நவம்பர், 2018 | நமது அனுதின மன்னா Tamil Our Daily Bread

Archives: நவம்பர் 2018

நன்றியால் தேவனை கனப்படுத்துதல்

என்னுடைய கணவருக்கு புற்றுநோய் என்று வந்திருந்த மருத்துவ அறிக்கையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தாலும், அந்த பெண் மருத்துவரின் முகத்தில் கவலைக்கான அறிகுறி இல்லை. புன்முறுவலோடு அவர் ஒரு யோசனை சொன்னார்: ஒவ்வொரு நாளையும் நன்றி சொல்லியபடி தொடங்குங்கள். “குறைந்தபட்சம் மூன்று விஷயங்களுக்காக,” என்றார். ஸ்தோத்திரம் சொல்வது தேவனின் நற்பண்புகளில் ஊக்கம் கிடைக்க உதவும் என்று தெரிந்ததால் டான் ஒத்துக்கொண்டார். இதனால் டான் ஒவ்வொரு நாளையும் துதிகளோடு தொடங்குகிறார். இரவு நல்ல தூக்கத்தைத் தந்ததற்காக நன்றி ஆண்டவரே. சுத்தமான படுக்கைக்காக. சூரிய வெளிச்சத்திற்காக. காலை உணவிற்காக. என் உதடுகளின் புன்முறுவலுக்காக நன்றி.

ஒவ்வொரு வார்த்தையும் மனப்பூர்வமானது. ஆனால் அது அற்பமாக தோன்றுமா? வாழ்வின் சின்னச் சின்ன விஷயங்களுக்காக நன்றி சொல்வது மகத்துவமான கர்த்தருக்கு முக்கியமா? தாவீதின் முதன்மை சங்கீதக்காரர் ஆசாப் சங்கீதம் 50ல் தெளிவான பதிலைத் தருகிறார். “உன் வீட்டிலிருந்து காளைகளையும், உன் தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும்” ஆண்டவர் கேட்கவில்லை (வச. 9). முன்பு இஸ்ரவேலரின் ஸ்தோத்திர பலிகளாக இருந்த இவற்றை விரும்பாமல், நம் இருதயத்தையும், நம் வாழ்க்கையையும் நன்றியோடு கொடுக்க விரும்புகிறார் (வச. 14, 23).

என் கணவர் அனுபவித்ததுபோல, மனப்பூர்வமான நன்றி, நாம் ஆவியில் உற்சாகமாக இருக்க உதவும். அப்போது “ஆபத்துக் காலத்தில்” நாம் கூப்பிடும்போது, அவர் நம்மை “விடுவிப்பார்” (வச. 15). அப்படியென்றால் ஆவியில், சரீரத்தில் டான் இரண்டு வருட சிகிச்சையில் சுகமாகி விடுவார் என்று அர்த்தமா? அல்லது அவர் வாழ்நாள் முழுவதும் சுகம் கிடைக்காதா? நமக்குத் தெரியாது. ஆனால் இப்போதைக்கு, தேவனின் அன்புக்காக, அவர் மீட்பராக, சுகம் அளிப்பவராக, நண்பராக இருப்பதற்காக தேவனுக்கு நன்றி சொல்வதில் டான் சந்தோஷமடைகிறார். “உங்களுக்கு நன்றி” என்ற அழகிய வார்த்தைகளைக் கேட்பதில் நண்பர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

இத்தருணத்தின் ஆண்டவர்

சில மாதங்களுக்கு முன், மூன்று மணி நேர பயண தூரத்தில் இருக்கும் என் மகன் வீட்டில் ஒரு கட்டட வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். நினைத்ததை விட அந்த வேலை முடிய அதிக நாட்கள் ஆயிற்று. ஒவ்வொரு நாள் காலையிலும், அன்று மாலை முடித்துவிட வேண்டும் என்று ஜெபித்தேன். ஆனால், ஒவ்வொரு நாள் மாலையிலும், முடிவடையாத வேலைகள் இருந்தன.

ஏன் என்று யோசித்தேன். தாமதம் ஆவதற்கு ஏதேனும் காரணம் இருக்குமா என்று யோசித்தேன். அதற்கான விடை அடுத்த நாள் காலையில் கிடைத்தது. காலையில் வேலைக்கான உபகரணத்தை எடுக்கும்போது, என் தொலைபேசி ஒலித்தது. தெரியாத நபர் “உங்கள் மகள் ஒரு விபத்தில் அடிபட்டிருக்கிறாள். நீங்கள் உடனே வரவேண்டும்” என்றார்.

அவள் வீடு என் மகன் வீட்டுக்கு அருகிலேயே இருந்தது. அதனால் பதினான்கு நிமிடங்களில் அவள் அருகில் இருந்தேன். நான் என் வீட்டில் இருந்திருந்தால், வந்து சேர மூன்று மணி நேரம் ஆகியிருக்கும். நான் மருத்துவ ஊர்தியின் பின்னாலேயே சென்று, அறுவை சிகிச்சைக்கு முன் அவளுக்கு ஆறுதல் கூறினேன். ஆறுதலாக அவள் கையைப் பிடித்து அமர்ந்திருந்த வேளையில், அந்த கட்டட வேலை தாமதம் ஆகாதிருந்தால், என்னால் அவளோடு இருந்திருக்க முடியாது என்று உணர்ந்தேன்.

நம் தருணங்கள் தேவனுக்குச் சொந்தமானவை. எலிசாவின்மூலம் ஆண்டவர் உயிர்ப்பித்த சிறுவனின் தாயின் அனுபவமும் இதைப்போன்றதே (2 ராஜாக்கள் 4:18-37). பஞ்சத்தின் காரணமாக நாட்டை விட்டுச் சென்ற அவள், ராஜாவிடம் தன் நிலத்தைக் கேட்க, பல வருடங்களுக்குப் பிறகு திரும்பி வந்தாள். அதே நேரத்தில், தீர்க்கதரிசியின் பணியாள் கேயாசியோடு ராஜா பேசிக்கொண்டிருந்தார். “செத்துப் போனவனை (எலிசா) உயிர்ப்பித்தார் என்பதை அவன் ராஜாவுக்கு அறிவிக்கிறபோது,” எலிசா உயிர்ப்பித்த பிள்ளையின் தாய் உள்ளே வந்தாள் (8:5). அவள் வேண்டுதல் கேட்கப்பட்டது.

அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பது நமக்குத் தெரியாது. ஆனால் எந்த சூழ்நிலையையும் நன்மைக்காக பயன்படுத்த கர்த்தர் வல்லவராக இருக்கிறார். கர்த்தர் இன்று நமக்கு முன்குறித்திருக்கும் வேலைகளுக்கு, அவரோடு நடக்க கிருபை செய்வாராக.

உறுதியான அடித்தளம்

சென்ற வருடம் கோடையின்போது நானும் என் கணவரும், பென்ஸில்வேனியாவின் கிராமப்புறத்தில் உள்ள, ஃப்ராங்க் லாய்ட் ரைய்ட் என்ற கட்டடக்கலை நிபுணர் கட்டிய, கொட்டும் அருவி என்று பொருள்படக்கூடிய ‘ஃபாலிங் வாட்டர்’ (Falling water) வீட்டைச் சுற்றிப்பார்த்தோம். அதுபோன்ற ஒரு வீட்டை நான் அதுவரை பார்த்ததில்லை. தரையில் இருந்து முளைத்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு வீட்டை ரைட் கட்ட நினைத்து, அதில் வெற்றியும் பெற்றார். ஏற்கனவே இருந்த ஒரு நீர்வீழ்ச்சியைச் சுற்றி அந்த வீட்டைக் கட்டினார். கட்டட வடிவமைப்பு அருகில் இருந்த பாறை வடிவங்களை ஒத்திருந்தது. எங்களுக்கு வீட்டை சுற்றிக் காட்டிய பெண், அந்த வீடு எப்படி பாதுகாப்பாக இருக்கிறது என்று விளக்கினார். “வீட்டின் நடுப்பகுதி முழுவதும் கீழே உள்ள கற்பாறைகளை அஸ்திபாரமாகக் கொண்டுள்ளது” என்றாள்.

அவளது வார்த்தைகள், இயேசு தன் சீஷர்களுக்குச் சொன்ன வார்த்தைகளை எனக்கு நினைவுபடுத்தியது. அவர் கற்றுக் கொடுப்பதே அவர்கள் வாழ்க்கைக்கான அடித்தளமாக இருக்கும் என்று இயேசு மலைப் பிரசங்கத்தில் அவர்களுக்குக் கூறினார். அவரது வார்த்தைகளைக் கேட்டு, அதன்படி நடந்தால், எந்த சூறாவளியையும் அவர்களால் தாங்கமுடியும் என்று கூறினார். கேட்டும் கீழ்ப்படியாமல் இருப்பவர்கள் மணலின்மேல் கட்டப்பட்ட வீட்டைப்போல் இருப்பார்கள் (மத். 7: 24-27). பின்னர் பவுலும் இதே சிந்தனைகளை வெளிப்படுத்தினார். கிறிஸ்துவே அடித்தளம் என்றும், நிலைத்து நிற்கக்கூடிய கிரியைகளால் நாம் அதன்மேல் கட்டவேண்டும் என்று எழுதினார் (1 கொரி. 3:11).

இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு, கீழ்ப்படியும்போது, நம் வாழ்க்கையை உறுதியான கற்பாறையை அடித்தளமாகக் கொண்டு அமைக்கிறோம். நம் வாழ்க்கையும் ஃபாலிங்வாட்டரைப் போல கற்பாறையின்மேல் கட்டப்பட்டதால் நீடித்தும், அழகாகவும் அமையும்.

வைக்கோலை அடுக்குவது

நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது, ஒரு கோடை விடுமுறையில் கொலராடோவில் உள்ள ஒரு கால்நடைப் பண்ணையில் வேலை செய்தேன்.  நவம்பர் முழுவதும் வைக்கோலை வெட்டி முடித்துவிட்டு, மாலையில் களைப்போடும், பசியோடும் ட்ராக்டர் வண்டியை அதை நிறுத்தும் இடத்திற்கு ஓட்டிவந்தேன். ஒரு வீரப்பிரதாப செயலாக நினைத்து, ட்ராக்டரை ஒடித்துத் திருப்பி, நிறுத்தியதில், ட்ராக்டர் சுழன்றது.

இதனால் அருகில் இருந்த 2000 லிட்டர் பெட்ரோல் இருந்த கலன் பெரிய சத்தத்துடன் கீழே விழுந்து, பெட்ரோல் முழுவதும் கீழே கொட்டியது.

பண்ணைக்கு சொந்தக்காரர் அருகில் நின்று அந்த இடத்தை முழுவதும் பார்த்தார்.

நான் ட்ராக்டரில் இருந்து இறங்கி, மன்னிப்புக் கேட்டேன். வேறு எதுவும் மனதில் தோன்றாததால் கோடை முழுவதும் ஊதியம் இல்லாமல் வேலை செய்கிறேன் என்று கூறினேன்.

உடைந்த கலனையும், கொட்டிய பெட்ரோலையும் பார்த்த அவர், திரும்பி வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார். “வா, நாம் போய் சாப்பிடலாம்” என்றார்.

தவறு செய்த இளைஞனைப் பற்றி இயேசு சொன்ன கதை எனக்கு நினைவுக்கு வந்தது. “தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன்” என்று கதறினான். “உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும்” என்று சொல்ல நினைத்திருந்தான். ஆனால் அதை அவன் சொல்லும் முன்பே அவன் தந்தை அவனை இடைமறித்தார். “வா, நாம் போய் சாப்பிடலாம்” என்பதே அவர் சொன்னதின் சாராம்சம் (லூக். 15:17-24).

தேவனின் பெருந்தன்மை இதேபோன்று வியக்க வைப்பதாகும்.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

எப்போதும் நம்பக்கூடியவர்

 நான் அதிகமாய் கவலைப்படக்கூடியவன். நான் தனிமையில் வாழக்கூடிய நபர் என்பதினால் அதிகாலை நேரம் என்பது, பொல்லாத எண்ணங்கள் சிந்தையில் நிழலாடும் மிகவும் மோசமான தருணங்கள். எனவே ஹட்சன் டெய்லரின் (சீனாவிற்கான ஒரு பிரிட்டிஷ் மிஷனரி) மேற்கோளை எனது குளியலறை கண்ணாடியில் ஒட்டி வைத்தேன். என் எண்ணங்கள் பாதிக்கப்படும்போது, நான் அதைப் பார்க்க முடியும்: “ஜீவனுள்ள தேவன் ஒருவர் இருக்கிறார். அவர் வேதாகமத்தில் பேசியிருக்கிறார். அவர் சொன்னதைச் செய்வார், வாக்குச்செய்த அனைத்தையும் செய்திருக்கிறார்” என்று அந்த வாசகம் நீளுகிறது.  
டெய்லரின் இந்த வார்த்தைகள், பல வருடங்களாக தேவனுடன் நடந்து, அவர் யார் என்பதையும், நோய், வறுமை, தனிமை மற்றும் துக்கத்தின் போது அவரால் என்ன செய்ய முடியும் என்பதையும் நமக்கு நினைவூட்டுகிறது. தேவன் நம்பகமானவர் என்பதை அவர் சாதாரணமாய் அறியவில்லை; அவருடைய நம்பகத்தன்மையை அவர் அனுபவித்தார். அவர் தேவனின் வாக்குறுதிகளை நம்பி அவருக்கு கீழ்ப்படிந்ததால், ஆயிரக்கணக்கான சீன மக்கள் இயேசுவுக்கு தங்கள் ஜீவனை அர்ப்பணித்தனர்.  
தேவனையும் அவருடைய வழிகளையும் அனுபவிப்பதின் மூலம் தேவன் நம்பகமானவர் என்பதை தாவீது உணர்ந்தார். அவர் தேவனை நல்லவராகவும், இரக்கமுள்ளவராகவும், அவர் வாக்குத்தத்தங்களில் உண்மையுள்ளவராகவும் அனுபவித்ததால், சங்கீதம் 145ஐ துதி பாடலாக எழுதினார். நாம் தேவனை நம்பி பின்பற்றும்போது, அவர் தன்னை யார் என்று சொல்லுகிறாரோ அவர் அதுவே என்ற நம்பிக்கைக்கு நாம் பாத்திரவானாகிறோம். அப்போது, தாவீதைப் போல நாமும் தேவனை துதிகளின் மூலமாய் மற்றவர்களுக்கு தெரியப்படுத்துகிறோம் (வச. 10-12). 
நான் கவலைப்படும் தருணங்களில், தேவன் உண்மையுள்ளவர் என்பதினால் அவரோடு நடக்கும் நம்முடைய அடிகளில் பாதிப்பு ஏற்படாத வகையில் நம்மை அவர் நடத்தட்டும் (எபிரெயர் 10:23). 

சத்தமாய் சிரித்தல்

அமெரிக்க நகைச்சுவை நடிகரும் எழுத்தாளருமான ஜான் பிரான்யன், “நாம் சிரிப்பதைக் குறித்து யோசிக்கவில்லை; அது நம்முடைய எண்ணமே இல்லை. அது வாழ்க்கை முழுவதும் நமக்கு தேவைப்படும் என்பதை அறிந்த தேவனே அதை நமக்குக் கொடுத்திருக்கிறார். நாம் போராட்டங்களை சந்திக்கப்போகிறோம் என்பதையும் உபத்திரவங்களை மேற்கொள்ளப்போகிறோம் என்பதையும் அவர் அறிந்திருக்கிறார். சிரிப்பு என்பது ஒரு வரம்” என்கிறார். 
தேவன் படைத்த சில உயிரினங்களை பார்த்த மாத்திரத்தில் நமக்கு சிரிப்பு வரலாம். அவற்றின் விநோதமான உருவ அமைப்பும், அவைகள் செய்யும் குறும்புத்தனமும் நம்முடைய சிரிப்பிற்கு காரணமாகலாம். கடலில் வாழும் பாலூட்டிகளையும், பறக்க முடியாத நீண்ட கால்கள் கொண்ட பறவைகளையும் தேவன் படைத்தார். தேவன் இயல்பில் நகைச்சுவை உணர்வு கொண்டவர்; நாம் அவருடைய சாயலில் படைக்கப்பட்டிருப்பதால், நமக்கும் நகைச்சுவை உணர்வு இயல்பானது.  
வேதாகமத்தில் நகைப்பு என்னும் வார்த்தையை ஆபிரகாம் மற்றும் சாராள் சம்பவத்தில் தான் முதன்முறையாகப் பார்க்கிறோம். இந்த வயதான தம்பதியருக்கு தேவன், “உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான்” (ஆதியாகமம் 15:4) என்று வாக்குப்பண்ணுகிறார். மேலும், “நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு... உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும்” (வச. 5) என்றும் தேவன் சொன்னார். இறுதியில் தன்னுடைய தொன்னூறாம் வயதில் சாராள் பிள்ளை பெற்றபோது, ஆபிரகாம் “நகைப்பு” என்று அர்த்தம்கொள்ளும் ஈசாக்கு என்னும் பெயரை அக்குழந்தைக்கு வைக்கிறான். சாராளும் ஆச்சரியத்தில், “தேவன் என்னை நகைக்கப்பண்ணினார்; இதைக் கேட்கிற யாவரும் என்னோடேகூட நகைப்பார்கள்” (21:6) என்று கூறுகிறாள். அந்த பருவத்தில் ஒரு குழந்தையை வளர்ப்பது குறித்து அவள் வியப்பாகிறாள். அவளுக்கு பிள்ளை பிறக்கும் என்று தேவன் முதலில் சொன்னபோது, சந்தேகத்தில் சிரித்த அவளுடைய சிரிப்பை (18:2) ஆச்சரியமான சிரிப்பாய் தேவன் மாற்றுகிறார்.  
சிரிப்பு என்னும் வரத்திற்காய் உமக்கு நன்றி ஆண்டவரே! 

களைகளுக்கு நீர்ப்பாசனம்

இந்த வசந்த காலத்தில், எங்கள் வீட்டு கொல்லைப் புறத்தை களைகள் காடுபோல் வளர்ந்திருந்தது. அதில் பெரிதாய் வளர்ந்திருந்த ஒரு களையை நான் பிடுங்க முயற்சித்தபோது, அது என்னை காயப்படுத்தும் என்று நான் அஞ்சினேன். அதை வெட்டுவதற்கு நான் ஒரு மண்வெட்டியைத் தேடிக்கொண்டிருந்தவேளையில், ஒன்றைக் கவனிக்க முற்பட்டேன். என்னுடைய மகள் அந்த களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தாள். “நீ ஏன் களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுகிறாய்?” என்று நான் அதிர்ச்சியில் கேட்டேன். அவள் ஒரு கசப்பான புன்னகையோடு, “அது எவ்வளவு பெரிதாய் வளருகிறது என்று பார்க்க விரும்புகிறேன்” என்று பதிலளித்தாள்.  
களைகள் நாம் விரும்பி வளர்க்கிற ஒன்றல்ல. ஆனால் சிலவேளைகளில் நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியை தடைபண்ணுகிற நம்முடைய சுய விருப்பங்கள் என்னும் களைகளுக்கு நாமே தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருக்கிறோம். 
பவுல், கலாத்தியர் 5:13-26இல் இதைக் குறித்து எழுதுகிறார். அதில் மாம்சீக வாழ்க்கையையும் ஆவிக்குரிய வாழ்க்கையையும் ஒப்பிடுகிறார். அவர் சொல்லும்போது, நியாயப்பிரமாணங்களுக்கு கீழ்ப்படிந்தால் மட்டும் நாம் எதிர்பார்க்கும் களைகள்-இல்லா வாழ்க்கையை சுதந்தரித்துவிடமுடியாது என்கிறார். களைகளுக்கு தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்துவதற்கு “ஆவிக்கேற்படி நடந்துகொள்ளுங்கள்” என்று ஆலோசனை சொல்லுகிறார். மேலும் தேவனோடு நடக்கும்போது “மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்” (வச. 16) என்றும் அறிவுறுத்துகிறார்.  
பவுலின் போதனைகளை முழுவதுமாய் அறிந்துகொள்வது என்பது வாழ்நாள் முழுவதும் தொடரும் ஒரு முயற்சி. அவரின் எளிமையான வழிநடத்துதலை நான் நேசிக்கிறேன். நம்முடைய சுய இச்சைகளையும் சுயவிருப்பங்களையும் நாம் நீர்பாய்ச்சி வளர்ப்பதற்கு பதிலாக, தேவனோடு உறவுகொள்வதின் மூலம் நாம் கனிகொடுத்து, தேவ பக்தியின் அறுவடையை ஏறெடுக்கமுடியும் (வச. 22-25).