“ஏய், போ ஃபாங்!” என்று என்னும் திருச்சபை சிநேகிதன் ஒருவன் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினான். அதில் “இந்த மாததத்தில் நடைபெறும் பராமரிப்புக் குழுவில், நாம் அனைவரும் யாக்கோபு 5:16 சொல்லுவதுபடி செய்ய முயற்சிக்கலாம். அவ்வாறு செய்வதின் மூலம் நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளை வெளிப்படையாய் பகிர்ந்துகொண்டு ஒருவருக்காக ஒருவர் ஜெபிக்கும் நம்பிக்கையான சூழலை உருவாக்கக்கூடும் என்று சொன்னார்.

அவருக்கு என்ன பதில் சொல்வது என்று எனக்கு ஒரு கணம் தெரியவில்லை. எங்கள் பராமரிப்புக் குழு உறுப்பினர்கள் பல ஆண்டுகளாக ஒருவரையொருவர் அறிந்திருந்தாலும், நாங்கள் ஒருபோதும் எங்கள் வலிகள் மற்றும் வேதனைகளை ஒருவருக்கொருவர் வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டதில்லை. பெலவீனமாய் இருப்பது பயமுறுத்தக்கூடிய காரியம்.

ஆனால் நாமெல்லாரும் பாவிகள்; நம் அனைவருக்கும் போராட்டங்கள் இருக்கிறது என்பதே உண்மை. நம் அனைவருக்கும் இயேசு தேவை. தேவனுடைய ஆச்சரியமான கிருபைகளைக் குறித்தும், கிறிஸ்துவை நாம் எந்த அளவிற்கு சார்ந்திருக்கிறோம் என்பதைக் குறித்தும் பேசுவது, கிறிஸ்துவில் தொடர்ந்து நம் நம்பிக்கையை வைப்பதற்கு நம்மை ஊக்குவிக்கிறது. கிறிஸ்தவ வாழ்க்கையில் நமக்கு பிரச்சனைகளே இல்லை என்பதுபோல் நடிப்பதை நிறுத்திக்கொள்வோம்.

“சரி, நாம் அதைச் செய்யலாம்” என்று பதிலளித்தேன். ஆரம்பத்தில் அது எனக்கு விகற்பமாய் தோன்றியது. ஆனால் ஒருவர் மனந்திறந்து பேச ஆரம்பித்த பின்பு, மற்றவர்களும் அதே வழியை பின்பற்றத் துவங்கினர். ஒருசிலர் எதையும் பேசாமல் மௌனம் காத்தாலும், அவர்களைப் புரிந்துகொள்ள முடிந்தது. யாரும் கட்டாயப்படுத்தப்படவில்லை. அந்த பராமரிப்புக் குழுவின் இரண்டாம் பகுதியை “ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள்” என்னும் யாக்கோபு 5:16ன் ஆலோசனையின் பிரகாரம் நிறைவுசெய்தோம்.

அன்றைய தினத்தில், கிறிஸ்துவின் ஐக்கியம் என்றால் என்ன என்பதை நாங்கள் விளங்கிக்கொண்டோம். கிறிஸ்துவின் மீதான நமது விசுவாசத்தின் நிமித்தம், நாம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவர்களாக செயல்பட்டு, நம்முடைய பெலவீனத்திலும் போராட்டங்களிலும் மற்றவர்களின் உதவியையும் நாடமுடியும்.