கிறிஸ்தவ வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஒரு கதை உயர்ந்த ஸ்தலங்களில் பின்னங்கால்கள் (Hinds Feet on High Places) என்ற உருவகக்கதை, ஆபகூக் 3:19 ஐ அடிப்படையாகக் கொண்டது. இந்தக் கதை “அதிக-அச்சம்”  (Much-Afraid) என்ற கதாபாத்திரம் “மேய்ப்பரோடு” (Shepherd) செல்லும் பயணத்தைப் பற்றியது.

“அதிக-அச்சம்” பயத்தின் மிகுதியால் “மேய்ப்பர்” தன்னை தூக்கிச் செல்லும்படி கேட்கிறாள்.

“நீயாக ஏறி வரட்டும் என்று உன்னை இங்கே விட்டுச் செல்லாமல், உயர்ந்த ஸ்தலங்கள் வரைக்கும் உன்னைத் தூக்கிச் செல்ல என்னால் முடியும். ஆனால், நான் அவ்வாறு செய்தால், உன்  பின்னங்கால்கள் நன்றாக பலப்படாது. என் துணையாக நான் போகும் இடங்களுக்கு உன்னால் என்னோடு வர முடியாது” என்று மேய்ப்பர் அன்போடு சொல்கிறார்.

பழைய ஏற்பாடு ஆபகூக்குடைய கேள்விகளை (உண்மையைச் சொன்னால், என் கேள்விகளும்கூட) “அதிக அச்சம்”  எதிரொலிக்கிறாள், “நான் ஏன் துன்பம் அனுபவிக்க வேண்டும்?” “என் பயணம் ஏன் கடினமாக இருக்க வேண்டும்?”

ஆபகூக் கி.மு. 7 ம் நூற்றாண்டின் இறுதியில், இஸ்ரவேலர் அடிமைகளாவதற்கு முன் யூதாவில் வசித்து வந்தார். இந்த தீர்க்கதரிசி வாழ்ந்த சமுதாயம், சமூக அநீதியை தட்டிக் கேட்காமல் இருந்தது. பாபிலோனியர் எப்போது வேண்டுமானாலும் படையெடுத்து வரலாம் என்ற பயத்திலேயே வாழ்ந்தார்கள் (ஆப. 1:2-11). ஆண்டவர் தலையிட்டு கஷ்டத்தை நீக்கும்படி ஆபகூக் ஆண்டவரிடத்தில் கேட்டார் (1:13). ஆண்டவர் தன்னுடைய வேளையில் நியாயம் செய்வதாகக் கூறினார் (2:3).

ஆபகூக் விசுவாசத்தில் கர்த்தரைநம்பினார். அந்தக் கஷ்டம் நீங்காவிட்டால் கூட கர்த்தர்தன்னுடைய பெலனாக இருப்பார் என்று இந்த தீர்க்கதரிசி நம்பினார்.

நம் கஷ்டத்தை பொறுத்துக்கொள்ள நம் பெலனாக இருந்து ஆண்டவர் உதவி செய்வார் என்பதில் நாமும் ஆறுதல் பெறலாம். கிறிஸ்துவுடனான நம் ஐக்கியத்தை வலுப்படுத்த நமது வாழ்க்கைப் பயணத்தின் கடினமான சவால்களை ஆண்டவர் உபயோகிப்பார்.