அவரவர் குடும்பங்களின் நன்றிகூறுதல் சம்பிரதாயங்கள்பற்றி, தன்னுடைய நண்பர்கள் பேசிக்கொண்டிருந்ததை எமிலி கேட்டுக்கொண்டிருந்தாள். “நாங்கள் ஒவ்வொருவரும், அறைக்குள் சுற்றிவந்தவாறு, எந்தெந்த காரியங்களுக்கெல்லாம் தேவனுக்கு நன்றி செலுத்த விரும்புகிறோமோ அதைக் கூறுவோம்,” என்று கேரி (Gary) கூறினான்.

இன்னொரு நண்பன் அவர்கள் குடும்பத்தின் நன்றிகூறுதல் உணவைப்பற்றியும், ஜெபவேளை குறித்தும் கூறினான். தன் தந்தை இறப்பதற்கு முன் அவரோடிருந்த நேரங்களை நினைவுகூர்ந்தான்: “என் தந்தைக்கு டிமென்ஷியா (Dementia) என்னும் வியாதி இருந்தபோதிலும், அவர் தேவனுக்கு ஏறெடுத்த நன்றி ஜெபங்கள் தெள்ளத் தெளிவாய் இருக்கும்” என்றான். ராண்டி, “அந்த விடுமுறை நாளிலே என் குடும்பத்தில் ஒன்றாக பாடுவதற்கான சிறப்புப் பாடல் நேரம் இருந்தது. என் பாட்டி பாடிக்கொண்டே இருப்பார்கள்” என்று பகிர்ந்தான். இதையெல்லாம் கேட்ட எமிலி தன் குடும்பத்தை நினைத்த பொழுது துக்கமும், பொறாமையும் கொண்டவளாய், “எங்க வீட்டு சம்பிரதாயப்படி வான்கோழி சாப்பிடுவோம், டிவி பார்ப்போம், தேவனைப்பற்றியோ நன்றிகூறுவது பற்றியோ பேசவே மாட்டோம்” என்று புலம்பினாள்.

அப்படிச் சொன்னவுடன், அவளுடைய மனப்பான்மையை எண்ணி சஞ்சலப்பட்டாள். ‘நீ அந்த குடும்பத்தில் ஒருத்தி. மாற்றங்களை கொண்டுவர, நீ என்ன செய்ய விரும்புகிறாய்?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். அவளுடைய சகோதர, சகோதரிகள், அவர்களின் பிள்ளைகள் மற்றும் பேரப் பிள்ளைகள் அனைவரையும் தனித்தனியாக சந்தித்து, அவர்களுக்காகத் தான் தேவனுக்கு நன்றி செலுத்துவதாக அவர்களிடம் கூற முடிவு செய்தாள். அந்த நாள் வந்த பொழுது, அப்படியே செய்தாள். அவர்கள் அனைவரும் அவள் அன்பை உணர்ந்தார்கள். இது மிக சுலபமான ஒன்றல்ல, ஏனெனில் அவள் வீட்டில் பொதுவாக இப்படிப் பேசுவதில்லை, ஆனால் அவளுடைய அன்பை ஒவ்வொருவரிடமும் பகிர்ந்து கொண்டபொழுது, அவள் மிகவும் சந்தோஷமடைந்தாள்.

“கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்தி விருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்” என்று பவுல் எழுதியுள்ளார் (எபே. 4:29). மற்றவர்களிடம் நாம் கூறும் நன்றியுள்ள வார்த்தைகள், நாமும் தேவனும் அவர்கள் மேல் வைத்துள்ள மதிப்பை அவர்களுக்கு நினைப்பூட்டுகிறது.