சென்ற வருடம் கோடையின்போது நானும் என் கணவரும், பென்ஸில்வேனியாவின் கிராமப்புறத்தில் உள்ள, ஃப்ராங்க் லாய்ட் ரைய்ட் என்ற கட்டடக்கலை நிபுணர் கட்டிய, கொட்டும் அருவி என்று பொருள்படக்கூடிய ‘ஃபாலிங் வாட்டர்’ (Falling water) வீட்டைச் சுற்றிப்பார்த்தோம். அதுபோன்ற ஒரு வீட்டை நான் அதுவரை பார்த்ததில்லை. தரையில் இருந்து முளைத்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு வீட்டை ரைட் கட்ட நினைத்து, அதில் வெற்றியும் பெற்றார். ஏற்கனவே இருந்த ஒரு நீர்வீழ்ச்சியைச் சுற்றி அந்த வீட்டைக் கட்டினார். கட்டட வடிவமைப்பு அருகில் இருந்த பாறை வடிவங்களை ஒத்திருந்தது. எங்களுக்கு வீட்டை சுற்றிக் காட்டிய பெண், அந்த வீடு எப்படி பாதுகாப்பாக இருக்கிறது என்று விளக்கினார். “வீட்டின் நடுப்பகுதி முழுவதும் கீழே உள்ள கற்பாறைகளை அஸ்திபாரமாகக் கொண்டுள்ளது” என்றாள்.

அவளது வார்த்தைகள், இயேசு தன் சீஷர்களுக்குச் சொன்ன வார்த்தைகளை எனக்கு நினைவுபடுத்தியது. அவர் கற்றுக் கொடுப்பதே அவர்கள் வாழ்க்கைக்கான அடித்தளமாக இருக்கும் என்று இயேசு மலைப் பிரசங்கத்தில் அவர்களுக்குக் கூறினார். அவரது வார்த்தைகளைக் கேட்டு, அதன்படி நடந்தால், எந்த சூறாவளியையும் அவர்களால் தாங்கமுடியும் என்று கூறினார். கேட்டும் கீழ்ப்படியாமல் இருப்பவர்கள் மணலின்மேல் கட்டப்பட்ட வீட்டைப்போல் இருப்பார்கள் (மத். 7: 24-27). பின்னர் பவுலும் இதே சிந்தனைகளை வெளிப்படுத்தினார். கிறிஸ்துவே அடித்தளம் என்றும், நிலைத்து நிற்கக்கூடிய கிரியைகளால் நாம் அதன்மேல் கட்டவேண்டும் என்று எழுதினார் (1 கொரி. 3:11).

இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டு, கீழ்ப்படியும்போது, நம் வாழ்க்கையை உறுதியான கற்பாறையை அடித்தளமாகக் கொண்டு அமைக்கிறோம். நம் வாழ்க்கையும் ஃபாலிங்வாட்டரைப் போல கற்பாறையின்மேல் கட்டப்பட்டதால் நீடித்தும், அழகாகவும் அமையும்.