எப்பொழுதாவது ஒரு இ-மெயிலை அனுப்பிவிட்டு பின்னர் எதற்காக இதை அனுப்பினேன் என வருந்தியதுண்டா? தவறான சொற்களோ, கடுமையான மொழியோ அதில் இருந்திருக்கும் அல்லது தவறான நபருக்கு அது சென்று விட்டிருக்கும். ஒரு பொத்தானை (Key) அழுத்தி அதை நிறுத்த முடியுமானால் எவ்வளவு நன்றாயிருக்கும். அது இப்போது சாத்தியமாகிவிட்டது. பல இ-மெயில் நிறுவனங்கள் இந்த வசதியை இப்பொழுது தருகின்றன. நீங்கள் ஒரு இ-மெயிலை அனுப்பியவுடன் சிறிது நேரம் வரை அதை திரும்பப் பெறும் வசதியுள்ளது. அது உங்கள் கம்ப்யூட்டரை விட்டு எங்கும் சென்றிருக்காது. ஆனால் அந்த நேரம் கடந்தபின் இ-மெயிலும் சொல்லப்பட்ட வார்த்தை போல் ஆகிவிடும். அதைத் திரும்பப் பெற முடியாது. இந்த ‘திரும்பப் பெறும்’ வசதி நமக்கு ஒரு மிகவும் முக்கியமான விஷயத்தை நினைவூட்டுகிறது. நாம் எப்பொழுதும் கவனத்துடன் பேசவேண்டும் என்பதே.

அப்போஸ்தலனாகிய பேதுரு தன்னுடைய முதலாம் நிருபத்தில் இயேசுவின் சீடர்களை நோக்கி இப்படி கூறுகிறார், “தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள். ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து, பொல்லாப்பைவிட்டு நீங்கி, நன்மைசெய்து, சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடரக்கடவன்” (1 பேது. 3:9-11).

சங்கீதக்காரன் தாவீதும் இதைப்பற்றி எழுதியுள்ளார், “கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும்” (சங். 141:3). இது நாம் மறுமொழி கூறி பிறரை காயப்படுத்தாதவாறு நம்மை எப்பொழுதும் தற்காத்துக் கொள்ள நாம் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய மிக முக்கியமான ஜெபமாகும்.

தேவனே, என் வார்த்தைகளைக் காத்துக்கொள்ள உதவிசெய்யும். என்னுடைய வார்த்தைகளால் பிறரைக் காயப்படுத்தாமல் இருக்க பெலன் தாரும்.