ஹடாஷாவை நிரந்தரமாக பயம் ஒட்டிக் கொண்டது. பிரான்கைன் ரிவர் என்பவர் எழுதிய ‘’எ வாய்ஸ் இன் த வின்ட்’’ என்ற புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த கற்பனைக் கதையின் கதாப்பாத்திரம் தான் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹடாஷா என்ற யூத குல சிறுமி. ஒரு ரோம வீட்டில் அடிமையாக ஹடாஷா இருந்தபோது, அவள் கிறிஸ்து மீதுள்ள நம்பிக்கையின் காரணமாக தான் துன்புறுத்தப்படலாம் என பயந்து கொண்டிருந்தாள். கிறிஸ்தவர்கள் ரோமர்களால் வெறுக்கப்பட்டனர். அநேக கிறிஸ்தவர்கள் தூக்குத் தண்டனைக்குள்ளாயினர் அல்லது சிங்கங்களின் அரங்கில் தூக்கி வீசப்பட்டனர் என்பது அவளுக்குத் தெரியும். அவள் சோதிக்கப்படும்போது தன்னுடைய உண்மைக்காக நிற்கத் தகுந்த தைரியம் அவளுக்கிருக்குமா?

அவள் மிகவும் பயந்த காரியம் உண்மையில் நடந்த போது, அவளுடைய எஜமானியும், கிறிஸ்தவத்தை வெறுத்த ரோம அதிகாரிகளும் அவளுக்கு எதிராக வருகின்றனர். அவளுக்கு இரண்டே வாய்ப்புகள் உள்ளன. ஒன்று கிறிஸ்துவின் மீதுள்ள நம்பிக்கையை விட்டு விடல், மற்றொன்று சிங்கங்களின் அரங்கினுள் தள்ளப்படல். ஆனால் எப்பொழுது அவள் இயேசுவே கிறிஸ்து என அறிக்கை செய்தாளோ அப்பொழுதே அவளுடைய பயம் அவளை விட்டு ஒழிந்தது. அவள் சாவை எதிர்நோக்கிய போதும், தைரியமாக நின்றாள்.

சில வேளைகளில் நாம் சரியானவற்றைச் செய்வதற்காக நாம் துன்புறுத்தப்படலாம் என வேதாகமம் நமக்கு நினைப்பூட்டுகிறது. சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது, அல்லது உலகத்தாரைப் போல வாழாமல் தேவனைப் போல வாழும் போது நாம் துன்புறுத்தப்படலாம். ஆனால் பயப்படாதிருங்கள் (1 பேது. 3:14), கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம் பண்ணுங்கள் (வச. 15) என்று வேதாகமம் நமக்குச் சொல்லுகிறது. ஹடாஷாவின் முக்கிய யுத்தம் அவளுடைய இருதயத்தில் ஆரம்பித்தது. இறுதியாக அவள் இயேசுவைத் தேர்ந்து கொள்ள தன் மனதைத் திடப்படுத்திக் கொண்டபோது, தன் விசுவாசத்தில் உண்மையாயிருக்க அவளுக்கு தைரியம் கிடைத்து விட்டது.         

நாமும் தேவனை கனப்படுத்த முடிவெடுக்கும் போது அவர் நாம் தைரியமாக நிற்கவும் எதிர்ப்புகளின் மத்தியில் பயத்தை மேற்கொள்ளவும் உதவி செய்கிறார்.