இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் நடைபெற்ற வெல்ஷ் எழுப்புதல் கூட்டங்களின் போது, தான் கண்டவற்றை வேத போதகரும் எழுத்தாளருமான பு. கேம்ப்பெல் மோர்கன் எழுதுகின்றார். தேவனைப் போற்றும் பாடல்களின் அலை ஓசையில் பரிசுத்த ஆவியானவரின் அசைவாடுதலும் தேவப் பிரசன்னமும் இருந்ததை நம்புகின்றார். அந்தக் கூட்டங்களில் இசையின் மூலம் அனைவரையும் ஒருமுகப்படுத்தி, சிலரைத் தானாக ஜெபிக்கவும், பாவ அறிக்கை பண்ணவும், தானாகப் பாடவும் ஊக்குவித்ததை மோர்கன் கண்டதாக எழுதுகின்றார். யாராகிலும் அங்கு தங்களுடைய உணர்வுகளால் உந்தப்பட்டு நீண்ட நேரம் ஜெபித்தாலோ அல்லது மற்றவர்களோடு இசைந்திராமல் பேசினாலோ மற்றொருவர் மெல்லிய குரலில் பாட ஆரம்பிக்கின்றார். மற்றவர்கள் அப்பாடலோடு இணைந்துகொள்கின்றனர். மற்றவர்கள் அப்பாடலின் பல்லவி வரும்போது உரத்த குரலில் பாட ஆரம்பிக்கின்றனர். மற்ற சப்தங்களெல்லாம் அதில் அமிழ்ந்து விடுகின்றது.

மோர்கன் விளக்குகின்ற, இத்தகைய பாடல் மூலம் துதித்தலை வேதாகமத்திலும் காண்கின்றோம். அங்கும் இசை முக்கிய பங்காற்றுகிறது. வெற்றியைக் கொண்டாட இசை பயன்பட்டது (யாத். 15:1-21). ஆலய பிரதிஷ்டையின் போது தேவனை ஆராதிக்கவும்

(2 நாளா. 5:12-14), இராணுவத்தின் யுத்த முறைகளில் ஒரு பகுதியாகவும் (20:21-23) இசை பயன்படுத்தப்பட்டது. வேதாகமத்தின் மையத்திலுள்ள புத்தகமான சங்கீதம் பாடல்களால் நிறைந்த புத்தகம் (சங். 1-150). புதிய ஏற்பாட்டில், பவுல் எபேசியருக்கு எழுதிய கடிதங்களிலும் பரிசுத்த ஆவியின் செயல்பாட்டை விளக்குகின்றார். ‘ஆவியினால் நிறைந்து சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக் கொண்டு உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடி கீர்த்தனம்பண்ணுங்கள்” என்கின்றார் (எபே. 5:18-19).

போராட்டங்களிலும், ஆராதனையிலும், வாழ்வின் எல்லா நிலைகளிலும் நம் விசுவாசத்தின் பாடல்கள் ஒருமனத்தைக் கொண்டுவர உதவுகின்றன. பழைய புதிய வகை இசையின் மூலம் நாம் மேலும் மேலும் புதுப்பிக்கப்படுகின்றோம். வல்லமையாலும், அதிகாரத்தாலுமல்ல, ஆவியினாலும் தேவனைப் போற்றும் பாடல்களாலுமே இது நடக்கின்றது.