Archives: ஏப்ரல் 2017

கொடுப்பதின் வரம்

“அவருடைய தோள்களிலிருக்கும் சட்டையைக் கழற்றி தருவார்” என்ற வரிக்கு ஒரு போதகர் உண்மையிலேயே உயிரூட்டினார். “நம்முடைய மேல்சட்டைகளை நிஜமாகவே  கழற்றி, இல்லாதவரிடம் கொடுத்தால் என்ன நடக்கும்?” என்று சபையாரிடம் ஓர் சவால் விடுத்தார். அதன் பின்னர், தமது கோட்டை(Coat) கழற்றி சபையின் முன்னால் அதை வைத்தார். அதை பார்த்தவுடன், பலர் அவரது செய்கையைப் பின்பற்றினார்கள். இந்த சம்பவம் குளிர்காலத்தில் நடந்தது, அதனால் வீட்டிற்கு திரும்பும் பயணம் அவ்வளவு எளிதாக இருந்துவிடவில்லை. ஆனால் தேவைகளுடன் இருந்த பலருக்கு அந்த குளிர் காலம் இதமாய் இருந்தது. 

யோவான் ஸ்நானகன் யூதேயாவின் வனாந்திரங்களில் சுற்றித்திரிந்த போது, அவரைக் காண வந்த மக்களிடம் கடுமையாகப் பேசினார். “விரியன்பாம்பு குட்டிகளே!....மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்” என்று அவர்களை விமர்சித்தார் (லூக். 3:7-8). “நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று ஆச்சர்யத்துடன் கேட்ட அவர்களிடம், “இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன்” என பதிலளித்தார். உண்மையான மனந்திரும்புதல் பெருந்தன்மையுள்ள இருதயத்தை உண்டுபண்ணும். 

குற்றஉணர்ச்சியினாலோ பிறரின் பலவந்தத்தினாலோ ஒருவரும் கொடுக்கத் தேவையில்லை, ஏனெனில் “உற்சாகமாய் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” (2 கொரி. 9:7). இலவசமாகவும் உற்சாகத்துடனும் நாம் கொடுக்க ஆரம்பித்தவுடன், ஒன்று நன்றாக விளங்க ஆரம்பிக்கும்-பெற்றுக்கொள்ளும்போது உணரும் ஆசீர்வாதத்தை விட, கொடுப்பதில்தான் அதிக ஆசீர்வாதம்.

விட்டுவிடுங்கள்!

எங்களது திருமண ஆண்டு விழாவை மகிழ்வுடனும், சாகசத்துடனும் கொண்டாடும் விதத்தில் என் கணவர் ‘இருவர் மிதிக்கும் மிதிவண்டியை’ வாடகைக்கு வாங்கிவந்தார். என் கணவர் முன்னால் அமர, நான் பின்னால் அமர்ந்துகொண்டேன். இருவரும் எங்களது பெடல்களை மிதிக்க ஆரம்பித்தோம். அப்போதுதான் பல காரியங்கள் புலப்பட்டது. முதலில்,  எனக்கு பாதையே தெரியவில்லை. முன்னால் அமர்ந்திருந்த என் கணவரின் பரந்த தோள்கள் அதை மறைத்துவிட்டது. அடுத்து, என் கைப்பிடி ஒரே நிலையில் நிற்கும்படியாக பொருத்தப்படிருந்தது. அதை வைத்துக்கொண்டு வண்டியை திருப்பமுடியாது. முன்னால் அமர்ந்திருக்கும் ஓட்டுநரால்தான் வண்டியின் திசையை மாற்றமுடியும். என்னுடைய கைப்பிடி என்னை தாங்கிப்பிடித்துக்கொள்ளத்தான் உபயோகமாகயிருந்தது. கட்டுப்படுத்தப் பட்ட எனது நிலையை எண்ணி கடுப்பாகியிருக்கலாம் அல்லது எனது கணவர் மைக் பாதுகாப்பாகதான் ஓட்டிச்செல்வார் என நம்பிக்கை வைத்து எல்லாவற்றையும் விட்டு பயணத்தை குதூகலத்துடன் ரசிக்கத் தொடங்கலாம். 

தேவன் ஆபிராமை தன் தாயகத்தையும் குடும்பத்தினரையும் விட்டு வெளியே வரச்சொன்ன பொழுது, அவர் இலக்கை பற்றி அதிகமாக ஒன்றும் கூறவில்லை. புதிய தேசத்தின் நிலப்பகுதி குறித்தும் அதன் இயற்கைவளங்கள் குறித்தும் விவரிக்கவில்லை. அதை சென்றடைய எவ்வளவு காலம் ஆகும் என்றுகூட தேவன் சொல்லவில்லை. அவர் காண்பிக்கப் போகும் தேசத்தை நோக்கி “போ” என்று மாத்திரம் அறிவுறுத்தினார். துல்லியமான விவரங்களை எதிர்பார்க்கும் மக்களைப்போல் அல்லாமல், ஆபிராம் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து சென்றதே அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது (எபி.11:8). 

நம் வாழ்வு கட்டுப்பாடில்லாமல் சென்றுகொண்டிருக்கும் பொழுதும், நிச்சயமற்ற சூழ்நிலைகளை சந்திக்கும் பொழுதும், ஆபிரகாமின் வாழ்க்கை நமக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கட்டும். அவரைப்போல் நாமும் தேவனை நம்பி பின்தொடரலாம். ஏனெனில் தேவன் நம்மை செவ்வையான பாதையின் வழியே அழகாய் நடத்திச்செல்வார்.

இனிய நறுமணம்

இங்கிலாந்து தேசத்தின் டோவர் (Dover) மாநிலத்திலுள்ள ஒரு சின்ன கிராமத்திற்கு எழுத்தாளர் ரீட்டா ஸ்நோடன் (Rita Snowden) சென்றபொழுது ஏற்பட்ட குதூகலமான அனுபவத்தை விவரிக்கிறார். ஒரு மதியவேளை சாலையோர உணவகத்தில், டீ அருந்திக் கொண்டிருந்தபொழுது ஒரு அருமையான நறுமணம் வீசக்கண்ட ரீட்டா, உணவகப் பணி யாளர் ஒருவனிடம் அந்நறுமணத்தை குறித்து கேட்டாள். அதற்கு அவன் அங்கு நடந்து செல்பவர்களிடமிருந்து தான் அந்நறுமணம் வீசுவதாக கூறினான். ஏனெனில் அக்கிராமத்தி லுள்ள அநேகர் அருகிலுள்ள நறுமணத்தைலம் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை பார்ப்பதால், அவர்களுடைய உடைகளில் அந்நறுமணம் கலந்து, அவர்கள் வீடு திரும்பும் பொழுது அந்நறுமணத்தை போகும் இடமெங்கும் சுமந்து சென்றார்கள். 

இது கிறிஸ்தவ வாழ்வைப் பிரதிபலிக்கும் அருமையான காட்சி அல்லவா! அப்போஸ்தலனாகிய பவுல் கூறுவதைப்போல, நாம் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருந்து, அவருடைய நறுமணத்தை எவ்விடமும் பரப்புகிறோம் (2 கொரி:2:15). மேலும் போரிலே வெற்றி சிறந்த அரசன் நாடு திரும்பும் பொழுது, தன்னுடைய யுத்த வீரர்களோடு, சிறைப்பிடிக்கப்பட்டவர்களை இழுத்து வரும் வேளையில் அவ்வெற்றியையும் அரசனுடைய மகத்துவத்தையும் கொண்டாடும் விதமாக வீசும் தூபவர்க்கத்திற்கு ஒப்பாக கிறிஸ்தவ வாழ்வை பவுல் காட்சிப்படுத்துகிறார் (வச. 14). 

பவுலைப் பொறுத்தவரை நாம் கிறிஸ்துவின் நறுமணத்தை இரண்டு விதமாக பரப்புகிறோம். முதலாவது நம்முடைய வார்த்தைகளின் மூலம் பூரண அழகுடையவரை மற்றவரிடம் பகிர்ந்துகொள்ளும் பொழுது நறுமணம் வீசுகிறோம். இரண்டாவதாக, கிறிஸ்துவின் தன்னல மற்ற தியாகச்செயல்களை நம் வாழ்வில் நாம் செய்வதின் மூலம் நறுமணம் வீசுகிறோம் (எபே. 5:1-2) நாம் வீசும் தெய்வீக நறுமணத்தை அனைவரும் விரும்பாமல் போனாலும், அந்நறுமணம் அநேகரை கிறிஸ்துவண்டை கொண்டு வரும். 

சிறிது நறுமணத்தை முகர்ந்த ரீட்டா ஸ்நோடன் அதன் ஆதாரத்தை அறிந்துக்கொள்ள முயன்றாள். நாம் இயேசுவை பின்பற்றும் பொழுது, நாமும் அவருடைய வாசம் நிறைந்தவர்களாய், செல்லும் இடமெங்கும், நம்முடைய சொல்லாலும் செயலாலும் நற்கந்தம் வீசுவோமாக!

காட்சியை ரசியுங்கள்

சூரிய அஸ்தமனம். தாங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையை நிறுத்திவிட்டு அதை காண்பார்கள்..... புகைப்படம் எடுப்பார்கள்.... அழகிய காட்சியை ரசித்து அனுபவிப்பார்கள். 

சமீபத்தில் நானும் எனது மனைவியும், மெக்ஸிகோ வளைகுடாவில் சூரியன் மறைவதைக் கண்டோம். தினமும் நடைபெறும் இந்த இரவுக்காட்சியை கண்டுகளிக்க எங்களைப்போல் பலர் அங்கு கூடியிருந்தனர். அடிவானத்தில் சூரியன் முழுவதுமாக மறைந்தவுடன் எல்லோரும் சத்தமாக ஆராவாரித்தனர். 

மக்கள் ஏன் இப்படி செய்கிறார்கள் என்று யோசித்தபொழுது சங்கீதங்களில் இதற்கான துப்பு கிடைத்தது. சூரியன் தன் சிருஷ்டிகரை துதிக்கும்படியாக தேவன் கட்டளையிட்டுள்ளார் என்று சங்கீதக்காரன் எழுதியுள்ளான் (சங். 148:3). அதனால்தான் சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமியின் மேல் படர்வதைக் கண்டவுடன், மக்கள் தன்னிலை மறந்து பரவசத்துடன் அதனோடு சேர்ந்து துதிக்க ஆரம்பிக்கின்றனர்.

ஓடிக்கொண்டேயிருக்கும் நம்மை, தேவனுடைய அற்புதமான படைப்பு நிதானிக்க வைத்து, வாழ்வில் மிகவும் முக்கியமான காரியம் எது என்பதனை எடுத்துரைக்கிறது. இறுதியில், பிரமிக்கத்தக்க உதயத்திற்கும் அஸ்தமனத்திற்கும் பின்னால் ஒரு சிருஷ்டிகர் உண்டு என்பதனை நமக்கு நினைவூட்டுகிறது. தாம் படைத்த பூமியையும் அதன் நிறைவையும் அளவற்ற அன்புடன் நேசித்தபடியால், சிருஷ்டிகரான அவர்தாமே அதற்குள் பிரவேசித்து அதனை மீட்டு புதுப்பித்துள்ளார்.

இல்லத்தில் இயேசுவுடன்

“நமது வீட்டைப் போல் வேறெந்த இடமும் இல்லை”. நிலையான ஓரிடத்தில் உறவுகளுடன் இருந்து, வசித்து, ஓய்வெடுக்க வேண்டும் என்று ஆழ்மனதில் வேரூன்றியிருக்கும் ஏக்கத்தை தான் இந்த வாக்கியம் வெளிப்படுத்துகிறது. கடைசி இராப்போஜனத்தின்போது, தமக்கு நிகழப்போகும் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும் பற்றி பேசுகையில், அவரது நண்பர்களிடத்தில் வேரூன்றியிருக்கும் அந்த ஏக்கத்தை குறித்து இயேசு பேசினார். அவர்களை விட்டுச்சென்றுவிட்டாலும், நிச்சயமாக திரும்பி வருவாரென்ற வாக்குறுதியை அளித்தார். அவர்களுக்காக ஓரு இடத்தை ஆயத்தம் பண்ணப்போவதாகவும் அது அழகிய வாசஸ்தலமாகவும், இல்லறமாகவும் விளங்கும் என்று சொன்னார். 

பாவமற்ற மனிதனாக வாழ்ந்து தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் தேவைகள் அனைத்தையும் சிலுவை மரணத்தின் மூலம் நிறைவேற்றி, அவர்களுக்காகவும் நமக்காகவும் அந்த இடத்தை ஆயத்தப்படுத்தினார். பாடுகளைப் பொருட்படுத்தாமல் இந்த இல்லத்தை அவர் கட்டியத்தின் வாயிலாக, நிச்சயமாகவே திரும்பி வருவார் எனவும், அவர்களை திக்கற்றவர்களாக விட்டுவிடமாட்டார் என்ற உத்திரவாதத்தையும் அவரது சீஷர்களுக்கு தந்தார். ஆகவே பரலோகத்தில் இருந்தாலும் சரி, பூலோகத்தில் இருந்தாலும் சரி அவர்கள் வாழ்க்கையைக் குறித்து பயப்படவோ, கவலைப்படவோ தேவையில்லை

இயேசு நமக்காக ஓர் இல்லத்தை ஆயத்தம்பண்ணுகிறார் என்ற வார்த்தையை விசுவாசிக்கிறோம். மேலும் அவர் நமக்குள் வாசமாயிருக்கிறார் (யோவா. 14:23) என்று அவர் தந்த உத்திர வாதத்தை நாம் விசுவாசிக்கும்பொழுது மிகுந்த ஆறுதல் அடைகிறோம். அது மாத்திரமல்ல, நமக்கு முன்பாகச் சென்று நம்முடைய பரலோக வீட்டையும் கட்டியிருக்கிறார். 

நாம் எப்படிப்பட்ட இடத்தில் வசித்து வந்தாலும் இயேசுவின் அன்பினாலும், சமாதானத்தினாலும் சூழப்பட்டிருக்கிறோம். அவர் நம்மோடு இருக்கும் பொழுது, நம்வீட்டை போன்ற சிறந்த இடம் வேறெங்கேயும் கிடையாது.

புரிந்துகொண்டு தேற்றுபவர்

நவீன சமூகத்தின் பிரச்சனைகளுக்கு அறியாமையும் அக்கறையின்மையும்தான் காரணமா என்று ஒருவரிடம் கேட்டபொழுது, “எனக்குத் தெரியாது, எனக்கு அதைப் பற்றி அக்கறையும் கிடையாது” என்று அவர் விளையாட்டாகக் கூறினார்.

உலகத்தையும் அதன் போக்கையும் பார்க்கும்பொழுது அநேகர் இப்படித்தான் சோர்ந்து போய்விடுவார்கள் என்று நினைக்கிறேன். ஆனால் நம்முடைய வாழ்வில் ஏற்படும் மனக் கலக்கத்தையும் குழப்பத்தையும் பற்றி இயேசு நன்கு அறிந்திருக்கிறார். அறிந்ததினால்தான் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். இயேசுவின் சிலுவை மரணத்தைக் குறித்து ஏசாயா 53ஆம் அதிகாரத்தை படிக்கும்பொழுது இயேசு நமக்காக எவ்வளவு பாடுபட்டார் என்பதை மேலோட்டமாக அறிந்துகொள்ளலாம். “அவர் நெருக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டுமிருந்தார்.. தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும்” (வச. 7). “என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார்” (வச. 8). “கர்த்தரோ  அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்ற நிவாரணப் பலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக்கண்டு, நீடித்த நாளாயிருப்பார்,  கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும்” (வச. 10).

நமது பாவங்களையும் குற்றங்களையும் சிலுவையில் இயேசு மனமுவந்து சுமந்துதீர்த்தார். நம்முடைய தேவன் அனுபவித்த பாடுகளைப்போல் வேறொருவரும் நமக்காக பாடுபட்ட தில்லை. நம்முடைய பாவங்களிலிருந்து நம்மை மீட்க செலுத்தப்படவேண்டிய விலைக்கிரயத்தை அவர் நன்கறிந்ததினால், விலையேறப்பெற்ற அன்பினால், அவரே அதை செலுத்தினார் (வச. 4-6).

மரணத்தை வென்று இயேசு உயிர்த்தெழுந்ததினால், அவர் இன்றும் நம் மத்தியில் உயிருடன் இருக்கின்றார். ஆகவே நாம் இப்பொழுது என்ன சூழ்நிலையில் இருந்தாலும், இயேசு அதை நன்கு அறிந்திருக்கிறார். நம்மீது அக்கறை கொண்டபடியால், அவரது அன்பினால் சுமந்து செல்வார்.

அன்பின் விலை

இங்கிலாந்தில் வசிக்கும் எங்களை அமெரிக்காவிலிருக்கும் என்னுடைய பெற்றோர் காண வந்திருந்தார்கள். அவர்கள் திரும்பிச்செல்லும் பொழுது கையசைத்து வழியனுப்பிக்கொண்டிருந்த என் மகள் சட்டென்று கண்ணீர் விட்டு அழுதுகொண்டே, ”அவர்கள் திரும்பிச்செல்வதை நான் விரும்பவில்லை”, எனக் கூறினாள். நான் அவளை சமாதானப்படுத்திக்கொண்டிருந்த பொழுது, “என்ன செய்வது, அதுதான் அன்பின் விலை” என என் கணவர் கூறினார். 

நமக்குப் பிரியமானவர்களின் பிரிவு நமக்கு மனவலியை உண்டாக்கும். ஆனால் சிலுவையிலே அன்பின் விலையை இயேசு செலுத்தியபொழுது எவரும் அனுபவிக்க முடியாத பிரிவை அவர் அனுபவித்தார். “அநேகருடைய பாவத்தைச்சுமந்து” என்று 700 ஆண்டுகளுக்கு முன்பு ஏசாயா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டதை தேவனும் மனுஷனுமாகிய இயேசு நிறைவேற்றினார் (ஏசா. 53:12). இயேசுவே நம்முடைய பாடுகளைசுமக்க வந்த ஜீவ பலி என்பதற்கான அநேக குறியீடுகள் இவ்வதிகாரத்தில் உள்ளது. போர்ச் சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவிலே குத்திக் காயப்படுத்தியபொழுது (யோ:19:34), “நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு” (வச.5) என்னும் குறியீடு நிறைவேறிற்று. மேலும் ஒரு குறியீடு, “அவருடைய தழும்புகளால் நாம் குணமாகிறோம்” (ஏசா. 53:5). 

அன்பின் நிமித்தமாகவே இப்பூமியிலே இயேசு குழந்தையாகப் பிறந்தார். அன்பின் நிமித்தமாகவே நியாயப்பிரமாண போதகர்களிடமும், மக்களிடமும், போர்ச்சேவகரிடமும் இருந்து பல கொடுமைகளை அனுபவித்தார். அன்பின் நிமித்தமாகவே, நமக்குப் பதிலாக அவர் பாடுபட்டு மரித்து, பரிபூரண ஜீவபலியாக தம்மையே ஒப்புக்கொடுத்து நம்சார்பில் பிதாவின் முன்பாக நின்று கொண்டிருக்கிறார். அன்பின் நிமித்தமாகவே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

சிலுவையை நினைத்துக்கொள்!

நான் செல்லும் ஆலயத்தில், பலிபீடத்தின் முன்பு ஒரு பெரிய சிலுவை உள்ளது, அது நம்முடைய பாவமும் இயேசுவின் பரிசுத்தமும் சந்தித்த, இயேசு மரித்த அதே சிலுவையைக் குறிக்கிற அடையாளச்சின்னமாக உள்ளது. அன்று தேவன், நாம் நம் சொல்லாலும் செயலாலும் செய்த எல்லாவித பாவங்களுக்காக பூரணசற்குணராகிய தம்முடைய குமாரனை அச்சிலுவையிலே ஒப்புக்கொடுத்தார். மரணத்திற்கு பாத்திரராயிருந்த நம்மை மரணத்திலிருந்து விடுவிக்க செய்யவேண்டிய அனைத்தையும் சிலுவையிலே இயேசு செய்து முடித்துவிட்டார் (ரோ. 6:23). 

சிலுவையைக் காணும்பொழுது, அது இயேசு எனக்காக அனுபவித்ததை எண்ணிப்பார்க்கத் தூண்டுகிறது. அவரைச் சிலுவையில் அறைவதற்கு முன்பு அவரைச் சாட்டையினால் அடித்தார்கள், அவர்மீது காரித் துப்பினார்கள். சில போர்ச்சேவகர்கள் அவருடைய தலையில் கோலால் அடித்து, பரியாசம் பண்ணும்விதமாக முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள். மகாகொடூரமான சாட்டையடியினால் அவர் மிக பெலவீனமாய் இருந்தபொழுதும் அவரை அறைய இருந்த சிலுவையை அவரையே சுமந்துவரச் செய்தனர். கொல்கொத்தா மலைக்கு வந்து சேர்ந்தபொழுது, அவருடைய கைகளிலும் கால்களிலும் ஆணிகளை அடித்து சிலுவையில் தொங்கவிட்டார்கள். அவருடைய சரீரத்தின் பாரம் முழுவதையும் ஆணி அறையப்பட்ட அக்காயங்களே சுமந்தன. பின்பு ஆறு மணி நேரம் கழித்தே இயேசு தன் ஜீவனை விட்டார் (மாற். 15:37). இயேசுவின் மரணத்தைக் கண்ட ஒரு நூற்றுக்கு அதிபதி, “மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன்,” என சாட்சியிட்டான் (வச. 39).

அடுத்தமுறை நீங்கள் சிலுவையைக் காணும்பொழுது கிறிஸ்துவின் சிலுவை உங்களுக்கு என்னவாக இருக்கிறது என எண்ணிப் பாருங்கள். தேவனுடைய குமாரன் சிலுவையிலே பாடுகளை அனுபவித்து மரித்தார். ஆனால் மூன்றாம் நாள் உயிரோடு கூட எழுந்து நித்திய வாழ்வை ஈந்தளித்துள்ளார்.

நம் நிமித்தம் கைவிடப்பட்டு

நம்முடைய நண்பர் நமது அருகிலிருக்கும் பொழுது வலியைத் தாங்கிக்கொள்வது சுலபமா? வெர்ஜினியா (Virginia) பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இக்கேள்விக்கு விடையறிய ஒரு விசித்திரமான ஆய்வை நடத்தினார்கள். ஒருவர் வேதனை ஏற்படக்கூடிய சூழ் நிலையை எதிர்கொண்டால் அவருடைய மூளை எவ்வாறு செயல்படும் என்பதை அவர்கள் கண்டறிய விரும்பினார்கள். அதுமட்டுமன்றி, அந்நபர் அவ்வேளை தனியாக இருந்தால் அவர் மூளை எவ்வாறு செயல்படும், முன்பின் அறியாத நபரின் கையை பிடித்துக்கொண்டிருக்கும்பொழுது எவ்வாறு செயல்படும் மற்றும் தன் நண்பருடைய கரத்தை பற்றிக் கொண்டிருக்கும்பொழுது எவ்வாறு செயல்படும் என்பதையும் கண்டறிய விரும்பினார்கள். 

ஆராய்ச்சியாளர்கள், பல ஜோடிகளிடம் இந்த சோதனையை மேற்கொண்டபொழுதும், முடிவுகள் ஒரே மாதிரியாகவே இருந்தது. ஒருநபர் தனியாகவோ அல்லது முன்பின் அறியாத நபரின் கரத்தை பிடித்துக்கொண்டு ஓர் அதிர்ச்சியை எதிர்கொள்ளும்பொழுது, அவரது மூளையில் அபாயம் ஏற்படும் சமயத்தில் செயல்படும் பகுதி விழித்துக்கொண்டது. ஆனால் அதே நபர் தன் நண்பரின் கரத்தை பற்றிக்கொண்டிருக்கும் பொழுது, அவருடைய மூளை நிலையானதொரு நிலையில் இருந்தது. தன் நண்பரின் அருகாமை தனக்கு ஆறுதலளித்ததால், அவ்வலி தாங்கிக் கொள்ளக்கூடியதாய் தோன்றியது.

கெத்சமனே தோட்டத்தில் இயேசு ஜெபித்துக்கொண்டிருந்த பொழுது, அவருக்கும் ஆறுதல் தேவையாயிருந்தது. ஏனெனில் நம்பிக்கை துரோகம், சிறையிருப்பு மற்றும் மரணத்தை அவர் எதிர்கொள்ளப்போகிறார் என்பதை அவர் முன்னமே அறிந்திருந்தார். ஆகவேதான் தன் நெருங்கிய நண்பர்களைப் பார்த்து “என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங் கொண்டிருக்கிறது,” என்று கூறி தன்னோடு கூட வந்து விழித்திருந்து ஜெபிக்குமாறு கேட்டார் (மத். 26:38).  ஆனால் பேதுருவும், யாக்கோபும், யோவானும் உறங்கிவிட்டார்கள். 

ஆறுதல்படுத்தக்கூடிய நண்பரின் கரம் ஏதுமின்றி, கெத்சமனே தோட்டத்தின் தாங்கொணாத் துயரத்தை இயேசு தனியாக எதிர்கொண்டார். ஆனால் அவ்வேதனையை அவர் தாங்கிக் கொண்டதினால் தேவன் ஒருபோதும் நம்மைக் கைவிடுவதுமில்லை, நம்மை விட்டு விலகுவதுமில்லை என்ற நிச்சயம் நமக்குண்டு (எபி. 13:5). தேவனுடைய அன்பைவிட்டு நம்மை எதுவும் பிரித்துவிடக்கூடாது என்பதற்காக நமக்காக இயேசு துன்புற்றார் (ரோ. 8:39). ஆகவே நாம் எதிர்கொள்ளும் அனைத்தையும் தாங்கிக்கொள்ளும் பெலனை அவருடைய அருகாமை நமக்களிக்கிறது.