ஒரு முள் என் ஆள்காட்டி விரலைக் குத்தியதில் ரத்தம் வந்தது. நான் வலியில் சத்தமிட்டதோடு, தன்னிச்சையாக என் கையை இழுத்துக்கொண்டேன். ஆனால் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. தோட்ட வேலைக்கான கையுறை அணியாமல், முள் செடியை கத்தரித்தால் இதுதானே நடக்கும்.

என் விரலில் இருந்த வலியையும், அதிலிருந்து வழிந்த ரத்தத்தையும் உடனடியாக கவனிக்க வேண்டியதிருந்தது. காயத்தைக் கட்ட முயன்றபோது, எதிர்பாராத விதமாக, என் இரட்சகரைப் பற்றி சிந்தித்தேன். ஏனென்றால், போர்ச்சேவகர் இயேசுவுக்கு முழுவதும் முட்களினால் ஆன கிரீடத்தை அணியச் செய்தார்களே (யோவான் 19:1-3). ஒரு முள் இவ்வளவு வலியைக் கொடுத்தால், முட்களால் ஆன ஒரு கிரீடம் எவ்வளவு வலியைக் கொடுத்திருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அவர் அனுபவித்த சரீரப் பிரகாரமான வலியில் அது ஒரு சிறு பகுதியே. அவர் முதுகை ஒரு வார் தாக்கியது. ஆணிகள் அவர் மணிக்கட்டுகளையும், கணுக்கால்களையும் ஊடுருவின. ஒரு ஈட்டி அவர் விலாவை ஊடுருவியது.

ஆனால் இயேசு ஆவிக்குரிய வலியையும் சகித்தார். ஏசாயா 53ல், ஐந்தாம் வசனம் “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது” என்று நமக்குச் சொல்கிறது. மன்னிப்பு பற்றி வேறு விதமாக எடுத்துச் சொல்வதே ஏசாயா குறிப்பிடும் “சமாதானம்”. நாம் தேவனோடு ஆவிக்குரிய சமாதானத்தைப் பெறும்படி, தான் ஈட்டி, ஆணிகள், முள் கிரீடம் ஆகியவற்றால் குத்தப்பட, இயேசு அனுமதித்தார். அவருடைய தியாகம், நமக்காக மரிக்க தயாராக இருந்தது இவை நாம் பிதாவுடன் ஒரு உறவை ஏற்படுத்திக்கொள்ள உதவின. அவர் அதை எனக்காகவும், உங்களுக்காகவும் செய்தார் என்று வேதாகமம் கூறுகிறது.