அவனுடைய மனைவி மீள முடியாதவகையில் நோய்வாய்ப்பட்டபோது, மைக்கேல் தான் தேவனோடு வைத்துள்ள உறவால் பெற்றுள்ள சமாதானத்தை தன் மனைவியும் பெற்றுக்கொள்ள வேண்டுமென ஏங்கினான். அவன் தன்னுடைய விசுவாசத்தை அவளோடு பகிர்ந்து கொண்டான். ஆனால், அவளோ அதில் எந்தவொரு ஆர்வத்தையும் காட்டவில்லை. ஒரு நாள் மைக்கேல் அருகிலுள்ள புத்தகக் கடைக்குள் சென்ற போது ஒரு புத்தகத்தின் தலைப்பு அவனுடைய கண்களை ஈர்த்தது. “தேவனே, நீர் அங்கிருக்கின்றீரா? என்பதே அப்புத்தகம். அந்த புத்தகத்திற்கு அவள் எவ்வாறு பதிலளிப்பாள் என்ற சந்தேகத்தோடு, அநேக முறை அந்த புத்தகக் கடைக்குள் செல்வதும், வெளியே வருவதுமாக இருந்த மைக்கேல் கடைசியாக அப்புத்தகத்தை வாங்கினார். என்ன ஆச்சரியம்! அவள் அந்த புத்தகத்தை ஏற்றுக் கொண்டாள்.

அந்தப் புத்தகம் அவளுடைய இருதயத்தைத் தொட்டது. அன்றிலிருந்து அவள் வேதாகமத்தையும் வாசிக்க ஆரம்பித்தாள். இரண்டு வாரங்களுக்குப் பின்னர் மைக்கேலின் மனைவி சமாதானமாக, தேவன் தன்னை விட்டு விலகவும், கைவிடவும் மாட்டார் என்ற உறுதியைப் பெற்றுக் கொண்டவளாய் மரித்துப் போனாள்.

இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தை விட்டு வழிநடத்தும்படி மோசேயை தேவன் அழைத்தபோது, அவனுக்கு வல்லமையைத் தருவதாக தேவன் வாக்களிக்கவில்லை. மாறாக தேவனுடைய பிரசன்னம் அவனோடிருக்கும் என்றார். “நான் உன்னோடே இருப்பேன்” (யாத். 3:12) என்றார். இயேசு. சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பாக, அவருடைய சீடர்களிடம் கடைசியாக பேசிய போது தேவனுடைய மாறாத பிரசன்னம் எப்பொழுதும் அவர்களோடு இருக்கும் எனவும், அதனை அவர்கள் பரிசுத்த ஆவியின் மூலம் பெற்றுக் கொள்வர் எனவும் வாக்களித்தார் (யோவா. 15:26).

நம் வாழ்வின் சவால்களைச் சந்திக்க தேவன் பல வகைகளில் நமக்கு உதவுகின்றார். உலகப் பிரகாரமான வசதிகளையும், சுகத்தையும், நம் பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் தருகின்றார். சில வேளைகளில் அவர் பிரச்சனைகளை சரிசெய்கிறார். ஆனால் மிகச் சிறந்த ஈவாக அவர் தம்மையே தந்துள்ளார். இதுவே நாம் பெற்றுள்ள மிகப் பெரிய பாக்கியம். வாழ்வில் எது நடந்தாலும் அவர் நம்மோடிருக்கின்றார். அவர் நம்மை விட்டு விலகுவதுமில்லை, நம்மைக் கைவிடுவதுமில்லை.