ஹான்ஸ்லி பார்ச்மென்ட், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக்கொண்டார். டோக்கியோவில் நடைபெறும் தன்னுடைய அரையிறுதி ஒலிம்பிக் போட்டிக்கு செல்லுவதற்கு தவறான பேருந்தில் ஏறிவிட்டார். ஆனால் அதிர்ஷ்டவசமாக விளையாட்டில் உதவிசெய்யும் டிரிஜானா ஸ்டோஜ்கோவிச்சைச் சந்தித்தார். அவர் டாக்ஸியில் செல்லுவதற்கு சிறிது பணத்தைக் கொடுத்து உதவினாள். பார்ச்மென்ட், சரியான நேரத்திற்கு அரையிறுதிக்கு சென்று, 110 மீட்டர் தடகளப் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றார். அதற்கு பின்பதாக, அவர் ஸ்டோஜ்கோவிச்சைக் கண்டுபிடித்து அவளது உதவிக்கு நன்றி தெரிவித்தார்.

லூக்கா 17ஆம் அதிகாரத்தில், சமாரியவைச் சேர்ந்த குஷ்டரோகியை இயேசு சுகமாக்கியதின் நிமித்தம் அவருக்கு நன்றி சொல்லுவதற்கு ஒருவன் மாத்திரம் திரும்பி வந்த சம்பவத்தைக் குறித்து நாம் வாசிக்கிறோம் (வச. 15-16). இயேசு ஒரு கிராமத்திற்குள் பிரவேசிக்கிறார். அங்கு பத்து குஷ்டரோகிகளை சந்திக்கிறார். அவர் அனைவரும் சுகமடையும்படிக்கு விரும்பி, அனைவரும் கிருபையையும் வல்லமையையும் பெற்றுக்கொண்டனர். தாங்கள் சுகமானதைக் கண்டு பத்துபேரும் ஆச்சரிப்பட்டாலும், அதில் ஒருவன் மாத்திரம் திரும்பி வந்து இயேசுவுக்கு நன்றி செலுத்தினான். அவன் “உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி, அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்” (வச. 15-16). 

தேவனுடைய ஆசீர்வாதத்தை நாம் ஒவ்வொரு நாளும் பல விதங்களில் அனுபவிக்கிறோம். உபத்திரவப்படும் சரியான நேரத்தில் பதில் பெறுவது என்பது, எதிர்பாராத விதமாய் அந்நியரிடத்திலிருந்து நமக்குக் கிடைக்கும் ஆச்சரியமான பலனாய் இருக்கும். சிலவேளைகளில் அவருடைய ஆசீர்வாதங்கள் என்பது நல்ல தட்பவெப்ப நிலை, வெளியரங்கமான சில காரியங்களாய் கூட இருக்கலாம். அந்த நன்றியுள்ள சமாரியனைப் போல் நாமும் தேவனுடைய கிருபைகளுக்காய் அவருக்கு நன்றி செலுத்தக்கடவோம்.