பயம் நம்மை உறைய வைத்துவிடக்கூடும். கடந்த காலத்தில் நம்மைக் காயப்படுத்தியவை, மீண்டும் நம்மைக் காயப்படுத்தக்கூடியவை என்று, பயப்படுவதற்கான எல்லாக் காரணங்களும் நமக்குத் தெரியும். இதனால் சில சமயங்களில் நாம் பின்னே போகவும் முடியாமல், முன்னே செல்லவும் பயந்து தவிக்கிறோம். என்னால் இதைச் செய்ய முடியாது. மீண்டும் காயப்படுவதை சமாளிக்கும் அளவுக்கு எனக்கு சாமர்த்தியம் இல்லை, பெலன் இல்லை, தைரியம் இல்லை.

எழுத்தாளர் ஃப்ரெட்ரிக் ப்யுக்னர் கர்த்தரின் கிருபையை விவரிக்கும் விதம் என்னை அதிகம் கவர்ந்தது. “இதுதான் உலகம். இங்கு அச்சுறுத்தும் காரியங்களும் நடக்கும். அழகான காரியங்களும் நடக்கும். பயப்படாதே. நான் உன்னோடு இருக்கிறேன்” என்று கூறும் மெல்லிய சத்தத்தைப் போன்றது தேவனின் கிருபை என்று கூறுகிறார்.

அச்சுறுத்தும் காரியங்கள் நடக்கும். நம் உலகில், காயப்படுத்துபவர்கள், சிலரை மிக மோசமாக காயப்படுத்துகிறார்கள். சங்கீதக்காரன் தாவீதைப் போல, நாமும், தீங்கு நம்மைச் சூழ்ந்ததையும் “பட்சிக்கிற சிங்கங்களைப்” (சங்கீதம் 57:4) போல் நம்மைப் பிறர் காயப்படுத்தியதையும் சுமக்கிறோம். எனவே நாம் துக்கித்துக் கதறுகிறோம் (வச. 1-2)

ஆனால் கர்த்தர் நம்மோடு இருப்பதால், அழகான காரியங்களும் நடக்கக்கூடும். நமது காயங்களையும், பயங்களையும் சுமந்துகொண்டு நாம் அவரிடம் செல்லும்போது, நம்மைக் காயப்படுத்தக்கூடிய திறனைவிட (வச. 1-3) அதிகமான அன்பால் நாம் சுமக்கப்படுவதை உணர்வோம். அந்த அன்பு வானபரியந்தம் எட்டக்கூடிய அன்பு (வச. 10). பேரிடர் நம்மைச் சூழ்ந்துகொள்ளும்போதும், நம் இருதயம் சமாதானத்தைக் கண்டுகொள்ளத்தக்க உறுதியான புகலிடமாக அவர் அன்பு அமையும் (வச. 1,7). அவரது விசுவாசத்தைப் பற்றிய பாடலோடு ஒரு புதிய நாளைப் பார்க்கும்படி, புதிதாக்கப்பட்ட தைரியத்தோடு நாம் ஒருநாள் விழிப்போம் (வச. 8-10).