பண்டையகால அலமாரி உயர கடிகார பெட்டிக்குள் (Grand Father’s Clock) என் தலையை நீட்டிக்கொண்டிருந்த பொழுது, அந்த அறைக்குள்ளே என் மனைவி நுழைந்தாள். “என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டாள். தயக்கத்துடன், “என் பெற்றோர் வீட்டிலுள்ள வாசனை, இந்த கடிகாரத்திலும் உள்ளது. அதனால், ஒரு கணம் என் வீட்டிற்கே நான் சென்றுவிட்டேன்,” என்று அதன் கதவை பூட்டியவாறு கூறினேன்.

வாசனைகளை நுகரும்பொழுது, அவை பல ஞாபகங்களைத் தூண்டி விடலாம். அந்த கடிகாரத்தை இருபது ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் தேசத்தின் மறுபக்கத்திலுள்ள என் பெற்றோர் வீட்டிலிருந்து கொண்டு வந்தோம். ஆனால், இப்பொழுதும் அந்த கடிகாரத்தின் மரக்கட்டையின் வாசம் என் சிறுவயதை எனக்கு ஞாபகமூட்டுகிறது.

எபிரெய புத்தகத்தின் ஆசிரியர், வேறு விதமாக தங்கள் வீட்டை குறித்து ஏங்கிக் கொண்டிருந்தவர்களைப் பற்றிக் கூறுகிறார். பின்னோக்கிப் பார்ப்பதற்குப் பதில், விசுவாசத்தோடு தங்கள் பரலோக வீட்டை எதிர்நோக்கி இருந்தார்கள். அவர்கள் விரும்பியதைப் பெற நெடுநாள் ஆனாலும், வாக்குத்தத்தம் பண்ணின தேவன் அவரோடு என்றென்றும் இருக்கும்படியாக நம்மை அழைத்துக்கொள்வார் என்பதில் உறுதியாய் இருந்தார்கள் (எபி. 11:13-16).

“நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது” என்று பிலிப்பியர் 3:20 நமக்கு ஞாபகப்படுத்துவதால், “அங்கேயிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.” நாம் இயேசுவைக் கண்டு, அவரின்மூலம் தேவன் நமக்கு வாக்குப்பண்ணின எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ளப் போகிறோம் என்கிற விசுவாசம், நம் நோக்கத்தில் உறுதியாய் இருக்க உதவுகிறது. நம்முடைய கடந்தகாலமோ நிகழ்காலமோ நமக்கு முன்னாக இருப்பதோடு ஒப்பிடவே முடியாது.