நான் குழந்தையாயிருந்த போது, ஞாயிறு மாலை ஆலய ஆராதனையை எதிர்பார்த்திருப்பேன். அது அத்துணை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். ஞாயிறு இரவுகளில் அடிக்கடி, மிஷனரிகள் அல்லது கௌரவ பேச்சாளர்கள் செய்தி தருவது வழக்கம். அவர்களுடைய செய்திகள் என்னை அதிகம் கவர்ந்ததற்குக் காரணம், அவர்கள் தங்கள் குடும்பம், நண்பர்கள், தங்கள் வீடு, உடைமைகளை, எதிர்காலம் எல்லாவற்றையும் விட்டு விட மனமுவந்ததோடு, ஒன்றும் தெரியாத, புதுமையான, சில வேளைகளில் பாதுகாப்பற்ற இடங்களுக்குச் சென்று தேவனுக்கு ஊழியம் செய்ய தங்களை அர்ப்பணித்ததேயாகும்.

அந்த மிஷனரிகளைப் போன்று, எலிசா அநேக காரியங்களை விட்டு விட்டு தேவனைப் பின் தொடர்ந்தார்.
(1 இரா. 19:19-21). எலியாவின் மூலம் தேவன் அவரைப் பணி செய்ய அழைக்கும் முன்னர், நமக்கு எலிசாவைப் பற்றி அதிகம் தெரியாது. அவர் ஒரு விவசாயி என்பது மட்டும் தான் தெரியும். எலியா, எலிசா தன்னுடைய வயல்களில் உழுது கொண்டிருக்கும் போது சந்தித்து, தன்னுடைய சால்வையை அவருடைய தோள் மீது போட்டு (அது தீர்க்கதரிசியாவதற்கு ஓர் அடையாளம்) தன்னைப் பின் தொடருமாறு அழைக்கின்றார். அவரும் தன் தாயையும், தந்தையையும் முத்தமிட்டு திரும்பி வர தனக்கு அனுமதி அளிக்குமாறு கேட்டதுடன், எலிசா தன்னுடைய ஏர் மாடுகளை அர்ப்பணித்து, அவற்றை அடித்து, ஏர் மரங்களால் அவற்றைச் சமைத்து, தன் பெற்றோரிடம் சொல்லி விட்டு எலியாவைப் பின் தொடர்ந்தான்.

நம்மில் அநேகர் குடும்பத்தையும் நண்பர்களையும் விட்டு விட்டு தேவனுக்குப் பணி செய்யும்படி முழு நேர மிஷனரிகளாக அழைக்கப்படாவிட்டாலும், தேவன் நம் அனைவரையும் அவரைப் பின்பற்றும்படி விரும்புகின்றார். தேவன் அவனவனுக்குப் பகிர்ந்ததெப்படியோ, கர்த்தர் அவனவனை அழைத்ததெப்படியோ அப்படியே அவனவன் நடக்கக்கடவன் (1 கொரி. 7:17).

என்னுடைய அனுபவத்திலிருந்து, நாம் நம்முடைய வீட்டை விட்டு வெளியே வராவிட்டாலும், நாம் எங்கிருந்தாலும் தேவனுக்குப் பணி செய்வதென்பது பரபரப்பாகவும் சவால் நிறைந்ததாகவும் இருக்கும்.