உங்களுக்கு நற்பெயர் கிடைக்கவில்லையா?
1950-1960களில் ஆட்ரி ஹெப்பர்ன், நட்டாலி வுட் மேலும் தெபோரா ஹெர் என்ற ஹாலிவுட் நடிகைகளின் நிகழ்ச்சிகள் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கி, பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தன. ஆனால், இந்த நடிகைகளின் நிகழ்ச்சிகள் சிறந்து விளங்குவதற்குக் காரணம்; அந்த நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியான இசைக் குழுவினர் இயற்றிய மிக இனிமையான பாடல்கள்தான். அவை அந்த நடிகைகளின் திரைப்படங்கள் வெற்றி பெற உண்மையான காரணமாக இருந்தது. அந்த மூன்று பிரசித்திபெற்ற நடிகைகளுக்காக, திரைக்குப்பின்னால் ஒலி கொடுத்தது மார்னி நிக்சன்தான். ஆனால், அவளது முக்கியமான பங்களிப்பை நீண்ட காலமாக ஒருவரும் கண்டு கொள்ளவுமில்லை, அவளைப் புகழவுமில்லை.
கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் மிக முக்கியமான பணிகளை முன்னின்று செயல்படுத்துபவர்களை, அப்போஸ்தலனாகிய பவுல் தம் ஊழியத்தில் அதிகமாக சார்ந்திருந்தார். ரோமருக்கு எழுதிய நிருபத்தில் வல்லமையோடு தேவ செய்தி வெளிப்பட காரணமாக இருந்தவர் பவுலுடைய எழுத்தர் தெர்தியுவாகும் (ரோம. 16:22). பவுல் அப்போஸ்தலனுக்கும், ஆதித் திருச்சபைக்கும், எப்பாபிராவின் ஊக்கமான ஜெபம்தான் முக்கிய அஸ்திபாரமாக இருந்தது (கொலோ. 4:12-13). களைப்படைந்த பவுல் அப்போஸ்தலன் ஒய்வு எடுத்துக் கொள்ளத்தக்கதாக லீதியாள் அவளது வீட்டை திறந்து கொடுத்தாள். கிறிஸ்துவுக்குள் உடன் ஊழியர்களான இவர்களின் உதவி இல்லாமல் பவுல் திறம்பட உழியம் செய்திருக்க முடியாது (வச. 7-18).
தேவனுடைய ஊழியத் திட்டத்தில் நாம் செய்யும் பணி ஒருவேளை வெளிப்படையாக பிறர் பார்க்கத்தக்கதாக இல்லாவிட்டாலும், நாம் அவருக்கு உண்மையாகக் கீழ்ப்படிந்து அவருடைய ஊழியத்தில் அமைதியாக பங்கெடுக்கும் பொழுது, தேவன் நம்மேல் பிரியமாய் இருக்கிறார் (1 கொரி. 15:58) அவ்வாறு நாம் செய்யும் பொழுது, அந்த ஊழியம் தேவனுக் மகிமையாகவும், பிறரை அவரண்டை வழிநடத்துவதாகவும் இருப்பதால், நமது ஊழியம் அர்த்தமுள்ளதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்.
நான் உண்மையிலேயே பயந்தேன்
“நான் உண்மையாகவே பயப்படுகிறேன்” என்று இரக்க உணர்வை தூண்டுகிற ஒரு குறிப்பை பதின் வயதினரான ஒரு பெண் அவளுக்கு நடந்த பரிசோதனையின் முடிவு பற்றி அவளது முக நூலில் பதிவு செய்தாள். அவளது வீட்டிலிருந்து மூன்று மணி நேர பயணத்திற்கு அப்பாலிருந்த ஒரு மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் அவளை பாதித்திருந்த மிக மோசமான வியாதியைப்பற்றி செய்த பல பரிசோதனைகளுக்கான முடிவை எதிர் நோக்கி அவள் கவலையுடன் காத்திருந்தாள். ஒருவேளை மருத்துவமனையில் சேர வேண்டிய சூழ்நிலை வந்துவிடுமோவென்று எண்ணிக் கொண்டிருந்தாள்.
நமக்கு அச்சத்தை ஏற்படுத்துகிற தேவையற்ற நிகழ்வுகள், நமது வாழ்க்கையை அச்சுறுத்தும் பொழுது, வாலிபர்களாக இருந்தாலும் அல்லது வயோதிபவர்களாக இருந்தாலும், யார்தான் பயப்பட மாட்டார்கள்? உதவிக்காக நாம் யாரிடம் போவோம்? இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலைகளில் நமக்கு தைரியத்தை அளிக்க வேத வசனங்கள்மூலமாக நாம் ஆறுதலை பெற முடியும்.
நமது சோதனைகள், துன்பங்கள் மத்தியில் தேவன் நம்மோடு கூட வருகிறார் என்ற உண்மை நமக்கு நம்பிக்கை அளிக்கலாம். “உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான்; உனது வலது கையைப்பிடித்து பயப்படாதே, நான் உனக்கு துணை நிற்கிறேன்” என்ற ஏசாயா 41:13 கூறுகிறது.
நாம் நமது கஷ்டங்களை, துன்பங்களை ஜெபத்தின் மூலம் தேவனுக்கு தெரியப்படுத்தும் பொழுது எல்லாப் புத்திக்கும் மேலான விவரிக்க இயலாத சமாதானத்தை தேவன் நமக்கு அருளுகிறார் (பிலி. 4:6-7).
நாம் உண்மையிலேயே பயப்படுகிற சூழ்நிலைகளைக் கடந்து வர, தேவனுடைய வாக்கு மாறா பிரசன்னமும், “எல்லாப் புத்திக்கும் மேலான அவரது சமாதானமும்” (வச. 7), நமக்கு அருளப்பட்டு, அப்படிப்பட்ட சூழ்நிலைகளை நாம் நம்பிக்கையுடன் சந்திக்க தேவன் பெலன் அருளுகிறார்.
தந்திரோபாய திசைதிருப்பல்
தேவனை அணிந்து கொள்ளுதல் என்ற புத்தகத்தின் ஆசிரியரான லாரன் வின்னர், நாம் அணிந்துள்ள உடை, நாம் யார் என்பதை அமைதியாக பிறருக்கு அறிவிக்கும் என்று கூறுகிறார். நாம் உடுத்தியிருக்கும் ஆடை, நமது வேலை, நமது சமுதாயம், நமது மனநிலை, நமது உணர்வுகள், மேலும் சமுதாயத்தில் நமது தரம் ஆகியவைகளைக் குறிப்பிட்டுக் அடையாளம் காட்டும். ஒரு விளம்பரத்திற்கான கவர்ச்சி வாசகத்தை உடைய “டீ” ஷர்ட், குறிப்பிட்ட பணிக்குரிய உடை, ஒரு சீருடை அல்லது கிரீஸ் படிந்த ஜீன்ஸ் இவை எவற்றை வெளிப்படுத்துகின்றன என்பதை சிந்தித்துப் பாருங்கள். “ஆடைகளை எப்படியாக ஒருவரது நிலையை அமைதியாக வெளிப்படுத்துகிறதோ அதுபோல, ஒவ்வொரு கிறிஸ்தவனும் வார்த்தைகளே இல்லாமல் அமைதியாக பிறரை ஈர்க்கக் கூடிய முறையில் இயேசுவைப்பற்றிய நற்செய்தியை வெளிப்படுத்த வேண்டும்” என்று லாரன் எழுதியுள்ளார்.
பவுல் அப்போஸ்தலன் கூறுவதுபோல நாமும் வார்த்தைகளினாலன்றி அமைதியாக இயேசுவை வெளிக்காட்டுபவர்களாக இருக்கலாம். “துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேனாமல் இருந்து கர்த்தராகிய இயேசுவை தரித்து கொள்ளுங்கள்” என்று ரோமர் 13:14 கூறுகிறது. அதன் அர்த்தம் என்ன? நாம் கிறிஸ்தவர்களாகும் பொழுது, கிறிஸ்துவின் அடையாளத்தைப் பெறுகிறோம். “விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறோம்” (கலா. 3:26,27) அதுதான் நமது நிலைமை. ஆகிலும் ஒவ்வொருநாளும் நாம் அவரது குணங்களை தரித்துக்கொள்ள வேண்டும். இயேசுவைப் போல வாழ நாம் முயற்சி எடுத்து அவரை அறிகிற அறிவிலும், கீழ்ப்படிதலிலும் வளர்ந்து நம்மை ஒரு காலத்தில் அடிமைப்படுத்தியிருந்த பாவத்தை விட்டுத் திரும்ப வேண்டும்.
நமக்குள் கிரியை செய்கிற பரிசுத்த ஆவியினால், தேவனுடைய வார்த்தைகளைக் கற்றுக் கொள்வதாலும், ஜெபத்தாலும், பிற விசுவாசிகளோடு ஐக்கியம் கொள்ளுவதாலும், கிறிஸ்துவுக்குள் நாம் வளர முடிகிறது (யோவா. 14:26). பிறர் நமது வார்த்தைகளையும், செயல்களையும் கவனிக்கும் பொழுது கிறிஸ்துவைப் பற்றி நாம் என்ன கூறுகிறோம்?
அனைத்திற்கும் ஒரு காலம்
சமீபகாலத்தில் நான் விமானப் பயணத்தை மேற்கொண்டபொழுது நான் இருந்த வரிசைக்கு சில வரிசைகளுக்கு முன்பாக, குழந்தைகளுடன் அமர்ந்திருந்த ஒரு தாயாரைப் பார்த்தேன். தளிர் நடை நடக்கும் சிறுவன் மன திருப்தியுடன் விளையாடிக் கொண்டிருந்தான். தாயோ அண்மையில் பிறந்த அவளது குழந்தையைக் கொஞ்சி மகிழ்ந்து, அதன் கண்களை உற்று நோக்கிக் கொண்டிருந்தாள். அந்தக் குழந்தை ஆச்சரியம் நிறைந்த கண்களால் தன் தாயாரைப் பார்த்தது. அந்தக் காட்சியைக் கண்ட நான் கடந்த காலத்தில் அந்தப் பருவத்திலிருந்த எனது குழந்தைகளை எண்ணிப் பார்த்து எவ்வளவாக காலம் கடந்து விட்டது என்பது பற்றி சற்று ஏக்கத்துடன் கூடிய மகிழ்ச்சியடைந்தேன்.
பிரசங்கி புத்தகத்தில் சாலொமோன் ராஜா கூறிய வார்த்தைகளை எண்ணிப்பார்த்தேன். “வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு சமயம் உண்டு” (வச. 1). அதைத் தொடர்ந்து பல எதிர் மறைக் காரியங்களைக் கூறி “ஒவ்வொரு காரியத்திற்கும் ஒரு சமயம் உண்டு” என்று கூறியுள்ளார். “பிறக்க ஒருகாலமுண்டு; இறக்க ஒரு காலமுண்டு; நட ஒரு காலமுண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலமுண்டு” என்று எழுதியுள்ளார் (வச. 2). சாலொமோன் ராஜா, இவ்வுலகில் நடக்கும் அனைத்துக் காரியங்களையும் கண்டு இவ்வுலக வாழ்க்கை அர்த்தமற்றது என்று கருதி, அவரது நம்பிக்கையற்ற நிலைமையை ஒருவேளை இவ்வசனங்களில் விளக்கியிருக்கலாம். “அன்றியும் மனுஷர் யாவரும் புசித்து, குடித்து தங்கள் சகல பிரயாசத்தின் பலனையும் அனுபவிப்பது, தேவனுடைய அனுக்கிரகம். தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன்” (வச. 13,14) என்று கூறி ஒவ்வொரு சமயத்திலும் தேவன் இடைபடுவதை அறிக்கை செய்துள்ளார்.
எனது பிள்ளைகள் குழந்தைகளாக இருந்ததை நான் ஏக்கத்துடன் நினைத்துப் பார்த்ததுபோல நாம் அனைவருமே நம் வாழ்க்கையில் கடந்து சென்ற சில நிகழ்ச்சிகளை ஏக்கத்துடன் நினைவு கூருவோம். நமது வாழ்க்கையின் எந்த காலக்கட்டத்திலும் கர்த்தர் நம்முடன் கூட இருப்பதாக வாக்குப்பண்ணியுள்ளார் (ஏசா. 41;10). நமது வாழ்க்கையின் நோக்கம் அவரது பிரசன்னத்தை உணர்ந்தவர்களாக அவரோடு சேர்ந்து நடப்பதாகும்.
எல்லோரையும் விட வலிமை மிக்கவர்
இக்குவாசு நீர்வீழ்ச்சி பிரேசிலுக்கும் அர்ஜென்டினாவுக்கும் இடையே உள்ள எல்லையில் உள்ளது. அது 2.7 கிலோ மீட்டருக்கு பரந்து விரிந்து காணப்படும்; இக்குவாசு ஆற்றில் 275 நீர்வீழ்ச்சிகள் கூடிய வியக்கத்தக்க அழகிய நீர் வீழ்ச்சியாகும். பிரேசில் பக்கம் விழும் நீர் வீழ்ச்சியின் அருகில் உள்ள சுவற்றில், “திரளான தண்ணீர்களின் இரைச்சலைப் பார்க்கிலும், சமுத்திரத்தின் வலிமையான அலைகளைப் பார்க்கிலும், கர்த்தர் உன்னதத்திலே வல்லமை உள்ளவர்” (சங். 93:4) என்ற வார்த்தைகள் பொறிக்கப்பட்டுள்ளன. அந்த வசனத்திற்கு கீழாக “நமது அனைத்து துன்பங்களையும் விட தேவன் மேலானவர்” என்ற வார்த்தைகள் காணப்பட்டன.
இராஜாக்கள் அரசாண்ட அந்தக் காலத்தில் தேவனே எல்லோரையும் ஆழக்கூடிய முதன்மையான உயர்சிறப்புடைய இராஜாவென்று சங்கீதம் 93யை எழுதியவர் அறிந்திருந்தார். “கர்த்தர் ராஜரீகம் பண்ணுகிறார். உமது சிங்காசனம் பூர்வ முதல் உறுதியானது; நீர் அனாதியாய் இருக்கிறீர்” (வச. 1,2) என்று எழுதினார். வெள்ளங்களோ, அலைகளோ எவ்வளவு உயரமாக எழும்பினாலும், தேவன் அவற்றைவிட பெரியவராக இருக்கிறார்.
நீர் வீழ்ச்சியின் பேரோசை உண்மையில் மிகக் கம்பீரமான ஓசையாக இருக்கும். ஆனால் அளவிற்கு மீறிய வேகத்தில் நீர் வீழ்ச்சியை நோக்கி வரும் நீரோட்டத்தில் இருப்பது மிக ஆபத்தானது. ஒருவேளை இன்று உங்களுடைய நிலைமை அதைப்போலவே ஆபத்தில் இருக்கலாம். சரீரப் பிரகாரமான பிரச்சனைகள், அல்லது பொருளாதாரரீதியில் ஏற்பட்ட நஷ்டங்கள் அல்லது உறவுகளில் ஏற்பட்ட முறிவுகள் போன்றவை மிகவும் பெரிதாக அச்சமூட்டுபவைகளாக இருப்பதினால், நீங்கள் நீர்வீழ்ச்சியின் மேலிருந்து கீழே விழும் அனுபவத்தை பெற்றுக் கொண்டிருக்கலாம். அப்படிப்பட்ட சமயங்களில் ஒரு கிறிஸ்தவராக பாதுகாப்பு அருளக்கூடிய ஒருவர் உண்டு. “நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும், நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியை செய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவர்.” ஒருவர் உண்டு, அவரே நமது கர்த்தராவார் (எபே. 3:20). ஏனெனில் அவர் நமது அனைத்துத் துன்பங்களைவிட மேலானவர்.
குறிக்கப்பட்ட விவரங்களுக்கு மேலாக
என்னுடைய ஊரிலிருந்த ஒரு ஆலயத்தில் தேவனுடைய அன்பும் கிருபையும் அனைவருக்கும் உண்டு என்பதை விளக்கத்தக்கதான மிகவும் சிறப்பான வரவேற்பு அட்டையைப் பயன்படுத்தினார்கள். “நீங்கள் ஒரு பரிசுத்தவானோ, ஒரு பாவியோ, தோல்வி அடைந்தவரோ, வெற்றி பெற்றவரோ, குடிகாரரோ? மேலும் மாய்மாலக்காரர்கள், ஏமாற்றுபவர்கள், பயங்கரமானவர்கள், தகுதியற்றவர்கள் பாவத்தில் போராடும், பலத்தரப்பட்ட மக்களில் யாராக இருந்தாலும் உங்களை இங்கே வரும்படி அன்புடன் வரவேற்கிறோம்”,
என்ற வாசகங்கள் அந்த அட்டையில் இருந்தன. “ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் ஆராதனை வேளையில் சபையார் அனைவரும் இந்த அட்டையிலுள்ள வாசகங்களை சத்தமாக வாசிப்போம்” என்று அந்த சபைப் போதர்களில் ஒருவர் என்னிடம் கூறினார்.
நாம் யாரென்று கூறும் விளக்கங்களை நாம் எத்தனை முறை ஏற்றுக் கொள்ளுகிறோம்? நாம் மிக எளிதாக பிறரைக் குற்றப்படுத்தி விடுகிறோம். தேவ கிருபையானது, நமது சொந்த அறிவுத் திறமையின்படி இல்லாமல், தேவனுடைய அன்பில் வேர் கொண்டுள்ளதால் நம்மீது கூறப்படும் அனைத்து தேவையற்ற விளக்கங்களும் அர்த்தமற்றதாகிவிடுகிறது. நம்மை நாமே மிகவும் சிறந்தவர்களாகவோ, மிகவும் மோசமானவர்களாகவோ, திறமைசாலிகளாகவோ, திறமையற்றவர்களாகவோ கருதிக் கொண்டாலும், நாம் அவர் மூலமாக நித்திய ஜீவனை இலவசமான ஈவாக பெற்றுக் கொள்ளலாம். “நாம் பெலனற்றவர்களாக இருக்கும் போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரர்களுக்காக மரித்தார்” (ரோம. 5:6) என்று பவுல் அப்போஸ்தலன் ரோமாபுரியிலுள்ள விசுவாசிகளுக்கு நினைப்பூட்டுகிறார்.
நமது சொந்த பெலனினால் நாம் நம்மை மாற்றி அமைத்து கொள்ளவேண்டுமென்று கர்த்தர் விரும்பவில்லை. நாம் இருக்கும் வண்ணமாகவே அவரிடம் வந்து, அவர் அருளும் நம்பிக்கை, சுகம், விடுதலையைப் பெற்றுக் கொள்ளுபடி அவர் நம்மை அழைக்கிறார். “நாம் பாவிகளாய் இருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளக்கப்பண்ணுகிறார்” (வச. 8). நாம் இருக்கும் வண்ணமாகவே நம்மை ஏற்றுக்கொள்ள தேவன் ஆயத்தமாக உள்ளார்.
தகப்பனாரைப் போலவே
ஒரு குழந்தை அதன் பெற்றோரைப் பார்த்து, அவர்களைப் போலவே அனைத்து செயல்களையும் செய்ய பார்ப்பது அதிக மகிழ்ச்சி அளிக்கும் காரியமாகும். காரில் குழந்தைகள் ஆசனத்தில், பெல்ட் மாட்டப்பட்டு அமர்ந்திருக்கும் சிறுவன், அவனது கற்பனையில் காரின் ஸ்டீயரிங்கை இயக்குவதுபோல எண்ணிக்கொண்டே, காரை ஓட்டுகிற தனது தகப்பனார் என்ன செய்கிறார் என்று இடையிடையே உன்னிப்பாகக் கவனித்து செயல்படுவதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம்.
நான் சிறுவனாக இருந்தபொழுது அவ்வாறு செய்ததை இப்பொழுது நினைவுகூருகிறேன். என் தகப்பனார் செய்ததுபோலவே, நானும் செய்தது எனக்கு அதிக மகிழ்ச்சியை அளித்தது. நான் அவரைப் போலவே செயல்பட்டதைப் பார்த்த என் தகப்பனார் என்னைவிட அதிகம் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்பது நிச்சயம்.
இழந்து போனவர்களைத் தேடி, தேவையானவர்களுக்கு உதவியளித்து, வியாதியஸ்தர்களுக்கு சுகம் அருளி, பிதா செய்ததையே அவரது அன்பின் குமாரனும் செய்ததைப் பார்த்த தேவனும், அதைப் போலவே மகிழ்ச்சியடைந்திருப்பார் என்று எண்ணுகிறேன். “பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளை செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்” (யோவா. 5:19) என்று இயேசு கூறினார்.
“பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி, கிறிஸ்து… நம்மில் அன்பு கூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்து கொள்ளுங்கள்” என்று (எபே. 5:1,2) நாமும் அவ்வாறே செய்ய அழைக்கப்பட்டிருக்கிறோம். நாம் இயேசுவைப் போலவே தொடர்ந்து வளரும்பொழுது, பிதா நேசிப்பது போலவே நாமும் நேசிக்கவும், அவர் மன்னித்ததுபோல மன்னிக்கவும், அவர் இரங்குவதுபோல இரங்கவும், அவருக்கு பிடித்தமான வழியில் வாழவும் செய்ய முயற்சிப்போம். ஆவியின் வல்லமையினால், அவரது செயல்களைப்போலவே நாமும் செய்வது மிக மிக மகிழ்ச்சியான காரியமாகும். ஏனெனில் அதன் பலன் பிதாவின் அன்பும், கனிவும் நிறைந்த புன்சிரிப்பாகும்.
ஆழமான வேர்கள்
செம்மரங்களின் மூன்று வகைகளில் ஒன்றான சிக்கோயாமரம் உலகத்திலுள்ள அனைத்து மரங்களிலும், மிகவும் பெரியதும், எந்த விதமான சூழ்நிலைகளையும் தாங்க கூடியதுமான மர வகையாகும். அது 300 அடி உயரத்திற்கு வளரக் கூடியதாகவும், 1.1 மில்லியன் டன் எடையுள்ளதாகவும், 3000 ஆண்டுகள் உயிர் வாழக்கூடியதாகவும் இருக்கும். அதனுடைய பெரிய உருவத்திற்கும், நீண்ட ஆயுசு நாட்களுக்கான காரணம், பூமிக்கு கீழுள்ள அந்த மரத்தின் வேர்ப்பாகமே ஆகும். ஒன்றோடொன்று பின்னிய அந்த மரத்தின் வேர்கள் ஒர் ஏக்கருக்கும்மேல் பரவியிருப்பதால், நம்ப இயலாத உயரமும், ஆச்சரியப்படத்தக்கதான எடையையும் உடைய அந்த மரத்தைத் தாங்கி, பூமியிலே இறுக்கமாக ஊன்றுகின்றது.
யூத தேசத்தின் சரித்திரம், அவர்களது மதம், அவர்களது எதிர்பார்ப்பு இவைகளெல்லாம் இயேசுவின் வாழ்க்கையைப்பற்றி மறைமுகமாக கூறுகின்றன. அவற்றை ஒரு செம்மரத்தின் பரந்து விரிந்த ஆழமான வேர்களோடு ஒப்பிடும்பொழுது, அது மிகவும் சிறியதாகவே உள்ளது. ஒரு முறை யூத மதத் தலைவரிடம், அவர்கள் நேசித்து வாசித்த வேத வசனங்கள் தன்னைப்பற்றி பற்றித்தான் கூறுகிறதென்று இயேசு கூறினார் (யோவா. 5:3). நாசரேத்திலுள்ள ஜெப ஆலயத்தில் அவர் ஏசாயா புத்தகத்தின் சுருளைத் திறந்து இஸ்ரவேலின் மேசியாவைப்பற்றிய விபரங்களை வாசித்து, “உங்கள் காதுகள் கேட்க இந்த வேத வாக்கியம் இன்றையத் தினம் நிறைவேறிற்று என்றார்” (லூக். 4:21).
இயேசு அவர் பாடுபடவும், மரிக்கவும், உயிர்த்தெழவும் வேண்டும் என்பதை மோசே, தீர்க்கத்தரிசிகள், இஸ்ரவேலின் பாடல்கள் அனைத்தும் தெளிவாக கூறியுள்ளதை சீஷர்கள் புரிந்து கொள்ளத்தக்கதாக அவரது உயிர்த்தெழுதலுக்குப் பின்பு அவர்களுக்கு விளக்கிக் கூறினார் (வச. 24,46).
யூத சரித்திரத்திலும் அந்த தேசத்தின் வேதத்திலும், இயேசுவின் வாழ்க்கைச் சரித்திரம் ஆழமாக வேர்விட்டு பதிந்துள்ளதைப் பார்க்கும் பொழுது, அது மிகவும் சிறந்ததாகவும், மகிமை பொருந்தியதாயும் உள்ளது. அதோடுகூட நமது சொந்த வாழ்க்கைக்கும், இயேசு எவ்வளவு அதிகமாகத் தேவை என்ற உண்மையை உணரும் பொழுதும் அது சிறந்ததாக உள்ளது.
நீங்கள் ஆயத்தமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களா?
நான் உயர் நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பொழுது, இரண்டு ஆண்டுகளாக ஒரு துரித உணவு விடுதியில் பணி செய்து கொண்டிருந்தேன். அந்த வேலையில் சில காரியங்கள் மிகவும் கடினமானவைகளாக இருக்கும். உதாரணமாக வாடிக்கையாளர்களின் ரொட்டித் துண்டுகள் மேல் மற்ற பணியாட்கள் தெரியாமல் வைத்த பாலாடை கட்டிக்காக (Chese) என்னைக் கடினமான வார்த்தைகளால் கடிந்து கொள்வார்கள். நான் அந்தப் பணியை விட்டபின், எனது பல்கலைக்கழகத்தில் ஒரு கணினி மையத்தில் பணிக்குச் சேர விண்ணப்பித்தேன். என்னை பணியில் அமர்த்தினவர்கள் எனது கணினி திறமைகளைவிட, நான் துரித உணவு விடுதியில் பெற்ற அனுபவங்களுக்குதான் முக்கியத்துவம் கொடுத்தார்கள். அதாவது மக்களை எவ்வாறு கையாளுவது என்று நான் அறிந்திருக்கிறேனா என்பதை அறிய விரும்பினார்கள். துரித உணவு விடுதியில் இருந்த மோசமான சூழ்நிலைகளில் நான் பெற்ற அனுபவங்கள் சிறந்த ஒரு பணிக்கு என்னை ஆயத்தப்படுத்தியது.
நாம் மோசமான சூழ்நிலைகள் என்று கருதும் சூழ்நிலைகளின் வழியாக வாலிபனான தாவீது உறுதியுடன் செயல்பட்டான். கோலியாத் அவனை எதிர்த்துப் போராட இஸ்ரவேல் மக்களிடம் சவால் விட்டபொழுது, அவனை எதிர்க்க யாரும் முன் வரவில்லை. தாவீது மட்டும்தான் முன் வந்தான். கோலியாத்திற்கு எதிராக போராட தாவீதை அனுப்புவதற்கு சவுலுக்கு விருப்பமில்லை. ஆனால், தாவீது, அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த பொழுது ஒரு முறை ஒரு சிங்கமும், ஒரு கரடியும் ஓர் ஆட்டை கவ்விக் கொண்டு சென்ற பொழுது, அவைகளை எதிர்த்துப் போராடி, கொன்று போட்டதை சவுலிடம் விளக்கிக் கூறினான் (1 சாமு. 17:34-36). “பின்னும் தாவீது; என்னை சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்த பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் (வச. 37) என்று திட நம்பிக்கையோடு கூறினான்.
ஒரு மேய்ப்பனாக இருந்தபொழுது தாவீது மதிக்கப்படவில்லை. ஆனால், அவன் மேய்ப்பனாக இருந்தபொழுது பெற்ற அனுபவங்கள் கோலியாத்தை எதிர்த்துப் போராடவும் முடிவில் இஸ்ரவேலில் மிகப் பெரிய அரசனாகவும் ஆவதற்கு அவனை ஆயத்தப்படுத்தியது. நாம் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கலாம்; ஆனால், அவைகளின்மூலமாக தேவன் நம்மை மிகச் சிறந்த காரியத்திற்கு ஆயத்தப்படுத்தலாம்.