அழகானது
இரண்டு வாலிபப் பெண்களை உங்கள் மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். முதல் பெண் நல்ல பெலத்தோடும், ஆரோக்கியத்தோடும் இருக்கிறாள். மற்றொரு பெண்ணோ சக்கர நாற்காலியில் அமர்ந்து சுதந்திரமாக சுற்றித் திரிந்து செயல் பட முடியாத நிலையில் கட்டுண்டிருக்கிறாள். அந்த சக்கர நாற்காலியில் இருப்பதால் பல மனப் போராட்டங்களையும் உடலில் வலிகளையும், வேதனைகளையும் அடைகிறாள்.
ஆனால் அந்த அழகான இரு பெண்களும் சேர்ந்து இருக்கும் பொழுது ஆனந்தமாக சிரித்து மகிழ்ந்து ஒருவரில் ஒருவர் அன்புகூர்ந்து அவர்களுக்குள் அமைந்த விலையேறப்பெற்ற நட்பை பார்த்தனர்.
இயேசுவும் கூட சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் அந்த பெண்ணை போன்ற மனிதர்கள் மேல் அதிக கவனத்தையும், நேரத்தையும் செலவிட்டார். வாழ்நாள் முழுவதும் உடற் சுகவீனத்தால் கஷ்டப்படுவர் மீதும், உடல் குறைபாடுகள் உள்ளவர் மீதும், சமுதாயத்தின் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதும் இயேசு அதிக கவனம் செலுத்தினார். மதத் தலைவர்களால் அலட்சியம் செய்யப்பட்ட ஒரு பெண் அவர் மீது எண்ணெய் பூசிய பொழுது அதை அங்கீகரித்து வரவேற்றார் (லூக்:7:39). மற்றொரு சமயத்தில், வேறொரு பெண் அதைப் போலவே செய்த பொழுது அவளது செயலை பலரும் இகழ்ந்து பேசி விமர்சித்தனர். அப்பொழுது இயேசு, “அவளை விட்டுவிடுங்கள்.......... என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள்” (மாற். 14:6) என்றார்.
தேவன் எல்லோரையும் சமமாக மதிப்பிடுகிறார். அவரது கண்களில் ஏற்றதாழ்வுகள் இல்லை. உண்மையில் நமக்கெல்லாம் கிறிஸ்துவின் அன்பும், மன்னிப்பும் தேவை. நம் மீது இருக்கும் எல்லையற்ற அன்பினால் சிலுவை மரணத்தை ஏற்றுக்கொண்டார்.
எல்லோரையும் தேவசாயலில் படைக்கப்பட்டவராகவும், அவரது அன்பிற்கு பாத்திரவான்களாகவும் இயேசு பார்ப்பது போல நாம் அனைவரையும் பார்க்கக் கடவோம். ஆகவே நாம் கிறிஸ்துவைப் போல் எல்லோரையும் சமமாக பாவித்து அவரைப் போலவே பிறரது அழகைக் காண அறிந்து கொள்ள வேண்டும்.
சிவப்பு தூண்டில்
சில வருடங்களுக்கு முன்பதாக ஏதேச்சையாக இரண்டாம் நாற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க எழுத்தாளரான ஏலியனின் (Aelian) மீன் பிடிக்கும் கதையை வாசிக்க நேர்ந்தது. அது ஓர் மீனவ நாட்டுப்புற கதையாகும். “பொரோக்காவிற்கும் தெசலோனிக்காவிற்கும் இடையே ஓர் ஆறு உள்ளது. அதன் பெயர் ஆஸ்ட்ரகஸ். அதில் நிறைய புள்ளிகளுள்ள ட்ரவுட் (Trout) மீன்கள் உள்ளன”. மேலும் அவற்றை எப்படி அந்த மக்கள் பிடிப்பார் என்பதை விவரித்திருந்தார். “ஒவ்வொரு மீனுக்கும் ஒரு பொறியைத் தயாரித்து, கருஞ்சிவப்பு நிற கம்பளி நூலை ஓர் கொக்கியில் மாட்டி, அதில் இரண்டு பறவையின் இறகுகளையும் சேர்த்து, பின் அந்த பொறியை தண்ணீரில் தூக்கி வீசுவர். சிவப்பு வண்ணத்தினால் கவரப்பட்ட மீன் அருகில் வந்து, தீனியை தின்பதற்கு அதைக் கவ்வும்” (On the Nature of Animals).
இதே தந்திரத்தை தான் மீனவர் இன்றும் பயன்படுத்துகின்றனர். இதற்கு பேர் தான் ரெட் ஆக்கிள் (சிவப்பு தூண்டில்). முதன் முதலில் 2200 ஆண்டுகளுக்கு முன்னர் இதை பயன்படுத்தினர். இன்றும் கூட நேர்த்தியாய் மீன்களைப் பிடிக்க இந்த தூண்டில்கள் உதவுகின்றன.
இந்தப் பழங்கதையை படித்தவுடன் ஓர் எண்ணம் தோன்றியது. பழைய காரியங்கள் எல்லாம் காலம் கடந்து விட்ட, ஒன்றுக்கும் உதவாத, கட்டுக்கதைகள் அல்ல – முக்கியமாக மனிதர்கள். முதுமையில் மன நிறைவுடனும், சந்தோஷத்துடனும் வலம் வந்து, நாம் தேவனை ஆழமாக அறியும் அறிவையும், நிறைவையும் எடுத்துரைத்து வாழ்ந்து வந்தால், நமது முதுமையிலும் நாம் பலருக்கு மிகவும் பயனுள்ளவராய் இருப்போம். முதுமைக் காலத்தில் குறையும் ஆரோக்கியத்தையும் கடந்த காலத்தையும் பற்றி கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அது அமைதியும், மகிழ்ச்சியும், தைரியமும் கனிவும் நிறைந்த அற்புத கால கட்டமாக இருக்கலாம்; தேவனோடு நடந்து, வாழ்ந்து, வளர்ந்தவர்கள் தங்கள் கனிகளை பிறர் சுவைக்க வெளிப்படுத்தும் அழகிய காலம் அது.
கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள்... அவர்கள் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்
(சங். 92:13-15).
அனுப்பியதை அனுப்பாமலிருக்க
எப்பொழுதாவது ஒரு இ-மெயிலை அனுப்பிவிட்டு பின்னர் எதற்காக இதை அனுப்பினேன் என வருந்தியதுண்டா? தவறான சொற்களோ, கடுமையான மொழியோ அதில் இருந்திருக்கும் அல்லது தவறான நபருக்கு அது சென்று விட்டிருக்கும். ஒரு கீயை (Key) அழுத்தி அதை நிறுத்த முடியுமானால் எவ்வளவு நன்றாயிருக்கும். அது இப்போது சாத்தியமாகிவிட்டது. பல இ-மெயில் நிறுவனங்கள் இந்த வசதியை இப்பொழுது தருகின்றன. நீங்கள் ஒரு இ-மெயிலை அனுப்பியவுடன் சிறிது நேரம் வரை அதை திரும்பப் பெறும் வசதியுள்ளது. அது உங்கள் கம்ப்யூட்டரை விட்டு எங்கும் சென்றிருக்காது. ஆனால் அந்த நேரம் கடந்தபின் இ-மெயிலும் சொல்லப்பட்ட வார்த்தை போல் ஆகிவிடும். அதைத் திரும்பப் பெற முடியாது. இந்த ‘திரும்பப் பெறும்’ வசதி நமக்கு ஒரு மிகவும் முக்கியமான விஷயத்தை நினைவூட்டுகிறது. நாம் எப்பொழுதும் கவனத்துடன் பேசவேண்டும் என்பதே.
அப்போஸ்தலனாகிய பேதுரு தன்னுடைய முதலாம் நிருபத்தில் இயேசுவின் சீடர்களை நோக்கி இப்படி கூறுகிறார், “தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள். ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து, பொல்லாப்பைவிட்டு நீங்கி, நன்மைசெய்து, சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடரக்கடவன்” (1 பேது. 3:9-11).
சங்கீதக்காரன் தாவீதும் இதைப்பற்றி எழுதியுள்ளார், “கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்” (சங். 141:3). இது நாம் மறுமொழி கூறி பிறரை காயப்படுத்தாதவாறு நம்மை எப்பொழுதும் தற்காத்துக் கொள்ள நாம் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய மிக முக்கியமான ஜெபமாகும்.
தேவனே, என் வார்த்தைகளைக் காத்துக்கொள்ள உதவிசெய்யும். என்னுடைய வார்த்தைகளால் பிறரைக் காயப்படுத்தாமல் இருக்க பெலன் தாரும்.
என்றும் கிடைக்காத சிறந்த சலுகை!
போதும் என்பது எவ்வளவு? வளர்ந்த நாடுகள் பல பொருட்களை வாங்குவதற்கென்றே ஒதுக்கப்பட்ட அந்த நாளில் இந்தக் கேள்வியை கேட்டால் நலமாயிருக்கும். அமெரிக்க நன்றியறிதல் விடுமுறை நாளுக்கு அடுத்த நாளாகிய கருப்பு வெள்ளிக்கிழமையைப் பற்றி கூறுகிறேன். அன்று அநேக கடைகள் சீக்கிரமே திறக்கப்பட்டு தள்ளுபடி விலையில் விற்பனை செய்வார்கள்; இது அமெரிக்காவிலிருந்து மற்ற நாடுகளுக்கும் பரவிவிட்டது. குறைந்த அளவு பணமுடையவர்கள், தங்களால் இயன்றதை வாங்க முற்படுவார்கள். ஆனால் வருந்ததக்கவிதமாக, ஒரு சிலருக்கோ பேராசையே தூண்டுகோளாக இருப்பதால் பேரம் பேசுவதினால் ஏற்படும் சண்டையில் வன்முறை வெடிக்கிறது.
பிரசங்கி (பிர. 1:1) என்று அழைக்கப்படும் பழைய எற்பாட்டு ஆசிரியருடைய ஞானத்தின் மூலம், வெறிபிடித்தது போல கடைகளில் பொருள் வாங்குவதற்கு ஒரு மாற்று மருந்தை அறிந்துகொள்ளலாம். இது நம் இருதயத்திற்கும் பொருந்தும். பணத்தை நேசிப்பவர்கள் ஒரு போதும் திருப்தியடைவதில்லை. ஆகவே அவர்களுடைய உடைமைகளால் அவர்கள் ஆளப்படுவார்கள் என்று சுட்டிக் காட்டுகிறார். ஆனாலும், அவர்கள் இறக்கும் பொழுது ஒன்றையும் கொண்டு செல்வதில்லை. “வந்ததுபோலவே நிர்வாணியாய்த் திரும்பப் போவான்” (5:15). பண ஆசை எல்லா தீமைக்கும் வேறாயிருக்கிறது. ஆகவே “போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியை,” (1 தீமோ. 6:6-10) முயன்று நாட வேண்டுமென்று, பிரசங்கியின் கூற்றை திமோத்தேயுவுக்கு எழுதும் கடிதத்தில் பவுல் எதிரொலிக்கிறார்.
நம்முடைய நிறைவிலும் சரி குறைவிலும் சரி, நம் இருதயங்களில் தேவன் இல்லாத காலி இடத்தை முறையற்ற வழிகளிலே நாம் நிரப்ப முயற்சிக்கலாம். ஆனால் நம்முடைய சமாதானம் மற்றும் சுகத்திற்காக தேவனையே நோக்கினால், அவர் நம்மை அவருடைய நன்மையினாலும் அன்பினாலும் நிரப்புவார்.
நன்றி கூறும் விளையாட்டு
ஒவ்வொரு வருடமும், இலையுதிர் காலத்தில், எங்கள் கார்னர்ஸ்டோன் (Cornerstone) பல்கலைக்கழக வளாகத்திலே சுவைமிக்க நன்றிகூறுதல் விருந்து வைப்போம். எங்கள் மாணவர்களுக்கு அது மிகவும் பிடிக்கும். சென்ற வருடம் சில மாணவர்கள், தாங்கள் அமர்ந்து உணவருந்திய இடத்திலேயே ஒரு விளையாட்டை விளையாடினார்கள். அதாவது, அதிகப்படியாக மூன்று நொடிகளுக்குள், தாங்கள் நன்றி தெரிவிக்க விரும்பிய காரியத்தைப் பெயரிட வேண்டும். மேலும் மற்றொருவர் சொன்னதை திருப்பிச் சொல்லக் கூடாது. அதிக நேரம் எடுத்தால், விளையாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.
தேர்வுகள், காலக்கெடு, விதிமுறைகள் மற்றும் அநேக கல்லூரி சார்ந்த காரியங்களை மாணவர்கள் குறைகூற கூடும். ஆனால் அந்த மாணவர்கள் நன்றி கூறுவதை தெரிந்து கொண்டார்கள். என்னுடைய அனுமானம் என்னவென்றால், இந்த விளையாட்டின் முடிவிலே அந்த மாணவர்கள் மனநிறைவடைந்திருப்பார்கள். ஒருவேளை அவர்கள் குறைகூறுவதை தேர்வு செய்திருந்தால் அந்த மனநிறைவு அவர்களுக்கு கிடைக்காமல் போயிருக்கும்.
நாம் குறைகூறும்படியான காரியங்கள் எப்பொழுதும் இருந்தாலும், நாம் கவனமாய் பார்த்தால், நாம் நன்றி தெரிவிக்கும்படியான ஆசீர்வாதங்கள் எப்பொழுதும் உண்டு. கிறிஸ்துவுக்குள்ளான புது சிருஷ்டியைக் குறித்து பவுல் விவரிக்கும் பொழுது, “நன்றியறிதல்” என்கின்ற பண்பே ஒன்றிற்கும் மேற்பட்ட முறை குறிப்பிடப்பட்டுள்ளது. சொல்லப்போனால் மூன்று முறை குறிப்பிடப்பட்டுள்ளது. “நன்றியறிதல் உள்ளவர்களாயுமிருங்கள்” என்று கொலோசெயர் 3:15ல் கூறுகிறார். “இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி,” (வச. 16) என்று நன்றியுணர்வை பக்தி பாடலாய் வெளிப்படுத்துகிறார். மேலும், “நீங்கள் எதைச் செய்தாலும்… பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்,” (வச. 17) என்று கூறுகிறார். நன்றியுள்ள இருதயத்தோடு இருக்கும்படியான அறிவுரையை பவுல், சிறைச் சாலையிலிருந்து எழுதியுள்ளார் என்பதை நினைக்கும் பொழுது மிகவும் வியப்பாக உள்ளது.
இன்று நன்றியறிதலுள்ள மனப்பான்மையை நாம் தேர்வு செய்வோம்.
புகழும் தாழ்மையும்
நம்மில் அநேகர் புகழ்ச்சியின் மேல் தீரா ஆசை கொண்டுள்ளோம். அதாவது, ஒன்று நம்முடைய புகழ்ச்சியை குறித்த ஆசை அல்லது புகழ்ச்சிமிக்க நபர்களின் அன்றாட வாழ்வின் காரியங்களை அப்படியே பின்பற்ற தீரா ஆசை. சர்வதேச புத்தகம் அல்லது சினிமா நட்சத்திர சுற்றுப்பயணம், இரவு நேர நட்சத்திர நிகழ்ச்சிகள், டிவிட்டரில் லட்சக்கணக்கில் தங்களை பின்தொடர்பவர்கள் என பலவித ஆசைகள்.
அண்மையில் அமெரிக்காவில் இணையதளத்தை அலசி ஆராய்ந்து பார்த்து, புகழ்மிக்க நபர்களை வரிசைப்படுத்தும் ஒரு கணக்கு வழிமுறை (algorithm) ஆய்வாளர்களால் இதற்கென்று சிறப்பாக வடிவமைக்கப்பட்டது. இந்த தரவரிசையில், வரலாற்றில் மிகவும் புகழ்வாய்ந்த மனிதராக இயேசுவே முன்னிலை வகித்தார்.
ஆனால் புகழ்ச்சியை இயேசு ஒருநாளும் விரும்பியதே இல்லை. அவர் இந்த பூமியில் இருந்த பொழுது அதை நாடித் தேடவும் இல்லை (மத். 9:30; யோவா. 6:15). ஆனால், அவரைப் பற்றிய செய்தி கலிலேயா எங்கும் விரைந்து பரவிய பொழுது புகழ்ச்சி அவரைத் தேடி வந்தது (மாற். 1:28; லூக். 4:37).
இயேசு சென்ற இடமெல்லாம், கூட்டம் கூடியது. அவர் செய்த அற்புதங்கள் மக்களை அவரிடம் கொண்டு வந்தது. ஆனால் அவர்கள் அவரை பலவந்தமாய் ராஜாவாக்க நினைத்தபொழுது, அவர் அவர்களிடமிருந்து நழுவிக் கொண்டார் (யோவா. 6:15). தன் பிதாவின் நோக்கத்திற்குள்ளாக தன்னை இணைத்துக் கொண்டு ஒவ்வொரு முறையும் அவருடைய சித்தத்திற்கும், நேரத்திற்கும் தன்னை ஒப்புக்கொடுத்தார் (4:34; 8:29; 12:23). “மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்” (பிலி. 2:8).
புகழ் எப்பொழுதும் இயேசுவின் இலக்கு அல்ல. அவருடைய நோக்கம் மிக எளிமையானது. தேவனுடைய குமாரனாக, அவருக்கு கீழ்படிந்து, தாழ்மையோடு தாமாகவே தன்னைத்தானே நம்முடைய பாவங்களுக்காக ஜீவபலியாக ஒப்புக்கொடுத்தார்.
வீட்டை எண்ணி ஏங்கி
பண்டையகால அலமாரி உயர கடிகார பெட்டிக்குள் (Grand Father’s Clock) என் தலையை நீட்டிக்கொண்டிருந்த பொழுது, அந்த அறைக்குள்ளே என் மனைவி நுழைந்தாள். “என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டாள். தயக்கத்துடன், “என் பெற்றோர் வீட்டிலுள்ள வாசனை, இந்த கடிகாரத்திலும் உள்ளது. அதனால், ஒரு கணம் என் வீட்டிற்கே நான் சென்றுவிட்டேன்,” என்று அதன் கதவை பூட்டியவாறு கூறினேன்.
வாசனைகளை நுகரும்பொழுது, அவை பல ஞாபகங்களைத் தூண்டி விடலாம். அந்த கடிகாரத்தை இருபது ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் தேசத்தின் மறுபக்கத்திலுள்ள என் பெற்றோர் வீட்டிலிருந்து கொண்டு வந்தோம். ஆனால், இப்பொழுதும் அந்த கடிகாரத்தின் மரக்கட்டையின் வாசம் என் சிறுவயதை எனக்கு ஞாபகமூட்டுகிறது.
எபிரெய புத்தகத்தின் ஆசிரியர், வேறு விதமாக தங்கள் வீட்டை குறித்து ஏங்கிக் கொண்டிருந்தவர்களைப் பற்றிக் கூறுகிறார். பின்னோக்கிப் பார்ப்பதற்குப் பதில், விசுவாசத்தோடு தங்கள் பரலோக வீட்டை எதிர்நோக்கி இருந்தார்கள். அவர்கள் விரும்பியதைப் பெற நெடுநாள் ஆனாலும், வாக்குத்தத்தம் பண்ணின தேவன் அவரோடு என்றென்றும் இருக்கும்படியாக நம்மை அழைத்துக்கொள்வார் என்பதில் உறுதியாய் இருந்தார்கள் (எபி. 11:13-16).
“நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது” என்று பிலிப்பியர் 3:20 நமக்கு ஞாபகப்படுத்துவதால், “அங்கேயிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.” நாம் இயேசுவைக் கண்டு, அவரின்மூலம் தேவன் நமக்கு வாக்குப்பண்ணின எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ளப் போகிறோம் என்கிற விசுவாசம், நம் நோக்கத்தில் உறுதியாய் இருக்க உதவுகிறது. நம்முடைய கடந்தகாலமோ நிகழ்காலமோ நமக்கு முன்னாக இருப்பதோடு ஒப்பிடவே முடியாது.
நீ எப்படி?
அவரவர் குடும்பங்களின் நன்றிகூறுதல் சம்பிரதாயங்கள்பற்றி, தன்னுடைய நண்பர்கள் பேசிக்கொண்டிருந்ததை எமிலி கேட்டுக்கொண்டிருந்தாள். “நாங்கள் ஒவ்வொருவரும், அறைக்குள் சுற்றிவந்தவாறு, எந்தெந்த காரியங்களுக்கெல்லாம் தேவனுக்கு நன்றி செலுத்த விரும்புகிறோமோ அதைக் கூறுவோம்,” என்று கேரி (Gary) கூறினான்.
இன்னொரு நண்பன் அவர்கள் குடும்பத்தின் நன்றிகூறுதல் உணவைப்பற்றியும், ஜெபவேளை குறித்தும் கூறினான். தன் தந்தை இறப்பதற்கு முன் அவரோடிருந்த நேரங்களை நினைவுகூர்ந்தான்: “என் தந்தைக்கு டிமென்ஷியா (Dementia) என்னும் வியாதி இருந்தபோதிலும், அவர் தேவனுக்கு ஏறெடுத்த நன்றி ஜெபங்கள் தெள்ளத் தெளிவாய் இருக்கும்” என்றான். ராண்டி, “அந்த விடுமுறை நாளிலே என் குடும்பத்தில் ஒன்றாக பாடுவதற்கான சிறப்புப் பாடல் நேரம் இருந்தது. என் பாட்டி பாடிக்கொண்டே இருப்பார்கள்” என்று பகிர்ந்தான். இதையெல்லாம் கேட்ட எமிலி தன் குடும்பத்தை நினைத்த பொழுது துக்கமும், பொறாமையும் கொண்டவளாய், “எங்க வீட்டு சம்பிரதாயப்படி வான்கோழி சாப்பிடுவோம், டிவி பார்ப்போம், தேவனைப்பற்றியோ நன்றிகூறுவது பற்றியோ பேசவே மாட்டோம்” என்று புலம்பினாள்.
அப்படிச் சொன்னவுடன், அவளுடைய மனப்பான்மையை எண்ணி சஞ்சலப்பட்டாள். ‘நீ அந்த குடும்பத்தில் ஒருத்தி. மாற்றங்களை கொண்டுவர, நீ என்ன செய்ய விரும்புகிறாய்?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். அவளுடைய சகோதர, சகோதரிகள், அவர்களின் பிள்ளைகள் மற்றும் பேரப் பிள்ளைகள் அனைவரையும் தனித்தனியாக சந்தித்து, அவர்களுக்காகத் தான் தேவனுக்கு நன்றி செலுத்துவதாக அவர்களிடம் கூற முடிவு செய்தாள். அந்த நாள் வந்த பொழுது, அப்படியே செய்தாள். அவர்கள் அனைவரும் அவள் அன்பை உணர்ந்தார்கள். இது மிக சுலபமான ஒன்றல்ல, ஏனெனில் அவள் வீட்டில் பொதுவாக இப்படிப் பேசுவதில்லை, ஆனால் அவளுடைய அன்பை ஒவ்வொருவரிடமும் பகிர்ந்து கொண்டபொழுது, அவள் மிகவும் சந்தோஷமடைந்தாள்.
“கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்தி விருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்” என்று பவுல் எழுதியுள்ளார் (எபே. 4:29). மற்றவர்களிடம் நாம் கூறும் நன்றியுள்ள வார்த்தைகள், நாமும் தேவனும் அவர்கள் மேல் வைத்துள்ள மதிப்பை அவர்களுக்கு நினைப்பூட்டுகிறது.
தியாகம் நிறைந்த விசுவாசம்
என்னுடைய கணவர் போதகராக உள்ள ஆலயத்தின் அருகில் எங்கள் வீடு உள்ளது. ஒரு ஞாயிற்றுகிழமை மத்தியான வேளையிலே, என் வீட்டு தோட்டத்தில் அமர்ந்தவாரு, ஆலயத்திலிருந்து பாரசீக மொழியில் மிதந்து வந்த துதி ஆராதனை சத்தத்தை கேட்டுக்கொண்டிருந்தேன். லண்டனில் உள்ள எங்கள் ஆலயத்தில் உற்சாகமிக்க ஈரானிய அங்கத்தினர் உள்ளனர். அவர்கள் எதிர்கொண்ட சில உபத்திரவங்களைப் பற்றி கேட்கும்பொழுது, கிறிஸ்துவின் மேலுள்ள அவர்களுடைய வாஞ்சையை அறிந்து கொள்ளலாம். அவற்றோடு ஒப்பிடும்பொழுது நாம் நம்மை சிறியவர்களாக எண்ணக்கூடும். உதாரணத்திற்கு, கிறிஸ்துவை விசுவாசித்ததினால் தன் உயிரைத் துறக்க நேர்ந்த தலைமைப் போதகருடைய சகோதரனின் தியாகம். இந்த உண்மையான விசுவாசிகள், முதலாவது இரத்தசாட்சியான ஸ்தேவானுடைய வழியை பின்பற்றுகிறார்கள்.
ஆதி திருச்சபையிலே முதலாவதாக நியமிக்கப்பட்ட ஊழியர்களில் ஒருவரான ஸ்தேவான், “பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும்” (அப். 6:8) செய்த பொழுது, எருசலேமிலே அநேகரால் கவனிக்கப்பட்டு, யூத அதிகாரிகள் முன்பு, தன்னுடைய செய்கைகளுக்கு விளக்கமளிக்குமாறு கொண்டு செல்லப்பட்டான். அவனை குற்றப் படுத்தியவர்களின் இருதய கடினத்தை விவரிக்கும் முன்பு, கிறிஸ்துவின் மேலுள்ள தன்னுடைய விசுவாசத்தைக் குறித்து உணர்ச்சிமிக்க விளக்கமளித்தான். அதைக்கேட்டு மனந்திரும்புவதற்கு பதிலாக அவர்கள் “மூர்க்கமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லை கடித்தார்கள்” (7:54). ஆத்திரமடைந்த அவர்கள் அவனை நகரத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டு வந்து கல்லெறிந்து கொன்று போட்டார்கள். அவனோ அப்பொழுதும் அவர்களை மன்னிக்குமாறு ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தான்.
கிறிஸ்துவின் சுவிசேஷம் மூர்க்கத்தனமான எதிர்ப்பை உண்டுபண்ணக் கூடும் என்பதை ஸ்தேவான் மற்றும் இன்றைய இரத்த சாட்சிகளின் கதைகள்மூலம் அறிந்து கொள்ளலாம். ஒருவேளை நம்முடைய விசுவாசத்தினிமித்தம் நாம் எந்த ஒரு எதிர்ப்பையும் எதிர்கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், இன்று உலகத்தில் உபத்திரவப்படும் சபைக்காக நாம் ஜெபிக்க வேண்டும்; ஒருவேளை நாமும் சோதிக்கப்பட்டால் நமக்காக எல்லா பாடுகளையும் அனுபவித்த கிறிஸ்துவின் முன்பு உண்மையுள்ளவர்களாய் நிற்க கிருபை பெறுவோமாக.