ஒரு குழந்தை அதன் பெற்றோரைப் பார்த்து, அவர்களைப் போலவே அனைத்து செயல்களையும் செய்ய பார்ப்பது அதிக மகிழ்ச்சி அளிக்கும் காரியமாகும். காரில் குழந்தைகள் ஆசனத்தில், பெல்ட் மாட்டப்பட்டு அமர்ந்திருக்கும் சிறுவன், அவனது கற்பனையில் காரின் ஸ்டீயரிங்கை இயக்குவதுபோல எண்ணிக்கொண்டே, காரை ஓட்டுகிற தனது தகப்பனார் என்ன செய்கிறார் என்று இடையிடையே உன்னிப்பாகக் கவனித்து செயல்படுவதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம்.

நான் சிறுவனாக இருந்தபொழுது அவ்வாறு செய்ததை இப்பொழுது நினைவுகூருகிறேன். என் தகப்பனார் செய்ததுபோலவே, நானும் செய்தது எனக்கு அதிக மகிழ்ச்சியை அளித்தது. நான் அவரைப் போலவே செயல்பட்டதைப் பார்த்த என் தகப்பனார் என்னைவிட அதிகம் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என்பது நிச்சயம்.

இழந்து போனவர்களைத் தேடி, தேவையானவர்களுக்கு உதவியளித்து, வியாதியஸ்தர்களுக்கு சுகம் அருளி, பிதா செய்ததையே அவரது அன்பின் குமாரனும் செய்ததைப் பார்த்த தேவனும், அதைப் போலவே மகிழ்ச்சியடைந்திருப்பார் என்று எண்ணுகிறேன். “பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளை செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்” (யோவா. 5:19) என்று இயேசு கூறினார்.

“பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி, கிறிஸ்து… நம்மில் அன்பு கூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்து கொள்ளுங்கள்” என்று (எபே. 5:1,2) நாமும் அவ்வாறே செய்ய அழைக்கப்பட்டிருக்கிறோம். நாம் இயேசுவைப் போலவே தொடர்ந்து வளரும்பொழுது, பிதா நேசிப்பது போலவே நாமும் நேசிக்கவும், அவர் மன்னித்ததுபோல மன்னிக்கவும், அவர் இரங்குவதுபோல இரங்கவும், அவருக்கு பிடித்தமான வழியில் வாழவும் செய்ய முயற்சிப்போம். ஆவியின் வல்லமையினால், அவரது செயல்களைப்போலவே நாமும் செய்வது மிக மிக மகிழ்ச்சியான காரியமாகும். ஏனெனில் அதன் பலன் பிதாவின் அன்பும், கனிவும் நிறைந்த புன்சிரிப்பாகும்.