ஆண் அழகர் போட்டியில் பங்கேற்பவர்கள், மிகக் கடுமையான பயிற்சிகளைச் செய்வார்கள். முதல் சில மாதங்களுக்கு உடல் அளவையும், வலிமையையும் அதிகரிக்க முக்கியத்துவம் கொடுப்பார்கள். போட்டி நெருங்கும் சமயத்தில், தசைகளை மறைக்கும் கொழுப்பைக் கரைப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். போட்டிக்கு சில நாட்கள் முன்பு, தசை நன்கு தெரியவேண்டும் என்பதற்காக, எப்போதும் குடிப்பதைவிட குறைவான அளவு தண்ணீர் குடிப்பார்கள். ஊட்டச்சத்து உணவுகள் சாப்பிடுவதைக் குறைப்பதால், பார்ப்பதற்கு வலிமையாகத் தெரிந்தாலும், போட்டி தினத்தன்றுதான் மிக பலவீனமாக இருப்பார்கள்.

இதற்கு எதிர்மறையான விஷயத்தை 2 நாளாகமம் 20ல் வாசிக்கிறோம் – கர்த்தரின் வலிமையை அனுபவிப்பதற்காக, பலவீனத்தை ஏற்றுக்கொள்வது. “உமக்கு விரோதமாய் ஏராளமான ஜனங்கள் வருகிறார்கள்,” என்று மக்கள் யோசபாத் அரசனிடம் கூறினார்கள். எனவே தனக்கும், தன் ஜனங்களுக்கும் உணவை ஒறுத்து, “யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான்” (வச. 3). பின்பு தேவனின் உதவியை நாடினார்கள். இறுதியில் தன் படையை தயார்படுத்தியபோது, கர்த்தரைத் துதித்துப்பாடும் பாடகர்களை படைக்கு முன்பாக நிறுத்தினான் (வச. 21). அவர்கள் பாட ஆரம்பித்தபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்தவர்களை ஒருவருக்கு விரோதமாய் ஒருவரை கர்த்தர் எழுப்பினதால், அவர்கள் தோல்வியடைந்தார்கள் (வச. 22).

யோசபாத்தின் முடிவு கர்த்தர்பேரில் இருந்த திடமான விசுவாசத்தைக் காட்டுகிறது. தன்னுடைய சுய வலிமை மீதும் தன் படை வலிமை மீதும் சாராமல், கர்த்தரைச் சார்ந்திருப்பதைத் தெரிந்துகொண்டான். நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை நாமே கஷ்டப்பட்டு நம் சுய பெலத்தால் சரிசெய்ய முயற்சிக்காமல், நாம் கர்த்தரிடம் ஒப்புவித்து, அவரை நம் பெலனாக ஏற்றுக்கொள்வோம்.