Archives: டிசம்பர் 2016

இப்பொழுதே அந்த நாள்

நர்சரி வகுப்பில் படிக்கும் என் பேத்தி மேகியும் கிண்டர்கார்டன் படிக்கும் அவளது சகோதரி கேட்டியும் சில போர்வைகளை தூக்கிக்கொண்டு வீட்டின் பின்புறம் நோக்கிச் சென்றனர். அங்கு போர்வையால் கூடாரம் அமைத்து அதில் விளையாட முயன்றனர். கொஞ்ச நேரம் கழித்து மேகி தனது தாயாரை அழைக்கும் சத்தம் கேட்டது.

“அம்மா, இங்கே சீக்கிரம் வாங்க!” என கத்தினாள். “நான் இயேசுவை எனது உள்ளத்தில் அழைக்க விரும்புகிறேன், அதற்கு உதவி செய்யுங்கள்” என்று பின்பு கூறினாள். விளை யாடிக்கொண்டிருந்த பொழுது திடீரென அவள் தன் வாழ்விற்கு இயேசு மிகவும் தேவை என்பதை உணர்ந்து அவர் மேல் அவளது விசுவாசத்தை வைக்க முடிவுசெய்தாள்.

இயேசுவை விசுவாசிக்க உதவியை நாடிய மேகியின் அவசர தொனியில் ஒலித்த குரலானது
2 கொரிந்தியர் 6ல் பவுல் இரட்சிப்பை பற்றிக் கூறிய வார்த்தைகளை நமக்கு நினைவு படுத்துகிறது. மேசியாவாகிய கிறிஸ்து நிச்சயமாகவே பூமியில் வந்துவிட்டார் என்றும், அவரது மரணமும், உயிர்த்தெழுதலின் மூலமும், “அநுக்கிரக காலம்” ஆரம்பித்ததை குறித்தும் போதித்து வந்தார். நாம் அப்படிப்பட்ட கால கட்டத்தில் தான் வாழ்ந்து வருகிறோம். இன்று இரட்சிப்பு அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. “இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள்” (2 கொரி. 6:2) என்று அவர் கூறினார். யாரெல்லாம் பாவமன்னிப்பிற்காக இயேசுவை இன்னும் விசுவாசிக்க வில்லையோ, உங்களுக்கு இதுவே சரியான நேரம் ஆகும். மிகச் சீக்கிரமாக இந்த முடிவை எடுப்பது மிகவும் அவசியமாகும்.

ஒருவேளை பரிசுத்த ஆவியானவர் நீங்கள் இயேசுவின் மேல் விசுவாசம் வைப்பதற்கான தேவையை உங்கள் உள்ளத்தில் தோன்றச் செய்திருக்கலாம். மேகியைப் போல் நீங்களும் உடனே ஏற்றுக்கொள்ளுங்கள். இயேசுவண்டை ஓடி வாருங்கள். இன்றே அந்த நாள்.

தேவனோடு தனித்திருத்தல்

அன்றைய தினத்தில் காலைவேளையில் சபையின் ஓர் அறை மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது. ஒரு டஜன் குழந்தைகள் ஓடி விளையாடிக் கொண்டிருந்தனர். அங்கு நான் உதவியாளராய் இருந்தேன். சற்று நேரத்தில் அறையின் சீதோஷண நிலைமாறி வெப்பம் அதிகரித்தது. அதனால் நான் கதவைத் திறந்து வைத்தேன். ஒரு சிறுவன் இந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டு யாரும் பார்க்காத வேளையில் தப்பித்து ஓடினான். நானும் பின் தொடர்ந்து ஓடினேன். அப்பொழுது அவன் தன் தந்தையிடம் ஓடிச் சென்றதைக் கண்டு நான் ஆச்சரியம் அடையவில்லை.

பரபரப்பான வாழ்க்கையில் நாம் சிக்கிக் கொள்ளும்போது அந்த சிறுவன் செய்ததைதான் நாமும் செய்ய வேண்டும். அதாவது அவன் தன் தந்தையிடம் சென்றான். இயேசு தன்னுடைய பரலோக பிதாவோடு நேரம் செலவிடவும் ஜெபிக்கவும் வாய்ப்புகளைத் தேடினார். மாம்சத்தில் அவரது பெலனை எல்லாம் ஊழியத்திற்கு செலவிட்ட போது இப்படி தனித்திருந்து தான் அவர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார் என்று சிலர் கூறுவதுண்டு. மத்தேயு எழுதின சுவிசேஷத்தில், இயேசு தனித்திருக்க எண்ணி தனிமையான இடத்தை நோக்கிச் செல்வதைக் காணலாம். அப்போது அவரை மக்கள் சூழ்ந்து கொண்டு பின் தொடர்ந்தனர். அவர்களது தேவை அறிந்த இயேசு அற்புதமாய் சுகமும் உணவும் அளித்தார். “அவர் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார்” (மத். 14:23).

இயேசு திரும்ப திரும்ப அநேக ஜனங்களுக்கு உதவி செய்தார். ஆனால் அவர் பரபரப்புடனோ, சோர்வுடனோ காணப்படவில்லை. அவர் தேவனோடு கொண்ட நல்லுறவை ஜெபத்தினால் எப்போதும் ஸ்திரப்படுத்திக் கொண்டேயிருந்தார். நீங்கள் எப்படி செயல்படுகின்றீர்கள்? தேவனை அநுபவித்து அவரது அன்பையும், பெலனையும், முழுமையையும் அறிந்து கொள்ள ஆர்வத்துடன் அவரோடு நேரம் செலவிடவும், தனித்திருக்கவும் செய்கிறீர்களா?

முத்திரை மோதிரம்

வெளிநாட்டில் இருந்து வந்த ஒரு நண்பரை நான் முதன் முதலாக சந்தித்த பொழுது, மிடுக்காக தொனித்த அவரது ஆங்கில உச்சரிப்பையும், அவரது சிறு விரலில் அணிந்திருந்த மோதிரத்தையும் நான் கவனித்தேன். பின்னர் அது வெறும் அலங்கார அணிகலன் அல்ல என்பதை அறிந்து கொண்டேன். அதில் பொறிக்கப்பட்ட சின்னம் அவரது குடும்பத்தின் வரலாற்றை வெளிப்படுத்தியது.

சொல்லப்போனால், ஆகாய் புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட முத்திரை மோதிரம் போல அதை எண்ணலாம். இந்த சிறிய பழைய ஏற்பாட்டு புத்தகத்தில் ஆகாய் தீர்க்கதரிசி தேவ ஜனத்தை மீண்டுமாய் ஆலயத்தை கட்டும்படி அழைக்கிறார். அகதிகளாய் இருந்தவர்கள் தங்களது தாய் நாட்டிற்கு திரும்பிய பின் அவர்கள் மீண்டும் தேவாலயத்தை கட்டிக்கொண்டிருக்கும் போது, எதிரிகள் மூலமாய் பிரச்சனை கிளம்பியது. அவர்களது எதிர்ப்பால் கட்டும் பணிகள் முடங்கியது. அப்போது ஆகாய் தீர்க்கதரிசி செருபாபேலை நோக்கி தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட யூதாவின் தலைவராகவும், தேவனுடைய முத்திரை மோதிரமாகவும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருப்பதை அவர் செருபாபேலுக்கு நினைப்பூட்டினார்.

ஆதிகாலத்தில் முத்திரை மோதிரம் ஓர் அடையாளச் சின்னமாக விளங்கியது. அவர்களது கையெழுத்திற்கு பதிலாக அவர்கள் அணிந்த முத்திரை மோதிரத்தை உருக்கிய மெழுகிலோ அல்லது மிருதுவான களிமண்ணிலோ அழுத்தி அதன் அடையாளத்தை எடுப்பார்கள். கிறிஸ்துவின் நற்செய்தியை நாம் பகிர்ந்து கொள்ளும் போதும், அவரது கிருபையை நம்மை சுற்றியுள்ள அயலானிடத்தில் வெளிப்படுத்தும் போதும், தீமையின் கட்டுகளில் இருந்து மக்களை விடுவிக்க போராடும் போதும் நாம் அனைவரும் தேவனுடைய பிள்ளைகளான அடையாளத்தை இவ்வுலகத்தில் முத்திரை பதிக்கிறோம்.

நாம் ஒவ்வொருவரும் தனித்துவம் வாய்ந்தவர்கள். நமது தாலந்துகளையும், ஆசைகளையும், ஞானத்தையும் நாம் வெளிப்படுத்தும் போது அது மற்றவரைப் போல் இல்லாமல் தனித்துவம் வாய்ந்ததாய் அமைகின்றது. அப்படி செய்கையில் நாம் தேவனின் சாயலை புதுமையான விதத்தில் வெளிப்படுத்துகின்றோம். இந்த பூமியில் தேவனுடைய முத்திரை மோதிரமாய் விளங்குவது நமக்குக் கொடுக்கப்பட்ட மிகப்பெரிய சிலாக்கியமாகும்.

அன்பிற்குள் அடைக்கப்பட்டு

ஜூன் 2015ல் பாரீஸ் நகரில் உள்ள பான்ட் டெஸ் ஆர்ட்ஸ் (Pont des Arts) நடைபாலத்தில் உள்ள கம்பிகளில் இருந்து 45டன் எடை கொண்ட பூட்டுகளை நீக்கினர். அன்பின் நினைவுச்சின்னமாக தம்பதிகள் தங்களது பெயர்களை ஓர் பூட்டில் எழுதி, பாலத்தின் கம்பியில் அதை பூட்டி சாவியை கீழே ஓடும் சியன் (River Seine) ஆற்றில் போட்டுவிடுவர்.

ஆயிரக்கணக்கான மக்கள் இச்செயலில் ஈடுபட்டத்தினால், அந்த “அன்பின்” கனத்தை அப்பாலத்தினால் தாங்க முடியவில்லை. கடைசியில் நகர நிர்வாகம், பாலத்தை பாது காப்பதற்காக இந்த “அன்பு பூட்டு” களை நீக்கியது.

முடிவில்லா அன்பின் அடையாளச் சின்னமாக அந்த பூட்டுகள் எண்ணப்பட்டது. ஆனால் உலகப்பிரகாரமான அன்பு கடைசி வரை நீடிப்பதில்லை. நெருங்கிய நண்பர்களுக்கு இடையே கூட மனக்கசப்பு ஏற்பட்டு மன்னிக்காமல் கூட இருந்தும் விடலாம். குடும்பத்தினரிடையே சண்டை ஏற்பட்டு வாக்குவாதங்கள் முளைக்கலாம். அவர்கள் மற்றொருவரை மன்னிக்காமலேயே இருந்து விடலாம். எதற்காக திருமணம் செய்தோம் என்ற எண்ணத்தையே மறந்துபோன நிலையில் மனதளவில் பிரிந்த நிலையில் கணவனும், மனைவியும் வாழலாம். காரணம் மனிதனின் அன்பு நிலையற்றது.

ஆனால் சகலத்தையும் தாங்கும் நிலையான அன்பு ஒன்று உள்ளது-அதுதான் தேவனின் அன்பு. “கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை (அன்பு) என்றுமுள்ளது.” நித்தியத்திற்கும் நிலைத்திருக்கும் முடிவில்லாத தேவனின் அன்பை எடுத்துரைக்கும் வாக்குத்தத்தங்கள் வேதம் முழுவதிலும் நிறைந்திருப்பதைக் காணலாம். அவரது அன்பின் மிகச்சிறந்த அடையாளச் சின்னமாய் விளங்குவது அவரது குமாரனின் சிலுவை மரணம் தான். அதைக் கண்டு அவர்மேல் விசுவாசம் வைப்பவர் நித்திய வாழ்வை பெறுவர். அதன் பின்னர் ஒருவராலும் அவரது அன்பை விட்டு நம்மை பிரிக்க முடியாது (ரோம. 8:38-39).

அன்பான விசுவாசிகளே, நித்தியத்திற்கும் நாம் தேவனின் அன்பிற்குள் ‘பூட்டப்பட்டிருக்கிறோம்.’

தொடர்புடைய தலைப்புகள்

> odb

குடும்பம் மிகவும் முக்கியமானது

எங்கள் மாமாவின் இறுதி ஊர்வலத்திற்காகவும் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தொண்ணூறு வயது பாட்டியையும் பார்ப்பதற்காய், வெவ்வேறு மாகாணங்களில் வசித்த நான், எனது அக்கா மற்றும் தம்பியுடன் சேர்ந்து விமானத்தின் மூலமாய் வந்தோம். அவர் பக்கவாதத்தால் முடங்கி, பேசும் திறனை இழந்துவிட்டார். அவர் வலது கையை மட்டுமே பயன்படுத்தினார். நாங்கள் அவர்களது படுக்கையைச் சுற்றி நின்றபோது, அவர் அந்தக் கையை நீட்டி எங்களின் ஒவ்வொரு கைகளையும் எடுத்து, ஒன்றன்மேல் ஒன்றாக அவர்களது இதயத்தின்மீது வைத்து, அவற்றைத் தட்டிக்கொடுத்தார். இந்த வார்த்தைகளற்ற சைகையால், உடைபட்டு பிரிந்திருக்கும் எங்களது உடன்பிறப்பு உறவைக் குறித்து அவர் எங்களோடு தொடர்புகொண்டார். “குடும்பம் மிகவும் முக்கியமானது.”

திருச்சபை என்னும் தேவனுடைய குடும்பத்தில் நாமும் உடைக்கப்பட்டவர்களாய் பிரிந்து நிற்கக்கூடும். கசப்பு நம்மை பிரிந்திருக்கச் செய்யும். எபிரெயர் நிருபத்தின் ஆசிரியர், ஏசாவை அவனுடைய சகோதரனிடத்திலிருந்து பிரித்த கசப்பைக் குறித்து குறிப்பிடுகிறார் (எபிரெயர் 12:16). மேலும் சகோதர சகோதரிகளாகிய நாம் தேவனுடைய குடும்பத்தில் ஒருவரிலொருவர் ஐக்கியமாய் இருப்பதற்கு நமக்கு சவால் விடுகிறார். “யாவரோடும் சமாதானமாயிருக்கவும்... நாடுங்கள்” (வச. 14). அதாவது, தேவனுடைய குடும்பத்தில் அனைவரோடும் சமாதானமாய் வாழ்வதற்கு எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு பிரயாசப்படுவோம் என்று வலியுறுத்துகிறார். அத்தகைய ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வொருவரையும் ஊக்கப்படுத்துகிறது, அவ்வாறு வாழ்வதற்கு தூண்டுகிறது. 

குடும்பம் மிகவும் முக்கியமானது. அவற்றில் நமது பூமிக்குரிய குடும்பங்கள் மற்றும் தேவனுடைய விசுவாசக் குடும்பங்களும் இணைந்ததே. நாம் அன்போடும் ஐக்கியத்தோடும் இருக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் ஏறெடுப்போமா? 

 

துதியின் பள்ளத்தாக்கு

கவிஞர் வில்லியம் கௌபர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியினை மன அழுத்தத்துடனே போராடினார். தற்கொலை முயற்சிக்குப் பிறகு, அவர் ஓர் புகலிடத்திற்கு அனுப்பப்பட்டார். ஆனால் ஓர் கிறிஸ்தவ மருத்துவரின் கனிவான கவனிப்பின் மூலம், இயேசுவின் மீது ஆழமான ஒரு விசுவாசத்தை நடைமுறைப்படுத்தினார். அதன் விளைவாக கௌபர் போதகருடனும் பாடலாசிரியர் ஜான் நியூட்டனுடன் பழக்கம் ஏற்பட்டு, தங்கள் திருச்சபையில் பாடப்பெறுகிற பாடல்களை எழுதுவதற்கு அவரை ஊக்குவித்தனர். அவர் எழுதிய பாடல்களில் ஒன்று, “தேவன் ஆச்சரியமான வழிகளில் கிரியை செய்கிறார்” என்ற பிரபல ஆங்கில பாடல். அதில், “பக்தியுள்ள புனிதர்களே, புதிய தைரியத்தை எடுங்கள். நீங்கள் அஞ்சி நடுங்கும் மேகங்கள் கருணையால் நிறைந்தவை, அவை உங்கள் சிரசில் ஆசீர்வாதத்தை பெய்யப்பண்ணும்" என்பதே. 

கௌபரைப் போலவே, யூதாவின் ஜனங்களும் எதிர்பாராத விதமாக தேவனுடைய கிருபையை சாட்சியிட நேரிட்டது. எதிரி தேசம் அவர்களின்மீது படையெடுத்ததால், யோசபாத் ராஜா ஜெபம் செய்வதற்கு மக்களுக்கு அழைப்புவிடுக்கிறார். யூதாவின் இராணுவப்படை யுத்தத்திற்கு சென்றபோது, அதின் முன்வரிசையில் அணிவகுத்துச் சென்றவர்கள் தேவனை துதித்துக்கொண்டே சென்றனர் (2 நாளாகமம் 20:21). படையெடுக்கும் படைகளில், “ஒருவரும் தப்பவில்லை. அவர்கள் கண்ட ஏராளமான பொருள்களும்... மூன்றுநாளாய்க் கொள்ளையிட்டார்கள்; அது அவ்வளவு மிகுதியாயிருந்தது” (வச. 24-25).

நான்காம் நாளில், தேவனுடைய ஜனத்திற்கு விரோதமாக கலகம்பண்ணுவதற்கு என்று ஒரு எதிரி படை கூடும் இடமே பெராக்கா பள்ளத்தாக்கு (வச. 26) என்று அழைக்கப்பட்டது. அதாவது, “துதியின் பள்ளத்தாக்கு” அல்லது “ஆசீர்வாதம்” என்று பொருள். என்னே மாற்றம்! நம்முடைய கடினமான பள்ளத்தாக்குகளைக்கூட நாம் அவரிடம் ஒப்படைப்போமாகில் அவர் அதை துதியின் ஸ்தலங்களாய் மாற்றுவார். 

 

தேவனின் மென்மையான அன்பு

2017ஆம் ஆண்டு, தடுப்பூசி போடப்படும் ஓர் குழந்தையை அதின் தந்தை அணைத்து தேற்றுவதுபோன்ற ஓர் காணொலி சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. செவிலியர் தடுப்பூசிகளை போட்ட பிறகு, தந்தை தனது மகனை அவரது கன்னத்தில் அணைத்து நெருக்கமாக வைத்திருந்தார். குழந்தை சில நொடிகளில் அழுவதை நிறுத்தியது. அன்பான பெற்றோரின் கனிவான கவனிப்பைக் காட்டிலும் உறுதியளிக்கும் விஷயம் வேறு எதுவும் இல்லை.

வேதாகமத்தில், தேவனை தன் பிள்ளைகளை அதிகமாய் நேசிக்கக்கூடிய பெற்றோராய் சித்தரிக்கும் விளக்கங்கள் இடம்பெற்றுள்ளது. பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசியான ஓசியா, பிளவுபட்ட இஸ்ரவேல் ராஜ்யத்தின் காலத்தில், வடக்கு இராஜ்யத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்களுக்கு உரைப்பதற்காக ஓர் செய்தியை பெற்றுக்கொள்கிறார். தேவனுடனான உறவுக்குத் திரும்பும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். ஓசியா இஸ்ரவேலர்களுக்கு, “இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்” (ஓசியா 11:1) என்றும் “அவர்கள் கழுத்துகளின்மேல் இருந்த நுகத்தடியை எடுத்துப் போடுகிறவரைப்போல்” (வச. 4) இருந்தேன் என்றும் குறிப்பிடுகிறார். 

தேவனுடைய அன்பான கவனிப்பைப் பற்றிய இதே உறுதியளிக்கும் வாக்குறுதி நமக்கும் உண்மையாக இருக்கிறது. நம்முடைய வேதனை மற்றும் பாடுகளின் நிமித்தம் அவருடைய அன்பை நிராகரித்து, பின்னர் அவருடைய மென்மையான அரவணைப்பை நாடினாலும் அவர் நம்மை அவருடைய பிள்ளை என்று அழைக்கிறார் (1 யோவான் 3:1). மேலும் அவரது ஆறுதலின் கரங்கள் நம்மை ஏற்றுக்கொள்ள எப்போதும் திறந்திருக்கிறது (2 கொரிந்தியர் 1:3-4).