என்னுடைய ஊரிலிருந்த ஒரு ஆலயத்தில் தேவனுடைய அன்பும் கிருபையும் அனைவருக்கும் உண்டு என்பதை விளக்கத்தக்கதான மிகவும் சிறப்பான வரவேற்பு அட்டையைப் பயன்படுத்தினார்கள். “நீங்கள் ஒரு பரிசுத்தவானோ, ஒரு பாவியோ, தோல்வி அடைந்தவரோ, வெற்றி பெற்றவரோ, குடிகாரரோ? மேலும் மாய்மாலக்காரர்கள், ஏமாற்றுபவர்கள், பயங்கரமானவர்கள், தகுதியற்றவர்கள் பாவத்தில் போராடும், பலத்தரப்பட்ட மக்களில் யாராக இருந்தாலும் உங்களை இங்கே வரும்படி அன்புடன் வரவேற்கிறோம்”,
என்ற வாசகங்கள் அந்த அட்டையில் இருந்தன. “ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் ஆராதனை வேளையில் சபையார் அனைவரும் இந்த அட்டையிலுள்ள வாசகங்களை சத்தமாக வாசிப்போம்” என்று அந்த சபைப் போதர்களில் ஒருவர் என்னிடம் கூறினார்.

நாம் யாரென்று கூறும் விளக்கங்களை நாம் எத்தனை முறை ஏற்றுக் கொள்ளுகிறோம்? நாம் மிக எளிதாக பிறரைக் குற்றப்படுத்தி விடுகிறோம். தேவ கிருபையானது, நமது சொந்த அறிவுத் திறமையின்படி இல்லாமல், தேவனுடைய அன்பில் வேர் கொண்டுள்ளதால் நம்மீது கூறப்படும் அனைத்து தேவையற்ற விளக்கங்களும் அர்த்தமற்றதாகிவிடுகிறது. நம்மை நாமே மிகவும் சிறந்தவர்களாகவோ, மிகவும் மோசமானவர்களாகவோ, திறமைசாலிகளாகவோ, திறமையற்றவர்களாகவோ கருதிக் கொண்டாலும், நாம் அவர் மூலமாக நித்திய ஜீவனை இலவசமான ஈவாக பெற்றுக் கொள்ளலாம். “நாம் பெலனற்றவர்களாக இருக்கும் போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரர்களுக்காக மரித்தார்” (ரோம. 5:6) என்று பவுல் அப்போஸ்தலன் ரோமாபுரியிலுள்ள விசுவாசிகளுக்கு நினைப்பூட்டுகிறார்.

நமது சொந்த பெலனினால் நாம் நம்மை மாற்றி அமைத்து கொள்ளவேண்டுமென்று கர்த்தர் விரும்பவில்லை. நாம் இருக்கும் வண்ணமாகவே அவரிடம் வந்து, அவர் அருளும் நம்பிக்கை, சுகம், விடுதலையைப் பெற்றுக் கொள்ளுபடி அவர் நம்மை அழைக்கிறார். “நாம் பாவிகளாய் இருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளக்கப்பண்ணுகிறார்” (வச. 8). நாம் இருக்கும் வண்ணமாகவே நம்மை ஏற்றுக்கொள்ள தேவன் ஆயத்தமாக உள்ளார்.