சூரியன் கிழக்கில் உதிக்கிறதா? வானம் நீல நிறத்திலுள்ளதா? கடல் நீர் உப்பாயிருக்கின்றதா? கோபால்ட் கனிமத்தின் அணு எடை 58.9 தானே? சரி. நீ ஓர் அறிவியல் மேதை அல்லது எந்த ஒரு சிறிய காரியத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பவனாயின் இந்தக் கடைசி கேள்விக்கு பதில் தெரிந்து வைத்திருப்பாய். மற்ற கேள்விகளுக்கெல்லாம் ஆம் என்றே பதில் சொல்ல வேண்டும். ஆனால், இத்தகைய கேள்விகளெல்லாம் கிண்டல் கலந்த கேள்விகளென்றே சொல்ல வேண்டும்.

நாம் சற்று கவனித்தோமாயின், இந்த நவீன காலத்தில் பழகிப் போன நம் செவிகள், இந்த செயலற்ற நிலையிலிருக்கும் அந்த மனிதனிடம் இயேசு கேட்கும் கேள்வியிலும் கிண்டல் கலந்திருக்கின்றது என்றே சொல்லக் கூடும். “சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?” (யோவா. 5:6). நாம் எதிர்பார்க்கும் பதில் என்னவெனில், “என்னைக் கேலி செய்கின்றாயா? முப்பத்தெட்டு வருடங்களாக நான் உதவிக்காக காத்துக் கொண்டிருக்கின்றேன்!” என்பதே. ஆனால், இயேசுவின் கேள்வியில் எந்தக் கிண்டலும் இல்லை என்பதே உண்மை. இயேசுவின் வார்த்தைகள் எப்பொழுதும் கருணை நிறைந்தவை. அவருடைய கேள்விகள் எப்பொழுதும் நம்மை நன்மைக்கு நேராகவே வழிநடத்துகினன்றன.

அந்த மனிதன் சுகமடைய விரும்புகிறான் என்பதை இயேசு அறிவார். நீண்டகாலமாக ஒருவரும் அவனுக்கு உதவ முன்வரவில்லை என்பதையும் அவர் அறிவார். இந்த அற்புதத்திற்கு முன்பாக இயேசு இவனுக்குள் தணிந்து கிடந்த நம்பிக்கையை மீட்டுக் கொண்டு வர விரும்பினார். எனவே தான் அவர் இந்த வெளிப்படையான கேள்வியைக் கேட்கின்றார். பின்னர்  அவனுடைய நம்பிக்கையின்படி செயல்படத் தூண்டுகின்றார். “எழுந்திரு, உன்படுக்கையை எடுத்துக்கொண்டு நட” (வச. 8) என்கின்றார். இந்த செயலற்ற மனிதனைப் போலவேதான் நாம் ஒவ்வொருவரும் நம்பிக்கையிழந்து காணப்படுகின்றோம். தேவன் நம்மை கருணையோடு பார்க்கின்றார். அவர் மீதுள்ள நம்பிக்கையோடு வாழ நம்மை அழைக்கின்றார்.