பாதையைத் தேர்ந்தெடுத்தல்
இலையுதிர் காலத்தில், கொலராடோ மலையில், குதிரைமேல் அமர்ந்து, தனக்கு முன் இருக்கும் பாதைகளில் எதைத் தேர்ந்தெடுப்பது என்ற சிந்தனையில் இருக்கும் ஒரு இளைஞனின் அழகிய புகைப்படம் என்னிடத்தில் இருக்கிறது. ராபர்ட் ஃப்ராஸ்ட் எழுதிய “தேர்வு செய்யப்படாத பாதை” (The Road Not Taken) என்ற கவிதையை இந்த புகைப்படம் எனக்கு நினைவுபடுத்துகிறது. தனக்கு முன் இருக்கும் இரண்டு பாதைகளைப் பற்றி ஃப்ராஸ்ட் குறிப்பிடுகிறார். இரண்டுமே அதில் செல்லத்தூண்டும்படி அழகாக இருக்கின்றன. மீண்டும் அதே இடத்துக்கு வருவாரா என்பது ஃப்ராஸ்டுக்குத் தெரியாது. ஆனால் அதில் ஒரு பாதையை அவர் தெரிவு செய்தாகவேண்டும். “காட்டில் பிரிந்த இரண்டு பாதைகளில், யாரும் அதிகம் பயணம் செய்யாத பாதையை நான் தேர்ந்தெடுத்தேன். அதுவே ஒரு பெரிய மாற்றத்திற்குக் காரணமாக இருந்தது” என்று ஃப்ராஸ்ட் எழுதுகிறார்.
இயேசுவின் மலைப் பிரசங்கத்தில் (மத்தேயு 5-7), அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களிடம், “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள். கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்” (மத்தேயு 7:13-14) என்று கூறினார்.
நம் வாழ்க்கைப் பயணத்தில், எந்தப் பாதையை தேர்ந்தெடுப்பது என்று பல சமயங்களில் குழப்பம் வரலாம். பல பாதைகள் நம்பிக்கை அளிப்பதாகவும், கவர்ச்சியாகவும் இருக்கின்றன. ஆனால் வாழ்க்கைக்கான பாதை ஒன்றே ஒன்றுதான். சீஷத்துவமும், கடவுளின் வார்த்தைக்கு கீழ்ப்படிதலும் கொண்ட பாதையில் பயணம் செய்யும்படி இயேசு நம்மிடம் கூறுகிறார். கூட்டத்தைப் பின்பற்றாமல், அவரைப் பின்பற்றுமாறு அழைக்கிறார்.
நமக்கு முன்பாக உள்ள பாதையைப் பற்றி நாம் சிந்திக்கையில், வாழ்க்கைப் பாதையைத் தெரிந்துகொள்ள, அவர் வழியைப் பின்பற்ற கடவுள் நமக்கு ஞானத்தையும், தைரியத்தையும் தந்தருள்வாராக!
பூசணிக்காய்க்குள் பொக்கிஷம்
ஒரு புதிய, இளம் தாயாக, என்னுடைய மகளின் முதல் ஆண்டை ஆவணப்படுத்த வேண்டும் என்ற உறுதியோடு இருந்தேன். அவள் எப்படி மாறி இருக்கிறாள், எப்படி வளர்ந்திருக்கிறாள் என்பதைத் தெரிந்துகொள்ளும்விதமாக, ஒவ்வொரு மாதமும் அவளைப் புகைப்படம் எடுத்தேன். எனக்கு மிகவும் பிடித்த ஒரு புகைப்படத்தில், உள்ளூர் விவசாயிடம் வாங்கிய பூசணிக்காயைக் குடைந்து, அதற்குள் அவள் சந்தோஷமாக உட்கார்ந்திருப்பாள். என் மனதுக்கினிய என் மகள், பெரிதாக வளர்ந்த ஒரு பூசணிக்காய்க்குள் இருந்தாள். சில வாரங்களில் பூசணிக்காய் காய்ந்துபோனது, ஆனால் என் மகளோ தொடர்ந்து வளர்ந்தாள்.
இயேசு யார் என்பதை உணர்ந்த பவுல் அதை விவரிப்பதை இந்த புகைப்படம் எனக்கு நினைவுபடுத்தியது. இயேசுவைக்குறித்து நம் இருதயத்தில் இருக்கும் அறிவை, மண்பாண்டத்துக்குள் உள்ள பொக்கிஷத்துக்கு ஒப்பிடுகிறார். “எல்லா பக்கங்களிலும் நெருக்கப்பட்டாலும்” (2 கொரிந்தியர் 4:8), இயேசு நமக்காக செய்தவற்றை நினைப்பது, போராட்டங்கள் மத்தியில் நிலைத்திருக்க நமக்கு உதவுகிறது. கடவுளின் வல்லமை நம்முடைய வாழ்க்கையில் செயல்படுவதால், “கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகாமல்”, நாம் இயேசுவின் வாழ்க்கையை வெளிப்படுத்துகிறோம் (வச. 9).
காய்ந்துபோன பூசணிக்காயைப்போல, நம்முடைய சோதனைகளால் நாம் சோர்ந்துபோகலாம். ஆனால் அந்த கடினமான சவால்களுக்கு மத்தியில், இயேசு தரும் சந்தோஷம் நம்மில் பெருக முடியும். நம்முடைய வாழ்க்கையில் செயல்படும் அவரது வல்லமை பற்றிய நமது புரிந்துகொள்ளுதல்தான் பலவீன மண்பாண்டங்களாகிய நம்முடைய உடலில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் பொக்கிஷம். நம்மில் அவர் வல்லமை செயல்படுவதால், கஷ்டங்கள் மத்தியில் நாம் செழித்து வளரமுடியும்.
என் உண்மையான முகம்
கடவுளின் பார்வைக்கு உகந்தது அல்லாத என்னுடைய பழைய வாழ்க்கையால், நான் பல ஆண்டுகளாக தகுதி இல்லாதவளாக, அவமானமாக உணர்ந்தேன். இந்த உணர்வு என்னுடைய அன்றாட வாழ்க்கையை அதிகமாக பாதித்தது. கறைபடிந்த என் பழைய வாழ்க்கையைப் பற்றி மற்றவர்களுக்குத் தெரிந்தால் என்ன செய்வது? ஒரு ஊழியத்தின் தலைவரை வீட்டிற்கு சாப்பிட அழைக்கும் அளவிற்கு கடவுள் எனக்கு தைரியத்தைக் கொடுத்தாலும், நான் முற்றிலும் நல்லவள் என்று காட்டிக்கொள்ள முயன்றேன். வீட்டை நன்றாக சுத்தம் செய்தேன். நல்ல உணவு சமைத்தேன். இருப்பதில் மிக நல்ல உடையை அணிந்துகொண்டேன்.
அதன் பின் முற்றத்தில் தண்ணீர் பாய்ச்ச உபயோகித்த தெளிப்பானை அணைக்கச் சென்றேன். தண்ணீர் ஒழுகிக்கொண்டிருந்த குழாயைத் திருப்பியபோது, ஏதோ தவறாகி, தண்ணீர் என் மீது தெறித்து, என் உடை முழுவதும் நனைந்துபோனது. வீட்டிற்குள் போய் தலையைத் துவட்டி, வீட்டில் அணியும் ஒரு சாதாரண உடைக்கு மாறியபோது, சரியாக அழைப்பு மணி ஒலித்தது. சலித்துப்போய், உடைமாற்றும்படி நடந்த சம்பவத்தையும், எதற்காக எல்லாம் நல்ல முறையில் காட்சி அளிக்கவேண்டும் என்ற என்னுடைய எண்ணத்தையும் பகிர்ந்துகொண்டேன். என் புது தோழி, தன் பழைய வாழ்க்கையினால் தனக்கு ஏற்படும் பயம், பாதுகாப்பற்ற உணர்வு ஆகியவற்றுடனான போராட்டங்களைப் பற்றிக்கூறினாள். நாங்கள் ஜெபித்தபிறகு, குறைபாடுள்ள கடவுளின் ஊழியக்காரரைக் கொண்ட தன் குழுவில் சேரும்படி என்னை அழைத்தாள்.
பவுல் அப்போஸ்தலர் கிறிஸ்துவுக்குள்ளான புது வாழ்க்கையை ஏற்றுக்கொண்டபோது, தன்னுடைய பழைய வாழ்க்கையை மறைக்கவும் இல்லை, ஆண்டவரை சேவிப்பதற்கு அதை ஒரு இடையூறாகவும் கருதவில்லை (1 தீமோத்தேயு 1:12-14). சிலுவையில் கிறிஸ்துவின் மரணம், பாவிகளில் பிரதான பாவியாகிய தன்னை இரட்சித்ததையும், மாற்றியதையும் அவர் அறிந்தார். அதனால் அவர் கடவுளைத் துதித்ததோடு, அவரைக் கனம்பண்ணவும், அவருக்குக் கீழ்ப்படியவும், மற்றவர்களையும் ஊக்குவித்தார் (வச. 15-17).
கடவுளின் கிருபையையும், மன்னிப்பையும் நாம் ஏற்றுக்கொள்ளும்போது, நம்முடைய பழைய வாழ்க்கையில் இருந்து நாம் விடுவிக்கப்படுகிறோம். குறைபாடுள்ளவர்களானலும், அதிகமாக நேசிக்கப்படும் நாம், கடவுள் நமக்குக் கொடுத்த திறமைகளுடன் மற்றவர்களை சேவிக்கும்போது, நம்முடைய உண்மையான முகங்களைக் குறித்து அவமானப்படவேண்டிய அவசியம் இல்லை.
எப்போதும் ஏற்றுக்கொள்ளப்படுதல்
பல ஆண்டுகளாக தன் பாடங்களைப் படிக்க அதிக சிரமப்பட்ட ஏஞ்சி அவள் படித்துக்கொண்டிருந்த மிகச்சிறந்த, பிரத்தியேக பள்ளியில் இருந்து, ஒரு “சாதாரண” பள்ளிக்கு மாற்றப்பட்டாள். அதிக போட்டி மிகுந்த சிங்கப்பூரின் பள்ளிக்கல்வியில், “நல்ல” பள்ளியில் படிப்பது எதிர்காலத்திற்கு நல்லது என்றாலும், இந்த சம்பவத்தை பலர் ஒரு தோல்வியாகக் கருதுவார்கள்.
ஏஞ்சியின் பெற்றோர் அதிக ஏமாற்றம் அடைந்தார்கள். ஏஞ்சியும் தன் நிலையில் இருந்து தாழ்த்தப்பட்டதாக உணர்ந்தாள். ஆனால் புதிய பள்ளியில் சேர்ந்த சில நாள்களிலேயே சாதாரண பிள்ளைகள் மத்தியில் படிப்பது எப்படி இருக்கும் என்று உணர்ந்தாள். “அம்மா, இதுதான் எனக்கு ஏற்ற இடம்,” என்றாள். “இங்குதான் என்னை மற்றவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்!”
இயேசு சகேயுவின் வீட்டிற்கு வருவதாகத் தெரிவித்தபோது, அந்த ஆயக்கார தலைவர் எப்படி உணர்ந்திருப்பார் (லூக்கா 19:5) என்பதை ஏஞ்சி குறித்த சம்பவம் எனக்கு நினைவுபடுத்தியது. தங்களிடம் குறை உண்டு என்றும் தங்களுக்கு கடவுளின் கிருபை பெற தகுதி இல்லை என்றும் உணர்ந்தவர்களுடன் சாப்பிடுவதை கிறிஸ்து விரும்பினார். நம்மைக் கண்டுகொண்டு, நாம் இருக்கிறபடியே நம்மை நேசிக்கும் இயேசு, அவரின் இறப்பு மற்றும் உயிர்த்தெழுதலின்மூலம் பூரணத்துவத்தைத் தருவதாக நமக்கு உறுதி அளிக்கிறார். அவர் கிருபையினால் மட்டுமே நாம் மாசற்ற முழுநிறைவைப் பெறமுடியும்.
கடவுளின் நேர்த்தியான தன்மையிலிருந்து நான் குறைவாகவே காணப்படுகிறேன் என்பதை நான் அறிவதால், பல வேளைகளில் என் ஆவிக்குரிய பயணம் ஒரு கடினமான பயணமாகவே இருக்கிறது. நாம் இருக்கிறபிரகாரமாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிறோம் என்பது எவ்வளவு ஆறுதலான விஷயம். ஏனென்றால், நாம் இயேசுவைப் போல மாற, பரிசுத்த ஆவியானவர் நம்மைப் பண்படுத்துகிறார்.
உங்கள் படகுகளைக் கொண்டு வாருங்கள்
ஹார்வி என்ற சூறாவளிப்புயல் 2017ல் வந்தபோது, பெரும் அழிவை ஏற்படுத்தக்கூடிய வெள்ளம் கிழக்கு டெக்சஸைச் சூழ்ந்தது. தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக, பலர் வெள்ளத்தில் இருந்து வெளியேற முடியாமல், தங்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கும் நிலை ஏற்பட்டது. அந்த மாகாணத்திலிருந்தும், நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும் பலரும் தனிப்பட்ட முறையில் தங்கள் படகுகளில் வந்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்ற உதவினர். இவர்களை மக்கள் “டெக்சஸ் கப்பற்படை” என்று அழைத்தனர்.
தைரியம் மற்றும் தயாள குணம் கொண்ட இந்த ஆண்கள் மற்றும் பெண்களின் செயல்கள், நீதிமொழிகள் 3:27 ல், முடிந்த வரை மற்றவர்களுக்கு உதவும்படி நாம் அறிவுறுத்தப்படுவதை நினைவுக்குக் கொண்டுவருகிறது. தங்கள் படகுகளைக் கொண்டுவந்து மற்றவர்களுக்கு உதவ அவர்களுக்கு செயல்திறன் இருந்தது. அதை அவர்கள் பயன்படுத்தினார்கள். தங்களிடம் இருந்த சாதனங்களையும், செயல்திறன்களையும் மற்றவர்களின் நலனுக்காக உபயோகிக்கும் மனோபாவத்தை அவர்கள் செயல்கள் வெளிப்படுத்துகின்றன.
சில சமயங்களில் நாம் செய்ய வேண்டிய வேலைகளை செய்வதற்கு நமக்கு போதிய சாமர்த்தியம் இல்லை என்று நாம் நினைக்கலாம். மற்றவர்களுக்கு உதவ நமக்கு திறமை, சாமர்த்தியம், அனுபவம், அல்லது நேரம் இல்லை என்று நினைத்து நாம் பயப்படுகிறோம். இதுபோன்ற சமயங்களில் நம்மை நாமே தனிமைப்படுத்திக்கொண்டு, மற்றவர்களுக்கு எந்த வகையில் நாம் உதவ முடியும் என்று கவனிக்கத் தவறுகிறோம். டெக்சஸ் கப்பற்படையினால் வெள்ளம் அதிகரிப்பதைத் தடுக்க முடியவில்லை. அரசு உதவி செய்யவேண்டும் என்று சட்டம் இயற்ற முடியவில்லை. ஆனால் சக மனிதர்களைக் காப்பாற்ற, தங்களிடம் இருந்த ஒன்றை உபயோகித்தனர் – அவை படகுகள்! மேலான இடத்திற்கு மக்களை அழைத்துச் செல்ல நம்மிடம் இருக்கும் “படகுகளை” – அது எதுவாக இருந்தாலும் – உபயோகிப்போமாக..
ஊடுருவக் குத்தும் முள்
ஒரு முள் என் ஆள்காட்டி விரலைக் குத்தியதில் ரத்தம் வந்தது. நான் வலியில் சத்தமிட்டதோடு, தன்னிச்சையாக என் கையை இழுத்துக்கொண்டேன். ஆனால் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தோட்ட வேலைக்கான கையுறை அணியாமல், முள் செடியை கத்தரித்தால் இதுதானே நடக்கும்.
என் விரலில் இருந்த வலியையும், அதிலிருந்து வழிந்த ரத்தத்தையும் உடனடியாக கவனிக்க வேண்டியதிருந்தது. காயத்தைக் கட்ட முயன்றபோது, எதிர்பாராத விதமாக, என் இரட்சகரைப் பற்றி சிந்தித்தேன். ஏனென்றால், போர்ச்சேவகர் இயேசுவுக்கு முழுவதும் முட்களினால் ஆன கிரீடத்தை அணியச் செய்தார்களே (யோவான் 19:1-3). ஒரு முள் இவ்வளவு வலியைக் கொடுத்தால், முட்களால் ஆன ஒரு கிரீடம் எவ்வளவு வலியைக் கொடுத்திருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அவர் அனுபவித்த சரீரப் பிரகாரமான வலியில் அது ஒரு சிறு பகுதியே. அவர் முதுகை ஒரு வார் தாக்கியது. ஆணிகள் அவர் மணிக்கட்டுகளையும், கணுக்கால்களையும் ஊடுருவின. ஒரு ஈட்டி அவர் விலாவை ஊடுருவியது.
ஆனால் இயேசு ஆவிக்குரிய வலியையும் சகித்தார். ஏசாயா 53ல், ஐந்தாம் வசனம் “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது” என்று நமக்குச் சொல்கிறது. மன்னிப்பு பற்றி வேறு விதமாக எடுத்துச் சொல்வதே ஏசாயா குறிப்பிடும் “சமாதானம்”. நாம் கடவுளோடு ஆவிக்குரிய சமாதானத்தைப் பெறும்படி, தான் ஈட்டி, ஆணிகள், முள் கிரீடம் ஆகியவற்றால் குத்தப்பட, இயேசு அனுமதித்தார். அவருடைய தியாகம், நமக்காக மரிக்க தயாராக இருந்தது ஆகியவை நாம் பிதாவுடன் ஒரு உறவை ஏற்படுத்திக்கொள்ள உதவின. அவர் அதை எனக்காகவும், உங்களுக்காகவும் செய்தார் என்று வேதாகமம் கூறுகிறது.
ரம்பமும் ஒரு ஜெபமும்
என்னுடைய அத்தை க்லேடிஸ் துணிச்சல் மிக்க பெண். அவர் துணிச்சலை நான் மதித்தாலும், சில சமயங்களில் அது எனக்கு கவலையைத்தரும். என் கவலைக்குக் காரணம், “நேற்று நான் ஒரு வாதுமை மரத்தை வெட்டினேன்” என்று அவர் அனுப்பிய மின்னஞ்சல்.
ரம்பத்தைக் கையாளும் என் உறவினருக்கு 76 வயது! அவர் வாகனம் நிறுத்தும் இடத்திற்குப் பின்புறம் அந்த மரம் வளர்ந்திருந்தது. காங்க்ரீட் தரையில் அந்த மரத்தின் வேர்கள் வெடிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற நிலையில் அவர் அதை வெட்டத் தீர்மானித்தார். ஆனால் “இதுபோன்ற வேலைகளைச் செய்யும்முன் நான் ஜெபிப்பேன்” என்று அவர் எங்களிடம் கூறினார்.
இஸ்ரவேலரின் சிறையிருப்பின்போது, பெர்சிய ராஜாவுக்கு பானபாத்திரக்காரனாக நெகேமியா பணி செய்கையில், எருசலேமுக்குத் திரும்பிய ஜனங்களைப்பற்றி அவர் கேள்விப்பட்டார். சில பணிகள் செய்யப்பட வேண்டியிருந்தது. “எருசலேமின் அலங்கம் இடிபட்டதும், அதின் வாசல்கள் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கிறது” (நெகேமியா 1:3). அலங்கங்கள் இடிபட்டதால், எதிரிகள் எளிதில் தாக்கக்கூடிய நிலை இருந்தது. நெகேமியா தன் ஜனங்கள்மீது கரிசனை கொண்டவராக இருந்தார். அந்தப் பணிகளில் தன்னை ஈடுபடுத்த விரும்பினார். ஆனால் ஒரு புதிய அரசர் எருசலேமின் கட்டிடப் பணிகளை நிறுத்தும்படி கடிதம் எழுதியதால் (எஸ்றா 4), நெகேமியா முதலில் ஜெபித்தார். நெகேமியா தன் ஜனங்களுக்காக ஜெபம் செய்தார் (நெகேமியா 1: 5-10). பின்னர் ராஜாவிடம் விடுப்புக்காக அனுமதி கேட்கும் முன் கடவுளின் உதவியை நாடி ஜெபம் செய்தார் (வச. 11).
ஜெபம்தான் உங்கள் பதிற்செயலா? வாழ்வில் எந்த ஒரு காரியத்தையும், சோதனையையும் எதிர்கொள்ள ஜெபமே சிறந்தது.
அச்சுறுத்தும் காரியங்கள், அழகான காரியங்கள்
பயம் நம்மை உறைய வைத்துவிடக்கூடும். கடந்த காலத்தில் நம்மைக் காயப்படுத்தியவை, மீண்டும் நம்மைக் காயப்படுத்தக்கூடியவை என்று, பயப்படுவதற்கான எல்லாக் காரணங்களும் நமக்குத் தெரியும். இதனால் சில சமயங்களில் நாம் பின்னே போகவும் முடியாமல், முன்னே செல்லவும் பயந்து தவிக்கிறோம். என்னால் இதைச் செய்ய முடியாது. மீண்டும் காயப்படுவதை சமாளிக்கும் அளவுக்கு எனக்கு சாமர்த்தியம் இல்லை, பெலன் இல்லை, தைரியம் இல்லை.
எழுத்தாளர் ஃப்ரெட்ரிக் ப்யுக்னர் கடவுளின் கிருபையை விவரிக்கும் விதம் என்னை அதிகம் கவர்ந்தது. “இதுதான் உலகம். இங்கு அச்சுறுத்தும் காரியங்களும் நடக்கும். அழகான காரியங்களும் நடக்கும். பயப்படாதே. நான் உன்னோடு இருக்கிறேன்” என்று கூறும் மெல்லிய சத்தத்தைப் போன்றது கடவுளின் கிருபை என்று கூறுகிறார்.
அச்சுறுத்தும் காரியங்கள் நடக்கும். நம் உலகில், காயப்படுத்துபவர்கள், சிலரை மிக மோசமாக காயப்படுத்துகிறார்கள். சங்கீதக்காரன் தாவீதைப் போல, நாமும், தீங்கு நம்மைச் சூழ்ந்ததையும் “பட்சிக்கிற சிங்கங்களைப்” (சங்கீதம் 57:4) போல் நம்மைப் பிறர் காயப்படுத்தியதையும் சுமக்கிறோம். எனவே நாம் துக்கித்துக் கதறுகிறோம் (வச. 1-2)
ஆனால் கடவுள் நம்மோடு இருப்பதால், அழகான காரியங்களும் நடக்கக்கூடும். நமது காயங்களையும், பயங்களையும் சுமந்துகொண்டு நாம் அவரிடம் செல்லும்போது, நம்மைக் காயப்படுத்தக்கூடிய திறனைவிட (வச. 1-3) அதிகமான அன்பால் நாம் சுமக்கப்படுவதை உணர்வோம். அந்த அன்பு வானபரியந்தம் எட்டக்கூடிய அன்பு (வச. 10). பேரிடர் நம்மைச் சூழ்ந்துகொள்ளும்போதும், நம் இருதயம் சமாதானத்தைக் கண்டுகொள்ளத்தக்க உறுதியான புகலிடமாக அவர் அன்பு அமையும் (வச. 1,7). அவரது விசுவாசத்தைப் பற்றிய பாடலோடு ஒரு புதிய நாளைப் பார்க்கும்படி, புதிதாக்கப்பட்ட தைரியத்தோடு நாம் ஒருநாள் விழிப்போம் (வச. 8-10).
அவரை முதலில் நம்புங்கள்
“அப்பா, என்னை விட்டுராதீங்க!” “விட மாட்டேன். இது சத்தியம். நல்லா பிடிச்சிருக்கேன்.”
நான் தண்ணீரைப் பார்த்து அதிகம் பயப்படும் சிறுவனாக இருந்தேன். ஆனால் என் தந்தை நான் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார். நீச்சல் குளத்தில் என் தலைக்கு மேல் தண்ணீர் இருக்கும் அதிக ஆழமான பகுதிக்கு என்னை அழைத்துச் செல்வார். அங்கு அவர் மட்டுமே எனக்குத் துணை. அதன்பின் எனக்கு அமைதியாக ஆசுவாசப்படவும், மிதக்கவும் கற்றுக்கொடுப்பார்.
அது நீச்சல் பயிற்சி மட்டுமல்ல. அது நம்பிக்கைக்கான படிப்பினை. என் தந்தை என்னை நேசிக்கிறார், அதனால் எனக்கு எந்த ஆபத்தும் வர விடமாட்டார் என்று தெரிந்தாலும், நான் பயப்படவும் செய்தேன். எந்த ஆபத்தும் இல்லை என்று அவர் உறுதி அளிக்கும்வரை அவர் கழுத்தை இறுகப் பற்றிக்கொள்வேன். இறுதியில் அவரது பொறுமைக்கும், இரக்கத்திற்கும் பலன் கிடைத்தது. நான் நீந்த ஆரம்பித்தேன். ஆனால் நான் முதலில் அவரை நம்ப வேண்டியிருந்தது
ஏதாவது கஷ்டம் “என் தலைக்கு மேல்” இருப்பதைப் போன்ற உணர்வு வரும்போது, அந்தத் தருணங்களை நினைத்துக்கொள்வேன். தம் ஜனத்திற்கு கடவுள் அளித்த உறுதியை நினைவில்கொள்ள அவை எனக்கு உதவுகின்றன: “உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்” (ஏசாயா 46:4).
கடவுளின் கரம் நம்மைத் தாங்குவதை எல்லா சமயங்களிலும் உணரமுடியாமல் இருக்கலாம். ஆனால் அவர் நம்மை விட்டு விலகுவதில்லை என்று வாக்குக்கொடுத்திருக்கிறார் (எபிரேயர் 13:5). அவரது பராமரிப்பில், வாக்குறுதிகளில் நாம் நிலைத்திருக்கும்போது, அவரது விசுவாசத்தில் நம்பிக்கைகொள்ள உதவுகிறார். நமது கவலைகளுக்கு மேலாக நம்மைத் தூக்கி, அவரில் நாம் சமாதானத்தைக் கண்டுகொள்ள உதவுகிறார்.