மிகவும் நன்று!
சில நாட்களில், ஒரே கருப்பொருள் அதனூடாய் கடந்து வருவதை நாம் காணலாம். சமீபத்தில் அப்படிப்பட்டதான நாட்களை நான் எதிர்கொண்டேன். எங்கள் பாஸ்டர், ஆதியாகமம் 1ஆம் அதிகாரத்திலிருந்து போதிக்க தொடங்கும் முன், பூக்கள் மலர்வதை, காலதாமதமற்ற 2 நிமிட பிரமிக்கத்தக்க தொடர் புகைப்பட தொகுப்பாக காட்டினார். அதன் பிறகு, நான் வீட்டிலே சமூக ஊடகத்தை நோட்டமிட்டுக் கொண்டிருந்தபோது, பூக்களை பற்றின அநேக பதிவுகளை காண நேர்ந்தது. மேலும், நாங்கள் தோப்பிலே நடக்கையில், இளவேனிற் காலத்து வண்ணமயமான காட்டுப் பூக்கள் எங்கும் சூழ்ந்திருக்க கண்டோம்.
பூக்களையும், பலவகை தாவரங்களையும் (அவை வளர்வதற்கு நிலத்தையும்) சிருஷ்டிப்பின் மூன்றாம் நாளிலே தேவன் படைத்தார். மேலும் அந்நாளிலே, தேவன் இரண்டுமுறை அது “நல்லது” என அறிவித்தார் (வச:24,31). சொல்லப்போனால், தன்னுடைய தலைசிறந்த படைப்பாகிய மனுஷனை சிருஷ்டித்து முடித்தபின், தேவன் தான் படைத்த எல்லாவற்றையும் கண்டு, “அது மிகவும் நன்றாயிருக்கிறது,” என்றார்.
சிருஷ்டிப்புக் கதையிலே, தன் சிருஷ்டிப்பைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைந்த ஓரு சிருஷ்டிகரையே நாம் காண்கிறோம். சிருஷ்டிப்புப் பணியை அவர் மிகுந்த மகிழ்ச்சியோடு செய்தார். அதன் பிரதிபலிப்பாகத்தான் வியப்பளிக்கும் வகைகளோடு கூடிய வண்ணமயமான இவ்வுலகை அவர் வடிவமைத்தார். மேலும், தன் சிருஷ்டிப்பின் தலைசிறந்த படைப்பை இறுதியாக சிருஷ்டித்தார். “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனை சிருஷ்டித்தார்” (வச. 27). அவருடைய சாயலை சுமக்கிற நாம், அவருடைய அழகிய கைவண்ணத்தினால் உருவாக்கப்பட்டு ஆசீர்வாதிக்கப்பட்டுள்ளோம்.
தேவ வார்த்தையை கிரகித்து
எங்கள் மகன் சேவியர் பாலகனாய் இருந்தபோது, ‘மான்டெரி பே’ நீர்வாழ் உயிரினக் காட்சிசாலைக்கு குடும்பமாக சென்றிருந்தோம். நாங்கள் கட்டிடத்திற்குள் நுழைந்ததும், உட் கூரையில் தொங்கவிடப்பட்டிருந்த ஒரு மிகப்பெரிய சிற்பத்தை என் மகனுக்கு காட்டி, “அதோ பார், முதுகில் கூன் உள்ள திமிங்கலம்,” எனக் கூறினேன்.
அப்பொழுது அவன் தன் கண்கள் விரிய ஆச்சரியத்துடன், “பிரமாண்டமானது,” எனக் கூறினான்.
உடனே என் கணவர் என்னை திரும்பிப் பார்த்து, “இவனுக்கு எப்படி இந்த வார்த்தை தெரியும்?” எனக் கேட்டார். எனக்கும் என்ன சொல்வதேன்று தெரியாமல், “ஒருவேளை நாம் அவ் வார்த்தையை பேசும்போது அவன் கவனித்திருக்கலாம்,” என பதிலளித்தேன். நாங்கள் திட்டமிட்டு என் மகனுக்கு கற்றுத்தராதபோதும், எங்கள் மகன் பல வார்த்தைகளை கிரகித்துள்ளான் என்பது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.
இளைய தலைமுறையினர் வேதவசனத்தை அறிந்துகொள்ளவும், அதற்கு கீழ்ப்படியவும், திட்டமிட்ட நோக்கத்தோடு அவர்களுக்கு அதை கற்றுத் தருமாறு தன் ஜனத்தை தேவன் ஊக்குவிப்பதை உபாகமம் 6ஆம் அதிகாரத்தில் காணலாம். இஸ்ரவேலர் தேவனை அறிகிற அறிவிலே விருத்தியடையும்போது, அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் பயபக்தியோடு தேவனை தொழுதுகொள்ள கற்றுக்கொள்வார்கள். மேலும் முழுமையாய் அவரை நேசிக்கவும், கீழ்ப்படியவும், அவரை அறிகிற அறிவினால் கிட்டிச்சேரும் பொழுது, அதற்குறிய நற்பலனையும் அவர்கள் அனுபவிப்பார்கள் (வச. 2-5).
திட்டமிட்டு நம்முடைய இருதயத்தையும் மனதையும் வேத வசனத்தினால் நிரப்பும்பொழுது (வச:6), நம்முடைய அன்றாட அலுவல்கள் மத்தியிலும் தேவனுடைய அன்பையும் சத்தியத்தையும் நம் பிள்ளைகளுக்கு கற்றுத்தர நன்கு ஆயத்தமாயிருப்போம் (வச. 7). நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு மாதிரியாக இருந்து, இன்றும் நமக்கு பொருந்தக்கூடிய தேவனுடைய நிலையான சத்தியத்தை, அதன் அதிகாரத்தை, அவர்கள் கண்டுகொள்ளவும், அங்கீகரிக்கவும் கனப்படுத்தவும், அவர்களை ஊக்குவித்து ஆயத்தப்படுத்துவோமாக (வச 8-9).
நம்முடைய இருதயத்தின் நிறைவால், தேவனுடைய வார்த்தைகள் நம்முடைய வாய்களிலிருந்து இயல்பாக பொங்கி வழியும்பொழுது, நாம் ஒரு விசுவாச பாரம்பரியத்தை, தலைமுறை தலைமுறைதோறும் கடந்து செல்லும்படியாக விட்டுச் செல்லலாம் (4:9).
இங்கு பணிவிடை செய்திட
எங்கள் சபையில், புதிய தலைவர்களை நியமிக்க வேண்டிய நேரம் வந்தது. தலைவர்களாயினும், பணிவிடைக்காரர்களைப் போல பணி செய்வதே அவர்களுடைய பங்கு என்பதை அவர்களுக்கு உணர்த்தும் விதமாக, ஒரு விசேஷ ‘பாதம் கழுவும்’ விழாவில் சபை மூப்பர் அனைவரும் பங்கேற்றனர். சபையார் கவனித்துக்கொண்டிருக்க, சபைபோதகர் உட்பட தலைவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் தங்கள் பாதங்களை கழுவினர்.
அன்று அவர்கள் செய்ததை இயேசு கிறிஸ்துதாமே நமக்கு மாதிரியாக செய்து காட்டினார் என்பதை யோவான் 13ஆம் அதிகாரத்தில் காணலாம். ‘கடைசி இராபோஜனம்’ என அழைக்கப்படும் அச்சம்பவத்தின்போது இயேசு, “போஜனத்தை விட்டெழுந்து,... பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களை கழுவ... தொடங்கினார்” (யோ. 13:4-5). பின்பு இயேசு தன் சீஷர்களிடம் தான் செய்த செயலுக்குரிய விளக்கத்தை விளக்கிய போது, “ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல” எனக் கூறினார் (வச. 16). மேலும், “நான் உங்கள் நடுவே பணிவிடைக்காரனைப் போல் இருக்கிறேன்,” என்றும் கூறினார் (லூக். 22:27).
ஒப்பற்ற கனம்பொருந்திய இயேசுவே மிகத் தாழ்மையான ஒரு பணியை செய்வாரானால், பணிவிடை செய்வது நம் ஒருவருக்கும் தாழ்வானதன்று. நமக்கு எப்பேர்பட்ட அற்புதமான தொரு மாதிரியை அவர் வைத்துள்ளார்! உண்மையாகவே, அவர் “ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்ய,” வந்தார் (மா:1௦:45). ஒரு தலைவனாகவும் பணிவிடைக்காரனாகவும் இருப்பதென்றால் என்னவென்பதை அவர் வாழ்ந்து காட்டினார். அவர் தாமே இயேசு, பணிவிடை செய்யும் ஒப்பற்றவர்.
இசைந்து இசைத்து
எங்கள் பேத்தியின் பள்ளி இசைக்குழு நிகழ்ச்சியைக் கண்டு நாங்கள் வியந்து போனோம். வெறும் 11 மற்றும் 12 வயது நிரம்பிய சிறுபிள்ளைகள் ஒன்றாக இசைந்து, நேர்த்தியாக வாசித்தார்கள். ஒருவேளை அக்குழுவிலிருந்த ஒவ்வொரு பிள்ளையும் தான் தனியாக இசைக்க வேண்டும் என நினைத்திருந்தால், குழுவாக இவர்கள் சாதித்ததை தனி நபராக இவர்களால் அளித்திருக்க முடியாது. புல்லாங்குழல், சாக்ஸபோன்(saxaphone) போன்ற மர வாத்தியங்கள், டிரம்பெட்(Trumpet) போன்ற பித்தளை வாத்தியங்கள், மற்றும் தாள வாத்தியங்கள் அனைத்தும் ‘இசைந்து’ தந்த பங்களிப்பினால் ஓர் அற்புதமான இசை உண்டாயிற்று!
ரோமாபுரியில் இயேசுவைப் பின்பற்றுகிறவர்களுக்கு பவுல் எழுதும்பொழுது, “அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க, ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம். நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்க[ள்],” எனக் கூறியுள்ளார் (ரோம. 12:5-6). மேலும், தீர்க்கதரிசனம் உரைத்தல், ஊழியம் செய்தல், புத்தி சொல்லுதல், பகிர்ந்தளித்தல், தலைமைத்துவம், இரக்கம் பாராட்டுதல் ஆகிய வரங்களை பவுல் குறிப்பிட்டுள்ளார் (வச 7-8). அதுமட்டுமன்றி, வரங்கள் அனைத்தும், அனைவருடைய பிரயோஜனத்திற்காகவும் இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது (1 கொரி. 12:7).
‘இசைந்து’ என்றால் “திட்டம் அல்லது வடிவமைப்பில் ஒருமனதாய் இணைந்து செய்யும் செயல்; நல்லிணக்கம் அல்லது ஒற்றுமை,” ஆகும். இயேசு கிறிஸ்துவின் மீது நாம் கொண்ட விசுவாசத்தினால் தேவனுடைய பிள்ளைகளாகிய நமக்கு தேவன் வைத்துள்ள திட்டம் இதுவே. “சகோதரசிநேகத்திலே, ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள்” (வச. 1௦). நம்முடைய இலக்கு ஒற்றுமையே; போட்டியன்று.
ஒரு வகையில் பார்த்தால், ஒவ்வொரு நாளும், இவ்வுலகம் நம்மை மிக நுட்பமாக கவனித்து கேட்கும்படியாக ஒரு “மேடையிலே” நாம் இருக்கிறோம். இம்மேடையிலே இருக்கும் தேவனுடைய இசைக்குழுவில், தனி நபர் இசைநிகழ்ச்சி ஏதும் இல்லை. மாறாக ஒவ்வொரு வாத்தியமும் இன்றியமையாதது. ஏனென்றால், நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களோடு இசைந்து பங்களிக்கும்பொழுது, சிறந்த இசை வெளிப்படும்.
உங்களுக்கு நற்பெயர் கிடைக்கவில்லையா?
1950-1960களில் ஆட்ரி ஹெப்பர்ன், நட்டாலி வுட் மேலும் தெபோரா ஹெர் என்ற ஹாலிவுட் நடிகைகளின் நிகழ்ச்சிகள் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கி, பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தன. ஆனால், இந்த நடிகைகளின் நிகழ்ச்சிகள் சிறந்து விளங்குவதற்குக் காரணம்; அந்த நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியான இசைக் குழுவினர் இயற்றிய மிக இனிமையான பாடல்கள்தான். அவை அந்த நடிகைகளின் திரைப்படங்கள் வெற்றி பெற உண்மையான காரணமாக இருந்தது. அந்த மூன்று பிரசித்திபெற்ற நடிகைகளுக்காக, திரைக்குப்பின்னால் ஒலி கொடுத்தது மார்னி நிக்சன்தான். ஆனால், அவளது முக்கியமான பங்களிப்பை நீண்ட காலமாக ஒருவரும் கண்டு கொள்ளவுமில்லை, அவளைப் புகழவுமில்லை.
கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் மிக முக்கியமான பணிகளை முன்னின்று செயல்படுத்துபவர்களை, அப்போஸ்தலனாகிய பவுல் தம் ஊழியத்தில் அதிகமாக சார்ந்திருந்தார். ரோமருக்கு எழுதிய நிருபத்தில் வல்லமையோடு தேவ செய்தி வெளிப்பட காரணமாக இருந்தவர் பவுலுடைய எழுத்தர் தெர்தியுவாகும் (ரோம. 16:22). பவுல் அப்போஸ்தலனுக்கும், ஆதித் திருச்சபைக்கும், எப்பாபிராவின் ஊக்கமான ஜெபம்தான் முக்கிய அஸ்திபாரமாக இருந்தது (கொலோ. 4:12-13). களைப்படைந்த பவுல் அப்போஸ்தலன் ஒய்வு எடுத்துக் கொள்ளத்தக்கதாக லீதியாள் அவளது வீட்டை திறந்து கொடுத்தாள். கிறிஸ்துவுக்குள் உடன் ஊழியர்களான இவர்களின் உதவி இல்லாமல் பவுல் திறம்பட உழியம் செய்திருக்க முடியாது (வச. 7-18).
தேவனுடைய ஊழியத் திட்டத்தில் நாம் செய்யும் பணி ஒருவேளை வெளிப்படையாக பிறர் பார்க்கத்தக்கதாக இல்லாவிட்டாலும், நாம் அவருக்கு உண்மையாகக் கீழ்ப்படிந்து அவருடைய ஊழியத்தில் அமைதியாக பங்கெடுக்கும் பொழுது, தேவன் நம்மேல் பிரியமாய் இருக்கிறார் (1 கொரி. 15:58) அவ்வாறு நாம் செய்யும் பொழுது, அந்த ஊழியம் தேவனுக் மகிமையாகவும், பிறரை அவரண்டை வழிநடத்துவதாகவும் இருப்பதால், நமது ஊழியம் அர்த்தமுள்ளதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்.
மௌனம்
நிவாரணப்பொருட்களை ஏற்றி வந்த வண்டிகள், கடகடவென்ற சத்தத்தோடு, அக்கிராமத்தின் பழைய குடிசைகளை கடந்து சென்றபோது, அங்கிருந்த கோழிகளெல்லாம் பயந்து சிதறியோடின. காலணிகள் ஏதுமின்றி வெளியே இருந்த பிள்ளைகள் வண்டிகள் செல்வதை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தனர். மழையினால் சேதமடைந்த “இச்சாலையில்” வண்டிகள் செல்வது மிக அரிது.
திடீரென இவ்வண்டிகளுக்கு முன்பாக ஓரு பிரமாண்ட மாளிகை தென்பட்டது. அது அவ்வூர் மேயரின் வீடு. ஆனால் அவர் இப்பொழுது அங்கு குடியிருக்கவில்லை. தன் ஜனங்கள் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி தவித்துக்கொண்டிருக்கையில், அம்மேயர் வேறு ஊரில் ஆடம்பரமான சுகஜீவியத்தை அனுபவித்துக்கொண்டிருந்தார்.
இதுபோன்ற அநியாயங்கள் நம்மை கோபமடைய செய்கிறது. தேவனுடைய தீர்க்கத்தரிசிகளும் இவ்வாறு கோபம்கொண்டார்கள். ஆபகூக், மிகுந்த அநீதியையும் அட்டூழியத்தையும் கண்டபோது, “கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் கேளாமலிருக்கிறீரே!” என தேவனை நோக்கி முறையிட்டான் (ஆப:1:2). ஆனால், கர்த்தரோ இதை ஏற்கனவே அறிந்திருந்தபடியினால், “தன்னுடையதல்லாததை தனக்காக சேர்த்துக் கொள்ளுகிறவனுக்கு ஐயோ... தன் வீட்டுக்குப் பொல்லாத ஆதாயத்தை தேடுகிறவனுக்கு ஐயோ!” எனக் கூறினார் (2:6,9). நியாயத்தீர்ப்பு வந்துகொண்டிருந்தது!
தேவனுடைய நியாயத்தீர்ப்பு பிறர் மேல் வருவதை நாம் வரவேற்கிறோம். ஆனால் ஆபகூக் புத்தகத்தில் உள்ள ஒரு முக்கிய செய்தி நம்மை நிதானிக்க செய்யும். “கர்த்தரோவென்றால் தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; பூமியெல்லாம் அவருக்கு முன்பாக மவுனமாயிருக் கக்கடவது,” (2:2௦) என்னும் வசனத்தில் “பூமி எல்லாம்” எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது ஒடுக்குகிறவர்களும் ஒடுக்கப்பட்டவர்களும். சில சமயம், மௌனமாய் இருக்கிற தேவனுக்கு முன்பாக நாமும் மௌனமாய் இருப்பதே ஏற்றதாயிருக்கும்!
ஏன் மௌனம்? ஏனென்றால் நாம் மிக எளிதாக நம்முடைய ஆவிக்குரிய வறுமையை காணத் தவறிவிடுகிறோம். ஆனால், தேவனுடைய பரிசுத்த சமூகத்தில் நாம் மௌனமாய் காத்திருக்கும் போது நம்முடைய பாவ சுபாவத்தை நாம் அறிந்துக்கொள்ளலாம்.
தேவன் மீது நம்பிக்கை வைக்க ஆபகூக் கற்றுகொண்டது போல, நாமும் கற்றுக்கொள்வோமாக. அவருடைய வழிகளையெல்லாம் நாம் அறியாதிருப்பினும், அவர் நல்லவர் என்பதை நாம் அறிந்திருக்கிறோமே. அவருடைய அதிகாரத்திற்கும் நேரத்திற்கும் அப்பாற்பட்டு எதுவுமில்லை.
ஆறுதலின் பாத்திரமாய்
என் தோழி, தான் வீட்டிலேயே செய்த சில மண்பாண்டங்களை எனக்கு தபால் மூலம் அனுப்பிவைத்தாள். அப்பார்சலை பிரித்து பார்த்தபோது, அதிலிருந்த விலைமதிப்பற்ற பொருட்கள் அனைத்தும் உடைந்திருக்க கண்டேன். அதில் ஒரு பாத்திரம், பல பெரிய துண்டுகளாகவும், சில்லுகளாகவும், தூசியும் மண்ணும் கலந்த உருண்டைகளாகவும் நொறுங்கிப்போயிருந்தது.
ஆனால், உடைந்துபோன அப்பாத்திரத்தை என் கணவர் பசையிட்டு ஒட்டிய பிறகு, அழகான பாத்திரமாக மாறிற்று. பல விரிசல்களை கொண்ட அவ்வழகிய பாத்திரத்தை, அனைவரும் காணும்படி நான் அலமாரியிலே வைத்தேன். ஒட்டப்பட்ட அப்பாத்திரத்தில் உள்ள விரிசல்களைப் போலவே, பல கடினமான சமயங்களை நான் கடந்து வந்த போது ஏற்பட்ட வடுக்கள், எனக்கும் உண்டு. நான் அச்சூழ்நிலைகளைக் கடந்து வரவும், இன்றும் பலத்தோடு நிற்கவும், தேவனே உதவி செய்தார். துன்ப வேளையில் தேவன் என் வாழ்விலும் என் மூலம் மற்றவர்களுக்கும் செய்த நன்மைகளை நான் பிறரிடம் பகிர்வதின் மூலம், துன்பப்படுகிற அநேகருக்கு நான் ஆறுதலளிக்கும் பாத்திரமாக இருக்க முடியும் என்பதை அப்பாத்திரம் எனக்கு நினைவூட்டியது.
நம்முடைய தேவன் இரக்கமும் ஆறுதலும் அளிப்பவராய் இருப்பதால், “இரக்கங்களின் பிதாவும் சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம்,” என அப்போஸ்தலனாகிய பவுல் தேவனை போற்றி துதிக்கிறார் (2 கொரி. 1:3). நாம் தேவனைப்போல மாறுவதற்கு, நம்முடைய சோதனைகளையும் பாடுகளையும் ஒரு கருவியாக தேவன் பயன் படுத்துகிறார். நம்முடைய சோதனை வேளையில், தேவன் நமக்களித்த ஆறுதலைக்கொண்டு, உபத்திரவத்தில் இருக்கும் அநேகருக்கு நாம் ஆறுதலளிக்கமுடியும் (வச. 4).
கிறிஸ்துவின் பாடுகளை நாம் எண்ணிப் பார்ப்போமானால், துயரத்தின் மத்தியிலும் நாம் ஆறுதலடைந்து, தேவன்மேல் நம்பிக்கை வைத்து, விடாமுயற்சியுடன் பாடுகளை சகிப்போம். அப்பொழுது தேவன் நம்முடைய அனுபவங்களைக் கொண்டு பாடுகள் மத்தியில் இருக்கும் அநேகருக்கு ஆறுதல் அளிப்பார் (வச 5-7). தேவன் நம்முடைய பாடுகளை எல்லாம் அவருடைய மகிமைக்கென்று மீட்டுக்கொண்டுள்ளார் என்பதை பவுல் அறிந்ததினால் ஆறுதலடைந்தது போல நாமும் ஆறுதலடைவோமாக. தேவன் நமக்களிக்கும் ஆறுதலின் பாத்திரத்தை துயரப்படுகிறவர்களோடு பகிர்ந்து, அவர்களுக்கு உறுதியான நம்பிக்கையை அளிப்போமாக.
புன்னகைக்க ஒரு காரணம்
வேலை ஸ்தலத்திலே, நம்மை ஊக்குவிக்கும் வார்த்தைகள் மிக அவசியமானது. ஊழியர்களின் உரையாடல்கள், அந்நிறுவனத்தின் லாபம், மற்றும் வாடிக்கையாளர்களின் மனநிறைவு, மற்றும் சக ஊழியரின் அங்கீகாரம் பாராட்டு, ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும். நன்கு செயல்படக் கூடிய குழுக்கள், அதிருப்தி, எதிர்ப்பு, பரிகாசம், ஆகியவற்றைக் காட்டிலும், ஆறு மடங்கு நம்பிக்கையூட்டும் ஆக்கப்பூர்வமான வார்த்தைகளை உபயோகிப்பதாக, ஆய்வுகள் வெளிப்படுத்துகிறது. அதேசமயம், மோசமாக செயல்படும் குழுக்கள், ஒவ்வொரு நன்மையான வார்த்தைக்கும், மூன்று மடங்கு அதிக எதிர்மறையான கருத்துகளையே உபயோகிக்கிறார்கள்.
உறவுகள் கட்டப்படுவதற்கும், நல்ல விளைவுகளை காணவும், வார்த்தைகள் எவ்வளவு
முக்கியமானவைகள் என்பதை, தன் அனுபவத்தின் மூலம் பவுல் கற்றறிந்தான். தமஸ்கு பட்டணத்திற்கு செல்லும் வழியிலே, இயேசுவை சந்திக்கும் முன்பு, தன் வார்த்தையினாலும் செயல்களினாலும், இயேசுவை பின்பற்றுகிறவர்களை அச்சுறுத்தி உபத்திரவப்படுத்தினான். ஆனால், அவன் தெசலோனியர்களுக்கு கடிதம் எழுதும் காலக்கட்டதிற்குள்ளாக, தேவன் அவன் இருதயத்திலே செய்த கிரியையினாலே, பிறரை மிகுதியாய் ஊக்குவிப்பவனாக மாறிப்போனான். மேலும், தன்னை உதாரணமாக ஏற்றுக்கொண்டு, நாம் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தும்படி வேண்டினான். ஆயினும், முகஸ்துதியை தவிர்க்க ஜாக்கிரத்தையாக இருக்கவும், கிறிஸ்துவின் ஆவியை பிரதிபலித்து, பிறரை நல் வார்த்தையினால் ஊக்குவிக்க கற்றுத் தந்தான்.
நாம் பிறரை ஊக்குவிக்க, நமக்கு தேவையான பெலனை தேவனிடமிருந்து பெற்றுக்கொள்கிறோம் என்பதை பவுல் நினைவுகூருகிறான். நம்மை மிகுதியாய் நேசித்து, நமக்காக மரித்த இயேசுவிடம், நம்மை முற்றிலுமாக ஒப்படைத்து, அவர் மூலம் நாம் பிறரை ஆற்றவும் தேற்றவும் மன்னிக்கவும் ஊக்குவிக்கவும் நேசிக்கவும் செய்வோமாக (1 தெச. 5:1௦-11).
நாம் ஒருவருக்கொருவர் உதவுவதின் மூலம், தேவனுடைய பொறுமையையும் நன்மையையும் ருசிபார்க்க அறிந்துகொள்ளக் கூடும் என்பதை, பவுல் நமக்கு காண்பிக்கிறார்.
தேவனால் ஊக்குவிக்கப்பட்ட வாழ்வு!
சில மாதங்களுக்கு முன்பு, “ஊக்கமிக்க மனிதர்கள்” என்னும் சங்கத்திலிருந்து, அச்சங்கத்திலே நான் சேரும்படி, மின்னஞ்சல் மூலம் எனக்கு ஒரு அழைப்பு வந்தது. அப்பொழுது ‘ஊக்கமிக்க’ என்னும் வார்த்தையின் முழுமையான அர்த்தத்தை நான் அறிந்துகொள்ள முனைந்தபொழுது, ‘ஒரு ஊக்கமிக்க மனிதன், வெற்றிபெறவேண்டும் என்ற முனைப்போடு, அதற்கான இலக்குகளை அடைய, விடாமுயற்சியோடு, கடினமாக உழைக்கக்கூடியவன்’ என்பதை நான் அறிந்தேன்.
ஊக்கமிக்க மனிதனாய் இருப்பது நலமானதா? அதை அறிந்துகொள்ள, “புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்,” என்னும் வசனத்தின் அடிப்படையில் சோதித்து அறியலாம் (1 கொரி. 1௦:31). ஏனென்றால், அநேகந்தரம், நம்முடைய சுயமகிமைக்கென்றே அநேக காரியங்களை நாம் செய்கிறோம்.
நோவாவின் காலத்தில் உண்டான பெருவெள்ளத்திற்கு பிறகு, “நமக்கு பேர் உண்டாகப்பண்ணுவோம்,” (ஆதி. 11:4) என கூறிக்கொண்டு, மனுஷர் தங்கள் மகிமைக்கென்று ஒரு வானளாவிய கோபுரத்தை கட்ட தீர்மானித்தார்கள். தாங்கள் பூமியெங்கும் சிதறிப் போகாமல் இருக்கவும், புகழ்ச்சியடையவும் விரும்பினார்கள். அவர்கள் தவறான ஊக்கத்தினால் செயல்பட்டார்கள். தேவனுடைய மகிமைக்கென்று அதை செய்யாமல், தங்களுடைய புகழ்ச்சிக்காகவே அதைச் செய்தார்கள்.
அதற்கு எதிர்மாறாக, சாலொமோன் ராஜா, உடன்படிக்கைப் பெட்டியையும் புதிதாக கட்டப்பட்ட தேவாலயத்தையும் பிரதிஷ்டை பண்ணும்பொழுது, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டினேன்”, என்று கூறினார் (1இரா:8:2௦). மேலும், “நாம் அவருடைய கற்பனைகளையும், அவருடைய கட்டளைகளையும்... கைக்கொள்ளுகிறதற்கு நம்முடைய இருதயத்தைத் தம்மிடத்தில் சாயப்பண்ணுவாரக”, என வேண்டுதல் செய்தார் (வச:58).
தேவனை மகிமைப்படுத்துவதும், அவருடைய வழிகளில் நடப்பதுமே நம்முடைய பெரிதான வாஞ்சையாய் இருந்தால், பரிசுத்த ஆவியானவரின் வல்லமையோடு, இயேசுவை நேசிக்கவும் சேவிக்கவும்வல்ல ஊக்கமுள்ள மக்களாக நாம் மாறிவிடுவோம். சாலொமோனின் ஜெபம், நம்முடைய ஜெபமாய் மாறுவதாக. “அவர் கட்டளைகளில் நடந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்ள, [நம்] இருதயம் நம்முடைய தேவனாகிய கர்த்தரோடு உத்தமமாய் இருக்கக்கடவது” (வச. 61).