நான் உயர் நிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த பொழுது, இரண்டு ஆண்டுகளாக ஒரு துரித உணவு விடுதியில் பணி செய்து கொண்டிருந்தேன். அந்த வேலையில் சில காரியங்கள் மிகவும் கடினமானவைகளாக இருக்கும். உதாரணமாக வாடிக்கையாளர்களின் ரொட்டித் துண்டுகள் மேல் மற்ற பணியாட்கள் தெரியாமல் வைத்த பாலாடை கட்டிக்காக (Chese) என்னைக் கடினமான வார்த்தைகளால் கடிந்து கொள்வார்கள். நான் அந்தப் பணியை விட்டபின், எனது பல்கலைக்கழகத்தில் ஒரு கணினி மையத்தில் பணிக்குச் சேர விண்ணப்பித்தேன். என்னை பணியில் அமர்த்தினவர்கள் எனது கணினி திறமைகளைவிட, நான் துரித உணவு விடுதியில் பெற்ற அனுபவங்களுக்குதான் முக்கியத்துவம் கொடுத்தார்கள். அதாவது மக்களை எவ்வாறு கையாளுவது என்று நான் அறிந்திருக்கிறேனா என்பதை அறிய விரும்பினார்கள். துரித உணவு விடுதியில் இருந்த மோசமான சூழ்நிலைகளில் நான் பெற்ற அனுபவங்கள் சிறந்த ஒரு பணிக்கு என்னை ஆயத்தப்படுத்தியது.

நாம் மோசமான சூழ்நிலைகள் என்று கருதும் சூழ்நிலைகளின் வழியாக வாலிபனான தாவீது உறுதியுடன் செயல்பட்டான். கோலியாத் அவனை எதிர்த்துப் போராட இஸ்ரவேல் மக்களிடம் சவால் விட்டபொழுது, அவனை எதிர்க்க யாரும் முன் வரவில்லை. தாவீது மட்டும்தான் முன் வந்தான். கோலியாத்திற்கு எதிராக போராட தாவீதை அனுப்புவதற்கு சவுலுக்கு விருப்பமில்லை. ஆனால், தாவீது, அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த பொழுது ஒரு முறை ஒரு சிங்கமும், ஒரு கரடியும் ஓர் ஆட்டை கவ்விக் கொண்டு சென்ற பொழுது, அவைகளை எதிர்த்துப் போராடி, கொன்று போட்டதை சவுலிடம் விளக்கிக் கூறினான் (1 சாமு. 17:34-36). “பின்னும் தாவீது; என்னை சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்த பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் (வச. 37) என்று திட நம்பிக்கையோடு கூறினான்.

ஒரு மேய்ப்பனாக இருந்தபொழுது தாவீது மதிக்கப்படவில்லை. ஆனால், அவன் மேய்ப்பனாக இருந்தபொழுது பெற்ற அனுபவங்கள் கோலியாத்தை எதிர்த்துப் போராடவும் முடிவில் இஸ்ரவேலில் மிகப் பெரிய அரசனாகவும் ஆவதற்கு அவனை ஆயத்தப்படுத்தியது. நாம் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கலாம்; ஆனால், அவைகளின்மூலமாக தேவன் நம்மை மிகச் சிறந்த காரியத்திற்கு ஆயத்தப்படுத்தலாம்.