“அப்பா, என்னை விட்டுராதீங்க!” “விட மாட்டேன். இது சத்தியம். நல்லா பிடிச்சிருக்கேன்.”

நான் தண்ணீரைப் பார்த்து அதிகம் பயப்படும் சிறுவனாக இருந்தேன். ஆனால் என் தந்தை நான் நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினார். நீச்சல் குளத்தில் என் தலைக்கு மேல் தண்ணீர் இருக்கும் அதிக ஆழமான பகுதிக்கு என்னை அழைத்துச் செல்வார். அங்கு அவர் மட்டுமே எனக்குத் துணை. அதன்பின் எனக்கு அமைதியாக ஆசுவாசப்படவும், மிதக்கவும் கற்றுக்கொடுப்பார்.

அது நீச்சல் பயிற்சி மட்டுமல்ல. அது நம்பிக்கைக்கான படிப்பினை என் தந்தை என்னை நேசிக்கிறார், அதனால் எனக்கு எந்த ஆபத்தும் வர விடமாட்டார் என்று தெரிந்தாலும், நான் பயப்படவும் செய்தேன். எந்த ஆபத்தும் இல்லை என்று அவர் உறுதி அளிக்கும்வரை அவர் கழுத்தை இறுகப் பற்றிக்கொள்வேன். இறுதியில் அவரது பொறுமைக்கும், இரக்கத்திற்கும் பலன் கிடைத்தது. நான் நீந்த ஆரம்பித்தேன். ஆனால் நான் முதலில் அவரை நம்ப வேண்டியிருந்தது  

ஏதாவது கஷ்டம் “என் தலைக்கு மேல்” இருப்பதைப் போன்ற உணர்வு வரும்போது, அந்தத் தருணங்களை நினைத்துக்கொள்வேன். தம் ஜனத்திற்கு தேவன் அளித்த உறுதியை நினைவில்கொள்ள அவை எனக்கு உதவுகின்றன: “உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்” (ஏசாயா 46:4).  

கர்த்தரின் கரம் நம்மைத் தாங்குவதை எல்லா சமயங்களிலும் உணரமுடியாமல் இருக்கலாம். ஆனால் அவர் நம்மை விட்டு விலகுவதில்லை என்று வாக்குக்கொடுத்திருக்கிறார் (எபிரேயர் 13:5). அவரது பராமரிப்பில், வாக்குறுதிகளில் நாம் நிலைத்திருக்கும்போது, அவரது விசுவாசத்தில் நம்பிக்கைகொள்ள உதவுகிறார். நமது கவலைகளுக்கு மேலாக நம்மைத் தூக்கி, அவரில் நாம் சமாதானத்தைக் கண்டுகொள்ள உதவுகிறார்.