எங்கள் ஆசிரியர்கள்

அனைத்தையும் பார்க்கவும்

கட்டுரைகள்ஃபோ ஃபாங் சியா

உன்னால் எதை விட முடியவில்லை?

“உன்னால் விட முடியாத ஒன்று எது?" என வானொலி தொகுப்பாளர் கேட்டார். கேட்போர் சிலர் ஆர்வத்தோடு பதிலளித்தனர். சிலர் தங்கள் குடும்பங்களைக் குறிப்பிட்டனர். ஒரு கணவன், மரித்துப்போன தன் மனைவியின் நினைவுகளைக் குறிப்பிட்டார், வேறுசிலர் இசையின் மூலம் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளும் கனவையும், ஒரு தாயாகும் கனவையும் பகிர்ந்தனர். ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றைப் பொக்கிஷமாக வைத்துள்ளோம். ஒரு நபர், ஒன்றை நிறைவேற்றல், ஒன்றை அடைதல் என நாம் ஏதோ ஒன்றை விட முடியாமல் வைத்திருக்கின்றோம்.

ஓசியா புத்தகத்தில். தேவன் தான் தெரிந்துகொண்ட ஜனங்களை கைவிடுவதில்லையெனவும், அவர்களைத் தனது விலையேறப்பெற்ற பொக்கிஷமாக வைத்திருப்பதாகவும் கூறுகின்றார். இஸ்ரவேலின், நேச மணவாளனான தேவன் அவளுக்குத் தேவையான யாவற்றையும், நிலம், ஆகாரம், தண்ணீர், உடை மற்றும் பாதுகாப்பையும் கொடுத்தார். ஆனால், இஸ்ரவேலோ வேசித்தனம் பண்ணி தேவனைப் புறக்கணித்து தங்களுக்கு மகிழ்ச்சியையும், பாதுகாப்பையும் வேறு இடத்தில் தேடினர். தேவன் அவளை எவ்வளவுக்கு அதிகமாய் தேடினாரோ அவ்வளவு தூரமாய் அவள் சோரம் போனாள் (ஓசியா 11:2) எப்படியிருந்தாலும், அவள் தேவனை மிகவும் வேதனைப்படுத்தினாலும் தேவன் அவர்களைக் கைவிடுவதில்லை (வச. 8). அவர் இஸ்ரவேலை சீர்ப்படுத்தி, விடுவிப்பார். அவருடைய விருப்பமெல்லாம் அவளோடு தன்னுடைய உறவை மீண்டும் ஏற்படுத்திக் கொள்வதே (வச. 11).

இன்று தேவனுடைய பிள்ளைகள் யாவருக்கும் இந்த உறுதியைத் தருகின்றார். அவர் நம்மீது வைத்துள்ள அன்பு நம்மை ஒருபோதும் கைவிடும் அன்பல்ல (ரோம. 8:37-39). நாம் அவரை விட்டு அலைந்து திரிந்தோமேயானால், அவர் நாம் மீண்டும் அவரிடம் வரும்படி ஏங்குகின்றார். அவர் நம்மை சீர்ப்படுத்தும் போது, நாம் தேற்றப்படுவோம், அதுவே அவர் நம்மை சேர்த்துக் கொள்வதின் அடையாளம், அவர் நம்மைத் தள்ளிவிடுபவரல்ல. நாம் அவருடைய பொக்கிஷம், அவர் நம்மைக் கைவிடுவதில்லை.

புது வருடமும், புது முன்னுரிமைகளும்

“செல்லோ” என்ற இசைக்கருவியை வாசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டுமென அநேக நாட்களாக ஆசைப்பட்டுக் கொண்டிருக்கின்றேன். ஆனால், எனக்கு அதற்கான நேரம் ஒதுக்கமுடியவில்லை. நான் பரலோகத்தில், ஒருவேளை இந்தக் கருவியை நேர்த்தியாக வாசிக்கக் கூடும். தேவன் என்னுடைய நேரத்தை, அவருக்கு ஊழியம் செய்யும்படி எப்படியெல்லாம் செலவிட திட்டமிட்டிருக்கின்றாரோ அதற்கே அதிக கவனம் செலுத்தும்படி விரும்புகிறேன்.

நம்முடைய வாழ்வு மிகவும் குறுகியது. அந்த நாட்கள் முடிவதற்குள், இப்புவியில் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ள நேரத்தை மிக அதிகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படியானால் அதன் அர்த்தமென்ன?

சாலமோன் ராஜா வாழ்வின் நோக்கத்தை விளக்க முன்வரும்போது, இரு காரியங்களைக் குறித்து விளக்குகின்றார். முதலாவது நாம் நம் வாழ்வை நம்மால் முடிந்தவரை பயனுள்ள வகையில் வாழவேண்டும். அதாவது தேவன் நாம் அனுபவிக்கும்படி கொடுத்துள்ள உணவு, தண்ணீர் (பிர. 9:7) உடை, வாசனை திரவியங்கள் (வச. 8) திருமணம் (வச. 9) போன்ற தேவன் தரும் நன்மையான ஈவுகள் அனைத்தையும் அனுபவி. சேல்லோவை இசைக்கக் கற்றுக் கொள்வதும் இதில் அடங்கும்.

அவருடைய இரண்டாவது பரிந்துரை என்னவெனின், கடின உழைப்பு (வச. 10). வாழ்க்கையில் நிறைய வாய்ப்புகள் உள்ளன. இங்கு அதிக வேலைகள் நிறைவேற்றப்படும்படி கிடக்கின்றன. தேவன் தரும் வாய்ப்புகளை நாம் பயன்படுத்தி, அவருடைய ஞானத்தைத் தேடி கண்டுபடித்து, அவருடைய வேலைகளுக்கு முன்னுரிமை கொடுத்து, நம்முடைய தாலந்துகளை தேவனுக்குப் பணிசெய்யும்படி பயன்படுத்த வேண்டும்.

வாழ்வு என்பது தேவன் தரும் அற்புத ஈவு. அவர் அனுதினமும் நமக்குத் தருகின்ற ஆசீர்வாதங்களிலும், நம்முடைய அர்த்தமுள்ள ஊழியங்களிலும் நாம் உண்மையான மகிழ்ச்சியைக் கண்டடையும் போது, நாம் தேவனைக் கனப்படுத்துகின்றோம்.

வெட்கத்திற்குப் பதிலாக மரியாதை

இந்த ஆண்டிலும் மீண்டும் அந்தக் காலம் வந்தது. குடும்பங்கள் ஒன்று சேர்ந்து பண்டிகையைக் கொண்டாடும் காலம் அது. திருமணமாகாதவர், குழந்தையில்லாதவர் என தங்களில் ஏதோவொரு குறையுள்ளது எனக் கருதும் சிலர், தங்களைக் கேள்விகேட்கும் ஆர்வமிக்க உறவினரைச் சந்திக்க பயப்படுகின்றனர்.

திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தையில்லாதிருந்த எலிசபெத்தின் அவல நிலையை நினைத்துப் பாருங்கள். எலிசபெத், சகரியா தம்பதியினருக்கு தேவனுடைய கண்களில் தயவு கிடைக்கவில்லை

(1 சாமு. 1:5-6) எனக் கருதுவர், அத்தோடு அதனைக் கேவலமாகவும் கருதுவர். ஆனால், அவர்கள் நீதியுள்ளவர்களாய் வாழ்ந்த போதிலும் (லூக். 1:6) அவர்களுடைய அண்டை வீட்டாரும், உறவினரும் வேறுவிதமாகக் கருதியிருப்பர்.

எதுவாயிருப்பினும் எலிசபெத்தும் அவளுடைய கணவனும் தேவனுக்குப் பணி செய்வதில் உண்மையுள்ளவர்களாயிருந்தனர். இருவருக்குமே வயது சென்ற போது ஓர் அற்புதம் நடந்தது. தேவன் அவளுடைய ஜெபத்தைக் கேட்டார் (வச. 13). தேவன் தம்முடைய தயவைக் காட்ட விருப்பமுடையவர் (வச. 24). ஒருவேளை அவர் கொடுப்பதற்குத் தாமதித்தாலும் அவருடைய நேரம் சரியானதாகவும் அவருடைய ஞானம் நேர்த்தியானதாகவும் இருக்கும். எலிசபெத்திற்கும் அவளுடைய கணவனுக்கும் தேவன் ஒரு சிறந்த பரிசை வைத்திருந்தார், ஒரு குழந்தை, அது மேசியாவின் வருகைக்கு முன்னோடியாக வந்தது (ஏசா. 40:3-5).

உனக்கும் ஏதோவொரு குறைவு உள்ளதால் நீயும் நிறைவற்றவனாக உன்னை நினைக்கின்றாயா? அது ஒரு பல்கலைகழகத்தின் பட்டமாகவோ, வீடாகவோ இருக்கலாம். எலிசபெத்தைப் போன்று தேவனுடைய திட்டம் உன்னில் நிறைவேறும்படி பொறுமையோடு காத்திரு. அவருக்கு உண்மையாய் வாழ்ந்திரு உன்னுடைய சூழ்நிலை எவ்வாறிருந்தாலும் தேவன் உன்மூலம் கிரியை செய்து கொண்டிருக்கிறார். அவர் உன் உள்ளத்தையறிவார். உன்வேண்டுதலைக் கேட்கின்றார்.

மறைந்திருக்கும் தேவனுடைய கரம்

என்னுடைய நண்பன் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு மிஷனரி குடும்பத்தால் தத்தெடுக்கப்பட்டு, கானாவில் வளர்க்கப்பட்டான். அவனுடைய குடும்பம் மீண்டும் அமெரிக்கா சென்ற போது அங்கு அவன் தன்னுடைய கல்லூரி படிப்பை ஆரம்பித்தான். ஆனால், அதனை அவனால் தொடரமுடியவில்லை. பின்னர் அவன் இராணவத்தில் சேருவதற்கு ஒப்புதல் கொடுத்தான், அது அவனுடைய கல்லூரி படிப்பைத் தொடர பண உதவி செய்ததோடு உலகம் முழுவதும் செல்லும் வாய்ப்பையும் கொடுத்தது. அவன் ஒரு சிறப்பான செயலைச் செய்வதற்கு அவனைப் பயிற்றுவிக்கும்படி இவையெல்லாவற்றின் மூலமாகவும் தேவன் செயல்பட்டுக் கொண்டிருந்தார். இன்றைக்கு அவன் உலக முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகின்ற ஒரு கிறிஸ்தவ நூலின் எழுத்தாளராகவும், பத்திரிக்கை ஆசிரியராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

அவனுடைய மனைவியின் கதையும் சற்று ஆர்வமானது. அவள் தன்னுடைய கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது தன் வலிப்பு வியாதிக்காக வீரியம் மிகுந்த மருந்துகளை சாப்பிட்டதின் விளைவாக வேதியியல் தேர்வில் தோல்வியுற்றாள். பின்னர் தன்னுடைய உடல்நிலைக்கேற்றவாறு அறிவியல் துறையை விட்டு, காது கேளாதவர்களுக்கான அமெரிக்க சைகை மொழியைக் கற்றுக் கொள்ளும்படி சேர்ந்தாள். இந்துறையின் சுமை சற்று குறைவாகயிருக்கும் என கருதினாள். அந்த அநுபவங்களைப் பற்றி சிந்தித்த அவள், “ஒரு பெரிய நோக்கத்திற்காக தேவன் என் வாழ்வை திசை திருப்பினார் என்றாள். இப்பொழுது, அவள் வாழ்வு மாற்றம் தரும் வார்த்தைகளைக் காது கேளாதோருக்குக் கொடுத்துக் கொண்டிருக்கி;றாள்.

நீயும் சில வேளைகளில் தேவன் ஏன் என்னை இத்தகைய பாதை வழியே நடத்திக் செல்கின்றார் என யோசித்ததுண்டா? தேவனுடைய வல்லமையுள்ள கரம் நம் வாழ்வில் இருக்கிறது என சங்கீதம் 139:16 சொல்கின்றது. “என் கருவை உம்முடைய கண்கள் கண்டது என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாத போதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது” என காண்கின்றோம். நம் வாழ்வின் சூழ்நிலைகளை தேவன் எவ்வாறு பயன்படுத்துவார் என்பதை நாம் அறியோம். ஆனால், தேவன் நம்மைப் பற்றி எல்லாவற்றையும் அறிவார். அவர் நம் நடையைத் திருப்புகின்றார், என்பதை அறிந்து அமர்ந்திருப்போம். அவருடைய வல்லமையுள்ள கரங்கள், நாம் காணக் கூடாதபடி மறைவாயிருப்பதால், அவர் செயல்படவில்லையோ என சந்தேகிக்காதே.

இருளில் நம்பிக்கை

சண்டையிடும் மாகாணங்கள் காலம் (கி மு 475-246) என்று அறியப்பட்ட காலக்கட்டத்தில் கு யுவான் என்ற விவேகமான, நாட்டுப்பற்றுள்ள சீன அரசு அதிகாரி வாழ்ந்தார் என்ற மரபுக்கதை ஒன்று உண்டு. நாட்டை அழிக்கக்கூடிய ஒரு ஆபத்து நெருங்கி வருவதாக அவர் அரசருக்கு அநேக முறை எடுத்துகூற முயன்றும், அரசர் அவர் அறிவுரையை ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதியில் கு யுவான் நாடு கடத்தப்பட்டார். தான் எந்த எதிரி குறித்து எச்சரித்தாரோ அந்த எதிரியால் தன் அன்புக்குரிய நாடு அழிந்தது என்று அறிந்தபோது, தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.

சில விஷயங்களில் கு யுவானின் வாழ்க்கை எரேமியாவின் வாழ்க்கையை ஒத்திருக்கிறது. அவரது எச்சரிக்கையை ஏளனம் செய்த அரசர்களை அவரும் சேவித்தார். அவர் நாடும் சூறையாடப்பட்டது. ஆனால் கு யுவான் நம்பிக்கை இழந்துபோனார், எரேமியாவோ உண்மையான நம்பிக்கை கொண்டார். ஏன் இந்த வித்தியாசம்?

உண்மையான நம்பிக்கை அளிக்கும் ஆண்டவரை எரேமியா அறிந்திருந்தார். “உன் முடிவைப்பற்றி உனக்கு நம்பிக்கையுண்டு; உன் பிள்ளைகள் தங்கள் தேசத்துக்குத் திரும்பி வருவார்கள்” என்று கடவுள் அந்த தீர்க்கதரிசிக்கு உறுதியளித்தார். கி மு 586ல் எருசலேம் அழிக்கப்பட்டாலும், அது பின்னர் மீண்டும் கட்டப்பட்டது (நெகேமியா 6:15 பார்க்க).

நம்பிக்கை இழக்கவைக்கும் சூழ்நிலைகளை நாம் சந்திக்க நேரலாம். அது மோசமான தகவலைத் தரும் மருத்துவ ஆய்வு அறிக்கையாகவோ, பறிபோன வேலையாகவோ, சிதைந்துபோன குடும்பமாகவோ இருக்கலாம். ஆனால் வாழ்க்கை நம்மை கீழே தள்ளும்போதும், நாம் நிமிர்ந்து பார்க்கமுடியும் – ஏனென்றால் கடவுள் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்! நம்முடைய நாட்கள் அவர் கைகளில் இருக்கிறது. நம்மை அவர் இருதயத்திற்கு அருகில் வைத்திருக்கிறார்.

வை--ஃபை இருக்கிறதா?

ஊழியத்திற்காக இளைஞர்களுடன் ஒரு பயணத்துக்குத் தயார் செய்து கொண்டிருந்தபோது, “அங்கே வை—ஃபை (Wi-Fi)இருக்குமா” என்ற கேள்வியை அநேக முறை என்னிடம் கேட்டார்கள். இருக்கும் என்று அவர்களுக்கு நான் உறுதி அளித்தேன். ஒரு நாள் இரவு வை—ஃபை இணைப்பு இல்லாதபோது, அந்த இளைஞர்கள் அதிகமாகப் புலம்பினார்கள்.
 
நம்மில் பலர் நம் கையில் நம் ஸ்மார்ட் ஃபோன் (smart phone)இல்லாதபோது, எதையோ இழந்துவிட்டதைப் போல பரிதவிக்கிறோம். அவை நம் கையில் இருக்கும்போது, நம் கண்கள் அதன் திரையை விட்டு விலகுவதில்லை.
 
எல்லாவற்றையும்போல, இணையமும், அதன் மூலம் நாம் பெற்றுக் கொள்ளக்கூடிய விஷயங்களும் நமது கவனத்தை திசை திருப்புவதாக இருக்கலாம் அல்லது நமக்கு ஆசீர்வாதமாக இருக்கலாம். இந்த இரண்டில் எது என்பது, அதிலிருந்து பெறும் தகவல்களை நாம் எப்படி உபயோகிக்கிறோம் என்பதைப் பொறுத்தது. நீதிமொழிகளில் “புத்திமானுடைய மனம் அறிவைத் தேடும்; மூடரின் வாயோ மதியீனத்தை மேயும்” (15:14) என்று வாசிக்கிறோம்.
 
வேதாகம ஞான போதனைகளை நம் வாழ்க்கைக்கு நாம் பயன்படுத்தும்போது, நம்மை நாமே சில கேள்விகளைக் கேட்டுக்கொள்ள முடியும்.சமூக இணையதளங்களையும், அதன்மூலம் நாம் இணைந்திருக்கும் குழுக்களின் செய்திகளையும் தினமும் கட்டாயம் பார்க்கிறோமா? எந்த விதமான விஷயங்களில் நாம் ஆர்வம் செலுத்துகிறோம் என்பதை அது சுட்டிக் காட்டுகிறதா? நாம் இணையத்தில் படிக்கும், பார்க்கும் விஷயங்கள் விவேகமான வாழ்க்கை வாழ நம்மை ஊக்குவிக்கிறதா (வச. 16-21); அல்லது – புறங்கூறுதல், அவதூறான விஷயங்கள், உலகப்பிரகாரமான செல்வங்கள், தவறான பாலியல் சிந்தனைகள் – போன்ற மதியீனமான காரியங்களைத் தேடுகிறோமா?
 
பரிசுத்த ஆவியானவரின் கிரியைக்கு நம்மை ஒப்புக்கொடுக்கும்போது, “உண்மையுள்ள, ஒழுக்கமுள்ள, நீதியுள்ள, கற்புள்ள, அன்புள்ள, நற்கீர்த்தியுள்ள” (பிலிப்பியர் 4:8) விஷயங்களால் நம் சிந்தனைகளை நிரப்ப முடியும். கர்த்தர் தரும் ஞானத்தால், அவரைக் கனப்படுத்தக்கூடிய நல்ல விஷயங்களை நாம் தேர்ந்தெடுக்க முடியும்.

அடித்தளம் அகன்ற போது

1997ம் ஆண்டில் ஆசியாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது, சொற்ப வேலைகளே இருந்த நிலையில் அநேகர் வேலை தேடிக் கொண்டிருந்தனர். அப்படி வேலை தேடியவாகளில் நானும் ஒருவன். ஓன்பது மாதங்கள் எதிர்பார்ப்பிற்குப் பின், எழுத்தராக ஒரு கம்பெனியில் சேர்ந்தேன். அந்த கம்பெனியும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டதால் மீண்டும் வேலையை இழந்தேன்.

நீ இத்தகைய சூழலிலிருந்திருக்கின்றாயா? மோசமான நேரம் முடிந்தது என எண்ணிய போது, திடீரென நிலை தடுமாறியது போலிருந்தது. சாறிபாத் விதவையின் நிலையைப் போன்றிருந்தது (1 இரா. 17:12). ஒரு பஞ்சத்தின் போது, அவள் தனக்கும் தன் மகனுக்கும் கடைசி உணவைத் தயாரிக்கும் போது, எலியா தீர்க்கதரிசி தனக்குக் கொஞ்சம் அப்பம் தரும்படி கேட்கின்றார். அவள் மனமில்லாமல் சம்மதிக்கின்றாள். தேவன் அவளுக்குத் தொடர்ந்து மாவையும், எண்ணெயையும் கொடுக்கின்றார் (வச. 10-16).

பிற்பாடு, அவளுடைய மகன் சுகவீனப்படுகின்றான். அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக் கொண்டேயிருந்தது. அப்பொழுது அந்த விதவை எலியாவை நோக்கி. “தேவனுடைய மனுஷனே, எனக்கும் உமக்கும் என்ன? என் அக்கிரமத்தை நினைக்கப் பண்ணவும் என் குமாரனைச் சாகப் பண்ணவுமா என்னிடத்தில் வந்தீர்?” என்றாள் (வச. 18).

சில வேளைகளில் நாமும் இந்த விதவையைப் போன்று செயல்படுவோம். தேவன் ஏன் நம்மைத் தண்டிக்கின்றார் என வியந்ததுண்டு. இந்தப் பாவ உலகில் தீமையானவைகளும் நடக்கும் என்பதை நாம் மறந்து விடுகின்றோம்.

எலியா இந்தத் தேவையை தேவனிடம் எடுத்துச் செல்கின்றார். உண்மையாய், முழுமனதோடு தேவனிடம் அந்தப் பையனுக்காக ஜெபிக்கின்றார். தேவன் அவனை உயிரோடு எழுப்புகின்றார் (வச. 20-22) எலியாவைப் போன்று நாமும், நாம் நம்பியிருக்கிறவர் ஒரு போதும் நம்மைக் கைவிடுவதில்லை என உணர்ந்து கொள்வோம். தேவனுடைய திட்டத்தின் மீது சார்ந்திருந்து, அதைப் புரிந்து கொள்ளும்படி தேவனிடம் ஜெபிப்போம்.

நேர்த்தியான உலகம்

“என்னுடைய நேர்த்தியான உலகம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதிவருமாறு கேற்றியின் பள்ளியில் ஒரு வேலை கொடுத்திருந்தனர். அவள் தன்னுடைய கட்டுரையில் “என்னுடைய நேர்த்தியான உலகில்… ஐஸ் கிரீம்கள் இலவசம், எவ்விடத்திலும் லாலிப்பாப்கள் கிடக்கின்றன, வித்தியாசமான வடிவங்களில் அமைந்த ஒரு சில மேகங்களோடு வானம் எப்பொழுதும் நீல நிறமாகவேயிருக்கும்” என ஆரம்பித்த அவளுடைய கட்டுரை திடீரென ஒரு தீவிர மாற்றம் பெற்றது. “அந்த உலகில் ஒருவர் வீட்டிற்கும் துயரச் செய்தி வருவதில்லை. அப்படியொரு செய்தியை யாரும் கொண்டு செல்லத் தேவையேயில்லை” எனத் தொடர்ந்தாள்.

ஒருவர் வீட்டிலும் துயரச்செய்தியேயில்லை என்பதைக் கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கின்றதல்லவா? இந்த வார்த்தைகள் நம்மை வல்லமையாக இயேசுவின் மேல் நாம் வைத்துள்ள நம்பிக்கைக்கு நேராகத் திருப்புகின்றது. அவர், “சகலத்தையும் புதிதாக்குகின்றார்”, நம்முடைய துயரை அகற்றி, இவ்வுலகை மாற்றுகின்றார் (வெளி. 21:5).

பரதீசில் துன்பங்கள் இல்லை, மரணமில்லை, புலம்பலில்லை, வேதனையில்லை, கண்ணீர் இல்லை (வச. 4). அது, நாம் தேவனோடு ஐக்கியப்பட்டிருக்கும் ஒரு நேர்த்தியான இடம். தேவன் தம் அன்பினால் தம் விசுவாசிகளை விடுவித்து தனக்கென்று சேர்த்துக் கொண்ட இடம். எத்தனை அற்புதமான மகிழ்ச்சி நமக்குக் காத்திருக்கின்றது!

இந்த முழுமையின் உண்மையை நாம் இங்கேயே அனுபவிக்கலாம். நாம் தேவனோடு அனுதினம் ஐக்கியப்படும்போது அவருடைய பிரசன்னத்தின் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும் (கொலோ. 1:12-13). நாம் பாவத்தை எதிர்த்துப் போராடும் போது, பாவத்தையும், மரணத்தையும் முற்றிலும் ஜெயம் பெற்ற கிறிஸ்து நமக்குத் தருகின்ற வெற்றியை அனுபவிப்போம் (2:13-15).

உருண்டு, புரண்டு...

உன்னை இரவில் தூங்க விடாமல் விழித்திருக்கச் செய்வதெது? சில நாட்களாக நான் தூக்கத்தை இழந்து, என் படுக்கையில் உருண்டு புரண்டு கொண்டு, ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காண முயற்சித்துக் கொண்டிருந்தேன். அதன் காரணமாக நான் அடுத்த நாளின் சவால்களைச் சந்திக்கத் தேவையான ஓய்வு சரியாகக் கிடைக்கப் பெறாமல் முறுமுறுத்தேன்.

இது உங்களுக்கும் ஏற்பட்டுள்ளதா? உறவுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள், நம்பிக்கையற்ற எதிர்காலம், எதுவாக இருப்பினும் நம் அனைவருக்குமே ஏதாவது ஒன்றைக் குறித்து கவலை வந்து விடுகிறது.

சங்கீதம் 4 ஐ எழுதும்போது தாவீது ராஜா நிச்சயமாக துயரத்தில் தான் இருந்திருக்க வேண்டும். ஜனங்கள் அவரைக் குறித்துப் பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி அவருடைய புகழை அழிக்கப் பார்க்கின்றனர் (வச. 2) சிலர் அவர் ஆட்சித்திறமையற்றவர் என குற்றம் சாட்டுகின்றனர் (வச. 6). இப்படி நியாயமில்லாமல் நடந்து கொண்டமையால் தாவீது ராஜாவிற்கு கோபம் வந்திருக்கலாம். அவரும் இவற்றைக் குறித்து சிந்தித்து, தூக்கமின்றி இரவைக் கழித்திருக்கலாம். ஆனால் அவர், ‘‘சமாதானத்தோடே படுத்துக் கொண்டு நித்திரை செய்வேன்” (வச. 8) என்று குறிப்பிடுகின்றார்.

இந்த 8வது வசனத்தை சார்ல்ஸ் ஸ்பர்ஜன் அழகாக விளக்குகின்றார். ‘‘இவ்வாறு (தாவீது) படுத்திருக்கும் போது, தன்னை முற்றிலுமாக மற்றொருவரின் கரத்தில் ஒப்படைத்து விடுகின்றார். தன் கவலைகளையெல்லாம் அவரிடம் கொடுத்துவிட்டு அமைதியாக நித்திரை செய்கின்றார். இதுதான் முழுமையான நம்பிக்கை.”

இந்த நம்பிக்கையைத் தருவது எது? துவக்கத்திலிருந்தே தாவீது ராஜாவிற்கு தன் விண்ணப்பங்களுக்குத் தேவன் பதிலளிப்பார் என்ற நம்பிக்கையிருந்தது (வச. 3). தேவன் தன் மீது அன்பு கூர்ந்து, தன்னைத் தெரிந்து கொண்டமையால் தன்னுடைய தேவைகளையும் அவர் அன்போடு சந்திப்பார் என்ற உறுதி அவருக்கிருந்தது.

நம்முடைய கவலைகள் நம்மை அச்சுறுத்தும் போது நாமும் அவருடைய வல்லமையைச் சார்ந்திருக்க தேவன் நமக்கு உதவி செய்வாராக. ஆளுகை செய்யும் அவருடைய வல்லமையுள்ள கரங்களில் நாம் ‘‘படுத்து நித்திரை” செய்வோம்.