வகை  |  odb

கிழிக்கப்பட்ட திரை

எருசலேமைச் சுற்றியுள்ள பகுதிமுழுவதும், அது ஓர் இருண்ட மற்றும் துயரம் நிறைந்த நாளாகக் காணப்பட்டது. பட்டணத்தின் மதிற்சுவருக்கு வெளியே ஒரு மலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக திரள் கூட்ட மக்களை தன்னைப் பின்பற்றும்படி கவர்ந்திழுத்த ஒரு மனிதன், ஒரு கோர மரச்சிலுவையில் வேதனையாலும், அவமானத்தாலும் நிறைந்தவராய் தொங்கிக் கொண்டிருக்கின்றார். துக்கிப்பவர்களின் அழுகையும்,துயரம் நிறைந்த ஓலமும் கேட்கின்றது. பகலின் நடுவேளையில் சூரியன் தன் ஒளியினால் வானைப் பிரகாசிக்கச் செய்யாமல் மறைந்தது. சிலுவையில் அந்த மனிதனின் கொடுமையான வேதனைகள் முடிவிற்கு வந்தபோது அவர் உரத்த குரலில், “முடிந்தது” என்றார் (மத். 27:50, யோவா. 19:30).

அதே வேளையில் பட்டணத்திற்குள்ளேயிருந்த பெரிய தேவாலயத்தில் மற்றொரு சத்தம் கேட்கின்றது. அது ஒரு துணி கிழிக்கப்படும் சத்தம். அதிசயமாக எந்தவொரு மனிதனின் உதவியும் இல்லாமல், ஒரு பெரிய தடிமனான திரை, தேவாலயத்தில் பரிசுத்த ஸ்தலத்தையும் வெளிப்பகுதியையும் பிரித்த அந்தத் திரை மேலிருந்து கீழாக இரண்டாகக் கிழிந்தது (மத். 27:51).

அந்த கிழிக்கப்பட்ட திரை சிலுவையின் உண்மையை வெளிப்படுத்தியது. இப்பொழுது நாம் தேவனிடம் செல்லுவதற்கான ஒரு புதிய வழியைத் திறந்தது. சிலுவையில் தொங்கிய மனிதன் இயேசு தன்னுடைய இரத்தம் முழுவதையும் நமக்காக பலியாகச் சிந்திவிட்டார். இதுவே உண்மையும், போதுமானதுமான கடைசி பலி. இந்த பலியை (எபி. 10:10) விசுவாசிக்கிற யாவரும் பாவ மன்னிப்பை பெற்று தேவனோடுள்ள உறவில் மீண்டும் சேர்ந்து கொள்ளலாம் (ரோ. 5:6-11).

அந்த முதல் பெரிய வெள்ளிக்கிழமையின் இருளினூடே நாம் மிகச் சிறந்த செய்தியைப் பெற்றுக் கொண்டோம். நம்மை பாவத்திலிருந்து மீட்டு, தேவனோடு நாம் என்றென்றும் உறவை அனுபவிக்கும்படி இயேசு நமக்கு ஒரு புது வழியைத் திறந்துள்ளார் (எபி. 10:19-22). இந்த கிழிக்கப்பட்ட திரையின் செய்தியைக் கொடுத்த தேவனுக்கு நன்றி.

அந்த வேளையில்

நான் அந்த ஆம்புலன்ஸ் வண்டியின் உள்ளேயிருக்க, அதன் கதவை மூடவிருந்தனர். வாகனத்தின் வெளியே என்னுடைய மகன் என் மனைவியிடம் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான். என்னுடைய நினைவு தளர்ந்த நிலையில், நான் அவனை பெயர் சொல்லி அழைத்தேன். அவன் அதனைப் புரிந்த கொண்டபோது, நான் மெதுவாக அவனிடம், “நான் அவளை மிகவும் நேசிப்பதாக உன் அம்மாவிடம் சொல்லு” என்றேன்.

நான் அதனை என்னுடைய பிரியாவிடை என்று எண்ணினேன். இந்த வார்த்தைகளை என்னுடைய கடைசி வார்த்தைகளெனவும் நினைத்தேன். அந்த வேளையில் அது ஒன்றே எனக்கு மிக முக்கியமானதாகத் தோன்றியது.

இயேசுவும் தனது கடைசி இருண்ட நேரத்தைச் சகித்தபோது அவர் நம்மிடம் வெறுமனே நம்மை நேசிப்பதாக மட்டும் கூறவில்லை. அவர் தம் அன்பினைத் தெளிவாகக் காட்டினார். தன்னை இழிவுபடுத்தி, சிலுவையிலறைந்த சேவகர்களிடம் தமது அன்பைக் காட்டினார். “பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கின்றார்களே” என்றார் (லூக். 23:34) தன்னோடு சிலுவையில் அறையப்பட்ட மற்றொரு கள்ளனுக்கு அவர் “இன்றைக்கு நீ என்னுடனே கூடப் பரதீசிலிருப்பாய்” (வச. 43) என்று நம்பிக்கையளித்தார் இறக்கும் தருவாயில் தன்னுடைய தாயைப் பார்த்து, “ஸ்திரீயே. அதோ, உன் மகன்” என்றார். தனக்கன்பான சீஷன் யோவானைப் பார்துது, “அதோ உன் தாய்” என்றார் (யோவா. 19:26-27) கடைசியாக இவ்வுலக வாழ்வை அவர் முடித்துக் கொண்ட போது, தந்தையிடம் தனக்குள்ள நம்பிக்கையை கடைசி அன்பின் செயலாக “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” என்றார் (லூக். 23:46).

இயேசு ஒரு நோக்கத்தோடு பிதாவுக்குச் கீழ்ப்படிந்து பிதாவினிடம் தான் வைத்துள்ள அன்பின் ஆழத்தைக் காட்டும்படியாகவும், நம்மீது அவர் வைத்துள்ள ஆழமான அன்பைக் காட்டவும் சிலுவையைச் சகித்தார். முடிவுவரை நம்மீது வைத்துள்ள உண்மையான அன்பினைக் காட்டினார்.

மலரைப் போன்ற மலர்ச்சி

என்னுடைய கடைசி பேரன் பிறந்து இரண்டு மாதமேயாகிறது. ஓவ்வொருமுறை நான் அவனைப் பார்க்கும் போதும் சிற்சில மாற்றங்களைக் காண்கின்றேன். சமீபத்தில் நான் அவனிடம் கொஞ்சிப் பேசிக் கொண்டிருந்த போது, அவன் என்னைப் பார்த்து சிரித்தான். உடனே எனக்கு அழுகை வந்து விட்டது. அது ஆனந்தம் கலந்த கண்ணீர். ஏனெனில் நான் என்னுடைய குழந்தைகளின் முதல் சிரிப்பை நினைத்துப் பார்த்தேன். அவை எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்தவை! ஆனாலும் அவற்றை நேற்று நடந்தது போல உணர முடிகிறது. இது போன்ற தருணங்கள் நம்மால் விவரிக்க முடியாத நினைவுகளைத் தருகின்றன.

சங்கீதம் 103ல் தாவீது எழுதிய தேவனைப் போற்றும் ஒரு சங்கீதம் போற்றியும் நம்முடைய வாழ்வின் சந்தோஷமான கணங்கள் எத்தனை சீக்கிரமாய் நம்மைவிட்டு கடந்து சென்று விடுகின்றன உணர்த்துகிறது. “மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது, வெளியின் புஷ்பத்தைப் போல் பூக்கிறான். காற்று அதின் மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று. அது இருந்த இடமும் இனி அதை அறியாது” (வச. 15-16).

நம்முடைய வாழ்நாள் குறுகியதாய், இருப்பினும் அது ஒரு மலரைப் போன்று மலர்கின்றது, செழிக்கின்றது என தாவீது விளக்குகின்றார். ஒவ்வொரு தனிமலரும் மொட்டிலிருந்து மலராக விரிந்து, மணத்தையும், அழகிய வண்ணங்களையும் கொடுத்து அதிக மகிழ்ச்சியைத் தருகின்றது. ஆனாலும் ஒவ்வொரு தனிமலரையும் நாம் நினைவில் வைப்பதில்லை. “அது இருந்த இடமும் இனி அதை அறியாது” (வச. 16) ஆனால், இதற்கு மாறாக, “கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள் மேல், அநாதியாய் என்றென்றைக்குமுள்ளது (வச. 17) என்ற உறுதியைத் தருகின்றார்.

மலர்களைப் போன்றுள்ள நாம் இக்கணத்தில் மகிழ்ந்து களிகூறுவோம். நம்முடைய வாழ்வின் இத்தகைய தருணங்கள் உண்மையில் ஒருபோதும் மறக்கப்படுவதில்லை. இந்த உண்மையை நாம் கொண்டாடுவோம். நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும் தேவனுடைய கரத்திலுள்ளது. அவருடைய மாறாத அன்பு அவருடைய பிள்ளைகளோடு என்றென்றைக்கும் உள்ளது.

படைப்பாற்றலைப் போற்றுவோம்

கலிபோர்னியாவில், பாஜா என்ற இடத்தில் கடலுக்கடியில் ஏறத்தாள நாலாயிரம் அடிகளுக்கு கீழே மிகவும் அரிதான ஜெல்லி மீன்கள் நீரோட்டத்தோடு சேர்ந்து ஆடிக்களிக்கும். கரிய கடல்நீரின் பின்னணியில் அவற்றின் உடல் நீலம், ஊதா, இளஞ்சிவப்பு என பல வண்ணங்களில் பிரகாசமாக மின்னும், அவற்றின் மணிக்கூண்டு போன்ற பை அமைப்பு விரியும் போது விழுதுகளும் தனிமையாக அசைந்தாடும். நான் இந்த ஹெலிட்ரேபிஸ் மாசி வகை ஜெல்லி மீன்களைப் பற்றிய காட்சிகளை நேஷனல் ஜியோக்ரபிக் படத்தொகுப்பில் பார்த்து வியப்படைந்தேன். இந்த வழுவழுப்பான மீன் இனத்திற்கு தேவன் குறிப்பிட்ட வகை அழகினைத் தந்துள்ளதை நினைத்துப் பார்த்தேன். அக்டோபர் 2017 கணக்கெடுப்பின் படி தேவன் இன்னும் 2000க்கும் மேலான ஜெல்லி மீன் வகைகளைப் படைத்துள்ளார் என அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

தேவனே நம்முடைய படைப்பாளர் என நாமறிந்தும். வேதாகமத்தின் முதல் அதிகாரத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள ஆழ்ந்த உண்மைகளை நாம் அதிக நேரமெடுத்து ஆராய்ந்து உணருகிறோமா. ஆராய்ந்து உணர நமது வேகம் மிகவும் குறைந்து காணப்படுகின்றது. நம்முடைய அற்புதமான தேவன் ஒளியையும், வெவ்வேறு வகையான ஜீவ ஜந்துக்களையும் இந்த உலகில் தன்னுடைய வார்த்தையின் வல்ல படைப்பாற்றலால் உருவாக்கினார். “தேவன் மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர் வாழும் ஜந்துக்களையும்… சிருஷ்டித்தார்” (ஆதி. 1:21). ஆதியில் தேவன் படைத்த படைப்புகளின் ஒரு சிறிய பகுதியைத்தான் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

தேவன் ஒவ்வொரு மனிதனையும் ஒரு நோக்கத்தோடு படைத்தார். நாம் இவ்வுலகில் முதல் மூச்சினை எடுக்கும் முன்பே நம் வாழ்வில் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு நோக்கத்தை வைத்தார் (சங். 139:13-16). நாம் தேவனின் படைப்பாற்றலை போற்றும் போது, அவர் நமக்கு புதியவற்றைச் சிந்திக்கவும், உருவாக்கவும் வெவ்வேறு வகைககளில் உதவுகின்றதையும் எண்ணி மகிழ்வோம்.

நட்பின் அடையாளம்

கானாவில் நான் சிறுவனாக வளர்ந்த போது, என்னுடைய தந்தையின் கரத்தைப் பற்றிக் கொண்டு மக்கள் கூட்டம் நிரம்பிய இடங்களில் நடந்து செல்வதில் மகிழ்ச்சியடைந்துள்ளேன் அவர் என் தந்தையும், நண்பனுமாயிருந்தார். எங்களுடைய கலாச்சாரத்தில் கரம் கோர்த்து நடப்பதென்பது நட்பின் அடையாளம். அவ்வாறு நடக்கும் போது வெவ்வேறு வகையான காரியங்களைக் குறித்து நாங்கள் பேசிக் கொள்வோம். நான் தனிமையை உணரும் போதெல்லாம் என் தந்தையோடு பேசுவது எனக்கு மிகுந்த ஆறுதலாக இருக்கும். நாங்கள் ஒருவரோடொருவர் நட்பாயிருப்பதை மிகவும் உயர்ந்ததாகக் கருதினேன்.

இயேசுவும் தன்னைப் பின்பற்றியவர்களை நண்பர்களென அழைத்தார். அவர்களுக்கு தன் நட்பின் அடையாளத்தைக் காட்டினார். “பிதா என்னில் அன்பாயிருக்கிறது போல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்” (யோவா. 10:9) என்றார். தன் சிநேகிதனுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கின்ற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை (வச. 13) என்றார். அவருடைய ராஜ்ஜியத்தின் காரியங்களை அவர்களுக்குத் தெரிவிக்கின்றார் (வச. 15). பிதாவினிடத்தில் கேள்விப்பட்ட யாவற்றையும் உங்களுக்குத் தெரிவித்தேன் என்றார் (வச. 15). அவருடைய ஊழியத்திலும் பங்கு கொள்ளும்படி அவர்களுக்கு வாய்ப்பளிக்கின்றார் (வச. 16).

நம்முடைய வாழ்க்கையில் துணையாக இயேசு நம்மோடு நடந்து வருகின்றார். நம்முடைய மனவேதனைகளையும் விருப்பங்களையும் அவர் கவனித்துக் கேட்கின்றார். நம்முடைய தனிமையான வேளையிலும் உள்ளம் சோர்ந்த நிலையிலும் ஒரு நண்பனாக இயேசு நமக்குத் துணை நிற்கின்றார்.

நாம் ஒருவரிலொருவர் அன்பாயிருந்து அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவோமாயின், இயேசுவோடுள்ள நம்முடைய உறவு நிலைத்திற்கும் (வச. 10,17). நாம் அவருடைய கற்பனைகளுக்கு கீழ்ப்படிவோமாயின் மிகுந்த, நிலையான கனிகளைக் கொடுப்போம் (வச. 16).

மிகுந்த ஜனக்கூட்டம் நிறைந்த தெருக்களின் வழியேயும், ஆபத்து நிறைந்த சாலைகளின் வழியேயும் இந்த குழப்பம் நிறைந்த உலகில் செல்லும் போதும் தேவன் நம்மோடு கூட நடந்து வருவதை உணரலாம். அதுவே அவர் நம்முடைய நண்பன் என்பதற்கு அடையாளம்.

மீட்கப்பட்ட நம்பிக்கை

சூரியன் கிழக்கில் உதிக்கிறதா? வானம் நீல நிறத்திலுள்ளதா? கடல் நீர் உப்பாயிருக்கின்றதா? கோபால்ட் கனிமத்தின் அணு எடை 58.9 தானே? சரி. நீ ஓர் அறிவியல் மேதை அல்லது எந்த ஒரு சிறிய காரியத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பவனாயின் இந்தக் கடைசி கேள்விக்கு பதில் தெரிந்து வைத்திருப்பாய். மற்ற கேள்விகளுக்கெல்லாம் ஆம் என்றே பதில் சொல்ல வேண்டும். ஆனால், இத்தகைய கேள்விகளெல்லாம் கிண்டல் கலந்த கேள்விகளென்றே சொல்ல வேண்டும்.

நாம் சற்று கவனித்தோமாயின், இந்த நவீன காலத்தில் பழகிப் போன நம் செவிகள், இந்த செயலற்ற நிலையிலிருக்கும் அந்த மனிதனிடம் இயேசு கேட்கும் கேள்வியிலும் கிண்டல் கலந்திருக்கின்றது என்றே சொல்லக் கூடும். “சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?” (யோவா. 5:6). நாம் எதிர்பார்க்கும் பதில் என்னவெனில், “என்னைக் கேலி செய்கின்றாயா? முப்பத்தெட்டு வருடங்களாக நான் உதவிக்காக காத்துக் கொண்டிருக்கின்றேன்!” என்பதே. ஆனால், இயேசுவின் கேள்வியில் எந்தக் கிண்டலும் இல்லை என்பதே உண்மை. இயேசுவின் வார்த்தைகள் எப்பொழுதும் கருணை நிறைந்தவை. அவருடைய கேள்விகள் எப்பொழுதும் நம்மை நன்மைக்கு நேராகவே வழிநடத்துகினன்றன.

அந்த மனிதன் சுகமடைய விரும்புகிறான் என்பதை இயேசு அறிவார். நீண்டகாலமாக ஒருவரும் அவனுக்கு உதவ முன்வரவில்லை என்பதையும் அவர் அறிவார். இந்த அற்புதத்திற்கு முன்பாக இயேசு இவனுக்குள் தணிந்து கிடந்த நம்பிக்கையை மீட்டுக் கொண்டு வர விரும்பினார். எனவே தான் அவர் இந்த வெளிப்படையான கேள்வியைக் கேட்கின்றார். பின்னர்  அவனுடைய நம்பிக்கையின்படி செயல்படத் தூண்டுகின்றார். “எழுந்திரு, உன்படுக்கையை எடுத்துக்கொண்டு நட” (வச. 8) என்கின்றார். இந்த செயலற்ற மனிதனைப் போலவேதான் நாம் ஒவ்வொருவரும் நம்பிக்கையிழந்து காணப்படுகின்றோம். தேவன் நம்மை கருணையோடு பார்க்கின்றார். அவர் மீதுள்ள நம்பிக்கையோடு வாழ நம்மை அழைக்கின்றார்.

நீ அங்கிருக்கின்றாயா?

அவனுடைய மனைவி மீள முடியாதவகையில் நோய்வாய்ப்பட்டபோது, மைக்கேல் தான் தேவனோடு வைத்துள்ள உறவால் பெற்றுள்ள சமாதானத்தை தன் மனைவியும் பெற்றுக்கொள்ள வேண்டுமென ஏங்கினான். அவன் தன்னுடைய விசுவாசத்தை அவளோடு பகிர்ந்து கொண்டான். ஆனால், அவளோ அதில் எந்தவொரு ஆர்வத்தையும் காட்டவில்லை. ஒரு நாள் மைக்கேல் அருகிலுள்ள புத்தகக் கடைக்குள் சென்ற போது ஒரு புத்தகத்தின் தலைப்பு அவனுடைய கண்களை ஈர்த்தது. “தேவனே, நீர் அங்கிருக்கின்றீரா? என்பதே அப்புத்தகம். அந்த புத்தகத்திற்கு அவள் எவ்வாறு பதிலளிப்பாள் என்ற சந்தேகத்தோடு, அநேக முறை அந்த புத்தகக் கடைக்குள் செல்வதும், வெளியே வருவதுமாக இருந்த மைக்கேல் கடைசியாக அப்புத்தகத்தை வாங்கினார். என்ன ஆச்சரியம்! அவள் அந்த புத்தகத்தை ஏற்றுக் கொண்டாள்.

அந்தப் புத்தகம் அவளுடைய இருதயத்தைத் தொட்டது. அன்றிலிருந்து அவள் வேதாகமத்தையும் வாசிக்க ஆரம்பித்தாள். இரண்டு வாரங்களுக்குப் பின்னர் மைக்கேலின் மனைவி சமாதானமாக, தேவன் தன்னை விட்டு விலகவும், கைவிடவும் மாட்டார் என்ற உறுதியைப் பெற்றுக் கொண்டவளாய் மரித்துப் போனாள்.

இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தை விட்டு வழிநடத்தும்படி மோசேயை தேவன் அழைத்தபோது, அவனுக்கு வல்லமையைத் தருவதாக தேவன் வாக்களிக்கவில்லை. மாறாக தேவனுடைய பிரசன்னம் அவனோடிருக்கும் என்றார். “நான் உன்னோடே இருப்பேன்” (யாத். 3:12) என்றார். இயேசு. சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பாக, அவருடைய சீடர்களிடம் கடைசியாக பேசிய போது தேவனுடைய மாறாத பிரசன்னம் எப்பொழுதும் அவர்களோடு இருக்கும் எனவும், அதனை அவர்கள் பரிசுத்த ஆவியின் மூலம் பெற்றுக் கொள்வர் எனவும் வாக்களித்தார் (யோவா. 15:26).

நம் வாழ்வின் சவால்களைச் சந்திக்க தேவன் பல வகைகளில் நமக்கு உதவுகின்றார். உலகப் பிரகாரமான வசதிகளையும், சுகத்தையும், நம் பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் தருகின்றார். சில வேளைகளில் அவர் பிரச்சனைகளை சரிசெய்கிறார். ஆனால் மிகச் சிறந்த ஈவாக அவர் தம்மையே தந்துள்ளார். இதுவே நாம் பெற்றுள்ள மிகப் பெரிய பாக்கியம். வாழ்வில் எது நடந்தாலும் அவர் நம்மோடிருக்கின்றார். அவர் நம்மை விட்டு விலகுவதுமில்லை, நம்மைக் கைவிடுவதுமில்லை.

செலவழிக்கப்படல்

வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு விடுமுறையின் போது தன்னுடைய நண்பர்களுடன் பிரான்ஸ் தேசத்தின் தெற்குப் பகுதியில், ஒரு குளிர்ந்த இரவில் அனல் அடுப்பினருகில் அமர்ந்து குளிர்காய்ந்து கொண்டிருந்தார். அந்த நெருப்பினை உற்று நோக்கிய அந்த முன்னாள் பிரதம மந்திரி, பைன் மரத்துண்டுகள் எரியும்போது வெடித்து, ஸ்ஸ் என்ற ஓசையுடன் கொப்பளித்ததைக் கண்டார். உடனே அவர் தன்னுடைய கனத்த குரலில் “ஏன் இந்த மரத்துண்டுகள் கொப்பளிக்கின்றன எனத் தெரிந்து கொண்டேன். செலவழிக்கப்படுவதென்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்டேன்”என்றார்.

நம்முடைய தவறான செயல்களால் வரும் துன்பங்களும், விரக்தியும், ஆபாயங்களும், துயரங்களும் நாம் செலவழிக்கப்படுவதைக் காட்டுகின்றன. சூழ்நிலைகள் மகிழ்ச்சியையும், சமாதானத்தையும் மெல்ல நம் இருதயத்தை விட்டு எடுத்துவிடும். தாவீது, தன்னுடைய பாவச் செயலால் தான் செலவழிக்கப்படுவதை உணர்ந்தபோது, “நான் அடக்கிவைத்தமட்டும் நித்தம் என கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்து போயிற்று… என் சாரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டு போயிற்று” (சங். 32:3-4) என எழுதினார்.

இத்தகைய துன்ப நேரங்களில் நாம் யாரிடம் உதவி கேட்போம்? யார் நமக்கு நம்பிக்கை தருவார்? ஊழிய பாரத்தினாலும், உடைக்கப்பட்ட உள்ளத்தாலும் நிறைந்த அநுபவங்களைக் கொண்ட பவுல், “நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கி போகிறதில்லை கலக்கமடைந்தும் மன முறிவடைகிறதில்லை; துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை;” என்றார் (2 கொரி. 4:8-9).

இது எப்படி சாத்தியமாகும்? நாம் இயேசுவைச் சார்ந்து வாழ்வோமாயின், நல் மேய்ப்பனாம் இயேசு கிறிஸ்து நம் ஆத்துமாவை மீட்டு (சங். 23:3) நம்முடைய பயணத்தில் அடுத்த அடியை எடுத்து வைக்க வேண்டிய பெலனைத் தருவார். அவர் நம் பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் நம்மோடு நடந்து வருகின்றார் (எபி. 13:5).

சமாதானத்தால் நிறைந்த இருதயங்கள்

நாற்பத்தைந்து ஆண்டுகளாக, விளையாட்டையே தன் தொழிலாகக் கொண்டு, வாழ்ந்த வீரர் ஜெரி கிரேமர், விடுபட்டபோது, தன்னுடைய விளையாட்டுத் துறையில் (புகழின் உச்சநிலை மரியாதையை) அடையவில்லை. ஆனால், அநேக வேறுவகையான சாதனைகளையும், புகழ்ச்சியையும் அவர் பெற்றிருந்தார். இந்த துறையின் உச்ச விருது அவருக்குக் கிடைக்காமல் போய்விட்டது. அந்த மரியாதைக்கு அவர் பத்துமுறை சிபாரிசு செய்யப்பட்டும், அது அவருக்கு வாய்க்கவேயில்லை. அவருடைய நம்பிக்கை அநேக முறை உடைக்கப்பட்ட போதும் கிரேமர், “தேசிய கால்பந்து கழகம் என்னுடைய வாழ்வில் நூறு பரிசுகளை வழங்கியுள்ளது. ஆனால், எனக்குத் தரப்படாத ஒன்றினைத் குறித்து நான் கோபப்படுவதும் மனம் வருந்துவதும் முட்டாள்தனம்” என்றார்.

யாராயிருந்தாலும், இத்தனை அதிக முறை தனக்குச் சேர வேண்டிய மரியாதையை மற்ற விளையாட்டு வீரருக்குச் சாதகமாக வழங்கிய போது தனக்குள் கசப்பையும், வெறுப்பையும் வளர்த்துக் கொள்ளக் கூடும். ஆனால், கிரேமர் அவ்வாறில்லை. அவர் நடந்து கொண்ட விதம், நாம் எவ்வாறு நம்முடைய இருதயத்தை பொறாமையான எண்ணங்களால் கறைபடாதபடி பாதுகாப்பது என்பதை விளக்குகின்றது. “பொறாமையோ எலும்புருக்கி” (நீதி. 14:30) என வேதாகமம் கூறுகின்றது. நமக்குச் சொந்தமல்லாத ஒன்றின்மீது அதிக நாட்டம் உடையவராய், அதனையே சிந்தித்துக் கொண்டு, நாம் பெற்றுள்ள பல நன்மைகளை உணராதிருப்போமாயின் தேவன் தரும் சமாதானத்தை இழந்து விடுவோம்.

பதினொன்றாவது முறை ஜெரி கிரேமர் தேர்வு செய்யப்பட்டபோது, தேசிய கால்பந்து கழகத்தின் மிக உயர்ந்த மரியாதையை பிப்ரவரி 2018ஆம் ஆண்டு பெற்றுக் கொண்டார். நம்முடைய உலக ஆசைகளும் இறுதிவரை நிறைவேற்றப்படாமலிருக்கலாம். தேவன் நமக்கு தாராளமாகத் தந்துள்ள அநேகக் காரியங்களில் நாம் கவனத்தைச் செலுத்துவோமாயின் தேவன் நமக்குத் தரும் அமைதியான இருதயத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். நாம் எதை அடைய விரும்பினோம், எதை அடையவில்லை என்பது காரியமல்ல, தேவன் நம் வாழ்வில் கொண்டு வரும் சமாதானத்தைப் பெற்று அதில் மகிழ்ச்சியாயிருப்பதே சிறந்த வாழ்வு.