வாழ்த்து அட்டைகளில் அச்சிடப்படும் ஆயிரக்கணக்கான உணர்ச்சிபூர்வமான வாசகங்களில் “நீ நீயாக இருப்பதற்கு நன்றி” என்பதே அதிக எளிமையான ஆனால் மனதைத் தொடும் வாசகம். நீங்கள் அந்த வாழ்த்து அட்டையைப் பெற்றால், உங்கள் மேல் அக்கறை கொண்ட ஒருவர் இருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். அந்த அட்டையை அனுப்பியவருக்கு நீங்கள் ஏதோ பெரிய உதவி செய்தீர்கள் என்று அர்த்தம் அல்ல. ஆனால், உங்களின் இயற்பண்புகளுக்காக அவர்  உங்களை மதிக்கிறார் என்று அர்த்தம்.

இதுபோன்ற உணர்வை வெளிப்படுத்துவது தேவனுக்கு நம் நன்றியை வெளிப்படுத்த ஏற்றதாக இருக்குமா என்று யோசிக்க வைக்கிறது. சில சமயங்களில் தேவன் நம் வாழ்வில் இடைபடுவது நமக்கு தெளிவாகத் தெரியும். அதுபோன்ற சமயங்களில் “இந்த வேலையை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்ததற்காக உமக்கு நன்றி” என்று நாம் கூறமுடியும். ஆனால் பெரும்பாலான சமயங்களில், எளிமையாக “நீர் நீராக இருப்பதற்காக நன்றி ஆண்டவரே” என்று கூறலாம்.

1 நாளாகமம் 16:34 போன்ற வசனங்களில் இதுவே வெளிப்படுகிறது: “கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது”. ஆண்டவரே, நீர் நீராக – நல்ல அன்பு நிறைந்த தேவனாக – இருப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம். சங்கீதம் 7:17 “நான் கர்த்தரை அவருடைய நீதியின்படி துதி(ப்பேன்)” என்று கூறுகிறது. ஆண்டவரே, நீர் நீராக – பரிசுத்த தேவனாக –  இருப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம். “துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து, சங்கீதங்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடக்கடவோம். கர்த்தரே மகா தேவனு(மாயிருக்கிறார்)” (சங். 95: 2-3). ஆண்டவரே, நீர் நீராக – இந்த பிரபஞ்சத்தின் வல்லமையான தேவனாக – இருப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம்.

தேவன் யாராக இருக்கிறார். நாம் செய்து கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு, அவரைப் புகழவும், அவரை ஸ்தோத்திரிக்கவும் அந்த ஒரு காரணமே போதுமானது.