நான் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது, பல்கலைக்கழக டென்னிஸ் அணியில் விளையாடினேன். என் பதின்பருவத்தில், என் திறமையை மேம்படுத்துவதற்காக, எங்கள் வீட்டிலிருந்து சற்றுத் தள்ளியிருந்த காங்க்ரீட் தரை கொண்ட அரங்கில் பல மணி நேரம் பயிற்சி செய்தேன்.

கடைசியாக அந்த ஊருக்கு நான் சென்றபோது, நான் விளையாடிய நாட்களை நினைவுகூரவும், அங்கே விளையாடுபவர்களைப் பார்க்கவும் நினைத்து, நான் பயிற்சி செய்த அரங்கிற்குச் சென்றேன். ஆனால் எனக்குப் பரிச்சயமான அந்த பழைய அரங்கம் அங்கே இல்லை. காலி மைதானமாக இருந்த அந்த இடத்தில், காற்றில் அவ்வப்போது தலையசைத்த ஒன்றிரண்டு களைச்செடிகள் மட்டுமே தென்பட்டன.

நான் அங்கு சென்ற அந்த மதியப்பொழுது, நமது குறுகிய வாழ்வை நினைவுபடுத்தும் ஒரு சம்பவமாகவே எனக்கு இன்றுவரை இருக்கிறது. என் இளவயதின் ஆற்றலை செலவழித்த இடங்களில் ஒன்று,இன்று இல்லவே இல்லை. அந்த அனுபவம் “மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது; வெளியின் புஷ்பத்தைப்போல் பூக்கிறான். காற்று அதின் மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று; அது இருந்த இடமும் இனி அதை அறியாது. கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேல் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது” (சங்கீதம் 103:15-17), என்று வயதுசென்ற தாவீது கூறிய உண்மையை எனக்கு உணர்த்தியது.

நமக்கு வயதாகும். நம்மைச் சுற்றியிருக்கும் உலகம் மாறும். ஆனால் தேவனின்அன்பு ஒருபோதும் மாறுவதில்லை. அவரைத் தேடுபவர்களை அவர் பாதுகாக்கிறார் என்று எப்போதும் நம்பிக்கை கொள்ளலாம்.