ஐயோவா பல்கலைக்கழகத்தின் கல்லுரிகளுக்கிடையில் நடைபெறும் கால்பந்தாட்டத்தில் மனதைக் கவரும் பாரம்பரியம் அரங்கேறுகிறது. ஸ்டெட் ஃபேமிலி என்னும் சிறுவர் மருத்துவமனை ஒன்று இந்த ஐயோவாவின் கின்னிக் ஸ்டேடியத்திற்கு அடுத்ததாக உள்ளது. அந்த மருத்துவமனையில் மேல்தளத்திலிருந்து இந்த ஸ்டேடியத்தின் விளையாட்டை பார்வையிடும்வகையில், உயரமான கண்ணாடி ஜன்னல்கள் இருக்கின்றது. விளையாட்டு நடைபெறும் நாட்களில், நோய்வாய்ப்பட்ட குழந்தைகளும் அவர்களது குடும்பத்தினரும் அந்த மேல்தளத்தில் வந்து அமர்ந்துகொண்டு விளையாட்டைக் கண்டு மகிழ்வர். முதல் காலாண்டின் முடிவில், பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மருத்துவமனைக்கு வந்து குழந்தைகளை பார்வையிடுவர். அந்தச் சில நிமிடங்களில் குழந்தைகளின் கண்கள் ஆச்சரியத்தில் ஒளிரும். டி.வியில் மட்டுமே பார்க்கமுடிந்த இதுபோன்ற புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களை நேரில் பார்ப்பதும் அவர்கள் தங்கள் மீது அக்கறை காட்டுவதை பார்ப்பதும் அரிதான ஒன்று. 

அதிகாரத்திலுள்ளவர்கள் (நாமெல்லாருக்கும் ஏதோ ஒருவிதத்தில் அதிகாரம் இருக்கிறது), பலவீனமானவர்களைக் கவனித்துக்கொள்ளவும், கஷ்டப்படுகிறவர்களைக் கவனிக்கவும், சரீர பெலவீனம் கொண்டவர்களை பராமரிக்கவும் வேண்டும் என்று வேதம் அறிவுறுத்துகிறது. இருந்தாலும் அப்படிப்பட்ட தேவையிலுள்ளவர்களை நாம் அவ்வப்போது புறக்கணிக்கிறோம் (எசேக்கியேல் 34:6). எசேக்கியேல் தீர்க்கதரிசி இஸ்ரவேலின் தலைவர்களை அவர்களின் சுயநல சிந்தைக்காகவும், தேவையிலுள்ளவர்களை அலட்சியப்படுத்தியதற்காகவும் கண்டிக்கிறார். “மேய்ப்பருக்கு ஐயோ!… நீங்கள் பலவீனமானவைகளைப் பலப்படுத்தாமலும், நசல்கொண்டவைகளைக் குணமாக்காமலும்… அவைகளை ஆண்டீர்கள்” என்று எசேக்கியேல் தீர்க்கதரிசியின் மூலம் தேவன் அவர்களை எச்சரிக்கிறார்.  

நமது தனிப்பட்ட ஆர்வங்கள், தலைமைத்துவ சித்தாந்தங்கள் அல்லது பொருளாதாரக் கொள்கைகள், துன்பத்தில் இருப்பவர்களுக்கு அக்கறைக் காட்டுவதற்கு நமக்கு எந்த அளவிற்கு தடையாயிருக்கிறது? பலமுள்ளவர்கள் பலவீனர்களை நோக்கிப் பார்க்கிற ஒரு பாதையை தேவன் நமக்குக் காண்பிக்கிறார் (வச. 11-12).