வகை  |  odb

தேவனிடம் உண்மையாய் இருத்தல்

நான் என் தலையைத் தாழ்த்தி, கண்களை மூடி, விரல்களைக் கோர்த்து, ஜெபிக்க ஆரம்பிக்கிறேன். “அன்பின் ஆண்டவரே, உமது பிள்ளையாக இன்று உம்மிடத்தில் வருகிறேன். உமது வல்லமை, உமது நன்மை ஆகியவற்றை ஏற்று, அறிக்கையிடுகிறேன்....” திடீரென்று என் கண்கள் தானாக, வேகமாகத் திறக்கின்றன. நாளை வகுப்பில் கொடுக்கவேண்டிய வரலாற்றுப் பயிற்சியை என் மகன் இன்னும் முடிக்கவில்லை என்ற நினைவு வருகிறது. வகுப்புகள் முடிந்தபிறகு, அவனுக்கு கூடைப்பந்தாட்ட பயிற்சி இருப்பது நினைவு வருகிறது. நடு இரவு வரை கண் விழித்து தன் பள்ளிக்கான பயிற்சிகளை அவன் செய்வதாகக் கற்பனை செய்கிறேன். இதனால் அவன் அதிகக் களைப்பாகி, காய்ச்சலில் படுத்து விடுவான் என்று கவலைப்படுகிறேன்.
 
ஜெபத்தின்போது ஏற்படும் கவனச் சிதறல்கள் பற்றி, சி. எஸ். லூயிஸ், த ஸ்க்ரூடேப் லெட்டர்ஸ் (The Screwtape Letters)என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார். நமது மனம் அலைபாயும்போது, மன உறுதியை பயன்படுத்தி, நமது நினைவுகளை மீண்டும் ஜெபத்தை நோக்கி ஒருமுகப்படுத்துவதாகக் குறிப்பிடுகிறார். ஆனாலும், இந்தக் கவனச்சிதறலை ஏற்றுக்கொண்டு, “நமது கவனச்சிதறலை நமது பிரச்சனையாக தேவனிடம் ஒப்படைத்து, அதையே நமது ஜெபத்தின் மையக் கருத்தாக மாற்றுமாறு” லூயிஸ் ஆலோசனை தருகிறார்.
 
தீராத கவலை அல்லது பாவகரமான சிந்தனை நம் ஜெபத்திற்குத் தடையாக இருக்கும்போது, கார்தருடானாஉரையாடலில், அதையே பிரதான கருத்தாக எடுத்துக்கொள்ளலாம். நாம் தேவனிடம்பேசும்போது, நமது கவலைகள், பயங்கள், போராட்டங்கள் பற்றி நாம் வெளிப்படையாகப் பேசுவதையே அவர் விரும்புகிறார். நாம் சொல்லும் எதைக் குறித்தும் அவர் ஆச்சரியப்படுவதில்லை. நமது நெருங்கிய நண்பர் நாம் பேசுவதை எப்படி கவனமாகக் கேட்பாரோ அதேபோல் நம்மேல் ஈடுபாடு கொண்டவராக கர்த்தர் இருக்கிறார். அதனால்தான் நம் கவலைகளை அவரிடத்தில் ஒப்புவிக்க ஊக்குவிக்கப்படுகிறோம் – ஏனென்றால் அவர் நம்மை விசாரிக்கிறவர் (1 பேதுரு 5:7).

மாறாத அன்பு

நான் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது, பல்கலைக்கழக டென்னிஸ் அணியில் விளையாடினேன். என் பதின்பருவத்தில், என் திறமையை மேம்படுத்துவதற்காக, எங்கள் வீட்டிலிருந்து சற்றுத் தள்ளியிருந்த காங்க்ரீட் தரை கொண்ட அரங்கில் பல மணி நேரம் பயிற்சி செய்தேன்.
 
கடைசியாக அந்த ஊருக்கு நான் சென்றபோது, நான் விளையாடிய நாட்களை நினைவுகூரவும், அங்கே விளையாடுபவர்களைப் பார்க்கவும் நினைத்து, நான் பயிற்சி செய்த அரங்கிற்குச் சென்றேன். ஆனால் எனக்குப் பரிச்சயமான அந்த பழைய அரங்கம் அங்கே இல்லை. காலி மைதானமாக இருந்த அந்த இடத்தில், காற்றில் அவ்வப்போது தலையசைத்த ஒன்றிரண்டு களைச்செடிகள் மட்டுமே தென்பட்டன.
 
நான் அங்கு சென்ற அந்த மதியப்பொழுது, நமது குறுகிய வாழ்வை நினைவுபடுத்தும் ஒரு சம்பவமாகவே எனக்கு இன்றுவரை இருக்கிறது. என் இளவயதின் ஆற்றலை செலவழித்த இடங்களில் ஒன்று,இன்று இல்லவே இல்லை. அந்த அனுபவம் “மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது; வெளியின் புஷ்பத்தைப்போல் பூக்கிறான். காற்று அதின் மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று; அது இருந்த இடமும் இனி அதை அறியாது. கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேல் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது” (சங்கீதம் 103:15-17), என்று வயதுசென்ற தாவீது கூறிய உண்மையை எனக்கு உணர்த்தியது.
 
நமக்கு வயதாகும். நம்மைச் சுற்றியிருக்கும் உலகம் மாறும். ஆனால் தேவனின்அன்பு ஒருபோதும் மாறுவதில்லை. அவரைத் தேடுபவர்களை அவர் பாதுகாக்கிறார் என்று எப்போதும் நம்பிக்கை கொள்ளலாம்.
 

சுய பெலத்தால்

ஆண் அழகர் போட்டியில் பங்கேற்பவர்கள், மிகக் கடுமையான பயிற்சிகளைச் செய்வார்கள். முதல் சில மாதங்களுக்கு உடல் அளவையும், வலிமையையும் அதிகரிக்க முக்கியத்துவம் கொடுப்பார்கள். போட்டி நெருங்கும் சமயத்தில், தசைகளை மறைக்கும் கொழுப்பைக் கரைப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். போட்டிக்கு சில நாட்கள் முன்பு, தசை நன்கு தெரியவேண்டும் என்பதற்காக, எப்போதும் குடிப்பதைவிட குறைவான அளவு தண்ணீர் குடிப்பார்கள். ஊட்டச்சத்து உணவுகள் சாப்பிடுவதைக் குறைப்பதால், பார்ப்பதற்கு வலிமையாகத் தெரிந்தாலும், போட்டி தினத்தன்றுதான் மிக பலவீனமாக இருப்பார்கள்.
 
இதற்கு எதிர்மறையான விஷயத்தை 2 நாளாகமம் 20ல் வாசிக்கிறோம் – கர்த்தரின் வலிமையை அனுபவிப்பதற்காக, பலவீனத்தை ஏற்றுக்கொள்வது. “உமக்கு விரோதமாய் ஏராளமான ஜனங்கள் வருகிறார்கள்,” என்று மக்கள் யோசபாத் அரசனிடம் கூறினார்கள். எனவே தனக்கும், தன் ஜனங்களுக்கும் உணவை ஒறுத்து, “யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான்” (வச. 3). பின்பு தேவனின் உதவியை நாடினார்கள். இறுதியில் தன் படையை தயார்படுத்தியபோது, கர்த்தரைத் துதித்துப்பாடும் பாடகர்களை படைக்கு முன்பாக நிறுத்தினான் (வச. 21). அவர்கள் பாட ஆரம்பித்தபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்தவர்களை ஒருவருக்கு விரோதமாய் ஒருவரை கர்த்தர் எழுப்பினதால், அவர்கள் தோல்வியடைந்தார்கள் (வச. 22).
 
யோசபாத்தின் முடிவு கர்த்தர்பேரில் இருந்த திடமான விசுவாசத்தைக் காட்டுகிறது. தன்னுடைய சுய வலிமை மீதும் தன் படை வலிமை மீதும் சாராமல், கர்த்தரைச் சார்ந்திருப்பதைத் தெரிந்துகொண்டான். நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நாமே கஷ்டப்பட்டு நம் சுய பெலத்தால் சரிசெய்ய முயற்சிக்காமல், நாம் கர்த்தரிடம் ஒப்புவித்து, அவரை நம் பெலனாக ஏற்றுக்கொள்வோம்.

பாலங்களைக் கட்டுதல்

எங்கள் குடியிருப்புப் பகுதியில்,வீடுகளைச் சுற்றி, உயரமான காங்க்ரீட் சுவர்கள் காணப்படும். பல சுவர்களின்மேல் மின்சார முள்கம்பிகளும் இருக்கும். திருடர்கள் வருவதைத் தடுப்பதற்காக இவை போடப்பட்டுள்ளன.
 
எங்கள் பகுதியில் அடிக்கடி மின்சாரம் தடைபடும். இதனால் பல சமயங்களில் எங்கள் வீட்டின் முன்புறம் உள்ள அழைப்புமணி  வேலை செய்வதில்லை. இதுபோன்ற சமயங்களில், உயரமான சுற்றுச்சுவர் இருப்பதால் எங்களைப் பார்க்க வருபவர்கள் சுட்டெரிக்கும் வெயில் அல்லது கொட்டும் மழையில் வெளியில் நிற்க நேரிடும். அழைப்புமணி வேலை செய்தாலும்,வந்திருப்பவர் யார் என்பதைப் பொறுத்தே அவர்களை உள்ளே அழைப்போம். எங்கள் சுற்றுச்சுவர் திருடர்கள் வராமல் தடுத்தாலும், அவை மற்றவர்களிடம் பாகுபாடு காண்பிக்கும் சுவர்களாக மாறிவிடுகின்றன. பார்க்க வந்திருப்பவர் அத்துமீறி நுழைபவராக இல்லாதபோதும் அந்தச் சுவர்கள் ஒரு தடையாக இருக்கின்றன.
 
இயேசு கிணற்றருகில் சந்தித்த  சமாரியப் பெண்ணுக்கும் பாகுபாடு குறித்த குழப்பம் ஏற்பட்டது. யூதர்களும் சமாரியர்களும் சம்பந்தம் கலப்பதில்லை. எனவே இயேசு தண்ணீர் கேட்டபோது, 'நீர் யூதனாயிருக்க,சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத் தா என்று எப்படிக் கேட்கலாம்?" (யோவான் 4:9) என்றாள். அவள் இயேசுவிடம் பேசியபோது,அவளிடமும்,அவள் அயலாரிடமும் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு அனுபவத்தைப் பெற்றாள் (வச. 39-42). விரோதம், பாரபட்சம் போன்ற தடுப்புச் சுவர்களைத் தகர்க்கும் பாலமாக இயேசு செயல்பட்டார்.
 
வேற்றுமை உணர்வு நம்மிடம் இருப்பது உண்மை. நம் வாழ்வில் அதை அடையாளப்படுத்த வேண்டும். எந்த தேசத்தவர்,அவர் சமூக அந்தஸ்து, புகழ் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல், இயேசு காட்டியதுபோல நாமும் மக்களைச் சந்திக்கலாம். அவர் பாலங்களைக் கட்ட வந்தார்.
 

நட்சத்திரங்களுக்கு அப்பால்

2011ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா (NASA-National Aeronatics and space association), விண்வெளி ஆராய்ச்சியில் முப்பது ஆண்டுகளை நிறைவு செய்ததைக் கொண்டாடியது. அந்த முப்பது ஆண்டுகளில் விண்கலன்கள் 355 பேரை விண்வெளிக்கு அழைத்துச் சென்றன. அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தை ஏற்படுத்த உதவினர். ஐந்து விண்கலன்களுக்குப் பணி ஓய்வு கொடுத்தபிறகு,தற்போது தொலை-தூர விண்வெளி ஆராய்ச்சியில் நாசா கவனம் செலுத்துகிறது.
 
பிரபஞ்சத்தின் பிரமாண்டத்தைப் புரிந்துகொள்ள, மனித இனம் பெருமளவில் பணத்தையும், நேரத்தையும் செலவிட்டுள்ளது. சில விண்வெளி வீரர்கள் தங்கள் உயிரையும் தியாகம் செய்துள்ளனர். ஆனால் கர்த்தரின்மகத்துவத்திற்கான சான்று நம்மால் அளவிட முடியாதபடி பரந்து கிடக்கிறது.
 
இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கி, காப்பற்றுபவர் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் பேர்சொல்லி அழைக்கிறார் (ஏசா. 40:26) என்பதை நினைக்கும்போது, தேவனின் மகத்துவத்தை ஏன் தாவீது புகழ்ந்து பாடினார் (சங். 8:1) என்பது புரியும். கர்த்தர்ஸ்தாபித்த சந்திரனிலும், நட்சத்திரங்களிலும் (வச. 3) அவரது விரல் ரேகைகள் உள்ளன. வானத்தையும், பூமியையும் படைத்த கர்த்தர் அவற்றை ஆட்சி செய்தாலும், அவர் அன்புப் பிள்ளைகளாகிய நம் மேல் தனிப்பட்ட முறையில் அக்கறைகொண்டு நம் அருகில் இருக்கிறார் (வச. 4). நம்மிடம் ஒப்படைத்துள்ள இந்த உலகத்தைப் பாதுகாக்கவும், ஆராயவும் நமக்கு ஆற்றலையும், பொறுப்பையும், உரிமையையும் கொடுத்துள்ளார் (வச. 5-8).
 
நட்சத்திரங்கள் கொட்டிக்கிடக்கும் இரவு நேர ஆகாயத்தை நாம் ஆராய்ச்சி செய்யும்போது, நம்மைப் படைத்தவர், விருப்பத்தோடும், உறுதியோடும் அவரைத் தேடும்படி நம்மை அழைக்கிறார். நம் உதடுகளில் இருந்து வெளிப்படும் ஒவ்வொரு ஜெபத்தையும், ஸ்தோத்திரப் பாடலையும் அவர் கேட்கிறார்.

வீட்டிற்கு வழியைத் தேடுதல்

சில சமயங்களில் வாழ்க்கைப் பயணம் கடினமாக இருக்கும் போது, நாம் பிரமித்து, இந்தக் கஷ்டத்திற்கு முடிவே இல்லையா என்று நினைக்கிறோம். என்னுடைய குடும்ப வாழ்க்கையில் இப்படிப்பட்ட ஒரு தருணத்தில், என் மனைவி ஒரு நாள் காலை தியானத்திற்குப் பின் ஒரு புதிய பாடத்தைக் கற்றுக் கொண்டாள். 'நாம் இருட்டான வேளையில் கற்றுக் கொள்ளும் பாடத்தை வெளிச்சத்திலும் மறக்கக் கூடாது என்று கர்த்தர்விரும்புகிறார்" என்று கூறினாள்.
 
பவுலும் அவரோடு இருந்தவர்களும் ஆசியாவில் கொடுமையான துன்பங்களை அனுபவித்ததை விளக்கிய பின், இதேபோன்ற சிந்தனையை பவுல் 2 கொரிந்தியர் 1ல் எழுதுகிறார். எப்படிப்பட்ட இருட்டான தருணங்களையும் ஆண்டவர் சரிசெய்ய முடியும் என்பதை கொரிந்து பட்டணத்தார் அறிந்து கொள்ள வேண்டும் என்று பவுல் விரும்புகிறார். நாங்கள் மற்றவர்களுக்கு ஆறுதல் செய்யத்தக்கதாக, எங்களுக்கு அவர் ஆறுதல் செய்கிறார் (வச. 4) என்று கூறுகிறார். பவுலும் அவரைச் சார்ந்தவர்களும், தாங்கள் எதிர்கொண்ட சோதனைகளின் போது கர்த்தரிடத்தில்கற்றுக் கொண்டவற்றை கொரிந்து பட்டணத்தார் அதேபோன்ற கஷ்டங்களை சந்திக்கும் போது, ஆறுதல்படுத்தவும் ஆலோசனை வழங்கவும் உபயோகப்படுத்தினர். கேட்க விருப்பமுடையவர்
களாய் இருந்தால், தேவன் நமக்கும் கற்றுத் தருகிறார். நம்முடைய சோதனைகளில் நாம் கற்றுக் கொண்டவைகளை மற்றவர்களுக்கு உதவ கற்றுத் தருவதன்மூலம் நம் சோதனைகளில் இருந்து நமக்கு விடுதலை அளிப்பார்.
 
நீங்கள் இப்போது இருட்டில் இருக்கிறீர்களா? பவுலின் வார்த்தைகளினாலும், அனுபவத்தினாலும் ஊக்கம் அடையுங்கள். இப்போதே ஆண்டவர் உங்களுடைய நடைகளை வழிநடத்துகிறார் என்றும், அவருடைய உண்மைகளை  உங்களுடைய இருதயத்தில் பதிக்கிறார் என்றும் நம்புங்கள். இதனால் இதேபோன்ற சூழ்நிலைகளில் உள்ள மற்றவர்களுடன் உங்களால் இதைப் பகிர்ந்து கொள்ள முடியும். நீங்கள் முன்பு அங்கே இருந்ததால், வீட்டிற்கு வழி உங்களுக்குத் தெரியும்.
 

வாழ்க்கைப் பயணத்திற்கு பெலன்

கிறிஸ்தவ வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஒரு கதை உயர்ந்த ஸ்தலங்களில் பின்னங்கால்கள் (Hinds Feet on High Places)என்ற உருவகக்கதை, ஆபகூக் 3:19 ஐ அடிப்படையாகக் கொண்டது. இந்தக் கதை “அதிக-அச்சம்"  (Much-Afraid)என்ற கதாபாத்திரம் “மேய்ப்பரோடு" (Shepherd)செல்லும் பயணத்தைப் பற்றியது.
 
“அதிக-அச்சம்" பயத்தின் மிகுதியால் “மேய்ப்பர்" தன்னை தூக்கிச் செல்லும்படி கேட்கிறாள்.
 
“நீயாக ஏறி வரட்டும் என்று உன்னை இங்கே விட்டுச் செல்லாமல், உயர்ந்த ஸ்தலங்கள் வரைக்கும் உன்னைத் தூக்கிச் செல்ல என்னால் முடியும். ஆனால், நான் அவ்வாறு செய்தால், உன்  பின்னங்கால்கள் நன்றாக பலப்படாது. என் துணையாக நான் போகும் இடங்களுக்கு உன்னால் என்னோடு வர முடியாது" என்று மேய்ப்பர் அன்போடு சொல்கிறார்.

பழைய ஏற்பாடு ஆபகூக்குடைய கேள்விகளை (உண்மையைச் சொன்னால், என் கேள்விகளும்கூட) “அதிக அச்சம்"  எதிரொலிக்கிறாள், “நான் ஏன் துன்பம் அனுபவிக்க வேண்டும்?" “என் பயணம் ஏன் கடினமாக இருக்க வேண்டும்?"

ஆபகூக் கி.மு. 7 ம் நூற்றாண்டின் இறுதியில், இஸ்ரவேலர் அடிமைகளாவதற்கு முன் யூதாவில் வசித்து வந்தார். இந்த தீர்க்கதரிசி வாழ்ந்த சமுதாயம், சமூக அநீதியை தட்டிக் கேட்காமல் இருந்தது. பாபிலோனியர் எப்போது வேண்டுமானாலும் படையெடுத்து வரலாம் என்ற பயத்திலேயே வாழ்ந்தார்கள் (ஆப. 1:2-11). ஆண்டவர் தலையிட்டு கஷ்டத்தை நீக்கும்படி ஆபகூக் ஆண்டவரிடத்தில் கேட்டார் (1:13). ஆண்டவர் தன்னுடைய வேளையில் நியாயம் செய்வதாகக் கூறினார் (2:3).
 
ஆபகூக் விசுவாசத்தில் கர்த்தரைநம்பினார். அந்தக் கஷ்டம் நீங்காவிட்டால் கூட கர்த்தர்தன்னுடைய பெலனாக இருப்பார் என்று இந்த தீர்க்கதரிசி நம்பினார்.
 
நம் கஷ்டத்தை பொறுத்துக்கொள்ள நம் பெலனாக இருந்து ஆண்டவர் உதவி செய்வார் என்பதில் நாமும் ஆறுதல் பெறலாம். கிறிஸ்துவுடனான நம் ஐக்கியத்தை வலுப்படுத்த நமது வாழ்க்கைப் பயணத்தின் கடினமான சவால்களை ஆண்டவர் உபயோகிப்பார்.

அதிகாரி மிக்லியோவின் மனம்

காவல் நிலையத்திற்குத் திரும்பி வந்த அதிகாரி மிக்லியோ களைப்புடன் சுவரில் சாய்ந்து அமர்ந்தார். குடும்ப வன்முறை சம்மந்தப்பட்ட ஒரு அழைப்பை கவனிக்கச் சென்று வந்ததில் அவரது பாதி வேலை நேரம் கடந்துவிட்டது. அதன் பின்விளைவு ஒரு வாலிபனைக் காவலில் வைக்கும்படியாகவும், ஒரு இளம் பெண்ணை மருத்துவ அவசரப் பிரிவில் சேர்க்கும்படியாகவும் இருந்தது. அதிர்ச்சியில் இருந்த அந்தப் பெண்ணின் தாய் இது எப்படி ஆயிற்று என்று கவலைப்பட வைத்தது. இந்த அழைப்பு இளம் அதிகாரி மிக்லியோவை அதிக நாட்கள் பாதித்தது.
 
'நீ என்ன செய்ய முடியும், விக்" என்று அவருடைய சார்ஜென்ட் அனுதாபத்துடன் கூறினார். ஆனால் அவருடைய வார்த்தைகள் வெறுமையாய் ஒலித்தன. சில காவல் அதிகாரிகளுக்கு வேலையை அலுவலகத்திலேயே விட்டுச் செல்ல முடிந்தது. ஆனால் விக் மிக்லியோவினால் அது போல் முடியவில்லை. அதுவும் இது போன்ற கடுமையான வழக்கினை விட முடியவில்லை.
 
காவல் அதிகாரி மிக்லியோவின் மனம் இயேசுவின் இரக்கத்தைப் பிரதிபலிக்கின்றது. கிறிஸ்துவின் சீஷர்கள் ஒரு கேள்வியோடு வருகிறார்கள், 'பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான்?" .. இயேசு ஒரு சிறுபிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து, 'நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப் போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள்" (வச. 3) என்று சீஷர்களிடத்தில் கூறினார். பின்பு அவர் சிறுபிள்ளைகளை புண்படுத்துவோருக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுத்தார் (வச. 6). சிறுபிள்ளைகள் இயேசுவிற்கு அதிகப் பிரியமாக இருப்பதால் 'அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமூகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள்" (வச. 10) என்று அவர் நமக்குச் சொல்லுகிறார்.
 
சிறுபிள்ளைகள் மேல் அன்பு வைத்த இயேசு நம் மேலும் அன்பு வைத்துள்ளார் என்பது எவ்வளவு ஆறுதல் அளிக்கிறது. அதனால்தான் சிறுபிள்ளைகளின் விசுவாசத்தோடு, அவருடைய பிள்ளைகளாகும்படி நம்மையும் அழைக்கிறார்.

உதவிக்கோர் அழைப்பு

2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட மின் தூக்கி (LIFT) விபத்தில் ஐந்து பேர் மரணமடைந்தனர், ஐம்பத்தொன்று பேர் காயமடைந்தனர். நியூயார்க் பட்டணத்தில் ஒரு பிரச்சாரத்தைக் குறித்து விளம்பரம் பண்ணப்பட்டது. ஏதோவொரு மோசமான விளைவு ஏற்படும் போது, மக்கள் எவ்வாறு அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டுமென கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தனர். ஏதோவொரு தவறு ஏற்படும் போது மக்கள் தங்களைக் காப்பாற்ற முயற்சிக்கும் போதுதான் மோசமான விளைவுகள் ஏற்படுகின்றன. மிகச் சிறந்த செயல் என்னவெனில் “தெரிவி, அமைதியாகக் காத்திரு” என்பதே அதிகாரிகளின் ஆலோசனை. மக்களை காயத்திலிருந்தும், அவர்களின் இக்கட்டிலிருந்தும் உடனடியாக விடுவிக்க, நியூயார்க் நகர கட்டட அதிகாரிகள் அர்ப்பணிப்போடு செயல்படுவர்.

அப்போஸ்தலர் புத்தகத்தில் பேதுரு, நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள முடியாது என்பதைப் பற்றி பிரசங்கம் செய்கின்றார். இப்புத்தகத்தை எழுதிய லூக்கா சில முக்கியமான நிகழ்வுகளைக் குறிப்பிடுகின்றார். அதில் இயேசு கிறிஸ்துவின் விசுவாசிகள் தங்களுக்குத் தெரியாத பாஷைகளில் பேசுவதைக் குறிப்பிடுகின்றார் (அப். 2:1-2) பேதுரு எழுந்து தன்னுடைய யூத சகோதர, சகோதரிகளுக்கு அதனை விளக்குகின்றார். அவர்கள் காண்பது முந்நாளில் உரைக்கப்பட்ட ஒரு தீர்க்கதரிசனத்தின் நிறைவேறல் என்பதை விளக்குகின்றார் (யோவேல் 2:28-32) பரிசுத்த ஆவி ஊற்றப்படுவதையும், இரட்சிப்பின் நாளையும் சுட்டிக் காண்பிக்கின்றார். பாவத்திலிருந்தும், அதன் விளைவுகளிலிருந்தும் தங்களை விடுவிக்குமாறு இயேசுவை நோக்கிக் கூப்பிட்டபோது, பரிசுத்த ஆவியானவரின் ஆசீர்வாதம் ஊற்றப்பட்டதை அவர்கள் கண்ணாரக் கண்டார்கள். அப்பொழுது பேதுரு கர்த்தருடைய நாமத்தைத் தொழுது கொள்ளுகிறவர்களுக்கும் அவரை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும் இந்த இரட்சிப்பு கொடுக்கப்படும் என விளக்குகின்றார் (அப். 2:21) இவ்வாறு நாம் தேவனண்டை கிட்டிச் சேர்வது நாம் சட்டங்களைக் கைக்கொண்டதால் கிடைத்ததல்ல, இயேசுவை ஆண்டவர், மேசியா என ஏற்றுக் கொண்டதாலேயே கிடைத்தது.

நாம் பாவத்தில் சிக்குண்டிருந்தால் நம்மால் நம்மை விடுவித்துக் கொள்ள முடியாது. நாம் விடுதலை பெற ஒரே நம்பிக்கையென்னவெனில், இயேசுவே நமது தேவனும் மேசியாவுமானவர் என ஏற்றுக் கொள்வதேயாகும்.