தேவன் உண்மையுள்ள ஆண்களையும், பெண்களையும் எதிர்கால சந்ததியினரை கிறிஸ்துவுக்குள் வழிநடத்த பயன்படுத்துகின்றார். நம்முடைய ஜெபமும், வார்த்தைகளும், செயலும், சேவையும் நாம் வாழும்போதும் அதற்குப் பின்னரும் தேவனால் வல்லமையாக பயன்படுத்தப்படும். அதனால் தான், நானும் என் உடன்பிறப்புகளும் எங்களுடைய மம்மாவினால் கற்றுக்கொடுக்கப்பட்ட செயல்களை நடப்பித்துக் கொண்டிருக்கிறோம். என்னுடைய  ஜெபமெல்லாம், என்னுடைய மம்மாவின் பாரம்பரியம் எங்களோடு நின்று விடக்கூடாது என்பதே.

கடினமான இடங்களில் மகிழ்ச்சி

அவளால் எப்பொழுதெல்லாம் தொலைபேசியை எடுக்கமுடியவில்லையோ, அப்பொழுதெல்லாம் என்னுடைய சிநேகிதியின் ஒலிப்பதிவு செய்தி என்னை ஒரு செய்தியை பதிவு செய்யும்படி அழைக்கும். அந்த அழைப்பின் முடிவில் 'இது ஒரு சிறப்பான நாளாக அமையட்டும்' என முடிக்கும். நான் அந்த வார்த்தைகளைச் சிந்தித்துப் பார்க்கும்போது, நம்முடைய நாட்களைச் சிறப்பானதாக்கிக் கொள்ளும் வல்லமை நம்மிடமில்லை என்பதை உணர்ந்து கொண்டேன். உண்மையிலேயே சில சந்தர்ப்பங்கள் நம்மை அழிவுக்குள்ளாக்குவதாக இருக்கின்றன. ஆனால், சற்று ஆழமாகப் பார்க்கும்போது, நம்முடைய காரியங்கள் நன்றாகவோ மோசமானதாகவோ போனாலும், ஏதோவொரு விடுவிக்கும் வல்லமை நம்முடைய நாட்களை அழகானதாக்கி விடுகிறது என உணர்கின்றேன்.

ஆபகூக் இலகுவான சூழல்களை மட்டும் சந்திக்கவில்லை. அவர் ஒரு தீர்க்கதரிசியாகையால் தேவன் வரும்நாட்களில், ஜனங்கள் சார்ந்து வாழ்கின்ற விளைச்சலிலும், கால்நடைகளிலும் பலனில்லாமல் போகும் காலங்களைக் காட்டுகின்றார் (3:17). இக்காலங்களின் கொடுமையைத் தாங்குவதற்கு நம்பிக்கை மட்டுமே உதவமுடியும். ஒரு ஜனக்கூட்டமான இஸ்ரவேலர் கொடுமையான வறுமையை சந்திப்பர் என்பதைக் கேட்ட ஆபகூக்கின் இருதயம் வேதனையடைந்தது. உதடுகள் துடித்தன, கால்கள் பயத்தால் நடுங்கின (வச. 16).

இவையனைத்தும் இருந்தபோதும் ஆபகூக், 'நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன்; என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்" (வச. 18) என்கின்றார். அவர் தேவன் மீதுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றார். கர்த்தர் தன்னை பெலப்படுத்தி, உயரமான ஸ்தலங்களில் தன்னை நடக்கப்பண்ணுவார் என நம்பிக்கையோடிருக்கின்றார் (வச. 9).

சில வேளைகளில் நாமும் ஆழ்ந்த வேதனைகளையும், கடின வேளைகளையும் கடக்க நேரிடும். ஆனால், எதை இழந்திருந்தாலும், எதை அடையாமற்போனாலும், ஆபகூக்கைப் போன்று நம்முடைய அன்பு தேவனில் களிகூருவோம். நமக்கு ஒன்றுமேயில்லாமல் போனாலும் அவர் நம்மைக் கைவிடுவதும் நம்மை விட்டு விலகுவதுமில்லை (எபி. 13:5). அவரே துயரப்படுகிறவர்களுக்கு நன்மையைத் தருபவர், அவரே நம்முடைய மகிழ்ச்சியின் காரணர்
(எபி. 61:3).

தைரியமாக நில்

ஜெர்மனியின் அநேக தேவாலயங்களின் தலைவர்கள் ஹிட்லருக்குச் சாதகமாக செயல்பட்ட போதும், வேத வல்லுநரும், போதகருமான மார்டின் நிமோலெர் என்பவர் நாசிக் கட்சியின் கொடுமைகளை எதிர்த்து நின்ற தைரியசாலிகளோடிருந்தார். நான் வாசித்ததில் 1970ல் மூத்த ஜெர்மானியர் ஒரு கூட்டமாக, ஒரு பெரிய விடுதியின் முன் நின்றுகொண்டிருக்க, ஓர் இளைஞன் அந்தக் குழுவின் சார்பாக பேசிக் கொண்டிருந்தார். ஒருவர், 'யார் அந்தக் குழுவினர்?" எனக் கேட்டபோது, 'ஜெர்மானிய போதகர்கள்" என பதில் வந்தது. 'அந்த இளைஞன் யார்?" என்று கேட்டபோது அது மார்டின் நிமோலெர், அவருக்கு வயது எண்பது என்றனர். ஆனால், அவர் இளமைத் துடிப்போடிருந்தார். ஏனெனில், அவரிடம் பயமில்லை.

நிமோலெருக்கு பயத்தை எதிர்த்து பெரிய, பயமற்ற மனிதனுக்கப்பாற்பட்ட வல்லமையிருந்தது. அது தேவனுடைய கிருபையே. உண்மையில் அவர் ஆரம்பத்தில் யூதருக்கு விரோதமான எண்ணங்களையே கொண்டிருந்தார். ஆனால், அவர் மனந்திரும்பியபோது தேவன் அவரை மீட்டுக் கொண்டார். அவர் உண்மைக்காக தைரியமாகப் பேசும்படிக்கு அவருக்கு தேவன் உதவினார்.

இஸ்ரவேலரும் பயத்தை மேற்கொண்டு தேவனை உண்மையாய் தொடரும்படி, அவர்களுக்கு மோசே ஊக்கமளிக்கின்றார். மோசேயும் அவர்களை விட்டு எடுபட்டு விடுவார் என அவர்கள் கேள்விப்பட்ட போது, அவர்கள் பயத்தால் பின் வாங்காதபடி அவர்களுக்கு மோசே, 'நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள். அவர்களுக்கு பயப்படவும் திகைக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய கர்த்தர் தாமே உன்னோடே கூட வருகிறார்" (உபா. 31:6) என தைரியப்படுத்துகின்றார். இஸ்ரவேலர் தங்கள்

எதிர்காலத்தைக் குறித்து பயப்படத் தேவையில்லை. ஏனெனில், தேவன் அவர்களோடிருக்கின்றார்.

எத்தகைய இருள் உன்னைச் சூழ்ந்துகொண்டாலும், எத்தனை பயங்கரம் உன்னைத் தாக்கினாலும் தேவன் உன்னோடிருக்கின்றார். தேவனுடைய கிருபையால் நீ பயத்தை மேற்கொள்வாய். ஏனெனில் 'தேவன் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை" (வச. 6,8).

ஓர் அடையாளத்தைக் காட்டிலும் மேலானது

தன்னுடைய குழு ஒரு சரித்திரத்தை ஏற்படுத்தக்கூடிய அந்த கடைசி நேரத்தில், ஐயோவா பல்கலைக்கழகத்தின் மிகச்சிறந்த கூடைப்பந்து விளையாட்டு வீரர் ஜோர்டன் பொகனன் தடையில்லா ஓர் பந்து எறிதலை வேண்டுமென்றே தவறவிட்டு, தன் பள்ளியின் 25 வருட ரெக்கார்டை முறியடிப்பதை விட்டுவிட்டான். ஏன்? 1993 ஆம் ஆண்டு ஐயோவாவின் கிறிஸ்ட்ரீட் குழுவில் முப்பத்துநான்கு தடையில்லா பந்து எறிவுகளை தொடர்ந்து போட்டான்.. பின்னர் அவன் ஒரு கார் விபத்தில் மரித்துப் போனான். போகனன் ஸ்டீரிட்டை கௌரவித்து மகிழ்ந்தானேயன்றி, தன்னுடைய பள்ளிப் பதிவை முறியடிக்க விரும்பவில்லை.

போகனன் தன்னுடைய சொந்த முன்னேற்றத்தைவிட, சில விழிப்புணர்வை ஏற்படுத்தும் காரியங்களுக்கு அதிக கவனம் செலுத்தினான். இதே போன்ற மதிப்பீடுகளை இளம் வீரரான தாவீதின் வாழ்விலும் காணலாம். ஒரு குகையில் தன்னுடைய தரமற்ற படைகளோடு ஒளிந்திருந்த தாவீது, தன்னுடைய சொந்த ஊரான பெத்லகேமின் கிணற்று நீரைப் பருக ஏங்கினான். ஆனால், அந்தப் பகுதி பெலிஸ்தரின் கைவசமிருந்தது (2 சாமுவேல் 23:14-15).

தாவீதின் மூன்று யுத்த வீரர்கள் பெலிஸ்தரின் எல்லைக்குள் துணிந்து புகுந்து, அந்தக் கிணற்று நீரை மொண்டு தாவீதுக்குக் கொண்டு வந்தனர். ஆனால், தாவீதால் அந்த நீரைப் பருக முடியவில்லை. 'அவன் அதைக் குடிக்க மனதில்லாமல், அதைக் கர்த்தருக்கென்று ஊற்றிப் போட்டான்" அவன், 'கர்த்தாவே, தங்கள் பிராணனை எண்ணாமல் போய்வந்த அந்த மனுஷரின் இரத்தத்தைக் குடிக்கும் இச்செயல் எனக்குத் தூரமாயிருப்பதாக" என்றான் (வச. 16-17).

தங்களுக்கு அகப்பட்டதையெல்லாம் கையகப்படுத்திக் கொள்வதையே பாராட்டும் இந்த உலகில் அன்பினாலும், தியாகத்தாலும் நிறைவேற்றப்படும் செயல்கள் எத்தனை வல்லமையுள்ளவை! அத்தகைய செயல்கள் ஓர் அடையாளத்தை ஏற்படுத்துவதைக் காட்டிலும் மேலானவை.