என்னுடைய கடைசி பேரன் பிறந்து இரண்டு மாதமேயாகிறது. ஓவ்வொருமுறை நான் அவனைப் பார்க்கும் போதும் சிற்சில மாற்றங்களைக் காண்கின்றேன். சமீபத்தில் நான் அவனிடம் கொஞ்சிப் பேசிக் கொண்டிருந்த போது, அவன் என்னைப் பார்த்து சிரித்தான். உடனே எனக்கு அழுகை வந்து விட்டது. அது ஆனந்தம் கலந்த கண்ணீர். ஏனெனில் நான் என்னுடைய குழந்தைகளின் முதல் சிரிப்பை நினைத்துப் பார்த்தேன். அவை எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்தவை! ஆனாலும் அவற்றை நேற்று நடந்தது போல உணர முடிகிறது. இது போன்ற தருணங்கள் நம்மால் விவரிக்க முடியாத நினைவுகளைத் தருகின்றன.

சங்கீதம் 103ல் தாவீது எழுதிய தேவனைப் போற்றும் ஒரு சங்கீதம் போற்றியும் நம்முடைய வாழ்வின் சந்தோஷமான கணங்கள் எத்தனை சீக்கிரமாய் நம்மைவிட்டு கடந்து சென்று விடுகின்றன உணர்த்துகிறது. “மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது, வெளியின் புஷ்பத்தைப் போல் பூக்கிறான். காற்று அதின் மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று. அது இருந்த இடமும் இனி அதை அறியாது” (வச. 15-16).

நம்முடைய வாழ்நாள் குறுகியதாய், இருப்பினும் அது ஒரு மலரைப் போன்று மலர்கின்றது, செழிக்கின்றது என தாவீது விளக்குகின்றார். ஒவ்வொரு தனிமலரும் மொட்டிலிருந்து மலராக விரிந்து, மணத்தையும், அழகிய வண்ணங்களையும் கொடுத்து அதிக மகிழ்ச்சியைத் தருகின்றது. ஆனாலும் ஒவ்வொரு தனிமலரையும் நாம் நினைவில் வைப்பதில்லை. “அது இருந்த இடமும் இனி அதை அறியாது” (வச. 16) ஆனால், இதற்கு மாறாக, “கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள் மேல், அநாதியாய் என்றென்றைக்குமுள்ளது (வச. 17) என்ற உறுதியைத் தருகின்றார்.

மலர்களைப் போன்றுள்ள நாம் இக்கணத்தில் மகிழ்ந்து களிகூறுவோம். நம்முடைய வாழ்வின் இத்தகைய தருணங்கள் உண்மையில் ஒருபோதும் மறக்கப்படுவதில்லை. இந்த உண்மையை நாம் கொண்டாடுவோம். நம் வாழ்வின் ஒவ்வொரு கணமும் தேவனுடைய கரத்திலுள்ளது. அவருடைய மாறாத அன்பு அவருடைய பிள்ளைகளோடு என்றென்றைக்கும் உள்ளது.