எங்கள் மகன் சேவியர் பாலகனாய் இருந்தபோது, ‘மான்டெரி பே’ நீர்வாழ் உயிரினக் காட்சிசாலைக்கு குடும்பமாக சென்றிருந்தோம். நாங்கள் கட்டிடத்திற்குள் நுழைந்ததும், உட் கூரையில் தொங்கவிடப்பட்டிருந்த ஒரு மிகப்பெரிய சிற்பத்தை என் மகனுக்கு காட்டி, “அதோ பார், முதுகில் கூன் உள்ள திமிங்கலம்,” எனக் கூறினேன்.

அப்பொழுது அவன் தன் கண்கள் விரிய ஆச்சரியத்துடன், “பிரமாண்டமானது,” எனக் கூறினான்.

உடனே என் கணவர் என்னை திரும்பிப் பார்த்து, “இவனுக்கு எப்படி இந்த வார்த்தை தெரியும்?” எனக் கேட்டார். எனக்கும் என்ன சொல்வதேன்று தெரியாமல், “ஒருவேளை நாம் அவ் வார்த்தையை பேசும்போது அவன் கவனித்திருக்கலாம்,” என பதிலளித்தேன். நாங்கள் திட்டமிட்டு என் மகனுக்கு கற்றுத்தராதபோதும், எங்கள் மகன் பல வார்த்தைகளை கிரகித்துள்ளான் என்பது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.

இளைய தலைமுறையினர் வேதவசனத்தை அறிந்துகொள்ளவும், அதற்கு கீழ்ப்படியவும், திட்டமிட்ட நோக்கத்தோடு அவர்களுக்கு அதை கற்றுத் தருமாறு தன் ஜனத்தை தேவன் ஊக்குவிப்பதை உபாகமம் 6ஆம் அதிகாரத்தில் காணலாம். இஸ்ரவேலர் தேவனை அறிகிற அறிவிலே விருத்தியடையும்போது, அவர்களும் அவர்களுடைய பிள்ளைகளும் பயபக்தியோடு தேவனை தொழுதுகொள்ள கற்றுக்கொள்வார்கள். மேலும் முழுமையாய் அவரை நேசிக்கவும், கீழ்ப்படியவும், அவரை அறிகிற அறிவினால் கிட்டிச்சேரும் பொழுது, அதற்குறிய நற்பலனையும் அவர்கள் அனுபவிப்பார்கள் (வச. 2-5).

திட்டமிட்டு நம்முடைய இருதயத்தையும் மனதையும் வேத வசனத்தினால் நிரப்பும்பொழுது (வச:6), நம்முடைய அன்றாட அலுவல்கள் மத்தியிலும் தேவனுடைய அன்பையும் சத்தியத்தையும் நம் பிள்ளைகளுக்கு கற்றுத்தர நன்கு ஆயத்தமாயிருப்போம் (வச. 7). நாம் நம்முடைய பிள்ளைகளுக்கு மாதிரியாக இருந்து, இன்றும் நமக்கு பொருந்தக்கூடிய தேவனுடைய நிலையான சத்தியத்தை, அதன் அதிகாரத்தை, அவர்கள் கண்டுகொள்ளவும், அங்கீகரிக்கவும் கனப்படுத்தவும், அவர்களை ஊக்குவித்து ஆயத்தப்படுத்துவோமாக (வச 8-9).

நம்முடைய இருதயத்தின் நிறைவால், தேவனுடைய வார்த்தைகள் நம்முடைய வாய்களிலிருந்து இயல்பாக பொங்கி வழியும்பொழுது, நாம் ஒரு விசுவாச பாரம்பரியத்தை, தலைமுறை தலைமுறைதோறும் கடந்து செல்லும்படியாக விட்டுச் செல்லலாம் (4:9).