சில வருடங்களுக்கு முன்பதாக ஏதேச்சையாக இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க எழுத்தாளரான ஏலியனின் (Aelian) மீன் பிடிக்கும் கதையை வாசிக்க நேர்ந்தது. அது ஓர் மீனவ நாட்டுப்புற கதையாகும். “பொரோக்காவிற்கும் தெசலோனிக்காவிற்கும் இடையே ஓர் ஆறு உள்ளது. அதன் பெயர் ஆஸ்ட்ரகஸ். அதில் நிறைய புள்ளிகளுள்ள ட்ரவுட் (Trout) மீன்கள் உள்ளன”. மேலும் அவற்றை எப்படி அந்த மக்கள் பிடிப்பார் என்பதை விவரித்திருந்தார். “ஒவ்வொரு மீனுக்கும் ஒரு பொறியைத் தயாரித்து, கருஞ்சிவப்பு நிற கம்பளி நூலை ஓர் கொக்கியில் மாட்டி, அதில் இரண்டு பறவையின் இறகுகளையும் சேர்த்து, பின் அந்த பொறியை தண்ணீரில் தூக்கி வீசுவர். சிவப்பு வண்ணத்தினால் கவரப்பட்ட மீன் அருகில் வந்து, தீனியை தின்பதற்கு அதைக் கவ்வும்” (On the Nature of Animals).

இதே தந்திரத்தை தான் மீனவர் இன்றும் பயன்படுத்துகின்றனர். இதற்கு பேர் தான் ரெட் ஆக்கிள் (சிவப்பு தூண்டில்). முதன் முதலில் 2200 ஆண்டுகளுக்கு முன்னர் இதை பயன்படுத்தினர். இன்றும் கூட நேர்த்தியாய் மீன்களைப் பிடிக்க இந்த தூண்டில்கள் உதவுகின்றன.

இந்தப் பழங்கதையை படித்தவுடன் ஓர் எண்ணம் தோன்றியது. பழைய காரியங்கள் எல்லாம் காலம் கடந்து விட்ட, ஒன்றுக்கும் உதவாத, கட்டுக்கதைகள் அல்ல – முக்கியமாக மனிதர்கள். முதுமையில் மன நிறைவுடனும், சந்தோஷத்துடனும் வலம் வந்து, நாம் தேவனை ஆழமாக அறியும் அறிவையும், நிறைவையும் எடுத்துரைத்து வாழ்ந்து வந்தால், நமது முதுமையிலும் நாம் பலருக்கு மிகவும் பயனுள்ளவராய் இருப்போம். முதுமைக் காலத்தில் குறையும் ஆரோக்கியத்தையும் கடந்த காலத்தையும் பற்றி கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அது அமைதியும், மகிழ்ச்சியும், தைரியமும் கனிவும் நிறைந்த அற்புத கால கட்டமாக இருக்கலாம்; தேவனோடு நடந்து, வாழ்ந்து, வளர்ந்தவர்கள் தங்கள் கனிகளை பிறர் சுவைக்க வெளிப்படுத்தும் அழகிய காலம் அது.

கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள்… அவர்கள் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்
(சங். 92:13-15).