வகை  |  odb

கடினமான உரையாடல்கள்

ஒருமுறை வீட்டிலிருந்தபடியே எங்கள் நிறுவனத்திற்காகப் பணிபுரியும் ஒருவரை நேரில் சந்திக்க 50 மைல் தூரம் காரை ஓட்டிச் சென்றேன். எங்கள் நிறுவனத்தின் பெயரை அவர் தவறுதலாக பயன்படுத்துவதாகக் கேள்விப்பட்டதால், எங்கள் நிறுவனத்திற்கு இருக்கும் நல்ல பெயர் கெட்டுவிடக்கூடாதென்று கவலைப்பட்டேன். அவர் என்ன முடிவெடுக்க விரும்புகிறார் என்பதைப் பற்றி அவரிடம் பேச எனக்கு ஒரு உந்துதல் இருந்தது.

ஒரு மோசமான முடிவெடுக்க இருந்த இஸ்ரவேலின் எதிர்கால அரசரை, ஒரு சாதாரண நபர் துணிச்சலோடு எதிர்கொண்டதை 1 சாமுவேல் 25ல் வாசிக்கிறோம். நாபால், அபிகாயில் என்ற பெண்ணின் கணவன். ‘முட்டாள்’ என்ற அர்த்தம் கொண்ட அவன் பெயருக்கேற்றபடியே அவன் நடந்துகொண்டான் (வச. 3, 25). அவனுடைய மந்தைகளைக் காத்துக்கொண்டதற்காக வழக்கமாகக் கொடுக்கும் ஊதியத்தை தாவீதுக்கும், அவன் ஊழியக்காரர்களுக்கும் கொடுக்க மறுத்தான் (வச.10-11). அவள் குடும்பத்தின்மேல் கொலைவெறியோடு பழிவாங்க தாவீது திட்டமிடுகிறான் என்று கேள்விப்பட்ட அபிகாயில், தன் கணவன், தான் சொல்வதைக் கேட்கமாட்டான் என்று தெரிந்து, சமாதானக் கொடையாக, அனேக பொருட்களை எடுத்துக்கொண்டு, கழுதையின்மேல் பயணித்து, தாவீதை சந்தித்து, அவன் முடிவை மறுபரிசீலனை செய்யும்படி வேண்டினாள் (வச. 18-31).

அபிகாயில் எப்படி இதை சாதித்தாள்? தாவீதும் அவரோடு இருப்பவர்களும் சாப்பிடும்படியாகவும், தன் கணவன் செலுத்தவேண்டிய கடனை அடைக்கும்படியாகவும், தனக்கு முன்னாக கழுதைகளின்மேல் உணவுப்பொருட்களை ஏற்றி அனுப்பி, தாவீதை சந்தித்தபோது, அவரிடம் உண்மையைப் பேசினாள். தாவீது தேவன் தெரிந்தகொண்ட மனிதர் என்பதை விவேகமாக அவருக்கு நினைவுபடுத்தினாள். பழிவாங்கும் எண்ணத்தை அவர் கைவிட்டால், தேவன் அவரை ராஜாவாக நியமிக்கும்போது “விருதாவாய் இரத்தம் சிந்தாமலும்....பழிவாங்காமலும் இருந்ததுண்டானால், உமக்குத் துக்கமும் இராது, மன இடறலும் இராது” என்று கூறினாள் (வச. 31).

மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய, அல்லது தேவனுக்காகச் அவர்கள் பின்னாளில் செயல்படுவதற்குத் தடையாக இருக்கும் விதத்தில், தவறுசெய்யும் எண்ணத்தில் இருக்கும் யாரையாவது உங்களுக்குத் தெரியலாம். அபிகாயிலைப்போல, ஒரு வெளிப்படையான உரையாடலுக்கு தேவன் உங்களை அழைக்கிறாரா?

கட்டுவதை நிறுத்தவேண்டாம்!

தன் அலுவலகத்தில் ஒரு புதிய பொறுப்பு தரப்பட்டபோது, அதை தனக்கு கிடைத்த தேவ ஈவாக சைமன் நினைத்தார். அதைக்குறித்து ஜெபித்து, ஆலோசனை பெற்றபோது, இன்னும் பெரிய பொறுப்புகளைத் தருவதற்காக இந்த வாய்ப்பை தேவன் ஏற்படுத்தித் தருவதாக நினைத்தார். எல்லாம் சரியாக நடந்தது. அவரது மேலதிகாரியும் அவருக்கு ஆதரவளித்தார். ஆனால் விரைவிலேயே எதிர்ப்புகள் ஏற்பட்டன. அவருக்குக் கிடைத்த பணி உயர்வை விரும்பாத உடன் வேலை பார்க்கும் சிலர் அவருடன் ஒத்துழைக்க மறுத்தனர். தன் முயற்சிகளைக் கைவிட நினைத்தார்.

தேவனின் ஆலயத்தைக் கட்ட இஸ்ரவேலர்கள் எருசலேமுக்குத் திரும்பி வந்தபோது, எதிரிகள் அவர்களுக்கு மனச்சோர்வு உண்டாக்கவும், அவர்களை பயமுறுத்தவும் முயன்றனர் (எஸ்றா 4:4). முதலில் வேலையை நிறுத்திய இஸ்ரவேலர்கள், ஆகாய், சகரியா தீர்க்கதரிசிகள்மூலம் தேவன் அளித்த ஊக்கத்தினால் மீண்டும் தொடர்ந்தனர் (4:24-5:2).

மீண்டும் எதிரிகள் அவர்களை தொந்தரவு செய்தனர். ஆனால் இந்த முறை “தேவனின் கண் அவர்கள்மேல் வைக்கப்பட்டிருப்பதை” (5:5) அறிந்து, தங்கள் வேலையைத் தொடர்ந்தனர். தேவனின் ஆலோசனைகளை அவர்கள் உறுதியாகப் பற்றிக்கொண்டு, எதிர்ப்புகள் நடுவே அவர் வழிநடத்துவார் என்ற நம்பிக்கை கொண்டிருந்தனர். தேவாலயத்தைக் கட்டி முடிக்க உதவும்படி தேவன் பெர்சிய ராஜாவை ஏவினார்
(வச. 13-14).

அதேபோல், சைமனும் தான் அதே அலுவலகத்தில் தொடர்ந்து பணிபுரிய வேண்டுமா அல்லது வேறு வேலைக்குச் செல்ல வேண்டுமா என்று வழிநடத்துதலைப் பெற தேவனின் ஞானத்தை சார்ந்திருந்தார். அதே அலுவலகத்தில் தொடர தேவன் வழிநடத்தியதால், அங்கு தொடர்ந்து பணிபுரிய தேவனின் பெலனை நம்பினார். சிறிதுகாலம் சென்றபின், அவர் உடன் வேலை செய்பவர்களின் ஒத்துழைப்பைப் பெற்றார்.

நாம் தேவனைப் பின்பற்றும்போது, அவர் நம்மை வைக்கும் இடத்தில் நாம் எதிர்ப்புகளை சந்திக்க நேரலாம். அதுபோன்ற சமயங்களில்தான் நாம் அவரை சார்ந்திருக்க வேண்டும். அவர் நமக்கு ஆலோசனை சொல்லி நம்மை வழிநடத்துவார்.

தொடுவதின் வல்லமை

இந்தியாவில் பணியாற்றிய இருபதாம் நூற்றாண்டின் முன்னோடி மிஷனரியான டாக்டர் பால் ப்ரான்ட், தொழுநோயாளிகள் இழிவாக நடத்தப்படுவதை கண்கூடாகப் பார்த்தார். ஒருமுறை, சிகிச்சைமூலம் சரி செய்யலாம் என்று உறுதி அளிக்கும் விதமாக ஒரு தொழுநோயாளியைத் தொட்டுப் பேசினார். அப்போது அந்த தொழுநோயாளி அழ ஆரம்பித்தார். “நீங்கள் அவனைத் தொட்டதால் அழுகிறார். ஏனென்றால் பல வருடங்களாக அவரை யாரும் தொடவில்லை. சந்தோஷத்தில் அழுகிறார்,” என்று டாக்டரின் உதவியாளர் அவருக்கு அந்த மனிதன் அழுவதற்கான காரணத்தை விளக்கினார்.

இயேசுவின் ஊழியத்தின் ஆரம்பகாலத்தில் ஒரு குஷ்டரோகி அவரை அணுகினான். அந்த காலக்கட்டத்தில் தொற்றக்கூடிய தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் குஷ்டரோகம் என்று அழைக்கப்பட்டன. அவனுடைய வியாதியின் காரணமாக, பழைய ஏற்பாட்டில் குறிப்பிட்டதுபோல அவன் ஊரைவிட்டு வெளியே குடியிருக்க வேண்டியிருந்தது. ஒருவேளை மற்றவர்கள் அருகில் அவன் வர நேர்ந்தால், மற்றவர்கள் அவனைத் தவிர்க்கும் விதமாக “தீட்டு, தீட்டு” என்று அவன் சத்தமிடவேண்டும் (லேவியராகமம் 13:45-46). இதனால் இப்படிப்பட்ட நோயாளிகள் மாதக்கணக்காக அல்லது வருடக்கணக்காக மனிதத் தொடர்பே இல்லாமல் இருக்க வாய்ப்பிருக்கிறது.

இயேசு மனதுருகி, கையை நீட்டி அந்த மனிதனைத் தொட்டார். ஒரே வார்த்தையால் சுகப்படுத்தக்கூடிய வல்லமையும், அதிகாரமும் இயேசுவுக்கு இருந்தது (மாற். 2:11-12). அவனது வியாதியின் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு, தள்ளி வைக்கப்பட்ட மனிதனை இயேசு சந்தித்தபோது, இயேசு தொட்டதால் தான் தனியே இல்லை, ஏற்றுக்கொள்ளப்பட்டேன் என்ற உணர்வை அந்த மனிதன் பெற்றான்.

தேவன் நமக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தும்போது, கண்ணியத்தையும், மதிப்பையும் தெரிவிக்கும் விதமாக நாமும் தொடுவதின்மூலம், நம் மனதுருக்கத்தை வெளிப்படுத்தலாம். சுகமளிக்கும் எளிய தொடுதல், கவலையில் இருப்பவர்களுக்கு நமது அக்கறையை வெளிப்படுத்தும்.

அவர் ஆண்டவராக இருப்பதற்காக நன்றி

வாழ்த்து அட்டைகளில் அச்சிடப்படும் ஆயிரக்கணக்கான உணர்ச்சிபூர்வமான வாசகங்களில் “நீ நீயாக இருப்பதற்கு நன்றி” என்பதே அதிக எளிமையான ஆனால் மனதைத் தொடும் வாசகம். நீங்கள் அந்த வாழ்த்து அட்டையைப் பெற்றால், உங்கள் மேல் அக்கறை கொண்ட ஒருவர் இருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். அந்த அட்டையை அனுப்பியவருக்கு நீங்கள் ஏதோ பெரிய உதவி செய்தீர்கள் என்று அர்த்தம் அல்ல. ஆனால், உங்களின் இயற்பண்புகளுக்காக அவர்  உங்களை மதிக்கிறார் என்று அர்த்தம்.

இதுபோன்ற உணர்வை வெளிப்படுத்துவது தேவனுக்கு நம் நன்றியை வெளிப்படுத்த ஏற்றதாக இருக்குமா என்று யோசிக்க வைக்கிறது. சில சமயங்களில் தேவன் நம் வாழ்வில் இடைபடுவது நமக்கு தெளிவாகத் தெரியும். அதுபோன்ற சமயங்களில் “இந்த வேலையை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்ததற்காக உமக்கு நன்றி” என்று நாம் கூறமுடியும். ஆனால் பெரும்பாலான சமயங்களில், எளிமையாக “நீர் நீராக இருப்பதற்காக நன்றி ஆண்டவரே” என்று கூறலாம்.

1 நாளாகமம் 16:34 போன்ற வசனங்களில் இதுவே வெளிப்படுகிறது: “கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது”. ஆண்டவரே, நீர் நீராக – நல்ல அன்பு நிறைந்த தேவனாக - இருப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம். சங்கீதம் 7:17 “நான் கர்த்தரை அவருடைய நீதியின்படி துதி(ப்பேன்)” என்று கூறுகிறது. ஆண்டவரே, நீர் நீராக – பரிசுத்த தேவனாக -  இருப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம். “துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து, சங்கீதங்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடக்கடவோம். கர்த்தரே மகா தேவனு(மாயிருக்கிறார்)” (சங். 95: 2-3). ஆண்டவரே, நீர் நீராக – இந்த பிரபஞ்சத்தின் வல்லமையான தேவனாக - இருப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம்.  

தேவன் யாராக இருக்கிறார். நாம் செய்து கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு, அவரைப் புகழவும், அவரை ஸ்தோத்திரிக்கவும் அந்த ஒரு காரணமே போதுமானது.

ஆபத்தான கவனச்சிதறல்கள்

சிகிஸ்மன்ட் கெட்ஸி என்ற ஓவியர் “மனிதர்களுள் வெறுக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டவர்” என்ற ஓவியம் ஒன்றை வரைந்து விக்டோரிய காலத்து இங்கிலாந்து தேச மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். கண்டனம் செய்யப்பட்டு துன்பத்துக்குள்ளான இயேசுவைச் சுற்றி தன்னுடைய தலைமுறையைச் சேர்ந்த மக்கள் நிற்பதைப்போல அந்த ஓவியத்தை வரைந்திருந்தார். வர்த்தகம், காதல், அரசியல் என்று தங்கள் சுய விருப்பங்களிலேயே மூழ்கிப்போயிருந்த அவர்களுக்கு, இயேசுவின் தியாகம் ஒரு பொருட்டாகப்படவில்லை. இயேசுவின் சிலுவை அருகில் இருந்த கலகக் கும்பலைப்போல, இந்த ஓவியத்தில் கிறிஸ்துவைச் சூழ்ந்திருந்த கூட்டத்தாருக்கும் தங்கள் எதை, யாரை இழந்தோம் என்பதே தெரியவில்லை.

இப்போதும்கூட, விசுவாசிகளும், விசுவாசம் இல்லாதவர்களும் நித்தியத்தில் இருந்து எளிதாக திசை திருப்பப்படலாம். இயேசுவைப் பின்பற்றுபவர்கள் தேவனின் அன்பு என்ற உண்மையின்மூலம் எப்படி சிதறடிக்கும் பனிமூட்டத்திற்குள்ளாகக் கடந்து செல்ல முடியும்? தேவனின் பிள்ளைகளாக நாம் ஒருவரை ஒருவர் நேசிப்பதன்மூலம் இதில் முதல் அடி எடுத்துவைக்கலாம். “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” என்று இயேசு கூறினார் (யோவான் 13:35).

ஆனால் உண்மையான அன்பு அதோடு நிற்பதில்லை. மக்களை இரட்சகர் பக்கம் ஈர்க்கும் நம்பிக்கையில், நற்செய்தியைப் பகிர்வதன்மூலம் நாம் அந்த அன்பை வெளிப்படுத்துகிறோம். பவுல் சொன்னவிதமாக, “நாம் கிறிஸ்துவுக்கு ஸ்தானாபதிகளாய் இருக்கிறோம்” (2 கொரி. 5:20).

இப்படியாக கிறிஸ்துவின் சரீரம், நாம் ஒருவருக்கு ஒருவரும், உலகத்தாருக்காகவும் ஏங்கும் அன்பை, பிரதிபலிக்கவும், வெளிப்படுத்தவும் முடியும். பரிசுத்த ஆவியால் பெலப்படுத்தப்பட்ட நாம் தேவனின் அன்பை இயேசுவில் காண்பதைத் தடுத்து திசை திருப்பும் காரியங்களை விலக்க இந்த இரண்டு முயற்சிகளும் உதவுவதாக.

ஊக்குவிப்பதற்காக கட்டப்படுதல்

ஸ்டீவன் தாம்ஸன் நினைவு சென்டிபீட் என்பது திறந்தவெளியில் நடைபெறும் ஓட்டப்பந்தயம் மற்ற ஓட்டப் பந்தயங்களில் இருந்து மாறுபட்டது. ஏழு நபர்களைக் கொண்ட ஒவ்வொரு குழுவும், மூன்று மைல் பந்தயத்தின் முதல் இரண்டு மைல் தொலைவிற்கு ஒரு கயிற்றைப் பிடித்தபடி ஓடவேண்டும். இரண்டு மைல் ஓடிய பிறகு, கயிற்றை விட்டுவிட்டு, ஒவ்வொரு நபரும் தனித்தனியாக ஓடவேண்டும். எனவே குழுவின் வேகமும், தனிநபர் வேகமும் சேர்ந்ததே ஒரு நபரின் வேகம்.

இந்த வருடம் என் மகளின் குழு நான் இதுவரை கண்டிராத ஒரு புதிய உத்தியைக் கையாண்டது. வேகமாக ஒடக்கூடிய பெண்ணை முதலில் ஓடவிட்டு, இருப்பதிலேயே மெதுவாக ஓடும் பெண்ணை அவளுக்குப் பின்னால் ஓடவிட்டார்கள். அதிக வேகமாக ஓடும் பெண் மெதுவாக ஓடும் பெண்ணின் அருகிலேயே ஓடுவதால், அவளை ஊக்குவிக்கும் வார்த்தைகளைப் பேசிக்கொண்டே வரவேண்டும் என்பது அவர்களது திட்டம்.

அவர்களது திட்டம் எபிரேயரில் உள்ள ஒரு பத்தியை எனக்கு நினைவுபடுத்தியது. “அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஒருவரையொருவர் ஏவும்போது” (வச. 24) “நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்” என்று பவுல் எழுதுகிறார். இதை செய்வதற்கு பல வழிகள் இருந்தாலும், அவர் ஒன்றை முன்னிலைப்படுத்துகிறார். “சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்தி சொல்லக்கடவோம்” என்கிறார் (வச. 25). மற்ற விசுவாசிகளோடு ஒன்றுகூடுதல் விசுவாச வாழ்க்கையின் முக்கிய அம்சமாகும்.

சில சமயங்களில் வாழ்க்கை ஓட்டம் நம்மால் கையாள முடியாததாகத் தோன்றலாம். தன்னம்பிக்கை இழந்து, கயிற்றை விட்டுவிடும் அளவிற்கு நம் உறுதியை இழக்கலாம்.  நாம் சேர்ந்து ஓடும்போது, திடமாக ஓட ஒருவரை ஒருவர் ஊக்குவிப்போமாக!

முட்டாள் ஆடுகளும், நல்ல மேய்ப்பரும்

என் நண்பர் சாட் வையோமிங் பகுதியில் ஒரு வருடம் மேய்ப்பனாக இருந்தார். “ஆடுகள் முட்டாள்தனமானவை. தங்களுக்கு முன்னால் என்ன இருக்கிறதோ அதை மட்டும்தான் அவை சாப்பிடும்,” என்று என்னிடம் சொன்னார். “தங்களுக்கு முன்னால் இருக்கும் எல்லா புல்லையும் சாப்பிட்டு முடித்தாலும், புல் இருக்கும் வேறு இடத்தை திரும்பிக்கூட பார்க்காமல், மண்ணை சாப்பிட ஆரம்பிக்கும்.”

அவர் சொன்னதைக் கேட்டு நாங்கள் சிரித்தோம். எத்தனை முறை வேதாகமம் மனிதர்களை ஆடுகளுக்கு ஒப்பிடுகிறது என்று நினைத்தேன். அதனால்தான் நமக்கு மேய்ப்பர் தேவைப்படுகிறார். ஆனால், ஆடுகள் முட்டாளாக இருப்பதால், ஏதோ ஒரு மேய்ப்பன் அல்ல, அவற்றின்மீது அக்கறை காட்டும் மேய்ப்பனே தேவை. பாபிலோனில் சிறை பிடிக்கப்பட்டிருந்த தேவனின் ஜனங்களுக்கு எசேக்கியேல் கடிதம் எழுதியபோது, மோசமான மேய்ப்பர்களால் நடத்தப்படும் ஆடுகளுக்கு அவர்களை ஒப்பிட்டார். இஸ்ரவேலின் தலைவர்கள் தங்கள் மந்தைகள்மீது அக்கறை கொள்ளாமல், அவைகளைத் தங்கள் சுயநலத்திற்காகவும், ஆதாயம் தேடுவதற்காகவும் பயன்படுத்திக்கொண்டார்கள் (வச. 3). காட்டு விலங்குகள் அவைகளைப் பட்சித்துப்போட அனுமதித்தார்கள் (வச. 5).

ஆனால் அவர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் இல்லை. நல்ல மேய்ப்பராகிய தேவன் தங்கள் சுயநலத்திற்காக பயன்படுத்திய தலைவர்களிடமிருந்து அவர்களைக் காப்பாற்ற வாக்குக் கொடுத்தார். அவர்களை அவர்கள் இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்று, செழிப்பான புல்வெளிகளில் மேய்த்து, அவர்களுக்கு இளைப்பாறுதல் தருவதாக அவர்களுக்கு வாக்களித்தார்.  காயப்பட்டவைகளை சுகமாக்கி, காணாமல் போனவற்றைத் தேடுவார் (வச. 11-16). தம் மந்தை பாதுகாப்பாக இருக்கும்படியாக, அவர் காட்டு விலங்குகளைத் துரத்துவார் (வச. 28).

தேவனின் மந்தையில் உள்ளவர்களுக்கு அன்பான அக்கறையும், வழிநடத்துதலும் தேவை. நம்மை எப்போதும் பசுமையான புல்வெளிகளுக்கு அழைத்துச் செல்லும் ஒரு மேய்ப்பரைப் பெற்ற நாம் அவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்! (வச. 14).

ஓட்டுவது யார்?

மோரிஸ் சென்டாக் எழுதிய காட்டுத்தனமான பொருட்கள் இருக்கும் இடத்தில் என்று பொருள்படக்கூடிய (Where the Wild Things are) குழந்தைகள் கதை புத்தகத்தில் வருவதைப்போல் “காட்டுத்தனமான பொருள்” ஒன்றை என் பக்கத்து வீட்டுக்காரர் டிம் தன் காரில் வைத்திருக்கிறார்.

ஒரு நாள் சாலையில் என் பின்னால் தன் காரில் வந்துகொண்டிருந்த டிம் திடீரென்று காரை வளைத்து ஓட்டினார். காரை விட்டு இறங்கியபோது “’காட்டுத்தனமான பொருள்’தான் வண்டி ஓட்டியதோ?” என்று கேட்டேன்.

அதற்கு அடுத்த ஞாயிற்றுக்கிழமை, என் பிரசங்கக் குறிப்புகளை வீட்டில் மறந்து வைத்துவிட்டேன். எனவே அதை எடுப்பதற்காக வீட்டிற்கு காரில் ‘பறந்து’ சென்றேன். வழியில் டிம்மின் கார் எதிர்திசையில் என்னைக் கடந்து சென்றது. பின்னர் நாங்கள் சந்தித்தபோது, என் வேகத்தைப் பற்றி குறிப்பிடும் விதமாக “’காட்டுத்தனமான பொருள்’தான் வண்டி ஓட்டியதோ?” என்று கிண்டல் செய்தார். நாங்கள் சிரித்தாலும், நான் வேக வரம்பை கவனிக்கவில்லை என்பதை அவர் சொன்னது எனக்கு என் தவறை உணர்த்தியது.

தேவனுடனான உறவில் நாம் வாழ்வதைப்பற்றி விவரிக்கும் வேதாகமம், “உங்கள் அவயவங்களை தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள்” என்று நம் ஒவ்வொரு அம்சத்தையும் ஒப்புக்கொடுக்க ஊக்குவிக்கிறது (ரோம. 6:13). அன்போடு என்னை முழுமையாக ஒப்புக்கொடுக்கவேண்டும் என்பதால், டிம் என்னிடம் கூறியதை, வேகமாக கார் ஓட்டும் பழக்கத்தை ஒப்புக்கொடுக்க தேவன் எனக்கு நினைவுபடுத்தியதாக எடுத்துக்கொண்டேன்.

“ஓட்டுவது யார்?” என்ற கேள்வி வாழ்வின் அனைத்து அம்சங்களுக்கும் பொருந்தும். கவலை, பயம், சுய சித்தம் போன்ற பழைய “காட்டுத்தனமான பண்புகள்” நம்மை இயக்குகின்றனவா? அல்லது நாம் வளர உதவும் பரிசுத்த ஆவியின் அன்புக்கும், கிருபைக்கும் நம்மை ஒப்புக்கொடுக்கிறோமா?

தேவனிடம் ஒப்புக்கொடுப்பது நமக்கு நல்லது. தேவனின் ஞானம் நம்மை “இனிதான வழிகளிலும், சமாதானமான பாதைகளிலும்” அழைத்துச் செல்வதாக வேதாகமம் கூறுகிறது (நீதி. 3:17). அவர் வழிநடத்தும் பாதையில் செல்வதே நல்லது.

நிச்சய நம்பிக்கை

ஜப்பான் சீனாவை 1940ஐ ஒட்டிய காலக்கட்டத்தில் தாக்கியபோது, டாக்டர். வில்லியம் வாலஸ் மிஷனரி மருத்துவராக சீனாவின் வசூ பகுதியில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அப்போது ஸ்டௌட் நினைவு மருத்துவமனையின் பொறுப்பாளராகப்  பணி செய்த அவர், தனக்குத் தேவையான உபகரணங்கள் அனைத்தையும் படகுகளில் ஏற்றச்சொன்னார். காலாட்படையினரின் தாக்குதல்களைத் தவிர்க்க, அவர் ஆறுகளில் பயணம் செய்து மருத்துவப்பணிகளைத் தொடர்ந்தார்.

ஆபத்தான நேரங்களில், அவர் உயிரோடு இருந்தால், அவர் இரட்சகருக்காக செய்ய வேண்டிய வேலைகள் உண்டு என்பதை வாலஸுக்குப் பிடித்த வசனங்களில் ஒன்றான பிலிப்பியர் 1:21 அவருக்கு நினைவுபடுத்தியது.  அவர் இறக்க நேர்ந்தால், கிறிஸ்துவுடனான நித்திய வாழ்வின் வாக்குத்தத்தம் அவருக்கு இருந்தது. 1951ஆம் ஆண்டு, பொய்யான குற்றச்சாட்டுகளுடன் சிறைபிடிக்கப்பட்டு, அவர் இறந்தபோது, இந்த வசனம் ஒரு விசேஷ அர்த்தத்தை வெளிப்படுத்தியது.

இயேசுவைப் பின்பற்றுபவர்களாக, நாமும் விரும்பக்கூடிய ஆழ்ந்த பக்தியை பவுலின் எழுத்துக்கள் வெளிப்படுத்துகின்றன. சோதனைகளையும், தேவனுக்காக ஆபத்துக்களையும்கூட எதிர்கொள்ள அவை நமக்கு உதவுகின்றன. பரிசுத்த ஆவியாலும், நமக்கு அருமையானவர்களின் ஜெபங்களாலும் நாம் பெற்றுக்கொண்ட பக்தி அது (வச. 19). அது ஒரு வாக்குறுதியும்கூட. மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும், அவருடைய சேவைக்காக நம்மை முற்றிலுமாக ஒப்புக்கொடுக்கும்போது, நமக்கு நினைவுறுத்தப்படும் விஷயம் என்னவென்றால் - இங்கு நம்முடைய வேலையும், வாழ்க்கையும் முற்றுப்பெறும்போது, இயேசுவுடனான நித்திய வாழ்க்கை நமக்குக் காத்திருக்கிறது என்ற சந்தோஷம் நமக்கு உண்டு.

கிறிஸ்துவுடன் நடப்பதற்கு ஒப்புக்கொடுத்த இருதயங்களோடும், அவருடனான நித்திய வாழ்விற்கான உறுதிமொழியின் மீதுள்ள கண்களோடும், நமது கடினமான தருணங்களிலும், நமது நாட்களும், நமது செயல்களும் ஆண்டவரின் அன்பால் மற்றவர்களை ஆசீர்வதிப்பதாக.