போதுமானதல்லவோ?
ஆலயத்திலிருந்து வீட்டிற்குத் திரும்பும் போது என்னுடைய மகள் பின் இருக்கையில் அமர்ந்தபடி பிஸ்கட்டுகளைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். மற்ற குழந்தைகள் அவளிடம் பகிர்ந்தளிக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தன. நான் அவர்களின் எண்ணத்தை திசை திருப்பும்படி. சிற்றுண்டிகளைச் சேமித்து வைப்பவளிடம், இன்றைய வகுப்பில் என்ன செய்தீர்கள்? என்று கேட்டேன். அவர்கள் ஒரு கூடை நிறைய ரொட்டிகளையும் மீனையும் தயாரித்ததாகவும், ஏனெனில் ஒரு குழந்தை இயேசுவுக்கு ஐந்து ரொட்டிகளையும் இரண்டு மீனையும் கொடுத்தது. இயேசு அதைக் கொண்டு 5000 பேருக்கு மேலான ஜனங்களை போஷித்தார் (யோவா. 6:1-13) எனக் கூறினாள்.
இது அச்சிறுவனின் பகிர்ந்தளிக்கும் குணத்தைக் காட்டுகிறது. தேவன் உன்னுடைய மீனையும் பகிர்ந்து கொள்ளும்படி கேட்கிறாரென நினைக்கிறாயா? எனக் கேட்டேன். இல்லை சும்மா என பதிலளித்தாள்.
நான் அவள் அத்தனை பிஸ்கட்டுகளையும் அவளே வைத்துக் கொள்வதை ஊக்குவிக்கக் கூடாதென முயற்சித்தேன். அவள் ஒத்துக் கொள்ளவில்லை. அனைவருக்கும் கொடுக்கும்படி போதுமானதாக இல்லை என்றாள்.
பகிர்தல் என்பது கடினமானதுதான். நம் கையில் உள்ளதைப் பற்றிக் கொள்வது எளிதுதான். ஒரு வேளை நாம் கணக்குப் போட்டு, அனைவருக்கும் போதியதாக இல்லை எனக் காரணம் கூறலாம். நம் கணிப்பு என்னவெனின் நாம் இப்பொழுது கொடுத்து விட்டால் பின்னர் நமது தேவைக்கு ஒன்றுமிராது என்பதே.
நாம் அனைவரும் தேவனிடத்திலிருந்து வந்தவர்கள். நாம் உதாரண குணமுள்ளவர்களாயிருக்கும்படி, தேவன் நம்மை எல்லா வகைகளிலும் வளப்படுத்தியுள்ளார் (2 கொரி. 9:10-11) என பவுல் நினைப்பூட்டுகின்றார். பரலோகம் என்பது பற்றாக்குறையை கணக்கிடும் இடம் அல்ல, ஏராளமானவற்றையே கொண்டது. நாம் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்ளலாம். ஏனெனில் நாம் மற்றவர்களிடம் உதாரத்துவமாயிருக்கும்போது தேவன் நம்மை கவனித்துக் கொள்வார் என வாக்களித்துள்ளார்.
உண்மையாயிருக்க தைரியங்கொள்ளல்
ஹடாஷாவை நிரந்தரமாக பயம் ஒட்டிக் கொண்டது. பிரான்கைன் ரிவர் என்பவர் எழுதிய ‘’எ வாய்ஸ் இன் த வின்ட்’’ என்ற புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த கற்பனைக் கதையின் கதாப்பாத்திரம் தான் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹடாஷா என்ற யூத குல சிறுமி. ஒரு ரோம வீட்டில் அடிமையாக ஹடாஷா இருந்தபோது, அவள் கிறிஸ்து மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக தான் துன்புறுத்தப்படலாம் என பயந்து கொண்டிருந்தாள். கிறிஸ்தவர்கள் ரோமர்களால் வெறுக்கப்பட்டனர். அநேக கிறிஸ்தவர்கள் தூக்குத் தண்டனைக்குள்ளாயினர் அல்லது சிங்கங்களின் அரங்கில் தூக்கி வீசப்பட்டனர் என்பது அவளுக்குத் தெரியும். அவள் சோதிக்கப்படும்போது தன்னுடைய உண்மைக்காக நிற்கத் தகுந்த தைரியம் அவளுக்கிருக்குமா?
அவள் மிகவும் பயந்த காரியம் உண்மையில் நடந்த போது, அவளுடைய எஜமானியும், கிறிஸ்தவத்தை வெறுத்த ரோம அதிகாரிகளும் அவளுக்கு எதிராக வருகின்றனர். அவளுக்கு இரண்டே வாய்ப்புகள் உள்ளன. ஒன்று கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையை விட்டு விடல், மற்றொன்று சிங்கங்களின் அரங்கினுள் தள்ளப்படல். ஆனால் எப்பொழுது அவள் இயேசுவே கிறிஸ்து என அறிக்கை செய்தாளோ அப்பொழுதே அவளுடைய பயம் அவளை விட்டு ஒழிந்தது. அவள் சாவை எதிர்நோக்கிய போதும், தைரியமாக நின்றாள்.
சில வேளைகளில் நாம் சரியானவற்றைச் செய்வதற்காக நாம் துன்புறுத்தப்படலாம் என வேதாகமம் நமக்கு நினைப்பூட்டுகிறது. சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது, அல்லது உலகத்தாரைப் போல வாழாமல் தேவனைப் போல வாழும் போது நாம் துன்புறுத்தப்படலாம். ஆனால் பயப்படாதிருங்கள் (1 பேது. 3:14), கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம் பண்ணுங்கள் (வச. 15) என்று வேதாகமம் நமக்குச் சொல்லுகிறது. ஹடாஷாவின் முக்கிய யுத்தம் அவளுடைய இருதயத்தில் ஆரம்பித்தது. இறுதியாக அவள் இயேசுவைத் தேர்ந்து கொள்ள தன் மனதைத் திடப்படுத்திக் கொண்டபோது, தன் விசுவாசத்தில் உண்மையாயிருக்க அவளுக்கு தைரியம் கிடைத்து விட்டது.
நாமும் தேவனை கனப்படுத்த முடிவெடுக்கும் போது அவர் நாம் தைரியமாக நிற்கவும் எதிர்ப்புகளின் மத்தியில் பயத்தை மேற்கொள்ளவும் உதவி செய்கிறார்.
வல்லமைக்குள் ஓடுதல்
நான் உயர்நிலைப்பள்ளியில் பயின்ற போது, வாள் சண்டை பயிற்சி எடுத்துக் கொண்டேன். என்னுடைய பயிற்சியாளர் எனக்கெதிராக வரும் அசைவுகளுக்குகந்த பாதுகாப்பு நிலையை கத்திச் சொல்வார் (பாரி). அவர் தன்னுடைய கருவியை நீட்டி அந்த தாக்குதலை எதிர்க்கும்படி கத்திச் சொல்லும்போது நான் அதனை கவனித்து உடனடியாகச் செயல்பட வேண்டும்.
இப்படி கவனித்து, உடனடியாகச் செயல்படுகின்ற மனதை, உடனடி கீழ்ப்படிதலை, வேதாகமம் பாலியல் சோதனைகள் வரும்போது பயன்படுத்தச் சொல்லுகிறது 1 கொரி. 6:18ல் பவுல் விசுவாசிகளுக்கு, வேசிகளிடமிருந்து விலகியிருக்கும்படி போதித்து வேசித்தனத்துக்கு விலகியோடுங்கள் என்று குறிப்பிடுகிறார். சில வேளைகளில் நாமும் சவால் நிறைந்த சந்தர்ப்பங்களில் “உறுதியாக நிற்கும்படி” அறிவுறுத்தப்படுகிறோம் (கலா. 5:1, எபே. 6:11). நம்மைப் பாதுகாத்துக் கொள்ள சிறந்த வழியாக, வேதாகமம் “விலகி ஓடு” என வலியுறுத்திக் கூறுகிறது.
உடனடி செயல் நம்மை சமரசம் செய்து கொள்வதிலிருந்து காத்துக் கொள்கிறது. சிறிய சமரசங்கள் பேரழிவை உண்டாக்கும் தோல்விகளுக்கு வழி வகுக்கும். ஒரு கட்டுப்படுத்த முடியாத சிந்தனை, வலைதளங்களில் தவறான இடத்திற்குச் செல்லும் பார்வை, திருமணமான பின்பும் நண்பர்களோடு சுற்றுதல் ஆகிய இவைகள் நாம் செல்லக் கூடாத வழிகளுக்கு நம்மை இழுத்துச் சென்று, நம்மை தேவனை விட்டுப் பிரிக்கின்றன.
நாம் சபலங்களுக்கு விலகியோடும் போது நாம் ஓடிச் சேர, தேவன் ஓர் இடத்தைத் தருகிறார். நம்முடைய பாவங்களுக்காக இயேசு சிலுவையில் தம்மையே பலியாக்கினதின் மூலம், அவர் நமக்கு நம்பிக்கையையும், மன்னிப்பையும், புதிய துவக்கத்தையும் தருகிறார். நாம் எங்கிருந்தாலும், என்ன செய்திருந்தாலும் அவர் நம்மை ஏற்றுக் கொள்கிறார். நம் பெலவீனங்களில், நாம் இயேசுவிடம் செல்லும்போது அவர் நம்மை விடுவித்து அவருடைய பெலத்தினால் வாழ வழி வகுக்கிறார்.
அனைவரையும் நேசித்தல்
சிங்கப்பூர் தீவில் (இருபத்தைந்து மைல் நீளமும், பதினைந்து மைல் அகலமும் கொண்டது) மிகவும் அரிதான விசாலமான வெளியில் அமையப் பெற்ற ஒரு தேவாலயத்தில் நான் ஆராதித்து வருகிறேன். சில நாட்களுக்கு முன்பு, எங்கள் நாட்டில் வந்து பணி புரியும் வெளி நாட்டினர் ஒவ்வொரு ஞாயிறும் ஆலய வளாகத்தில் வந்து கூடுவதை வழக்கமாக்கியுள்ளனர். எங்களில் சிலர் இந்த பார்வையாளர்கள் விட்டுச் செல்லும் குப்பைகளால் எரிச்சலடைந்து, கூச்சலிட்டனர். வேறு சிலர், அந்த ஆலய வளாகத்தை விட்டுச் செல்லாமல் இருந்து, இது நம்முடைய விருந்தோம்பலை அந்நிய கூட்டத்தினருக்குக் காட்டக் கூடிய ஒரு தெய்வீக வாய்ப்பாகக் கருதினர்.
இஸ்ரவேலரும் இத்தகைய ஒரு பிரச்சனையை அவர்கள் காலத்தில் சந்தித்தனர். அவர்கள் தங்கள் புதிய தேசத்தில் குடியமர்ந்த போது தங்கள் அருகிலிருக்கும் அந்நியரோடு எப்படி பழகுவது என்பதான ஒரு பிரச்சனை எழுந்தது. ஆனால் தேவன் அவர்களிடம் உன்னிடத்தில் வாசம் பண்ணுகிற அந்நியனைச் சுதேசி போல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறது போல அவனிலும் அன்புகூருவீர்களாக (லேவி. 19:34) என்று கட்டளையாகச் சொன்னார். தேவன் அவர்களுக்குக் கொடுத்த அநேக சட்டங்களில், அந்நியரைக் குறித்து அவர்களை தவறாக நடத்தவோ அல்லது ஒடுக்கவோ கூடாது என்றும் அவர்களை நேசித்து உதவுவீர்களாக என்றும் சொல்லுகிறார் (யாத். 23:9 ; உபா. 10:19). நூற்றாண்டுகளுக்குப் பின்னர் இயேசுவும் இதனையே செய்யும்படி கட்டளையாகக் கொடுக்கின்றார். உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோல, பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று கட்டளையிட்டார் (மாற். 12:31).
நாம் இப்புவியில் சிலகாலம் தங்கிச் செல்லும் பிரயாணிகள் என்பதை நினைத்து, தேவனின் அன்பு இருதயத்தைப் போல, பிறரையும் நம்மைப் போல நேசிப்போம். தேவன் நம்மை தம்முடைய சொந்த ஜனங்களாக நேசித்து நடத்துகின்றாரே.
அவருடைய வழி நடத்துதலின்படி பின் தொடரல்
நான் குழந்தையாயிருந்த போது, ஞாயிறு மாலை ஆலய ஆராதனையை எதிர்பார்த்திருப்பேன். அது அத்துணை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். ஞாயிறு இரவுகளில் அடிக்கடி, மிஷனரிகள் அல்லது கௌரவ பேச்சாளர்கள் செய்தி தருவது வழக்கம். அவர்களுடைய செய்திகள் என்னை அதிகம் கவர்ந்ததற்குக் காரணம், அவர்கள் தங்கள் குடும்பம், நண்பர்கள், தங்கள் வீடு, உடைமைகளை, எதிர்காலம் எல்லாவற்றையும் விட்டு விட மனமுவந்ததோடு, ஒன்றும் தெரியாத, புதுமையான, சில வேளைகளில் பாதுகாப்பற்ற இடங்களுக்குச் சென்று தேவனுக்கு ஊழியம் செய்ய தங்களை அர்ப்பணித்ததேயாகும்.
அந்த மிஷனரிகளைப் போன்று, எலிசா அநேக காரியங்களை விட்டு விட்டு தேவனைப் பின் தொடர்ந்தார்.
(1 இரா. 19:19-21). எலியாவின் மூலம் தேவன் அவரைப் பணி செய்ய அழைக்கும் முன்னர், நமக்கு எலிசாவைப் பற்றி அதிகம் தெரியாது. அவர் ஒரு விவசாயி என்பது மட்டும் தான் தெரியும். எலியா, எலிசா தன்னுடைய வயல்களில் உழுது கொண்டிருக்கும் போது சந்தித்து, தன்னுடைய சால்வையை அவருடைய தோள் மீது போட்டு (அது தீர்க்கதரிசியாவதற்கு ஓர் அடையாளம்) தன்னைப் பின் தொடருமாறு அழைக்கின்றார். அவரும் தன் தாயையும், தந்தையையும் முத்தமிட்டு திரும்பி வர தனக்கு அனுமதி அளிக்குமாறு கேட்டதுடன், எலிசா தன்னுடைய ஏர் மாடுகளை அர்ப்பணித்து, அவற்றை அடித்து, ஏர் மரங்களால் அவற்றைச் சமைத்து, தன் பெற்றோரிடம் சொல்லி விட்டு எலியாவைப் பின் தொடர்ந்தான்.
நம்மில் அநேகர் குடும்பத்தையும் நண்பர்களையும் விட்டு விட்டு தேவனுக்குப் பணி செய்யும்படி முழு நேர மிஷனரிகளாக அழைக்கப்படாவிட்டாலும், தேவன் நம் அனைவரையும் அவரைப் பின்பற்றும்படி விரும்புகின்றார். தேவன் அவனவனுக்குப் பகிர்ந்ததெப்படியோ, கர்த்தர் அவனவனை அழைத்ததெப்படியோ அப்படியே அவனவன் நடக்கக்கடவன் (1 கொரி. 7:17).
என்னுடைய அனுபவத்திலிருந்து, நாம் நம்முடைய வீட்டை விட்டு வெளியே வராவிட்டாலும், நாம் எங்கிருந்தாலும் தேவனுக்குப் பணி செய்வதென்பது பரபரப்பாகவும் சவால் நிறைந்ததாகவும் இருக்கும்.
முன்னேற்பாடான குழு
என்னுடைய சிநேகிதி தான் இருக்கும் பட்டணத்தை விட்டு இடம் பெயர்ந்து 1000 மைல்களுக்கப்பாலுள்ள வேறொரு பட்டணத்திற்குச் செல்ல தயாரானாள். அவளும், அவளுடைய கணவரும் புதிய இடத்தில் குடியேறுவதற்கான வேலைகளை தங்களுக்குள்ளே பிரித்துக் கொண்டனர். அவர் புதிய குடியிருப்பில் பொருட்களை அடுக்குவதையும், அவள் தங்கள் உடைமைகளைக் கட்டுவதையும் எடுத்துக் கொண்டனர். புதிய குடியிருப்பை முன் பார்வையிடாமலேயே அல்லது வீடு தேடுவதில் பங்கு பெறாமலேயே எப்படி இடம் பெயர முடிகிறது என்று அவளுடைய திறமையை வியந்தேன். அவளுடைய சவாலை அவள் ஒத்துக் கொண்டதோடு அவள் சொன்னாள், தன்னுடைய கணவனை நம்புவதாகவும், தன்னுடைய விருப்பம், தேவைகள் யாவையும் இருவரும் சேர்ந்திருந்த இந்த வருடங்களில் அவர் நன்கு தெரிந்து கொண்டு, என்னை கவனித்து வருகிறார் எனவும் பதிலளித்தாள்.
மேலறையில் இயேசு தன்னுடைய சீஷர்களோடு தான் காட்டிக்கொடுக்கப்பட போவதையும், அவருடைய மரணத்தையும் குறித்துப் பேசினார். இயேசுவின் இவ்வுலக வாழ்வின் இருண்ட மணி நேரங்களைக் குறித்தும், அவருடைய சீடர்களையும் விட்டு விட்டு போய் விடுவார் என்பதையும் குறித்து இயேசு கூறுகின்றார். அவர்களிடம், தான் அவர்களுக்கு பரலோகத்தில் ஓர் இடத்தை ஆயத்தம் செய்யப் போவதாக உறுதியளித்து அவர்களைத் தேற்றினார். என்னுடைய சிநேகிதியின் கணவர் அவர்களுடைய புதிய வீட்டை அவர்கள் குடும்பத்திற்காக ஆயத்தம் பண்ணியது போல, இயேசுவும் அவருடைய பிள்ளைகளுக்கு ஒரு வீட்டை ஆயத்தம் செய்கின்றார். சீடர்கள் இயேசுவிடம் கேள்விகள் கேட்ட போது, அவர் அவர்களுக்கு தீர்க்கதரிசன நிறைவேறலையும் அவர் செய்த அற்புதங்களையும் அவர்கள் கண்டதையும் நினைப்பூட்டுகிறார். அவர்கள் இயேசுவின் சாவு, பிரிவின் நிமித்தம் வருத்தமடைந்தபோதும், அவர்களிடம் தான் அவர்களுக்குச் சொன்ன யாவும் நிறைவேறும் என வாக்களிக்கிறார்.
நம்முடைய இருண்ட நேரங்களின் மத்தியில் நாம் அவரை நம்பும்போது, அவர் நம்மை நன்மையான ஓரிடத்திற்கு நம்மை வழி நடத்துவார். நாம் அவரோடு நடக்கும் போது, அவர் உண்மையுள்ளவராய் இருக்கிறார் என்பதை மேலும் உணர்ந்து, அவரை நம்ப கற்றுக் கொள்வோம்.
ஆசீர்வாத கிண்ணம்
நான் எனது கம்ப்யூட்டரில் எழுதிக் கொண்டிருந்த போது, இமெயில் வருவதைத் தெரிவிக்கும் ஒலி எழும்பி என் கவனத்தை ஈர்த்தது. சாதாரணமாக இத்தகைய ஒலி எழும்பும் போது நான் அந்த இமெயிலைப் பார்க்கும்படி தூண்டப்பட்டாலும் அதைத் தவிர்த்து விடுவது வழக்கம். ஆனால் இந்த மெயிலில் கொடுக்கப்பட்டிருந்த தலைப்பு ‘’நீ ஆசீர்வதிக்கப்பட்டவள்’’ என்பது என்னைக் கவர்ந்தது.
ஆர்வமுடன் நான் அதைத் திறந்து பார்த்து, மிகத் தொலைவிலுள்ள என் சிநேகிதி, என்னுடைய குடும்பத்திற்காக ஜெபித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லியிருந்ததைக் கண்டேன். ஒவ்வொரு வாரமும் அவள் ஒரு குடும்பத்தினரின் படம் ஒன்றினை அவளது ‘ஆசீர்வாதக் கிண்ணமான’ சாப்பாட்டு மேஜையில் வைத்து அந்தக் குடும்பத்திற்காக ஜெபிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். நான் உங்களை நினைக்கிற பொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன் (பிலி. 1:6) என எழுதியிருந்தாள். அத்தோடு தேவனுடைய அன்பை பிறரோடு பகிர்ந்து கொள்ளும் எங்களுடைய சுவிசேஷப் பணியின் பங்குதாரர் என்பதையும் முக்கியப்படுத்தியிருந்தாள்.
அப்போஸ்தலனாகிய பவுல் பிலிப்பு சபையினருக்கு எழுதிய இந்த வார்த்தைகள், என் சிநேகிதி விருப்பத்தோடு எடுத்துக் கொண்ட முயற்சியால் என்னுடைய இமெயிலில் வந்தது. இது எனக்களித்த மகிழ்ச்சி, முதலாம் நூற்றாண்டில் இக்கடிதத்தைப் பெற்ற வாசகர்கள் அடைந்த மகிழ்ச்சியைக் காட்டிலும் அதிகமாயிருந்தது. பவுல் தன்னோடு சுவிசேஷகப் பணி செய்தவர்களுக்கு நன்றியைத் தெரிவிப்பதை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தார்;. உங்கள் விசுவாசம் உலகெங்கும் பிரசித்தமாகிறபடியினாலே, முதலாவது நான் உங்களெல்லாருக்காகவும் இயேசு கிறிஸ்து மூலமாய் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன் (ரோ. 1:8) என்பதைப் போன்ற வாசகங்களை அவருடைய அநேக கடிதங்களில் நாம் காணலாம்.
முதலாம் நூற்றாண்டிலே பவுல் தன்னோடு பணி புரிந்தவர்களை ஆசீர்வதித்து ஜெபத்தோடு ஒரு நன்றியையும் அனுப்புவதைக் காண்கின்றோம். இருபத்தொன்றாம் நூற்றாண்டில் என்னுடைய சிநேகிதி ஓர் ஆசீர்வாத கிண்ணத்தின் மூலம் என்னுடைய வாழ்வில் ஒரு மகிழ்ச்சியைத் தந்தாள். இன்று நம்மோடு இயேசுவின் சுவிசேஷப் பணியில் உதவுபவர்களுக்கு நாம் எப்படி நன்றி தெரிவிக்கப் போகிறோம்?
என்னை நம்புங்கள்
கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த பின்னர், எனக்கு குறைந்த சம்பளத்தில் ஒரு வேலை கிடைத்தது. சம்பளம் மிகக் குறைவாகவே இருந்ததால், சில வேளைகளில் அடுத்த வேளை உணவுக்குக்கூட போதிய பணமில்லாதிருந்தேன். என்னுடைய அனுதின தேவைகளுக்கு தேவனை நம்பி வாழக் கற்றுக் கொண்டேன்.
இது எனக்கு தீர்க்கதரிசி எலியாவின் அனுபவத்தை நினைவுபடுத்துகிறது. அவருடைய தீர்க்கதரிசன ஊழியத்தில் அவரும் தன்னுடைய அனுதின தேவைகளைச் சந்திப்பதற்கு தேவனை நம்பியிருந்தார். இஸ்ரவேல் தேசத்தில் ஒரு பஞ்சத்தை தேவன் கட்டளையிடுவார் என தீர்க்கதரிசனம் உரைத்த சில நாட்களில், தேவன் அவரை ஒரு வனாந்திரத்திற்கு அனுப்பினார். அங்கு கேரீத் ஆற்றண்டையில் தங்கியிருந்தார். அங்கு தேவன் காகங்கள் மூலம் எலியாவுக்கு அனுதின உணவைக் கொடுத்தார். அந்த ஆற்றின் நீரைப் பருகிக் கொண்டார் (1 இரா. 17:1-4).
ஆனால் அங்கும் வறட்சி ஏற்பட்டது. அந்த ஆற்று நீர் குறுகி சிறிய ஓடையாக மாறியது. பின்னர் அதுவும் வற்றிப் போனது. அந்த ஓடை நீர் வற்றிப் போன பின்பு தேவன் எலியாவிடம், நீ எழுந்து சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய் அங்கே தங்கியிரு. உன்னை பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்கு கட்டளையிட்டேன் என்றார் (வச. 9). சாறிபாத் என்ற ஊர் பெனிக்கியா நாட்டிலுள்ளது. அங்குள்ள ஜனங்கள் இஸ்ரவேலரின் எதிரிகள். இங்கு யாராகிலும் எலியாவுக்கு அடைக்கலம் கொடுப்பார்களா? அதிலும் ஓர் ஏழை விதவையிடம் பகிர்ந்தளிக்க என்ன உணவு இருக்கும்?
நம்மில் அநேகர் எதிர்பார்ப்பது, தேவன் நம்முடைய வளங்களெல்லாம் தீர்ந்து போகுமுன்னரே, ஏராளமாக நாளின் தேவைகளுக்கு போதுமானதாகத் தரவேண்டும். நம்முடைய அன்புத் தந்தை நம்மிடம் என்னை நம்பு என மென்மையாகக் கூறுகின்றார். அவர் காகங்களையும், ஒரு விதவையையும் எலியாவை போஷிக்க பயன்படுத்தியதைப் போன்று, தேவனால் கூடாதது ஒன்றுமில்லை. நாம் நம்முடைய அனுதின தேவைகளுக்கு அவரின் அன்பினையும், அவருடைய வல்லமையையும் சார்ந்திருப்போம்.
தவறான கோடுகள்
எங்கள் சமூகத்தினரிடையே அகதிகளின் வருகை, எங்கள் பகுதி தேவாலயங்களின் புதிய வளர்ச்சிக்கு வழி வகுத்தது. இந்த வளர்ச்சி சவால்களைக் கொண்டு வந்தது. ஆலய அங்கத்தினர்கள் புதிய நபர்களை எப்படி வரவேற்பது என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் புதிய நபர்கள் இவர்கள் அறியாத கலாச்சாரம், புதிய மொழி, மாறுபட்ட ஆராதனை முறைகளை அனுசரிக்க வேண்டியுள்ளது. இந்த மாற்றங்கள் சில விகற்பமான சூழல்களை உருவாக்கும்.
புரிந்து கொள்ளாமையும், ஒத்துழையாமையும் மக்கள் அதிகமுள்ள இடங்களில் காண்கிறோம். அதற்கு ஆலயம் ஒரு விதி விலக்கல்ல. நாம் நம்முடைய மாறுபாடுகளை நல்ல முறையில் கையாளாவிடில், அவைகள் கடினப்பட்டு பிரிவினைகள் உண்டாகிவிடும். நிரந்தர பிரிவினைக்குள்ளாகிவிடுவார்கள்.
எருசலேமிலுள்ள ஆதி திருச்சபை வளர்ந்து வந்த போது ஒரு சர்ச்சை உருவாகி, அது கலாச்சாரம் சார்ந்த தவறான கோடு வழியே வெடித்தது. கிரேக்க மொழி பேசும் யூதர், எபிரேய மொழி பேசும் யூதர்களைக் குற்றப்படுத்தினர். கிரேக்கர்கள் தங்கள் விதவைகள் அன்றாடக விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லை (அப். 6:1) என்று குற்றம் சாட்டினார்கள். எனவே அப்போஸ்தலர்கள், பரிசுத்த ஆவியும் ஞானமும் நிறைந்து நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழு பேரை உங்களில் தெரிந்து கொள்ளுங்கள் (வச. 4) என்றனர். அவர்கள் தேர்ந்தெடுத்த ஏழு பேரும் கிரேக்க பெயருடையவர்கள் (வச. 5). இவர்களனைவரும் கிரேக்கர்கள், புறக்கணிக்கப்பட்ட கூட்டத்திலுள்ள உறுப்பினர்கள். அவர்கள் தங்கள் பிரச்சனைகளை நன்கு புரிந்து கொள்வார்கள். அப்போஸ்தலர்கள் ஜெபம் பண்ணி அவர்கள் மேல் கைகளை வைத்தார்கள். தேவ வசனம் விருத்தியடைந்தது. (வச. 6-7).
வளர்ச்சி என்பது சவால்களைப் பகுதியாகக் கொண்டு வரும். ஏனெனில் அங்கு பாரம்பரிய கட்டுகள் உடைக்கப்பட்டு உறவுகள் வளருகின்றன. நாம் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலைத் தேடும்போது நாம் ஆக்கப்பூர்வமான தீர்வுகளைக் கண்டு கொள்வோம். மேலும் அசாத்தியமான பிரச்சனைகள் வளர்ச்சிக்குகந்த சந்தர்ப்பங்களாக மாற்றப்படும்.