தன் அலுவலகத்தில் ஒரு புதிய பொறுப்பு தரப்பட்டபோது, அதை தனக்கு கிடைத்த தேவ ஈவாக சைமன் நினைத்தார். அதைக்குறித்து ஜெபித்து, ஆலோசனை பெற்றபோது, இன்னும் பெரிய பொறுப்புகளைத் தருவதற்காக இந்த வாய்ப்பை தேவன் ஏற்படுத்தித் தருவதாக நினைத்தார். எல்லாம் சரியாக நடந்தது. அவரது மேலதிகாரியும் அவருக்கு ஆதரவளித்தார். ஆனால் விரைவிலேயே எதிர்ப்புகள் ஏற்பட்டன. அவருக்குக் கிடைத்த பணி உயர்வை விரும்பாத உடன் வேலை பார்க்கும் சிலர் அவருடன் ஒத்துழைக்க மறுத்தனர். தன் முயற்சிகளைக் கைவிட நினைத்தார்.

தேவனின் ஆலயத்தைக் கட்ட இஸ்ரவேலர்கள் எருசலேமுக்குத் திரும்பி வந்தபோது, எதிரிகள் அவர்களுக்கு மனச்சோர்வு உண்டாக்கவும், அவர்களை பயமுறுத்தவும் முயன்றனர் (எஸ்றா 4:4). முதலில் வேலையை நிறுத்திய இஸ்ரவேலர்கள், ஆகாய், சகரியா தீர்க்கதரிசிகள்மூலம் தேவன் அளித்த ஊக்கத்தினால் மீண்டும் தொடர்ந்தனர் (4:24-5:2).

மீண்டும் எதிரிகள் அவர்களை தொந்தரவு செய்தனர். ஆனால் இந்த முறை “தேவனின் கண் அவர்கள்மேல் வைக்கப்பட்டிருப்பதை” (5:5) அறிந்து, தங்கள் வேலையைத் தொடர்ந்தனர். தேவனின் ஆலோசனைகளை அவர்கள் உறுதியாகப் பற்றிக்கொண்டு, எதிர்ப்புகள் நடுவே அவர் வழிநடத்துவார் என்ற நம்பிக்கை கொண்டிருந்தனர். தேவாலயத்தைக் கட்டி முடிக்க உதவும்படி தேவன் பெர்சிய ராஜாவை ஏவினார்
(வச. 13-14).

அதேபோல், சைமனும் தான் அதே அலுவலகத்தில் தொடர்ந்து பணிபுரிய வேண்டுமா அல்லது வேறு வேலைக்குச் செல்ல வேண்டுமா என்று வழிநடத்துதலைப் பெற தேவனின் ஞானத்தை சார்ந்திருந்தார். அதே அலுவலகத்தில் தொடர தேவன் வழிநடத்தியதால், அங்கு தொடர்ந்து பணிபுரிய தேவனின் பெலனை நம்பினார். சிறிதுகாலம் சென்றபின், அவர் உடன் வேலை செய்பவர்களின் ஒத்துழைப்பைப் பெற்றார்.

நாம் தேவனைப் பின்பற்றும்போது, அவர் நம்மை வைக்கும் இடத்தில் நாம் எதிர்ப்புகளை சந்திக்க நேரலாம். அதுபோன்ற சமயங்களில்தான் நாம் அவரை சார்ந்திருக்க வேண்டும். அவர் நமக்கு ஆலோசனை சொல்லி நம்மை வழிநடத்துவார்.